காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்
பதம் பிரித்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதல் பதிப்பு முதல் பிரதியை காட்டுமன்னார் கோயில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் வைத்து ஆசீர்வாதம் பெறச் சென்றிந்த போது ஓர் அனுபவம் ஏற்பட்டது.
சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
கோவிட் இரண்டாம் அலை எங்கும் பரவியிருந்த
அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தையும் பூரிப்பையும் கொடுத்தது.
காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார்.
அங்கே இருந்த ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி (தீர்த்தம் ஸ்தானிகர் ) “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்றால் நாதமுனிகளின் சந்நிதி வாசல் படியில் வைத்துச் சேவித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.
இவ்வளவு தூரம் வந்துவிட்டு …. புறப்படலாமா என்று பாதி மனசுடன் இருந்த சமயம் அங்கே சாந்தமாக வீற்றிருந்த ஒரு பெரியவரைக் காண்பித்து “இவர் எம்.எஸ். வெங்கடாச்சாரி இவரும் தீர்த்தம் ஸ்தானிகர் தான். பெரிய பண்டிதர், இவரிடம் புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரீநிவாசாச்சார்.
அவரிடம் புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டேன். அவர் புத்தகத்தைத் திறந்து பார்த்து “அழகாக அச்சடித்திருக்கிறீர்கள். புத்தகமே ஞானத்தின் வடிவம். இரண்டு சம்பிரதாய விஷயங்களையும் அழகாகக் கொடுத்திருக்கிறீர்கள். சம்பிரதாயத்தில் வித்தியாசம் இருந்தாலும், ஆழ்வார் பாசுரங்கள் எல்லோருக்கும் பொது, அது எல்லோர் நாவிலும் தவழ வேண்டும். நாலாயிரம் பலரைச் சென்று அடைய வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேறப் பல்லாண்டு” என்று ஆசிர்வதித்தார்.
அந்தச் சமயம் நாதஸ்வரம் ஒலிக்க வீர நாராயணப் பெருமாளுக்கு திருவாராதனம் மங்கள ஆர்த்தி நடைபெற ஆரம்பிக்க அங்கே சென்று பெருமாளைச் சேவித்துக்கொண்டு இருந்த சமயம், நாதமுனிகளின் சந்நிதியிலிருந்து வெங்கடாச்சாரி ஸ்வாமி என் அருகே வந்து “புத்தகத்தைக் கொஞ்சம் கெடுங்கள் பார்த்துவிட்டுத் தருகிறேன்” என்று வாங்கிக்கொண்டு நாதமுனிகள் சந்நிதிக்குள் சென்றார்.
பெருமாள் சேவை முடிந்த பின், அவர் என்னை நாதமுனிகளின் சந்நிதிக்குள் அழைத்து “இந்தப் புத்தகத்தில் சிறு திருத்தம் செய்ய வேண்டும்!” என்றார் “என்ன செய்ய வேண்டும்?” என்றேன்.
அவர் புத்தகத்தைத் திறந்து கடைசியில் வாழி திருநாமங்கள் பக்கத்தைக் காண்பித்தார்.
ஸ்ரீமத் நாதமுனிகள் வாழி திருநாமத்துக்குப் பதில் உய்யக்கொண்டார் வாழி திருநாமம் தவறுதலாக இரண்டு முறை அச்சாகியிருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன்!
“புத்தகம் நல்லவேளையாக இன்னும் விநியோகிக்க ஆரம்பிக்கவில்லை. நிச்சயம் சரி செய்துவிடுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை!” என்றேன்.
அதற்கு அவர் “நான் எதேர்ச்சியாக திருப்பினேன், கண்ணில் பட்டது. அதனால் இதை அடியேன் சொல்லவில்லை, உள்ளே இருக்கும் நாதமுனிகள் என் மூலமாக உம்மிடம் இன்று கூறியிருக்கிறார்” என்று உள்ளே இருக்கும் நாதமுனிகளைக் கைகாட்டினார்.
அப்போது அங்கே கைங்கரியம் செய்பவர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரிடம் புத்தகத்தைக் கொடுத்து முதல் பக்கத்தில் இருக்கும் ஸ்டாம்ப் சைஸ் நாதமுனிகள் படத்தை காண்பித்து ( பார்க்க படம்)
“இவர் பெங்களூர் வரை கார் ஓட்டிக்கொண்டு போக வேண்டும், திருவாராதனம், கோஷ்டி எல்லாம் முடிய நேரம் ஆகும். ’நம் நாதமுனிகள்’ படத்தை அச்சடித்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகத்தைப் போட்டிருக்கிறார். இவருக்காக இன்று நம் நாதமுனிகள் சந்நிதியைத் திறந்து திருவடியில் இந்தப் புத்தகத்தை வைத்து கொடு” என்றார்.
“அதற்கு என்ன” என்று புத்தகத்தை அவர் என்னிடமுருந்து பெற்றுக்கொண்டு தன் தலைமீது ஸ்ரீசடாரி போல் சுமந்துகொண்டு நாதமுனிகள் சந்நிதியைத் ஒரு கையால் திறந்தார்.
அங்கே ஆழ்வார்கள் புடைசூழ ஆளவந்தார் வீற்றிருக்க, புத்தகத்தை நாதமுனிகளின் திருமடியின் மீதே வைத்து, மங்கள ஆர்த்தி, ஸ்ரீசடாரி சாதித்து, புஷ்பம், துளசிகளை புத்தகத்துடன் கொடுத்து அனுப்பினார்.
காரில் புறப்படும் முன் வெங்கடாச்சாரி என் அருகில் வந்து “இந்த திவ்ய தேசத்து பெருமாள் காட்டும் மன்னார், நாலாயிரத்தை நாதமுனிகளுக்கு காட்டிக்கொடுத்த மன்னார். இன்று உங்களுக்கும் காட்டிக்கொடுத்துள்ளார் !” என்றார்.
பிரஸுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன் “ஒரு நாள் வேலை, கவலைப்படாதீர்கள் சரி செய்துவிடலாம்” என்று மறுநாளே அதை செய்தும்விட்டார்.
’சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும்’ என்பது போல பயணம் முழுவதும் நாதமுனிகளே நெஞ்சில் நிறைந்திருந்தார்.
திருத்திய புத்தகப் பிரதியை வெங்கடாச்சாரி ஸ்வாமி அனுப்பி வைத்தேன். அவர் அடியேனைத் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியதோடு மட்டும் அல்லாமல், புத்தகத்தைக் குறித்து அடியேனுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார். நாதமுனிகள் சந்நிதியிலிருந்து வந்த கடிதமாகவே இதை இன்றும் நான் கருதுகிறேன்.
அந்தப் பாராட்டு கடிதத்தை அவர் அனுமதியுடன் புத்தகத்திலும் சேர்த்துள்ளேன்.
- சுஜாதா தேசிகன்
16.4.2024
புத்தகம் வாங்க
நாதமுனிகளின் ஆசிகள் முழுமையாகத் தங்கள் பணிக்கு என்றும் உண்டு!
ReplyDeleteஅந்த புத்தகத்தை பிரசாதிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அடியே நம்பர் 7013427672
ReplyDelete