வழிகாட்டும் ஸ்ரீராமர்
காட்டிக்கொடுத்த காட்டுமன்னார் என்ற பதிவைப் படித்திருப்பீர்கள்.
அதற்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் தான்! ஸ்ரீராம நவமி அன்று இதை மீண்டும் சொல்லுவதில் மகிழ்ச்சி.
ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதல் பிரதியை உடையவர் திருநட்சத்திரம் அன்று அதை வெளியிடுவதற்கு முன் உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாள் ஆசீர்வாதங்களைப் பெற்றுவிடலாம் என்று காரில் புறப்பட்டேன்.
உறையூரில் அர்ச்சகரிடம் “நாச்சியார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்ற போது அவர் ஆசையுடன் புத்தகங்களை நாச்சியார் திருவடியில் வைத்து தாயாரின் புஷ்பம், மஞ்சள் காப்பு பிரசாதங்களைப் புத்தகம் மீது அள்ளிக் கொடுத்தார். பிறகு அவதார ஸ்தலத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சந்நிதி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் மற்றும் நாச்சியார் வீற்றிருக்கும் மண்டபத்தில் புத்தகங்களை வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த போது கோவிட் காலத்தில் வெளியே வரவே பயப்பட்டுக் கொண்டு இருந்த காலத்திலும் வெய்யிலில் பூக்களை விற்றுக்கொண்டு இருந்த பெண்மணியிடம் புத்தகங்களைக் கொடுத்து ஒரு படம் எடுத்தேன். அந்தப் பெண் பூரிப்பும் மகிழ்ச்சியுடன் “இருங்க சாமி என் சார்பா புத்தகத்துக்குக் கொஞ்சம் பூக்கள் தருகிறேன்” என்று புத்தகத்தின் மீது ஆசையுடன் பூக்களை வைத்தாள். அவளிடம் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டேன். தாயார் சந்நிதி வாசலில் நண்பர் கேசவன் காத்துக்கொண்டு, தாயார் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார்.
உறையூரில் அந்தப் பெண்மணி கொடுத்த பூக்களுடன் பிரபந்தப் புத்தகத்தை ஸ்ரீரங்கம் தாயாருக்குச் சமர்ப்பித்து ஆசீர்வாதம் வேண்டி நின்றேன். புத்தகம் தாயார் திருவடிப்பட்டு, அவள் மனம் உவந்து தன் ஆசீர்வாதமாகத் தாமரைப்பூக்கள், மஞ்சள் காப்பு முதலிய பிரசாதங்களை அள்ளிக் கொடுத்து அனுப்பினாள்.
இரண்டு தாயார் சிபாரிசுடன் நம்பெருமாள் சந்நிதிக்குச் சென்ற போது அவர் ஆசீர்வாதம் தராமல் இருந்துவிடுவாரா ? எல்லா ஆழ்வார்களுக்கும் பக்தியைத் தூண்டிய பெரிய பெருமாளை மணத்தூணைப் பற்றி நின்று ஆசீர்வாதங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்து விஷ்வக்சேனர் சந்நிதி வாசல் முன் துப்புரவு பணி செய்யும் பெண்மணியிடம் புத்தகத்தைக் கொடுத்து படம் எடுத்தேன். நம்பெருமாள் போல் அவள் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது!
ஸ்ரீரங்கத்தில் ரங்கவிலாஸ் மண்டபத்துக்கு அருகில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதிக்குச் சென்ற போது மணி ஒன்று. பூட்டியிருந்தது. வெளியிலிருந்து சேவித்துவிட்டு, உடையவர் சந்நிதியும் மூடியிருக்கும் என்று நினைத்து அங்கே சென்ற போது உடையவர் இரண்டு கதவுகளையும் திறந்து காத்துக்கொண்டு இருந்தார். உடையவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு திருவரங்கம் கோதண்ட ராமர் சந்நிதிக்கு ஆண்டாள் ‘மனத்துக்கு இனியான்’ என்று கூறிய பிரபந்தப் புத்தகத்துக்கு ஸ்ரீராமருடைய திருவடி ஆசீர்வாதம் வேண்டும் என்று அர்ச்சகரிடம் கூற “தாராளமாக” என்று ஸ்ரீராமர் திருவடியில் வைத்து அவர் விரல் இடுக்கில் இருந்த துளசிகளை எல்லாம் திரட்டி புத்தகம் மீது வைத்து, பிறகு சீதாபிராட்டி, இளைய பெருமாள் ஸ்ரீ அனுமார் திருவடிகளில் வைத்துக் கொடுக்கும் போது அர்ச்சகர் “இந்த சந்நிதி அர்ச்சகர் இன்று வரமுடியாத சூழ்நிலை. அதனால் அடியேன் இன்று பார்த்துக்கொள்கிறேன். என்ன ஆச்சரியம் பாருங்கள் நாங்கள் நாதமுனிகள் வம்சம், நாலாயிரம் கொடுத்த நாதமுனிகள் வம்சத்துக்கே நாலாயிரத்தை இன்று நீர் கொடுத்திருக்கிறீர்கள்” என்றார் வேடிக்கையாகக் கூற, ’செவியின் வழி புகுந்து என் உள்ளாய்' என்று ஆழ்வார் கூறுவது பொல அடியேனுக்குச் சட்டென்று காட்டுமன்னார் கோயில் சென்று ஸ்ரீமத் நாதமுனிகளிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் எண்ணம் தோன்றியது.
அந்த நம்பெருமாளே ஸ்ரீ கோதண்ட ராமராக ’செல்’ என்று சொல்ல, செல்போன் வரைபடத்தில் கூகிள் மேப்ஸ் வழியாக ஸ்ரீராமர் வழிகாட்ட, காட்டுமன்னார் கோயில் புறப்பட்டேன்.... அங்கே நடந்த அனுபவம் தான் 'காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்' என்ற பதிவில் நீங்கள் படித்தீர்கள்!.
- சுஜாதா தேசிகன்
17.4.2024
ஸ்ரீராம நவமி
புத்தகம் வாங்க
Comments
Post a Comment