Skip to main content

கோதை கீதை - 1

கோதை கீதை - 1


 

திருப்பாவை - 1


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்

எல்லா திருப்பாவை புத்தகங்களிலும், உபன்யாசங்களிலும் ’மாதங்களில் நான் மார்கழி மதமாக இருக்கிறேன்’ என்று கண்ணன் கீதையில் சொன்ன ‘மாஸாநாம் மார்க்க சீர்ஷோ ஹம்’ என்ற கீதையின் ( 10.35 ) வரியை மேற்கோள் காட்டி ஆரம்பிப்பது மரபு. நாமும் அப்படியே ஆரம்பித்து ‘நன்னாள்’ என்ற அடுத்த வார்த்தைக்குத் தாவிடலாம்.

மார்கழி மாதம், முழு நிலவுடன் கூடிய பௌர்ணமி! நோன்பைத் தொடங்க ஒரு சுபமுகூர்த்தம் வாய்த்தது என்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் பஞ்சாகம் பார்த்து ஆரம்பிக்கவில்லை, இது தற்செயல்.

சுபமுகூர்த்தம் என்ற கரடுமுரடான சொல்லுக்கு அழகிய தமிழ் சொல் ’நன்னாள்’. சுபமுகூர்த்தம் என்பது மாதம், பக்ஷம், காலம் என்று பஞ்சாங்கத்தை வாத்தியார் ஸ்வாமி அலசக் கொடுக்க வேண்டும். ஆண்டாள் அதை எல்லாம் பார்த்து பாவை நோன்பை ஆரம்பிக்கவில்லை. அவளுக்கு இயல்பாகவே நன்னாள் அமைந்துவிட்டது.

எது நன்னாள் ?

மதி நிறைந்த மார்கழியில் கண்ணனை நினைக்கவில்லை என்றால் அது நன்னாளா ? இல்லை. கண்ணனை நினைக்கும் நாளே நன்னாள். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கண்ணனைக் காணப் போகிறோம் என்று நினைக்க, அந்த நன்னாளுக்கு மார்கழியும். மதியும், சுக்லபட்சமும், ஆளவந்தார் பகவத் பக்தர்களுக்கு விதியும் ஒத்துழைக்கும் என்கிறார். அது போல ஆண்டாளுக்கு அவை ஒத்துழைத்தது!

ஸ்ரீரங்கத்தில் திருவத்யயன உத்ஸவம். அரையர் சேவை..

கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர்!-நாம் உமக்கு அறியச் சொன்னோம்.

திருவனந்தபுரம் பெருமாளைச் சேவிக்க என்னைச் சேர்ந்தவர்கள் இப்போதே எழுந்திருங்கள் உடனே திருவனந்தபுரம் நடந்து சென்று அவன் பாதத்தை வணங்கலாம் என்று நம்மாழ்வார் அழைக்கும் பாசுரத்துக்கு அரையர் இசையுடன் அபிநயம் செய்கிறார்.

ஆளவந்தார் ரசிக்க அன்று அரையருக்கு என்ன தோன்றியதோ இந்தப் பாசுரத்தை இரண்டு முறை அபிநயம் செய்கிறார் அதுவும் ஆளவந்தாரைப் பார்த்துக்கொண்டே.

நம்மாழ்வார் தனக்கு ஒரு குறிப்பு வைத்திருக்கிறார் என்று ஆளவந்தார் உடனே எழுந்துகொண்டு, திரிதண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார், மடத்துக்குக் கூடச் செல்லாமல், அவர் சிஷ்யரைக் கூப்பிட்டு மடத்திலிருந்து ”திருவாராதன பெருமாளை எழுந்தருளிக்கொண்டு வாரும்” என்று உடனே திருவனந்தபுரம் நோக்கி சிஷ்யர்களுடன் ஆழ்வார் சம்பந்தம் கிடைக்கும் என்று புறப்படுகிறார். ஆளவந்தார் நேரம் காலம் எல்லாம் பார்க்கவில்லை, பெருமாளைக் காண உடனே புறப்படுகிறார்! இது தான் ஆளவந்தார் கூறும் நன்னாளுக்கான வரையறை(definition).

வஞ்சனையுடன் சதித்திட்டம் தீட்டி ’கண்ணனை இங்கே அழைத்து வா’ என்று கம்சன் கட்டளையிட அக்ரூரர் மகிழ்ந்து ‘கம்சன் சோறு உண்ட வாழ்க்கைக்கு விடியும் நாள் உண்டானதே!’ என்று மகிழ்ந்து, போகும் வழி எல்லாம் கண்ணன் என்ன அலங்காரத்துடன் இருப்பான், எப்படி பேசுவான் அவன் அழகையும் நினைத்து நினைத்துச் சென்ற அந்த நாள் நன்னாள்.

அக்ரூரர் போல ஆண்டாளும்

கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

என்று கண்ணனை நினைத்து நினைத்துச் செல்கிறாள்.

’செங்கண் மால் எங்கள் மால் என்ற நாளே நன்னாள்!’ என்கிறார் பேயாழ்வார். ( ஆண்டாள் கார்மேனிச் செங்கண் என்கிறாள்)

பகவானை அடையும் முன் பகலே தோன்றாத இரவு. கண்டபின் இரவே இல்லாத பகல் என்பதை ‘பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்’ என்கிறார் பூதத்தாழ்வார்.

கீதை 10.10 , 10.11 என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.

10.10 -
[தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் |
ததாமி புத்தியோகம்தம் யேந மாமுபயாம்தி தே |
]

“எப்போதும் தினமும் என்னிடம் ஈடுபடுகிறவர்களும் பிரேமையுடன் என்னை வழிபடுகின்றவர்களுமான அந்த பக்தர்களுக்கு எதன் மூலம் அவர்கள் என்னை அடைவார்களோ அந்த பத்தியோகத்தை அளிக்கிறேன்”

10.11
[தேஷாமேவாநுகம் பார்த்த மஹமஜ்ஞாநஜம் தம:
நாசயாம்யாத்ம பாவஸ்த ஜ்ஞாநதீபேந பாஸ்வதா ||]

“அந்த பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே அவர்கள் உள்ளத்தில் நிலைத்து இருக்கும் நான் அவர்களின் அறியாமையால் விளைந்த இருளை ஒளிமயமான ஞானம் என்னும் விளக்கினால் நீக்கிவிடுகிறேன்”

மதி என்றால் சந்திரன் என்று ஒரு பொருள். நல்லறிவு என்று இன்னொரு பொருள். இருக்கிறது. கண்ணனை நினைப்பதே நல்லறிவு. அவனே எல்லாம் நமக்குத் தர வல்லவன் என்பது ஞானம். அந்த மதி நிறைந்த நாளே நன்னாள்!
இப்போது மேலே சொன்ன கீதை வாக்கியங்களை மீண்டும் படியுங்கள்.

-சுஜாதா தேசிகன்
17.12.2022

Comments

Post a Comment