Skip to main content

பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள்

 பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள் (1) 

எங்கள் வீட்டில் ஏற்கனவே நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ?

இது பதம் பிரித்த பிரபந்தம். 

பதம் பிரித்த பிரபந்தமா ? 

சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். முயன்றால் பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள். 



சரி இதனால் என்ன பயன் ? 

சுஜாதா கல்கியில் எழுதியதைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். (கீழே கொடுத்திருக்கிறேன்)

ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள்.

இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே
லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக
டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய
மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே.

தலைகால் புரியவில்லையல்லவா? இதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் என்ன பார்க்கலாம். முதலில் பதம் பிரித்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்.

இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும்கொலோ அம்பொன் மாமணிகள்
திசைமின்மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான்வழிகொண்ட மேகங்களே

(வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்)

இப்படிப் பிரித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகிறது. இந்தப் பாடலில், தலைவி திருவேங்கட மலைக்குச் செல்லும் மேகங்களைத் தூது போகச் சொல்கிறாள். அவை 'போ போ அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை' என்று மறுத்துவிட, 'என் தலையையாவது மிதித்துவிட்டுச் செல்லுங்கள்' என்கிறாள்.

இப்படி ஓர் அழகான ரத்தினத்தைப் பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும்.

தமிழை ஒரு agglutinative language என்பார்கள். வார்த்தைகளை ஒட்ட வைத்துக்கொண்டே போகலாம். 'இசைமின்கடூது' என்பதை 'இசைமின்கள்தூது' என்றும், 'மணிகடிசைமின்மிளிரு'-மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டு வந்தால் கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப் பாடல். எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல அவை இசைய(சம்மதிக்க)வில்லை. அதனால் 'என் தலைமேல் உங்கள் பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்' என்று கேட்கிறாள்.

இந்த நாட்களில் திருப்பதிக்குச் செல்லும் மேகங்களை லட்டு வாங்கிவர மட்டுமே சொல்வோம்!

ஒரு படத்தில் 460 - 8 என்று இருக்கிறது இன்னொன்றில் 460/5.3.8 என்று இருக்கிறதே ? 

460 என்பது வரிசை எண் ( சீரியல் நம்பர் ) 5.3.8 என்பது ஐந்தாம் பத்து மூன்றாம் திருமொழி எட்டாம் பாட்டு 5.3.8 என்பதைக் குறிக்கும். பாடலை உடனே தேடுவதற்குச் சுலபமாக இரண்டையும் தந்துள்ளோம். 

மொத்தம் எவ்வளவு பக்கங்கள் ?


முதல் பகுதி - பல்லாண்டு தொடக்கமாகப் பெரிய திருமொழி முடிய மொத்தம் சுமார் 400+ பக்கங்கள்.

இரண்டாம் பகுதி - இயற்பா மற்றும் திருவாய்மொழி; மொத்தம் சுமார் 325+ பக்கங்கள்.

அநுபந்தம் சுமார் 225+ பக்கங்கள்.

மொத்தமாக கிட்டத்தட்ட 1000 பக்கங்கள்

படிக்க வசதியாக இருக்குமா ?

மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிக்க வசதியாகப் பெரிய எழுத்தில்(12 பாயிண்ட்) வார்த்தைகளுக்கு இடையிலும், வரிகளுக்கு இடையிலும் ’பிசினஸ் கிளாஸ்’ டிக்கெட் போல இடம் விட்டு கொஞ்சம் தாராளமாக அச்சடித்துள்ளோம். இதைத் தவிரக் கல்யாண இலை வாழைப்பழம் போல வெட்டாமல் பாசுரங்களை ஒரே பக்கத்தில் முழுதாகக் கொடுத்துள்ளோம். (பார்க்க படம்)




1000 பக்கங்கள் என்றால் எடை அதிகமாக இருக்குமோ ? புத்தகத்தின் அளவு என்ன ?

