தொண்டரடிப்பொடி ‘ஃபார்முலா’
கணக்கு போடுவதற்கு எப்படி ’ஃபார்முலா’ அவசியமோ அது போல ஸ்ரீ வைஷ்ணவத்தைக் கற்றுக்கொள்ள மிக முக்கியமான ஃபார்முலா ’தொண்டரடிப்பொடி’யாக இருப்பது.
பல கோயில்களுக்கு சென்று பெருமாளை வழிபடுகிறோம். ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறான், திருமலையில் நின்றுகொண்டு இருக்கிறான். ஆனால் அந்தப் பெருமாள்களுக்கு மிகவும் உகந்த இடம் எது தெரியுமா ? அது அடியவனின் நெஞ்சம்.
சதா சர்வ காலமும் பெருமாளை நினைத்துக்கொண்டு இருக்கும் ஆசாரியனே தனக்குத் தெய்வம் என்றும் நான் அவருடைய உடமை என்று எண்ணுவதால் அந்த அடியவனின் தூய நெஞ்சில் உறைந்து போய் பெருமாளுக்கு விரும்பிய உறையுமிடமாகிறது.
கோயில் முற்றத்தில் அடியார்களின் திருவடிகளால் ஏற்படும் சேறு என உடம்புக்கு அணிகலன் என்றும் அகன்ற மூவுலகங்களைப் பெறுவதைக் காட்டிலும் பாகவதர்களுக்கு ஆட்படுவதே எல்லாவற்றையும் விடப் பெரியது என்பதை அறிகிறோன். அடியார்களுக்கு ஆட்படுவதே எனக்கு வேண்டுவது. இதை விடப் பெரிய பேறு வேறில்லை என்கிறார் நம்மாழ்வார்.
அவருடைய சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் “தேவ மற்றறியேன்” ”அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று நம்மாழ்வாரே எல்லாம் என்று இருந்தார்.
ஸ்ரீவைஷ்ணவ அடியார்களை நடந்து வருவதைக் கண்டால் சங்கம், சக்கரம் வருகிறது என்று நினைக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார். அவருடைய பெண் ஆண்டாள் “விட்டுசித்தர் தங்கள் தேவர்” என்று தன் தகப்பனாரான விஷ்ணுசித்தரே தான் விரும்பிய தெய்வம் என்கிறாள்.
இதை எல்லாம் ஆழ்வார்கள் எங்கே கற்றுக்கொண்டார்கள் ? ஸ்ரீமத் ராமாயணத்தில் தான்.
ஸ்ரீராமர் திரும்பிவரத் தாமதமாக பரதன் தீக்குளிக்க எண்ணி சத்துருகன்னிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது கண்ணும் மனமும் நடுங்கி சத்துருக்கன் தரையில் சோர்ந்து விழுந்து விம்மலுடன், வெப்பமாக பெருமூச்சுவிட்டுக்கொண்டு “நான் உனக்கு என்ன பிழை செய்தேன்!” என்று புலம்பி “பரதனுக்குப் பின் சத்துருக்கன் உயிர்வாழ்தல் தகுமோ ?” என்று கம்பராமாயணத்தில் விவரிக்கப்படுகிறது.
ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன், சத்துருக்கனன் என்று நால்வருள் சத்துருக்கனனது பக்தியை நம் ஆசாரியர்கள் கொண்டாடுகிறார்கள்.
பரதாழ்வான் ஸ்ரீராம பக்தனான பரதன் தான் ஸ்ரீராமனின் உடமை என்று அடியவனாக இருக்க, பரதனுக்கு அடியவனாக சத்துருக்கனன் அடியவருக்கு அடியவராக இருக்கும் சிறப்பே இதற்குக் காரணம்.
இப்போது மதுரகவி ஆழ்வாரின் இந்த பாசுரம் படித்துப் பாருங்கள்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு**
அன்பனாய்* மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே
எளிய விளக்கம்
அன்பான ஆயனின்
அன்பனான ஆழ்வாருக்கு
அன்பனான மதுரகவியின்
கண்ணிநுண் சிறுத்தாம்பை கற்பவர்களுக்கு
இருப்பிடமே வைகுந்தம் !
மேலே ”அன்பனான ஆழ்வாருக்கு அன்பனான மதுரகவி” என்ற இடத்தில் ”அன்பனான பெரியாழ்வாருக்கு அன்பனான ஆண்டாள்”
அன்பனான பரதாழ்வானுக்கு அன்பனான சத்ருக்கனன்” என்று பொருந்துவதற்கு காரணம் ’ஃபார்முலா’ ஒன்று தான்.
இந்த ஃபாமுலாவை ஸ்வாமி தேசிகன் அதிகாரசங்கரகத்தில் ’மதுரகவி தோன்றக் காட்டும் தொல்வழியே நல்வழிகள்’ என்கிறார். அந்த நல்வழியை ’நிலையாக பெற்றோம்’ என்கிறார் ஆர்த்திப் பிரபந்தத்தில் மணவாள மாமுனிகள்.
- சுஜாதா தேசிகன்
11.12.2022
படம்: ஸ்ரீ கேஷவ்
Comments
Post a Comment