திருப்பாவையில் ஆண்டாள் கூறும் ஆனைச்சாத்தன் என்ற பறவை எது ? இப்போது அதை பார்க்க முடியுமா ?
சென்ற வருடம் மதுரை தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே
அரங்கராஜன் அடியேனிடம் ஆண்டாள் கூறும் ‘ஆனைச்சாத்தன்’ என்ற பறவையைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள் என்றார்.
ஆனை - யானை, யானைக்கு மேல் பறக்கும் பறவையின் பெயர் என்று ஒரு கருத்தும், ‘ஆ’ என்றால் மாடுகள். மாடுகளுக்கு மேல் உட்கார்ந்து இருக்கும் பறவை என்ற இன்னொரு கருத்தும் உண்டு.
கொஞ்சம் தேடிய போது, வைணவ உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் (காலம் கிபி 1230) ‘ஆனைச்சாத்தன்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய காலத்தில் அந்தப் பறவையின் பெயர் வழக்கில் இருந்திருக்கிறது அதனால் வேறு பெயர்களை அவர்கள் உபயோகிக்கவில்லை என்று தெரிகிறது.
திருப்பாவை அரும்பத உரையில் ’ஆனைச்சாத்தன் - வலியன் என்னும் பாரத்வாஜபக்ஷிகள்’ என்று ஒரு குறிப்பு வருகிறது. ’பாரத்வாஜ்’ என்று வடமொழியிலும் தமிழிலும் ’’வலியன்' என்ற ஒரே பொருள் தருகிறது.
திரு பி எல் சாமி ’சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்’ என்ற புத்தகத்தில் பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் அலி தன் ஆங்கிலப் புத்தகத்தில் வரும் குறிப்பு ஒன்று மிகச் சுவாரசியமாக இருக்கிறது. அதில் வலியன் குறித்து இப்படி வருகிறது.
”....இரண்டு மூன்று பறவைகள் நேருக்கு நேர் அமர்ந்து ஒன்றோடொன்று உரக்க பேசுவதும், திட்டிக்கொள்வதுமாக சிறகை அடித்து வாக்குவாதம் செய்கிறது....” என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தான் ஆண்டாள் ’கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்’ என்று எளிமையாக முடித்துவிட்டாள்.
விடியற்காலையில் குரலிடும் கோழியை கோழிச்சாத்தன் என்றும், வலியனில் ஒருவகை ’கரவடம்’ என்ற இனத்தைச் சேர்ந்த பறவையை காராடன் சாத்தன் என்று கிராமங்களில் பேச்சுவழக்கு பெயராக இருக்கிறது. வலியன் குருவி இனத்தில் ’ஆனைராஞ்சி’ என்ற பறவையை நாட்டுப் புறத்தில் எளிதில் காணலாம். ஆண்டாள் வாழ்ந்த பகுதியில் இது ‘ஆனைச்சாத்தன்’ என்ற பேச்சுவழக்கு பெயராக இருந்திருக்கும். அதை ஆண்டாள் அப்படியே வட்டார மொழியில் உபயோகித்திருக்கிறாள்.
வலியன் பறவையைப் போர்க்குச் செல்லும் மறவர் சகுனம் பார்க்கும் பறவையாகக் கருதினர் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. கிராம புரங்களில் ஊரைக் காக்கும் எல்லைச் சாமியான ஐய்யனாருக்கு ‘சாத்தன்’ என்ற பெயரை வழங்கி வருகிறார்கள். ஐய்யனாரின் கோயில் கதவுகளில் வலியன் குருவியைப் பொறித்துள்ளார்கள். வலியனை இந்தி மொழியில் ’கோட்வால்’ (Kotwal ) என்கிறார்கள். இதன் அர்த்தம் காவல்காரன். கேரளாவில் ‘ஆனைராஞ்சி’ என்று இதை இன்றும் அழைக்கிறார்கள். யானையை கூட இறாய்ஞ்சி செல்லும் வலிமை குறிக்கிறது. தமிழில் “வலியன்” என்று பொருத்தமான பெயரை இதற்குச் சூட்டியுள்ளார்கள்.
எளிய பறவைகளுக்குப் பாதுகாப்பு தரும் பறவையாக வலியன் விளங்குகிறது. மரத்தின் உச்சியில் இதன் கூடு இருந்தால் கீழ்க்கிளைகளில் சிறு பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழுமாம். கழுகு போன்ற மற்ற பறவைகள் வந்தால் வலியன் தன் வீரத்தால் அஞ்சாநெஞ்சனாக மற்ற சிறிய பறவைகளைக் காக்கும் கடவுளான ஐயனாரைப் போன்ற எல்லைச்சாமியாக விளங்குகிறது.
தமிழ் நாட்டுக் கோயில் கல்வெட்டுக்களில் ஒன்றில் ‘இவந்தானும்... அடைகுடி ஆனைச்சாத்தனும்’ என்ற ஒரு வரி வருகிறது. ’அடைகுடி’ என்பது பயிரிடும் குடியைக் குறிக்கிறது. ஆனைச்சாத்தன் என்பது ஒருவனின் பெயராக வருகிறது. ஒருவனுடைய பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டும் என்றால் நிச்சயம் வலியனாக தன்னை அண்டியவர்களை எதிரிகளிடமிருந்து காப்பவனாக அஞ்சாநெஞ்சனாக ஆற்றல்மிக்கவனாக காவல் அதிகாரியாக ’வலியன்’ பறவை போல இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
என்றாவது விடியற்காலை எழுந்துகொண்டு பறவை ஒலியைக் கேட்க நேர்ந்தால், அவை வெறும் சத்தம் இல்லை பறவைகளின் பேச்சுகள். அதை ஆண்டாள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கூர்ந்து கவனித்திருக்கிறாள் என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை!
சென்ற வாரம் என் நண்பர் எதிராஜன் அவர்கள் தன் கேமராவில் கவர்ந்த ஆனைச்சாத்தன் படங்களைக் கொடுத்திருக்கிறேன்.
- சுஜாதா தேசிகன்
28.12.2022
படங்கள்: Ethirajan Srinivasan
Migavum arumaiyaana urai...
ReplyDeleteMigavun arumaiyaana urai
ReplyDeleteJust read the following in an old article in Jeyamohan's website -
ReplyDeleteநான் birder யிடம் மிமிகிரி செய்யும் பறவை உண்டா என்று கேட்டேன். Black Drongo என்றார். நம்ம கரிச்சான் தான். சங்கத் தமிழில் ஆனைச் சாத்தான் என்று வழங்கப்பட்டதாக காட்டியல் நிபுணர் மா கிருஷ்ணன் கூறுகிறார்.