தொடை நடுங்கி ‘சரியான தொடை நடுங்கி’ என்ற சொல்லை நிச்சயம் நாம் எல்லோரும் கேட்டிருப்போம். ’தொடை நிஜமாக நடுங்குமா’ என்ற சந்தேகமே வேண்டாம். தொடை நடுங்கும். எனக்கு நடுங்கியிருக்கிறது. எப்படி என்று சொல்லுகிறேன். 2004ல் பெங்களூர் வந்த புதிது. அலுவலகம் செல்ல கார் வாங்கினேன். பொன்வண்டு போலப் பளப்பாக இருந்தது. ஓட்டுநர் உரிமம் +12 விடுமுறையில் ஒரு அம்பாசிடர் கார் ஓட்டிக் காண்பித்தபோது ’பிழைத்துப் போ’ என்று கொடுத்தது. புதுக் காரை ஓட்ட தைரியம் இல்லாமல், “நீங்களே வீட்டுல டிராப் செய்துவிடுங்கள்”. கார் வீட்டுக்கு வந்தது. ஒரு வாரம் ஸ்டார்ட் செய்து விடியற்காலை யாரும் இல்லாத சமயம் அடுக்குமாடிக் குடியிருப்பை ஒரு வட்டம் அடித்துவிட்டு பார்க் செய்துவிடுவேன். ஒரு நாள் கொஞ்சம் தைரியம் வந்து அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றேன். ஒரு வாரத்துக்குப் பிறகு பெங்களூர் சாலைகள், சிக்னல், எஃப்.எம். வானொலியில் ‘Sakkath Hot Magaa’ எல்லாம் பழக்கப்பட்டது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் மழை வந்தது. அன்று மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பியபோது லேசான தூறல்தான். ’காரை மழ...