Skip to main content

பாகவத திருப்பாவை - 26 ( மாலே! )

பாகவத திருப்பாவை - 26 ( மாலே! )மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே, கொடியே, விதானமே
ஆலின் இலையாய்! அருள் ஏலோர் எம்பாவாய்.


“திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்” என்கிறார் பெரியாழ்வார். ஆண்டாளோ ‘மாலே!’ என்கிறாள். மால் என்றால் என்ன பொருள் என்று தெரிந்துகொள்ளலாம். 

மால் என்றால் “வ்யாமோஹம்” என்ற வார்த்தையைக் குறிக்கிறது. எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா ? நாம் தினமும் சேவிக்கும் எம்பெருமானார் தனியனில் வரும் அந்த வார்த்தையைக் கீழே தேடுங்கள். 

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம 
வ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேநே 
அஸ்மத்குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ: 
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.

ஸ்ரீராம பாரதி ஆங்கிலத்தில் இரண்டு வரி அர்த்தம் தந்திருக்கிறார். 

“I surrender to Sri Ramanuja  the ocean of ’compassion’ who strove for the lord's feet as the only worthwhile possession and discarded all else as lightly as a blade of grass” 

மால் என்றால் compassion ! 

”மாலே ! மணிவண்ணா ! ” என்று ’மாலே’வை தொடர்ந்து மணிவண்ணா! வருகிறது. இரண்டு வார்த்தைகளுக்குப் பிறகு ஆச்சரியக்குறி (‘!’) வேறு வருகிறது. அப்படி என்றால் மணிவண்ணாவிலும் ஏதோ விஷயம் இருக்கிறது. அதை தெரிந்துகொள்வதற்கு முன் ஒரு குட்டிக் கதை. 

சுதபாகா என்ற மகரிஷிக்கு பிரம்மத்தை காண வேண்டும் என்று விருப்பம்.. குளிர், மழை என்று எதையும் பொருட்படுத்தாமல்  கடுமையான தபஸை மேற்கொண்டார். பயன் இல்லை. பல மகரிஷிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று கேட்க அவர்களும் எங்களுக்குத் தெரியாது நாங்களும் அதற்கு தான்  கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றார்கள். 

இந்திரன், அக்னி  போன்ற தேவர்களிடம் கேட்க அவர்களும் கையை விரிக்க, அந்தச் சமயம் அங்கே வந்த நாரதரிடம் கேட்க, அவர் “இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் ?  நேராகச் சென்றால் கோகுலம் வரும் அங்கே போனால் பார்க்கலாம்” என்றார். 

மகரிஷி உடனே கோகுலத்துக்கு விஜயம் செய்ய, அங்கே அவருக்கு அதிர்ச்சி. இடையர்கள் மாடுகளைப் பராமரித்துக்கொண்டும், பால் கறந்துகொண்டும் இருக்கிறார்கள். இந்த இடத்திலா பிரமம் இருக்கப் போகிறது என்று முனிவருக்குச் சந்தேகம் வர அப்போது அங்கே தாவணியுடன் பன்னிரண்டு வயது பெண் “என்ன தாத்தா என்ன வேண்டும் ?” என்கிறாள். 

பிரமம் என்றால் இந்தக் கோபிகைக்கு எங்கே தெரியப் போகிறது என்று நினைத்து, “ஒரு வஸ்துவைத் தேடிக்கொண்டு வந்தேன்.. இங்கே கிடைக்காது போல..” என்று அலுத்துக்கொண்டார். . 

“இங்கே கிடைக்காத வஸ்துவா அது என்ன ?”

“நீ சின்ன குழந்தை உனக்கு சொன்னா தெரியாது…புரியாது”

“பரவாயில்லை தாத்தா சொல்லுங்க …”

“பிரம்ம ஸ்வருபத்தை தேடிக்கொண்டு....”

“அட பிரமம்  ?...இதுவா பாருங்க.. ” என்று அந்தப் பெண் தன் தாவணியிலிருந்து ஒரு முடிச்சை அவிழ்க்க அதிலிருந்து சின்ன கருப்பான ரத்தினக்கல் போன்ற குழந்தை குதித்து ஓட… 

“மணிவண்ணா !” 

இப்போது ஆண்டாள் ஏன் மணிவண்ணா என்கிறாள் ? 

மணி என்றால் ரத்தினம். 

ரத்தினக்கல் எவ்வளவு விலை உயர்ந்தது ஆனாலும், அதை முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளலாம். அது போல எம்பெருமானும் எவ்வளவு பராத்பரனாக இருந்தாலும ‘பத்துடை அடியவர்க்கு எளியவனாக’ இருக்கிறான். 

ரத்தினக்கல் எல்லோருக்கும் கிடைக்காது. அது போல எம்பெருமானும் பிரேம பக்தி செய்யும் பாக்கியசாலிகளுக்கு மட்டுமே அந்தப் பேறு கிடைக்கும்.. 