ஐபாட் உதவியுடன் சந்தை படிக்கும் இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு, புத்தகத்தின் எடை ஐபேட் மாதிரி குறைவாக இருக்க வேண்டும் என்று ‘maplitho yellow book printing paper'ல் 18.5cm x 24cm அளவில் அச்சு செய்து, பகுதி 1, பகுதி 2, அநுமந்தம் என்று மூன்று புத்தகங்களாகக் கொடுத்துள்ளோம்.

என் சந்தை வகுப்பிற்கு ஏற்றதாக இருக்குமா ?

கலை வித்தியாசம் இல்லாமல், சந்தை வகுப்பிற்கு ஏற்ற புத்தகமாக இருக்கிறது என்று பலர் சென்ற ஆண்டு கூறினார்கள்.

என்னிடம் ஐபேட் இருக்கிறது ஈ-புத்தகம், PDFல் கொடுக்கலாமே ?

கொடுக்கலாம். ஆனால் கொள்கைப்படி அது மாதிரி தரும் எண்ணம் இல்லை. ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராமர் இருக்கிறார்; ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன். ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் 108 எம்பெருமான்களும், ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இருக்கிறார்கள். நம்மாழ்வார் திருவாய் மூலம் நாதமுனிகளுக்குக் கிடைத்து, செவி வழியாக ஆசாரியர்கள் மூலம் இன்று வரை நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதைப் புத்தகம் என்று சொல்லுவதை விடக் கிரந்தம் என்று சொல்ல வேண்டும். வீட்டில் வைத்துப் பூஜிக்க வேண்டும். ஐ-பேட்டை வெப்-சீரீஸ் பார்க்க வைத்துக்கொள்ளலாமே!.

எல்லாம் சரி, புத்தகத்தின் விலை பிசினஸ் கிளாஸ் போல அதிகமாக இருக்குமோ ?

ஆழ்வார் பாசுரங்களுக்கு விலை ஏது ? அவை விலை மதிப்பற்றது. 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அச்சடிக்கும் செலவு மட்டுமே உங்களிடம் பெறுகிறோம்.

வேறு என்ன விசேஷம் ?

நண்பர் ஸ்ரீ பாலாஜி ரவி அவர்கள் ஆழ்வார்கள் சந்நதிக்கு முன் அமர்ந்து ஆழ்வார்களை ‘சில்பி’ போன்று கோட்டோவியங்களாகத் தீட்டியுள்ளார். நாதமுனிகள் தொடக்கமாக எல்லா ஆழ்வார்கள் படங்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. பார்க்கப் படம்.




எந்தப் பதிப்பகம் ?

‘ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட்’ மூலமாகப் பிரசுரிக்கிறோம்.

புத்தகம் எப்படி அனுப்புவீர்கள் ?

இந்திய தபால் மூலம்.


பணம் அனுப்பிவிட்டேன். எனக்கு எப்போது கிடைக்கும் ?

உடையவர் திருநட்சத்திரம் அன்று வெளியிட்டு, மே மாதம் கடைசியில் அனுப்பத் திட்டம்.

பணம் மெயில் அனுப்பிவிட்டேன், எனக்கு உடனே பதில் வரவில்லையே ?

பணம் அனுப்பிய விவரங்களைச் சரி பார்த்து, பிறகு உங்களுக்கு ஒரு Tracking Number அனுப்ப ஒரு வாரம் ஆகலாம்.

மூன்று புத்தகங்களையும் சேர்த்து வாங்கினால் எனக்கு என்ன கிடைக்கும் ?

மூன்று புத்தகங்களும் சேர்ந்து கிடைக்கும்.

இதைத் தவிர வேறு ஏதாவது கிடைக்குமா ?

முதல் 50 நபர்களுக்கு ‘ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள்’ என்ற புத்தகம் கிடைக்கும். இதைத் தவிர எல்லோருக்கும் ‘பிரணவம்’ கிடைக்கும்.

பிரணவத்தில் (ஓம்) அ, உ, ம அடங்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். இதில் ’அ’ என்ற பரமாத்மாவை, ’உ’ என்ற பிராட்டியைப் புருஷாகாரமாக ‘ம’ என்ற ஜீவாத்மா பற்ற வேண்டும் என்பது இதன் உட்பொருள்

பாகம்-1 (ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அட்டைப்படம் ) ‘அ’ என்ற பரமாத்மாவைக் குறிக்கிறது.

