Skip to main content

கோதை கீதை - அவதாரிகை

 கோதை கீதை - அவதாரிகை



திருமழிசைப்பிரான் பாசுரம் இது

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்

அன்று தேர்த்தட்டில் கண்ணன் ஓதிய கீதையை( சரம ஸ்லோகம்) அறியாதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என்கிறார்

வேதப்பிரான் பட்டர் திருப்பாவை குறித்து இப்படிச் சொல்லுகிறார்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழ் திருப்பாவை முப்பதும் தெரியவில்லை என்றால் உங்களை இந்த பூமி சுமப்பதே வீண் என்கிறார்.

ஆக, கீதை, திருப்பாவை இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் வேஸ்ட் என்று சொல்லி விட்டார்கள்

கீதையையும் திருப்பாவையையும் சேர்த்து ’கோதை கீதை’ என்ற தலைப்பில் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.

’ஸர்வோபநிஷதோ காவோ’ என்று ஆரம்பிக்கும் கீதையின் தியான ஸ்லோகத்தின் பொருள் -
உபநிஷதங்கள் என்னும் பசுக்களிலிருந்து கோபாலன் என்ற பால்காரன் அர்ஜுனன் என்ற கன்றுக்கு கறந்த பாலாகிய கீதை என்ற அமுதத்தை அருந்துவோர் நல்ல புத்திமான்கள் என்கிறது.

கீதை முழுவதும் படிக்கப் பல காலம் ஆகும், அதைப் புரிந்துகொள்ள பகவானின் அருள் வேண்டும். திருப்பாவை முப்பது பாசுரங்கள் தான், அதை ஆசாரியர்களின் உரையுடன் ஆண்டாளின் துணையுடன் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம்.

கொசு கடித்து சொறிந்துகொள்ளும் போது சுகமாக இருக்கும். அதிகம் சுகம் வேண்டும் என்று சொறியச் சொறிய அதுவே புண்ணாகி மருத்துவரிடம் செல்கிறோம்.

இது போலத் தான் நம் வாழ்க்கையும். பிறந்தவுடன் பாலுக்கு அழுகிறோம். பிறகு நல்ல உடை, வீடு, வெளியூர், வெளிநாடு என்று நம் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு சுகத்தைத் தேடிக்கொண்டே அலைந்து திரிந்துகொண்டு இருக்கிறோம். எந்த சுகத்திலும் திருப்தி ஏற்படுவதில்லை. யாரைக் கேட்டாலும் ’ஏதோ ஓடிக்கொண்டு இருக்கு’ என்கிறார்கள். சுயமுன்னேற்ற நூல்கள், மனதை அமைதியாக வைத்துக்கொள்வது எப்படி என்று இப்போதே புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்கள் தயாராகிவிட்டது. ஆனால் நிரந்தர சுகம் என்று எதுவும் இல்லை.

கீதை நிரந்தர ஆனந்தத்தை எப்படி அடைவது எழுநூறு ஸ்லோகங்களில் கர்ம, ஞான பக்தி என்றால் என்ன என்று கூறி அதை அடைவது எப்படி என்று விளக்குகிறது. ஆண்டாள் அதை முப்பது பாசுரங்களில் டிவிட்டர் போலச் சுருக்கமாகக் கூறிவிட்டாள். கண்ணன் கறந்து அர்ஜுனனுக்கு ஊட்டிவிட்டான். ஆண்டாளோ ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ போல கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதையும் தவறாமல் சொல்பவர்கள் திருமாலின் திருவருள் பெற்று இன்புறுவர் என்று சொல்லிவிட்டாள். இன்புறுவர் என்றால் ஆனந்தம்.

நம்மாழ்வார் ’பசும் தமிழ் ஆனந்தம்’ என்கிறார். ஆனந்தமே ப்ரம்மம் . அந்த பிரமமாகிற நிரந்திர ஆனந்தத்தை அடையும் வழியைத் திருப்பாவை கூறுகிறது. அந்த பசும் தமிழ் ஆனந்தமாகிய திருப்பாவையை கீதையுடன் அனுபவிக்கலாம்.

கோதை கீதையை தினமும் அடியேனால் எழுத முடியாது.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டாக எழுதி முடிக்கப் பார்க்கிறேன்.

- சுஜாதா தேசிகன்
15.12.2022
மார்கழிக்கு முதல் நாள்

Comments