ஜே.எஸ்.ராகவன் - அஞ்சலி
எழுத்தாளர் சுஜாதா மறைந்தபோது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ‘தமாஷா வரிகள் (304)’ – ’வைகுண்டம் டைம்ஸில்’ சுஜாதாவின் ‘கேள்வி பதில்கள்’ என்று ஒரு நகைச்சுவை பகுதி இணைக்கப்பட்டிருந்தது. கடைசியில் விகடனில் உங்கள் சுஜாதா கட்டுரை படித்தேன், ‘டச்சிங்’ – ஜே.எஸ்.ராகவன் என்று இருந்தது.
அதற்குப் பிறகு அவருடன் சில மின்னஞ்சல் பரிமாற்றங்களுடன் எங்கள் தொடர்பு மங்கிப் போய், நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூர் குளிரில் துளிர் விட்டது.
ஒரு நாள் காலை தொலைப்பேசியில் “நான் ஜே.எஸ்.ராகவன் பேசுகிறேன். நினைவிருக்கிறதா? என் பையன் பெங்களூரில் இருக்கிறான். வந்திருக்கிறேன். சந்திக்கலாமா?” என்றார்.
“நல்லா நினைவு இருக்கிறது சார். பெங்களூரில் எங்கே?”
விவரமாக விலாசத்தை சொல்லிவிட்டு “நீங்க எங்கே இருக்கேள் ? வரமுடியுமா?” என்றார்.
“உங்க ஃபிளாட்டை விட்டு கீழே இறங்கி வந்தால் வாசலில் ஒரு ஃபௌண்டன் இருக்கிறதா?”
“ஆமாம்”
“பத்து நிமிஷத்தில் நான் அங்கே இருப்பேன். நீங்க ‘C’ பிளாக் நான் ‘A’ பிளாக்” என்றேன்.
“நான் தமாஷா வரிகள் எழுதி மாம்பலம் டைம்ஸுக்கு அனுப்ப வேண்டும். அதனால் ஒரு மணி நேரம் கழித்து வரட்டுமா ?” என்றார்.
அன்றிலிருந்து என்னுடைய நடைப்பயிற்சி கூட்டாளி ஆனார். குடும்பம், அரசியல், எழுத்து என்று எது பேசினாலும், மூன்று நிமிஷத்துக்கு ஒரு ஜோக் சொன்னார். சில நகைச்சுவை எனக்குப் புரியவில்லை. சங்கோஜப் படாமல் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டேன். பி.ஜி. வுட்ஹவுஸ் (PG Woodhouse) போன்றவற்றை ஆழ்ந்து படித்திருந்தால் சட்டென்று புரிந்திருக்கும் என்று புரிந்தது.
‘உங்கள் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்க வேண்டும்’ என்று கூற, வீட்டுக்குச் சென்ற உடனே எனக்கு அனுப்பினார். தினமும் அவரிடம் ஓர் ஒழுங்கைப் பார்த்தேன். சரியான நேரத்துக்கு வருவார். நடையை முடித்துவிட்டு சரியான நேரத்துக்குத் திரும்பிவிடுவார். அன்று என்ன திட்டம் என்று கூறுவார்.
அவர் சென்னை திரும்பிய பிறகு அவருடன் வாரத்துக்கு ஒரு முறை, பிறகு மாதத்துக்கு ஒருமுறை … என்ற எங்கள் பேச்சு உறக்க நிலைக்குச் சென்றது.
வட்டார ஏடுகளான அண்ணாநகர், மாம்பலம் டைம்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ’தமாஷா வரிகள்’ என்ற பகுதியை ஒரு தவம் போலவே எழுதினார். அவர் எழுத்திலும் ஓர் ஒழுங்கைப் பார்க்கலாம். ஒவ்வொரு பத்தி ஆரம்பிக்கும் போது இடஒதுக்கீடு முறையில் கொஞ்சம் இடம் விட்டு ஆரம்பித்து, முடிக்கும் போது
”—oOo—”
இந்த மாதிரி டிசைனுடன் முடிப்பார். ஹார்லிக்ஸ் விளம்பரம் போல ‘அப்படியே பிரசுரிக்கலாம்.’
அவர் பெங்களூரில் என்னுடன் நடந்தபோது ஒரு சிறுகதை பிரசவித்தது.
ஒரு நாள் காலை நடையின் போது, விமானப் பயணத்தின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை என்னிடம் கூறினார்.
“அட… நல்லா இருக்கே… இதை நல்ல சிறுகதையாக எழுதலாம்” என்றேன்.
“இதையா?” என்றார் நம்பிக்கை இல்லாமல்.
“நீங்க பர்மிஷன் கொடுத்தால் எழுதுகிறேன்”
’ராகவன்’ என்பவருக்கு நிகழும் ஒரு கதையாக அதை எழுதினேன்.
பிரசவித்த கதை இரண்டு வாரத்தில் குமுதத்தில் பிரசுரமானது. படித்துவிட்டு
“ஒளிந்துகொண்டு இருந்த சிறுகதை உங்களுக்கு தெரிந்திருக்கிறது.நல்ல எழுதியிருக்கீங்க” என்று பாராட்டினார். க்ரேஸி மோகன் அந்தக் கதைக்கு ஒரு வெண்பாவே எழுதி எனக்கு அனுப்பினார்.
’கோவிட் அலையால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூவில் இருந்தார்’ என்று படித்த போது, அவர் வீடு திரும்பிய பிறகு ’அவருடன் பேச வேண்டும்’ என்று நினைத்திருந்தேன். பேசவில்லை.
அவருடைய முகநூலில் பக்கங்களை அவ்வப்போது படிப்பேன். இந்த மாதம் ’நினைவுச் சிதறல்கள்’ என்று ஆரம்பித்து முதல் கட்டுரையாக ‘சுப்ரமண்ய ராஜு’ பற்றி 150 வார்த்தையில் அவர் எழுதியதைப் படித்து ஆடிப் போனேன். ’அவருடன் பேச வேண்டும்’ என்று நினைத்தேன். மீண்டும் பேசவில்லை.
பிப்ரவரி 24ஆம் தேதி
“ஏம்மா, இன்னிக்கு கறிகாயெல்லாம் ஏக விலை சொல்றே?’
‘தெரியாதா சாமி, காலிலே ரஷ்யாவுக்கும் யூக்ரேனுக்கும் சண்டை ஆரம்பிச்சுடுத்தாமே.’
என்று முகநூலில் லஞ்ச் டைத்துக்கு ஒரு ஜோக் அடித்துவிட்டு டின்னருக்கு இறைவனடி சென்றார் என்று தெரிந்தபோது அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஆண்டாள் திருப்பாவையில் ‘இப்போதே எம்மை நீ’ என்று, ’எனக்கு உடனே பெருமாள் வேண்டும்’ என்று அடம்பிடிக்கிறாள்.
ஆண்டாள் போல நானும் ‘அப்போதே’ அவருடன் பேசியிருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது.
- சுஜாதா தேசிகன்
நன்றி : கல்கி கடைசிப் பக்கம்
4.3.2022
Comments
Post a Comment