Skip to main content

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம் 

சுஜாதாவின் ’ ‘ஸ்ரீரங்கத்து கதைகள்’ தொகுத்துக்கொண்டு இருந்தேன். அதில் அப்பாவின் ‘ஆஸ்டின்’ என்ற சிறுகதையை அதில் சேர்க்க வேண்டுமா? என்ற சந்தேகம் வர, ஒரு மாலை சுஜாதா அவர்களின் இல்லத்துக்குச் சென்று பேசியபொழுது அந்தக் கதை கிட்டத்தட்ட முழுவதும் உண்மை என்று தன் அப்பாவைப் பற்றி பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

‘அப்பாவின் ஆஸ்டின்’ என்ற சுஜாதாவின் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். கதை இதுதான். சுஜாதாவின் தந்தை அழுக்கு நிறத்தில் ஓர் ஆஸ்டின் கார் வாங்குவார். குடும்பத்தில் எல்லோரும் அதன் கலரை மாற்றச் சொல்லியும் மாற்றாமல் இருப்பார். பிறகு ரிடையர் ஆன பிறகு அதை விற்றுவிடுவார். அவர் ஏன் நாங்கள் எல்லோரும் பல முறை சொல்லியும் வண்ணத்தை மாற்றவில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பிறகு “He had a message for us” என்றார்.

இதே போல நாங்கள் திருச்சியில் வாடகை வீட்டில்தான் இருந்தோம். ரொம்ப பழைய வீடு. நாங்கள் எவ்வளவு செல்லியும் என் அப்பா கடைசி வரை அந்த வீட்டை மாற்றவில்லை. என் அப்பா காலமான பிறகு வீட்டை மாற்றினோம். “ஒரு நாள் அம்மா போனில்… நாம் இருந்த வீட்டை இடிக்க ஆரம்பிச்சாச்சு” என்று சொல்லி முடிப்பதற்குள் கட கட என்று வீடு இடிந்து கிடுகிடுவென ஒரு பிளாட் முளைத்து, இன்று நாங்கள் வாழ்ந்த வீடு இங்கேதான் என்று குத்து மதிப்பாகத்தான் எங்களால் சொல்ல முடியும். ஆழ்ந்து யோசித்தால் சுஜாதா சொன்னது போல என் அப்பாவும் “He had a message for us” என்று தோன்றுகிறது.



சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் “சுஜாதா திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டை இடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று இடித்துக் கொண்டிருந்த வீட்டை விடியற்காலை படம்பிடித்து அனுப்பியிருந்தார். அதைப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. சில சமயம் “இவை எல்லாம் நமக்கு ஒருவிதத்தில் எதையோ உணர்த்துகிறது” என்று தோன்றியது. (கொசுறு தகவல் : சுஜாதா பிறந்தது திருவல்லிக்கேணியில். அங்கு அவரைத் தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜத்தின் மனைவி)

சுஜாதா காலமானபோது எனக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சுஜாதா காலமான அன்று விடியற்காலை எல்லாம் முடிந்து, இரண்டு மணிக்கு அப்போலோ மருத்துவமனையிலிருந்து மொத்தமாக வெளியே வந்து, வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாட்ச்மேன் ஒரு சலாம் போட்டுச் சிரிக்க, பையிலிருந்த பத்து ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

சுஜாதா மறைந்து கொண்டிருந்தபோது கூட இருந்து, அவருக்காக ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாளின் திருப்பாவை படித்து வழி அனுப்பி வைத்த அந்தப் பிரபந்தப் புத்தகத்தைப் பைக்கின் பெட்ரோல் டாங்க் பையில் சொருகிவிட்டு,  ஏதோ நினைவில் கிரீம்ஸ் ரோட் வழியாக வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணா சாலையை கடந்து சத்தியம் தியேட்டர் வந்தபோது பைக்கில்  சொருகிய பிரபந்தப் புத்தகத்தைக் காணவில்லை.

மீண்டும் வந்த வழியாகத் திரும்பவும் அண்ணா சாலைக்கு வந்தேன். இருட்டில் எங்கே விழுந்திருக்கும் என்று தேட, லாரிகளும், வெளியூர் பேருந்துகளும் வேகமாகச் சீறிக்கொண்டு இருக்க ஆட்டோ ஒன்று நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. அங்கே சென்றபோது, ஆட்டோ டிரைவர் கையில் கந்தலாக அந்தப் பிரபந்தப் புத்தகம்.

“சார் அது என்னுடையது!” என்றேன்.

“சாரி கீழே கிடந்தது… லாரியோ பஸ்ஸோ ஏற்றிட்டது” என்றார். கொத்தாக அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அந்தப் புத்தகத்தை இன்னும் ஒட்டாமல் அப்படியே ஒரு பையில் வைத்திருக்கிறேன். பிரபந்தம் புத்தகம் கந்தலாகக் கிழிந்ததற்கான காரணம் தெரியவில்லை என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.



இதைப் படித்துவிட்டு சுஜாதாவின் தம்பி ( திரு எஸ்.ராஜகோபாலன் ) எனக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு பகுதி இது:

“நீங்கள் சமீபத்தில் ரங்கராஜன்(சுஜாதா) குறித்து எழுதியதைப் படித்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், ’அவன் நம்முடன் இல்லை’ என்ற நினைப்பே எனக்குக் கடினமாக இருக்கிறது…… அறிவற்ற லாரியால் ஒரு விலைமதிப்பற்ற புத்தகம் கிழித்து அழிக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் ’உடல் வடிவத்தில் உள்ளப் புத்தகம் முக்கியமில்லை; அதில் கூறப்பட்டிருக்கும் செய்தியே முக்கியம்’ என்று ரங்கராஜன்  உங்களுக்கு ஒரு செய்தியை இதன் மூலம் சொல்லியிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனால் வாழ்கையில் பொருள்களின் மீதான  ’சென்டிமெண்ட்’ இல்லாமல் இருக்க வேண்டும்.

பதினான்கு வருடங்கள் கழித்து இதை யோசிக்கும்போது “He had a message for me” என்றே தோன்றுகிறது.

- சுஜாதா தேசிகன்
கல்கி கடைசிப் பக்கம்
25.02.2022

படம்: சுஜாதாவும் அவருடைய தம்பியும் ஸ்ரீரங்கத்தில் நான் எடுத்தது.
இடிந்த வீடு படம் - நன்றி திரு. சம்பத்குமார் ஸ்ரீநிவாசன்

Comments

Post a Comment