பாகம்-2 (ஸ்ரீரங்கம் தாயார் அட்டைப்படம் ) ’உ’ என்ற பிராட்டியைப் புருஷாகாரமாகப் பற்ற வேண்டும் என்று குறிக்கிறது.

அநுபந்தம் (ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழல் அட்டைப்படம்) நம்மாழ்வார் ‘புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று ‘ம’ என்ற ஜீவாத்மா பெருமாளை எப்படிப் பற்ற வேண்டும் என்று நம்மாழ்வார் நமக்கு பெருமாளிடம் நமக்கு உள்ள அணுக்கமான பந்தத்தைக் காட்டிக்கொடுக்கிறார் (அநுபந்தம்).

ஒன்றைக் கேட்டால் தப்பாக நினைக்க மாட்டீர்களே ? புத்தகம் நன்றாக இருக்கிறது ஆனால் ஏன் கருப்பு அட்டை ?

கருப்பு என்றால் நாத்திகம் என்ற பிம்பம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பதிந்துவிட்டது. கருமை என்றால் கண்ணன் என்று நாம் நினைப்பதில்லை!
இருள் நிறைந்த நள்ளிரவில் பகவான் கிழக்கில் பூர்ணசந்திரன் உதிப்பதுபோலத் தேவகியிடம் ’மதி நிறைந்த நன்னாளில்’ உதயமானார். இப்போது அட்டைப் படத்தைப் பாருங்கள். அப்படித் தான் இருக்கும்!
ஆண்டாள் ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ என்று கருமையான கண்ணன் கருமையான ஓர் இரவில் அவதரித்தார் என்கிறாள்.
ஓர் என்றால் ஒப்பற்ற என்று பொருள். ஆண்டாள் ’ஓர் இரவு’ என்கிறாள். இரவு என்றால் இருட்டு. அந்தக் கருமையான இருட்டும் இரவும் கண்ணனை கம்சனிடமிருந்து காத்தது. அதனால் இரவு ஒப்பற்றதாக்கியது! அதனால் இருள் கூடிய இரவை பார்த்தால் ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் விழுந்து வணங்குவார்!

’நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்’ என்று ஆழ்வார் முதல் நேற்று வந்த ’கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே’ என்ற சினிமா பாடல் வரை கருப்பு என்றால் கண்ணன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

திவ்ய பிரபந்தம் சரி, அது என்ன அநுபந்தம் ?

ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் புத்தகத்தைத் தொகுக்கும் சமயம், ஒப்புநோக்கப் பலர் பதிப்பித்த புத்தகங்களை ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பதிப்பில் மறைந்திருந்த தகவல்கள் கண்டு வியந்தேன். கணினி இல்லாத அக்காலத்தில், கணினிக்கு நிகரான அறிவைக் கொண்டு அவர்கள் தொகுத்த விஷயங்கள் பிரமிப்பூட்டியது.

துரதிர்ஷ்டவசமாகப் பிற்கால வெளியீடுகளில், இந்தப் பொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டோம். சில உதாரணங்களைத் தருகிறேன்.

1943ஆம் ஆண்டு ’மயிலை மாதவ தாசன்’ பதிப்பித்த புத்தகத்தில் பல குறிப்புகள் இருக்கிறது. உதாரணமாக ஆழ்வார் பாசுரங்களில் எங்கு எல்லாம் வண்டுகள், கிளி, குயில் போன்றவற்றை வழிபட்டுள்ளார்கள்; ஆழ்வார்களைக் குறித்த கல்வெட்டுக்கள் போன்றவை ஒளிந்துகொண்டு இருந்தன. இது போன்ற விஷயங்களைத் தேடி எடுத்துத் தந்துள்ளோம்.

1956, எஸ்.ராஜம் அவர்கள் பதிப்பித்த திவ்யப் பிரபந்தப் புத்தகத்தில் முதலாயிரம் தவிர்த்து, மற்ற ஆயிரங்களுக்கு அருஞ்சொல் அகராதி இருக்கிறது. அகராதி சொற்களைத் தொகுத்து, மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை நீக்கி, முதலாயிரத்தில் வரும் சில அருஞ்சொற்களை அத்துடன் சேர்த்து ஒன்றாக்கி இப் புத்தகத்தில் தந்துள்ளோம்.

