Skip to main content

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு 


மணக்கால் நம்பி காட்டு மன்னார் முன்பு கைகூப்பி நின்றார். தன் ஆசாரியர்களின் ஆசை நிறைவேறப் போகிறது என்று அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க, அவர் திருவாக்கில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாடக பாசுரம் 

உலகம் ஏத்தும் தென் ஆனாய்!
வட ஆனாய்!
குட பால் ஆனாய்!
குணபால மத யானாய்!
இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்! 
பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்!
முதல் ஆனாயே!

உதிர்ந்து காட்டுமன்னார் திருவடியில் விழுந்தது.(1)

குருவை சீடன் தேடி அடையவேண்டியதே உலக நியதி. ஆனால் உலகம் நல்வாழ்வு பெறுவதற்கு சீடனைத் தேடி குருவும் செல்லலாம் என்று அந்த நியதியை மாற்றி மணக்கால் நம்பி நாள்தோறும் ஆளவந்தாரது அரண்மனைக்குச் சென்று அன்று இடைப் பிள்ளையான மாயக் கண்ணன் அர்ஜுனனுக்கு தேர்த்தட்டிலிருந்து அன்புடன் அருளிய பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையின் செம்மைப் பொருளை கண்ணபிரான் சொன்னபடியே ஆளவந்தாருக்குத் தெளிந்த ஆர்வம் உண்டாகுமாறு பதினெட்டு நாள் உரைத்தார். 

ஒரு நாள் மணக்கால் நம்பி கீதையின் சரம ஸ்லோகமான “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச” என்பதற்கு திருமழிசைபிரானின் நான்முகன் திருவந்தாதி பாசுரம் தேவர்களும் மகிழும் வண்ணம் உள்ளம் உருகி விவரித்துரைத்தார் . 

சேயன், அணியன், சிறியன், மிகப் பெரியன்
ஆயன், துவரைக்கோனாய் நின்ற மாயன்  அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம், மெய்ஞ் ஞானம் இல்.

“அவன் எட்டாதவன், ஆனால் சுலபன். அவன் சிறியவன் ஆனால் அதே சமயம் அவன் பெரியவன். துவாரகையின் அரசனான கண்ணன் அன்று பாரத யுத்தம் நடந்த போது அவன் சொன்ன சரம ஸ்லோகம் என்னும் வாக்கை கல்லாதவர் அவனுக்குப் பகைவன் ஆவார்” என்றார்.(2)

அவற்றைக் கேட்டுக்கொண்டு இருந்த ஆளவந்தார் நம்பியைக் கண்ணீருடன் வணங்கி “மாயனிடம் பகைமையை போக்கி எனக்கு அருள் புரிந்தீர்! இந்த மாயனைக் காணும் உபாயம் தான் யாது ?” என்று கேட்டார். 

பொங்கும் ஆசையுடையவரான ஆளவந்தாரை நம்பி அருகில் அழைத்து ‘மெய்மை பெருவார்த்தையான’ சரம ஸ்லோகத்தின் முழு அர்த்தத்தையும், ‘நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற திரு எட்டெழுத்து மந்திரத்தையும், ‘அகலகில்லேன் இறையும்  என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்ற அழகிய த்வயத்தையும் மனத்திலே நிலைத்திருக்குமாறு உபதேசித்தார். (3) 

இதைக் கேட்ட ஆளவந்தார் நெல்லுக்குப் பால் பிடிக்கக் கதிர் கனத்துத் தலை வணங்குமா போலே(4) சரணாகதி நெஞ்சில் தேங்கி சம்சாரத்தில் ருசி அற்று தலையைக் குனிந்து மெதுவாக நம்பிகளிடம் “குளிர்ச்சி பொருந்திய நீலமேக வண்ணனாகிய கண்ணனை இப்பொழுதே காண வழியில்லையா ?” என்றார் 

ஆளவந்தார் மனம் முழுக்க கண்ணன் ஆக்கிரமித்து நெருப்பில் அகப்பட்ட மெழுகுபோல ஆகியிருப்பதை உணர்ந்த நம்பி  “உம் திருப்பாட்டனார் அந்த நிதியைத் தான் உம்மிடம் கொடுக்க சொல்லி என்னிடம் கொடுத்துள்ளார்! அது இரண்டு நதிகளுக்கு இடையில், ஏழு பிரகாரங்களுக்கு நடுவில் ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது!” என்றார் நம்பி.