ரத்தினத்தை வைத்திருப்பவர்களுக்குத் தூக்கம் வராது. அது போல ரத்தினம் கிடைக்கும் வரை பக்தன் தூக்கம் வராமல் திண்டாடுவான். கிடைத்த பின் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்று ‘உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்று எப்போதும் பெருமாள் நினைவே உறங்காமல் இருப்பார்கள். 

கடலிலே வலை வீசும் மீனவன் கையில் ரத்தினம் கிடைக்க, அதை ஒரு ரத்தின வியாபாரியிடம் சொற்ப விலைக்கு விற்பான். வியாபாரியோ அதன் விலை அறிந்து அற்ப விலைக்கு விற்காமல், அதை அரசனிடம் அதிக விலைக்கு விற்பான். அரசனோ அதை ஆனந்தமாக அணிந்துகொண்டு அதை முழுமையாக அனுபவிப்பான். சிலர் மீனவன், வியாபாரி போலப் பகவானிடம் பலனை விரும்புவர். ஆனால் அடியார்களோ அரசன் போலப் பகவானை ’எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே’ என்று அனுபவிப்பார்கள். 

”விச்வாய, விஷ்ணவே..” போன்ற விஷ்ணு சஹஸ்ர நாமங்களைச் சொல்லும் போது அவனின் பிரபாவத்தை அவனே பிரமம் என்று நினைக்கும் போது கொஞ்சம் பயம் ஏற்படுவது இயற்கையே. ஆனால் ’மணிவண்ணா’ என்றால் சுலபம், எளியவன் ! என்று பொருள். 

மால் என்ற வார்த்தைக்கு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் விடை இருக்கிறது!

மாலாய்ப் பிறந்த நம்பியை
   மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
   இங்கே போதக் கண்டீரே?

”அன்பே ஒரு வடிவாய் பிறந்ததோ எண்ணும்படியான அன்பையே காட்டுகின்ற மணவாளனாய்….” ஆண்டாள் கண்ணனை அன்புடையவன் என்று சொல்லவில்லை. அன்பு, அன்பானவன் இரண்டையும் பிரிக்கமுடியாமல் ’அன்பின் வடிவம்’  என்பதை  ”மாலே!” என்ற ஒரே வார்த்தையில் அவனை அடக்கிவிட்டாள்.  

பாகவதத்தில் யசோதை கண்ணனை உரலில் கட்டுண்டது பற்றி உங்களுக்குத் தெரியும். யசோதை கண்ணனைக் கயிற்றால் கட்ட முயன்றாள். 

அதை ஸ்ரீ சுகர் இப்படி விவரிக்கிறார் “எவருக்கு உள்ளும் புறமும், முன்னும் பின்னும் கிடையாதோ, எவர் இந்த உலகின் உருவமோ, எடுத்துக்காட்டுகளால் இன்னாரென்று அறியவொண்ணாதபடி, புலன்களுக்கு, புலப்படாத மனித வடிவம் ஏற்று விளங்கும் அவரைத் தன் புதல்வனாக எண்ணி சாதாரணக் குழந்தையைப் போலக் கயிற்றால் உரலில் கட்ட முயன்றாள்”

இந்த உலகில் தன்னிடம் பக்தி கொண்டவருக்கு எளிதில் அடையத்தக்கவராக இருக்கிறான். 

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்கிறார் மதுரகவி (கண்ணி - பல முடிகளை உடைய ; நுண் -  நுட்பமாய் ) 

நவவித பக்திகளை சிறு முடிகளாக வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நுட்பமாய் சுத்த பிரேமையை(மால்) சேர்த்து அவனை அணுகினால் எளிதில் அடையத்தக்கவனாகக் கட்டுப்படுகிறான். 

மாலுடன் என்று அவனை அணுகினால் ‘எத்திரம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே'’ என்று உரலில் கட்டுப்பட்டு, மணிவண்ணாக முந்தானையில் முடிந்துகொள்ளும்படியாக இருக்கிறான்! 

இதை தான் நம்மாழ்வார் 

வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று
ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்
பாரித்து தானென்னை முற்றப்பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே

உன்னை காணும் பொழுது, அப்படியே விழுங்க ஆசை கொண்டால் எனக்கு முன்னமே நீ என்னை முற்றும் பருகிவிடுகிறாய் என்கிறார். 

பெருமாளை சாக்லேட் (solid) போல அப்படியே விழுங்க நினைக்கும் முன்பே,  அவன் தன் குணத்தால் நம்மை உருகச்செய்து(liquid) பருகிவிடுகிறான் - மாலே!

- சுஜாதா தேசிகன்
மாலே! - 26
16.03.202
படம் : நன்றி கேஷவ்

Comments

  1. தாசன் அடியேன்

    ReplyDelete
  2. Wonderful writing Sir- This 26 th Pasuram is very special. Upto 25 pasurams Andal is waking up everyone including Krishna. In this 26th Pasuram Andal get to see Krishna ( MalE ! ManiVanna!)

    ReplyDelete

Post a Comment