அதே புத்தகத்தில் ஆழ்வார்கள் பாசுர வரிகளைக் கொண்டே அவதாரக் கதை குறிப்புக்களையும் தொகுத்துள்ளார்கள். அதையும் சேர்த்துள்ளோம்.

1997ல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் அவர் அண்ணாவின் நினைவாகப் பிரபந்தத்தில் வரும் திருமாலிலின் திருநாமங்களை பாக்கெட் சைஸில் பதிப்பித்து எனக்கு அன்புடன் வழங்கினார். அதில் திருமாலின் 900 திருநாமங்கள் இருந்தன. மேலும் நூறு திருநாமங்களைத் தேடிய போது காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் தொகுத்த திவ்யப் பிரபந்த திருநாமமாலை புத்தகத்தில் திருநாம சுரங்கமே இருந்தது. மொத்தம் 1008 திருநாமங்களைத் தொகுத்து, கூடவே தாயாரின் திருநாமங்கள் 108 கண்டுபிடித்து இதில் கொடுத்துள்ளோம்.

இதைத் தவிர ஆழ்வார்கள் கதைகள், ஆழ்வார், ஆசாரியர்களின் திருநட்சத்திரம், ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு திருவாராதனம் போன்றவற்றுடன், இயல் சாற்று, சாத்துமுறையை (இருகலையாருக்கும்) இதில் சேர்த்திருக்கிறோம்.

108 திவ்ய தேச வரைபடத்துடன் திவ்ய தேசம் குறித்து முக்கிய குறிப்புகளும் இப்பதிப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

நாலாயிரம் முழுவதிலுமுள்ள எல்லா விஷயங்களையும் விடாது கூறுவது மிக்க கடினமான செயல், இப்புத்தகத்தில் சிற்சில விஷயங்களை மட்டும் கோடிட்டுக்காட்டியிருக்கிறோம். அடியார்கள் தங்கள் ஆராய்ச்சி அறிவைக்கொண்டு இதைப் பெருக்கிக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

நம் பெரியோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷங்களை, இளைய தலைமுறையினருக்கு அவர்களின் வாழ்க்கையில் என்றாவது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ‘அநுபந்தமாக’ வெளியிடுகிறோம்.

சுருக்கமாகச் சொல்ல முடியுமா ?

திவ்ய பிரபந்த அருஞ்சொல் அகராதி
'’க்யூ ஆர் கோடு' உடன் 108 திவ்ய தேச வரைபடங்கள், குறிப்புக்களுடன்
பாசுரப்படி இராமாயணம்,
பாசுரப்படி பாகவதம்,
அவதாரக் கதைகள்,
திருமாலின் திருநாமங்கள் ஆயிரம்

இயல் சாத்து, சாற்றுமுறை ...
மேலும் பல விஷயங்கள்.

அது என்ன திவ்ய தேச ‘க்யூ ஆர் கோடு’ ?



பார்க்கப் படம். உங்கள் கைப்பேசியில் ’ஸ்கேன்’ செய்தால் திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அதைச் சுற்றிய திவ்ய தேசங்களை ஜிபிஎஸ் வசதியுடன் சென்று சேவித்துவிட்டு வரலாம். 108 திவ்ய தேசங்களுக்கும் இது போல இருக்கிறது.

108 திவ்ய தேசமா ? 106 தானே போக முடியும் ?

ஆமாம் 106. கையில் இந்தப் புத்தகம் இருந்தால் மற்ற இரண்டும் சுலபம்.

அநுபந்தம் தனியாகக் கிடைக்குமா ?

பொதுவாக மூன்று புத்தகங்களும் சேர்த்துத் தான் தருகிறோம். தனியாக வேண்டும் என்றால் அறக்கட்டளைக்கு அஞ்சல் செய்யவும்.

முற்றும் ( இப்போதைக்கு)
- சுஜாதா தேசிகன்
15.04.2024


புத்தகம் வாங்க



Comments

  1. Hats off Sir, Immediately applied a copy of Book Adiyen

    ReplyDelete

Post a Comment