ஆளவந்தார் தீர்மானமாக “இப்பொழுதே கிளம்புங்கள்!” என்று எழுந்துகொண்டார். சொல்லும் பொருளும் ஒன்றாக இருப்பது போல, நம்பியும், ஆளவந்தாரும் ஒன்றாக திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்கள். 



கொள்ளிடகரை ஓரமாக காட்டிலும், மேட்டிலும் நடந்த அன்றைய பகற்பொழுது விரைவாக கழிந்தது. மாலை கபித்தலம் வந்தடைந்து. ‘ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்’ என்ற திருநாமத்துடன் இருக்கும் கண்ணன் முன் திருமழிசை ஆழ்வார் அனுபவித்த பாசுரத்தை இருவரும் சேர்ந்து சேவித்தார்கள். (5) 

கூற்றமும் சாரா;* கொடு வினையும் சாரா* தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன்** ஆற்றங்
கரைக் கிடக்கும்* கண்ணன், கடல் கிடக்கும்* மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு

கோயிலில் கொடுத்த பிரசாதங்களையும், பழங்களையும் உண்டு, அருகில் இருந்த மண்டபத்தை வந்தடைந்தார்கள். 

சூரியன் அஸ்தமனம் ஆகி மேகங்கள் சிகப்பாக காட்சி அளித்தது. பறவைகள் சத்தம் ஓய்ந்து நிலவு மெதுவாக மேலே வந்த போது வண்டுகள் சத்தம் விட்டு விட்டும் சில சமயங்களில் தொடர்ந்தும் ஒலியெழுப்ப, காவிரி ஆற்றின் சலசலப்புக்கு இடையில் ஆளவந்தார் தூங்காமல் மேலே தெரிந்த விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருப்பதைப் போல இவரும் கண்சிமிட்டிக்கொண்டு திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை மனதில் அசைபோட்டார். . 

பாற்கடலில் பள்ளி கொண்ட மாயன், காவிரிக் கரையில் கபித்தலத்தில் திருக்கண் வளர்ந்தான். இக் கண்ணன் அருளிய கீதையின் சரமச் சுலோகமே என் நெஞ்சில் பதிந்துள்ளது. ஆதலால் யமனிடம் பயம் இல்லை. பாவங்கள் வராதபடி உள்ள உபாயத்தை அறிந்தேன். நேற்று வரை அரசனாக இருந்த எனக்கும் திருமழிசை ஆழ்வாருக்கும் தான் என்ன ஒற்றுமை என்று வியந்தார். 

ஆளவந்தார் நித்திரை இல்லாமல் இருப்பதை அறிந்துகொண்ட நம்பி  “யமுனைத் துறைவரே! நேற்று அரசனாக  பட்டு மெத்தையில் தங்கக் கட்டிலில் தூங்கியவருக்கு இன்று புழுதி மெத்தையும் கல் தரையும் சுகமாக இல்லையோ?” என்றார் 

ஆளவந்தார் சிரித்துக்கொண்டு “நம்பியே! நாம் இன்று சேவித்த திருமழிசைப் பிரான் பாசுரத்தை அனுபவித்து, என் பாட்டனாரின் நிதியை எப்போது பெறப் போகிறோம் என்ற எண்ணத்தால் தூக்கம் வரவில்லை!” என்றார். 

“எனக்கும் தூக்கம் வரவில்லை! சில வருடங்கள் முன் திருவரங்கத் திருவை காப்பாற்றிய கதையை உமக்குக் கூறுகிறேன்” என்று நம்பி ஒட்டர் கலகம் பற்றிக் கூற ஆரம்பித்தார். 

