ஒரு ஸ்பூன் போதுமே!
நான் ப்ளஸ்-2 படிக்கும் போது ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ புதிதாக அறிமுகமானது. முதல் பாடமே ROM, RAM என்று படித்து சொளையா மார்க் வாங்கியது நினைவு இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு குட்டி மாட்டுப் பொம்மையின் வாலை தட்டிவிட்டால் “Old MacDonald had a farm - eieio! ” என்று அலறும். இந்தப் பொம்மையில் உள்ளே இருப்பது ROM சமாசாரம் என்பது அதன் வாலை ஆட்டிவிடும் போது எனக்குத் தெரியாது.
RAM - Random Access Memory ; ROM - Read-Only Memory சுருக்கம். இரண்டும் மைக்ரோசிப் மெமரி சமாசாரம். RAM தற்காலிக நினைவகம். ROM நிரந்தர நினைவகம். இதை உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயலலாம்.
நீங்கள் படித்த பள்ளி வகுப்பு கரும்பலகையில் உங்கள் ஆசிரியர் என்றோ சாக்பீஸில் எழுதியதை இன்று படிக்க முடியாது. ஆனால் என்றோ ராஜராஜ சோழன் எழுதிய கல்வெட்டை இன்றும் படித்து ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். உங்கள் வகுப்பாசிரியர் எழுதியது RAM. சோழன் எழுதியது ROM.
மாட்டுப் பொம்மையின் உள்ளே சின்ன சிலிக்கான் சில்லில் நிரந்திர நினைவகத்தில் அந்தப் பாடல் சேமிக்கப்பட்டு எப்போது வாலைத் தட்டிவிட்டாலும் அதிலிருந்து அது அந்தப் பாடல் ஒலிக்கிறது. உங்களால் அதில் வேறு பாடலை மாற்ற முடியாது. இந்த மாற்ற முடியாத விஷயம் தான் இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வெற்றிக்கு ஆதாரம்.
ஒரு மாதத்தில் நீங்கள் ஓட்டுப்போட பொத்தானை அழுத்தும் அந்தக் கருவி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். (படத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டு மேற்கொண்டு படிக்கவும்).
வாக்குப் பதிவு கருவி அதிலிருந்து சில கேபிள் மூலம் கட்டுப்பட்டு கருவிக்கு ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே அச்சடிக்கும் கருவி. கட்டுப்பாடு கருவியில் தான் வாக்குப் பதிவு செயல்படும் நிரலி கல்வெட்டு போல நிரந்தர நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு முறை எழுதிவிட்டால் இன்னொரு முறை எழுத முடியாது, மாற்ற முடியது. இதனால் என்ன பயன் ?
உங்கள் கணினியில் வைரஸ், ஹாக்கிங் போன்ற பிரச்சனை வரலாம், ஆனால் நீங்கள் வைத்திருக்கும் கால்குலேட்டரில் அது நிகழ வாய்ப்பில்லை. அது போலத் தான் வாக்குப் பதிவு இயந்திரம். இந்த இயந்திரத்தில் ஒருவர் ஒரு முறை தான் ஓட்டுப்போட முடியும், அதைத் தவிர ஓட்டுப் போட்ட பிறகு பன்னிரண்டு வினாடிகள் கழித்துத் தான் அடுத்தவர் ஓட்டுப் போட முடியும்.
சினிமாவில் காண்பிப்பது போல வில்லன்கள் வாக்குச்சாவடியைக் கைப்பற்றிக் குத்திக்கொண்டே இருக்க முடியாது.
என் வாக்கைப் பதிவு செய்தவுடன் என் ஓட்டு அவருக்குத் தான் போய்ச் சேர்ந்ததா என்ற சந்தேகத்தைத் தீர்க்க சமீபகாலத்தில் கிரெடிட் கார்ட் பில் மாதிரி அச்சடிக்கும் ஓர் இயந்திரத்தை அதில் இணைத்துள்ளார்கள். அதன் பெயர் VVPAT (Voter Verified Paper Audit Trail) வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை.
இந்த இயந்திரம் ஒரு சிறிய சீட்டுக் காகிதத்தில் நீங்கள் அழுத்திய வேட்பாளரின் சின்னத்தை அச்சடித்துத் துப்பாது மாறாக நீங்கள் அழுத்திய வேட்பாளரின் சின்னம் போன்ற விபரங்களை ஏழு வினாடிகள் காண்பித்து மறைத்துக்கொள்ளும். உங்கள் வேட்பாளருக்குத் தான் வாக்கு விழுந்திருக்கிறது என்று நீங்கள் சரி பார்த்துக்கொள்ளலாம்.
வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்ததில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு முறை அவரிடம் இதனுடன் ஒரு ’ஒய்-ஃபை’, ப்ளூடூத் ( WiFi, Bluetooth ) போன்றவற்றைச் சேர்க்கலாமே என்றேன். அதற்கு அவர் ஐன்ஸ்டீன் “everything should as simple as possible, but not simpler” என்று பதில் சொன்னார். சட்டென்று புரியவில்லை. பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் கதை ஒன்றைப் படித்த போது புரிந்தது.
ஒருவர் பல ஆண்டுகள் காட்டில் தவம் செய்து தண்ணீரில் நடக்கும் வித்தையைக் கற்றார். தாடியுடன் ஊருக்குள் வந்த அவரை வரவேற்று அவருடைய தவம் பற்றிக் கேட்டார்கள். அவரும் பெருமையாக ஆற்றில் நடந்து அக்கரைக்கு சென்று பெருமிதத்துடன் திரும்பி வந்தார். எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டு இருக்க ஒரு சிறுவன் “ஏன் சாமி ஒரு நாலணா கொடுத்தா ஓடத்தில் அக்கரைக்குப் போகலாம், இதற்கு ஏன் எவ்வளவு வருடங்கள் நீங்கள் வீணடித்தீர்கள் ?” என்றான்.
பல வளர்ந்த நாடுகளில் வாக்குப் பதிவு இயந்திரம் தோற்றதற்கு இது தான் காரணம். காபியில் சர்க்கரை போட்டுக் கலக்க ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டாம். கையில் ஒரு ஸ்பூன் இருந்தாலே போதும்!
- சுஜாதா தேசிகன்
கல்கி கடைசிப் பக்கம் - 2021
மிகச்சிறந்த பதிவு.தேசிகன் ஆவியுள் சுஜாதா புகுந்து தேசிகன் மாதிரி எழுதுகிறார்
ReplyDeleteGood one sir
ReplyDelete