2022
கடைசியில் திருஷ்டி சுற்றிப் போடுதல் போல ’இந்த வருடம் என்ன செய்தேன்’ என்று ஒரு பதிவை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் எழுதுவது மரபு.
கொரோனாவிற்குப் பின் பயணம் அதிகரித்து, இந்த வருடம் 194 நகரங்கள், 22K கிமீ பயணம் செய்திருக்கிறேன் என்று கூகிள் செப்பியது.
உருப்படியாக செய்த விஷயம் இரண்டரை.
1)பதம் பிரித்த பிரபந்தம் இரண்டாம் பதிப்பு; அதை ஸ்ரீ உ.வே கிருஷ்ண பிரேமி ஸ்வாமி, ஸ்ரீ உ.வே பட்டண்ணா ஸ்வாமி, ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பல பெரியோர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றது. ஸ்ரீ உ.வே டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் எழுதிக்கொடுத்த பாராட்டுரை மகிழ்ச்சியைக் கொடுத்தது.
எண்பது வயத் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்கள் உங்கள் புத்தகத்தை மேலும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இரண்டு மணி நேரம் தொலைப்பேசியில் புத்தகத்தில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டி தமிழ் வகுப்பு எடுத்தார்.
அடுத்து, 2) ஸ்ரீராமர் சென்ற பாதையில் யாத்திரை சென்று வந்தது.
0.5)கல்கியில் ’கடைசிப் பக்கம்’ இரண்டு வருடம் தொடர்ந்து எழுதி முடித்தது ( அதைப் படித்திருந்தால் நீங்கள் செய்த உருப்படாத காரியம் அது). தமிழ் திசையில் திருப்பாவை.
பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஆனால் பார்க்க முடியாமல் போனது ஆந்திராவில் சமத்துவ ஸ்ரீ ராமானுஜர்.
ஆழ்வார்க்கடியான் நம்பி போல வீர வைணவனாக இருந்தாலும் தினமும் அண்ணாமலையைப் பெயரைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
ஓ.டி.டியில் ஹிந்து, தெலுங்கு, வங்காள மொழி, மலையாளம் என்று பல படங்களைப் பார்த்தேன். பார்த்த எல்லாப் படங்களிலும் ஒரு டிரோன் ஷாட் கட்டாயம் இருக்கிறது. கூட முத்தமும் ரத்தமும்.
ராகெட்ரியை ரசித்தேன். ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ அதிர்ச்சி. விக்ரமில் தூங்கினேன். காந்தாரா தியேட்டரில் நன்றாக இருந்தது, டிவியில் சுமார். வலிமை பார்த்த பிறகு அண்ணாத்த சுமாராக இருந்தது. 'தி லெஜன்ட்' திரைப்படம் ஓ.டி.டியில் வராதது ஏமாற்றம். எப்போது வரும் என்று சூர்யஜோதிசித்தரிடம் கேட்க அவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
கால்பந்தைப் பின் தொடரவில்லை, தீராத விளையாட்டுப் பிள்ளை எலான் மஸ்க் டிவிட்டரில் விளையாடுவதில் பின் தொடர்ந்தேன். சென்னை விஜயத்தின் போது சதுரங்கப் பாலத்தில் செல்ஃபி எடுத்த போது டிராஸ்ஃபாரில் கூடக் கருப்பு வெள்ளை வண்ணப்பூச்சு அடித்திருந்ததைக் கவனித்த மனைவி “சீக்கிரம் வாங்க” என்று மிரண்டாள்.
என் பள்ளித் தோழன் மாசி என்ற மாசிலாமணி ஒரு நாள் சட்டென்று மறைந்தது அதிர்ச்சியாக இருந்தது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ந்த இந்த வருடத்தில் எனக்குத் தெரிந்த நூறு தமிழ் வார்த்தைகளுடன் வெறித்தனம், வேற லெவல், தெறிக்கவிட்ட உபிஸ், சங்கி, மாஸ், மாடல், முட்டு போன்றவை என் சொல்லகராதியில் சேர்ந்தது.
சமூக வலைத்தளத்தில் கருத்துக் கந்தசாமிகளுக்கு இடையில் திரு கேஷவ் படங்களும், நண்பர் எதிராஜன் புகைப்படங்களும் சற்றே அறுதல் அளித்தது.
பனி இல்லாத மார்கழியா என்பது போலக் குழியில்லாத சென்னையா, சிரிப்பில்லாத சீமானா என்று இந்த வருடம் மாமூலாக சென்றுகொண்டு இருந்த சமயம், வருடத்தின் கடைசி வாரம் ஸ்ரீரங்கத்திலிருந்து உறையூர் நாச்சியாரை இரண்டு மணி நேரம்(காவிரி பாலம் வேலை நடக்கிறது) ஊர்ந்து சென்று சேவித்த பயன், பகல் பத்து உற்சவத்தில் பெரிய பெருமாள் முடை நாற்றம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டிக்கொடுக்க, மீசை இல்லாத பார்த்தசாரதி சடாரி சாதித்து அனுப்பினார்.
இதையும் அறிவோம்:
ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு அன்று சேவிக்கப்படும் பாசுரம் ‘அம்பரமே!’
எல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
- சுஜாதா தேசிகன்
31.12.2022
Arumai arumai. Swamin adiyen.. dasan adiyen..
ReplyDelete