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு கூறியதின் சுருக்கத்தை நம் நேயர்களுக்கு இங்கே தருகிறோம். (6) 

நாதமுனிகளின் காலத்துக்குப் பிறகு உய்யக்கொண்டாரும், மணக்கால்நம்பியும் திருவரங்கத்தில் ஆசாரிய பீடத்தை ஏற்றுக்கொண்டு, வைணவத்தை வளர்த்து வந்த சமயம், கலிங்கத்துத் தேசத்து மன்னன் ஒருவன் திருவரங்கத்தின் மீது படையெடுத்து வந்தான். இதை அறிந்த திருவரங்க கோயில் நிர்வாகிகள் அழகிய மணவாளனைத் திருவரங்கத்திலிருந்து திருமாலிருஞ்சோலை அழகர் சந்நிதிக்கு எழுந்தருளச் செய்துகொண்டு சென்றார்கள். அங்கே அழகியமணவாளனை ஓர் ஆண்டு பாதுகாத்து வந்த பின், மீண்டும் திருவரங்கத்துக்கு எழுந்தருளினார்கள். 

துரதிருஷ்டவசமாக,  முன்பு பெருமாளுக்கு ஆராதனம் செய்தவர்கள் திருவரங்கத்தில் இல்லை. அரச தண்டனைக்குப் பயந்து திருவரங்கத்தைவிட்டு வெளியேறியிருந்தார்கள். 

அழகியமணவாளனுடன் திருவரங்கத்துக்கு ஓராண்டு அழகியமணவாளனுக்கு ஆராதனத்தைச் செய்து வந்த வைகானச நம்பிமார்கள் ஆராதனம் செய்ய யாரும் இல்லாத காரணத்தால் தங்கள் வழக்கப்படி செய்யத் தொடங்கினார்கள். 

இந்தக் கலகத்துக்குப் பிறகு பல சமயம் சார்ந்தவர்களும் திருவரங்கத்திலேயே இல்லம் அமைத்து வாழ்ந்து வந்தார்கள். 

திருவரங்கம் இப்படி இருந்த சமயத்தில் தான் மணக்கால் நம்பி தன் ஆசாரியனின் ஆணையை நிறைவேற்ற யமுனைத்துறைவனைத் திருத்த தன் பயணத்தை மேற்கொண்டு வெற்றியுடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார். நாமும் அந்தப் பயணத்தில் சேர்ந்துகொள்வோம். 

நள்ளிரவுக்குப் பிறகு ஆளவந்தாரும், நம்பிகளும் சற்று கண்ணயர்ந்தார்கள். 

ஒருவாறு இரவு கழிந்து பொழுது விடிந்தது. ‘ஆற்றங்கரை கிடக்கும் கண்ணனை’ வணங்கி காவிரிக் கரையோரமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை திருவரங்கம் வந்தடைந்தார்கள். 

வடதிருக்காவிரியில் தண்ணீர் சிறு சலசலப்பு அலைகளுடன் சென்று கொண்டு இருந்தது. கதிரவனின் ஒளிக் கீற்று அதன் மீது படத் தங்க மீன்கள் பல துள்ளிக் குதிப்பது போலக் காட்சி அளித்தது. 



ஆளவந்தாரும், மணக்கால் நம்பியும் நீராட வடதிருக்காவிரி  நீராடும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கே 

சீரார்ந்த திருவரங்கம் பெரிய கோயில்
சிறந்த பிரணவமான திருவரங்கா
தாரார்ந்த திருவரங்கச் செல்வி புன்னைத்
திருசந்திர புட்கரிணி தகுந்தென் வாசல்
ஓரார்ந்த வீடணர் கொண்டிட்ட பொட்டத்
தகுந்த ஆனந்த சயனத்தில் இலங்கு சோதி
காரார்ந்த திருவுருவும் கமலக் கண்கள்
கண்டு அனு தினம் உள்ளத்தில் கருதுவேனே (7)

என்று பாடிக்கொண்டு நீராடிக்கொண்டு இருந்தார்கள். 

ஆளவந்தார் நீராடத் தொடங்கிய போது காவிரியின் நீர் அவர் உடம்பில் பட்ட உடன் நம்பிகளைப் பார்த்து “இந்தப் புனித நீர் உடம்பில் பட்டவுடன் மனதிற்கு இன்ப அனுபவத்தைக் கொடுக்கிறது!” என்றார் ஆளவந்தார்

“திருவரங்கத்தில் வாழ்பவர்களுக்கு ஞானத்தில் சுருக்கம் கிடையாது. யமனுக்கும் வசப்பட மாட்டார்கள். மகா புண்ணிய பூமியான திருவரங்கத்தை அறிவாளியான எவன் தான் அடைய மாட்டான் ? ” என்றார் புன்னகையுடன். (8) 

காலை அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, வடதிருக்காவிரியை கடந்து, தெற்கு வாசல் வழியாக மாட மாளிகை சூழ் திருவீதியும், மன்னு சேர் திருவிக்கரமன் வீதியும், ஆடல் மாறன் அகளங்கன் வீதியும், ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும், கூடல் வாழ்குல சேகரன் வீதியும், குலவு இராச மகேந்திரன் வீதியும், தேடரிய தர்ம வர்மாவின் வீதியும் கடந்து  பெரிய பிராட்டியை வணங்கிவிட்டு,  கருட மண்டபத்துக்கு வந்தடைந்து, ஆரியபட்டாள் வாசல் வழியாக சந்துனு மண்டபத்தைக் கடந்து, மணத்தூணுக்கு நடுவில் ஆளவந்தாரை நிறுத்திய நம்பி அரங்கனைப் பார்த்து “ஐயனே! வயல்கள், நண்பர்கள், செல்வங்கள், பிள்ளைகள், மனைவியர், பசுக்கள், வீடுகள் ஆகிய அனைத்தும் உன் திருவடி தாமரையில் ஈடுபட்டவனுக்குப் பகையாகவே ஆகின்றன! உன் கண்களைக் கண்டவருக்கு மற்றொன்றை காணாவே! என்று வேறொரு விஷயம் அறியாதே! ஆராத அருள் அமுதமான உன் திருவடியையும், உன் கண்களையும் நாதமுனிகளின் பேரனான யமுனைத் துறைவருக்கு காண்பி!” என்றார் மணக்கால் நம்பி. (9)

அவர் ஆளவந்தாரைப் பார்த்து “யமுனைத் துறைவரே! நான்கு வேதங்களின் முடிவுப் பொருளாக விளங்கக்கூடிய சரமஸ்லோகத்தின் விளக்கப் பொருளாக விளங்குபவன் இந்த அரங்கன். உன் திரு பாட்டனாரான நாதமுனிகள் தேடி வைத்த அழியாத செல்வம் நம் அரங்கன். இதைக் காணும்!”  என்று பெரிய பெருமாளைத் திருவடி தொழப் பண்ணிய போது விளக்கு வெளிச்சத்தில் பெரிய பெருமாள் காட்சி அளித்தார். 

முன்பு தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும் பெரிய பெருமாளுடைய முடிவில்லாத எழில் திருமேனியைத் திருவடியிலிருந்து, திருமுடிவரை எவ்வாறு மனம் கனிந்து அனுபவித்து நீர் பண்டமாக உருகி அந்தத் தடுமாற்றத்தில் மணத்தூணைப் பற்றினார்களோ அதே போல ஞானம் மிக்க ஆளவந்தார் மேக நிறத்தானுடைய அவயங்களையும், குணத்தையும் நன்கு உணர்ந்து அனுபவித்து வற்றாத ஊற்றினுடைய மணற்கேணி போன்று நெஞ்சம் கரைந்து, உருகி, தடுமாற்றத்துடன் பேச முடியாமல் நடுக்கமுற்று பாற்கடலில் அலைகள் திருவடி வருடும்படி கண்வளர்ந்த கடல் நிறத்து எம்பெருமானின் திருவடிகளை ஆதிசேஷனாகிய படுக்கையின் மீது கண்டு வணங்கி, முன் சென்ற நாள்கள் வீணாகியதே ! என்று அஞ்சி மழை பெய்தாற் போல் கண்களில் கண்ணீரானது தாரை தாரையாகப் பெருகத் தொடங்க, குவித்த கைகளுடன் அரங்கனின் திருவடிகளை வணங்கி “அரங்கனே! “ என்று பூமியில் விழுந்து வணங்கினார். 

ஆளவந்தார் கண்ட காட்சியை முழுவதுமாக நாம் எழுத்தில் விவரிக்க இயலாது. இருந்தாலும் நம் நேயர்களுக்கு ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு சற்று விரிவாக கூறுவது நம் கடமையாகிறது. (10) 



எம்பெருமானுடைய அழகு பரமபதத்தில் இரண்டு இலை விட்ட செடி போல் சிறிது வளர்ந்திருக்கும். பல திவ்ய தேசங்களில் தழைத்த மரம் போல நிறைந்திருக்கும்.  அந்த தழைத்த மரம் திருவரங்கத்தில் பத்து ஆழ்வார்கள் பாசுரங்களால்  காய் கனிகளுடன் பூத்துக் குலுங்கும். (11)

இதிகாசப் புராணங்களில் முழுமையாக காட்ட முடியாத எம்பெருமானின் திருமேனி அழகை ஆழ்வார்கள் நமக்குப் பாசுரங்களில் காட்டியுள்ளார்கள். அதை தான் ஆளவந்தார் சற்று முன் உணர்ந்து அனுபவித்தார். 

அப்போது அலர்ந்த  செந்தாமரைப் பூபோலே வந்து தோன்றிய அரங்கத்து அமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே என்ற பங்கயக் கண்ணானை அனுபவித்த ஆளவந்தார் 

அடுத்து கண்கள் அருகே திருமூக்கு இருக்கிறபடி கற்பகத்தின் கொடியோ, கொழுந்தோ என்று எண்ணும்படி சுடர்விட்டு ஏற்றிய பெரு விளக்கின் ஒளியை உடையதாக கண்டார். 

அடுத்து, பெரிய  பெருமாள் திருவாய் அழகு திரண்ட பவளத்தின் துண்டமோ நீலமாய் போக்யதை நிறைந்துள்ள முகில் போன்ற வடிவுடைய தொண்டை கோவைப்பழம் போல் கனிந்த செவ்வாய் என்னைச் சிந்தை கவர்ததுவே , முற்றும் உண்ட கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே! என்று அந்தச் சுகானுபவத்தைப் பெற்று, 

திருவுருவத்தின் அழகை கண்ட போது அவை அபலைகளை வளைக்கின்ற இரண்டு நீளமான விற்களோ அல்லது அந்த வடிவோடு இருக்கின்ற அழகை உடைய மன்மதனின் கரும்பு வில்லோ என்று எண்ணிய போது, 

பெருமாள் புன்சிரிப்பின் அழகை கண்டு சிவந்த சுடரை உடைய வெளுத்த மின்னல் என்னலாம் படி இருக்கிறது என்று வியப்புற்று, பத்தா நாள் அச்சுதன் முத்தம் இதுவோ  ? என்று முறுவலை வியக்க 

காதின் அழகு பச்சை நிற மரகதமாய் தழைத்தன சில தளிர்களோ என்று வியக்க நெற்றியின் அழகோ வளர்பிறை அஷ்டமி சந்திரனைப் போலக் காட்சி கொடுத்தது. 

திருமுடியோ, அளவிடமுடியாத  சுடராய் பரந்த ஒளியை உடைய ரத்னங்களினுடைய நிறமுடையதாய் எல்லா உலகங்களையும் அடங்காத ஒளியாக எங்கும் வியாபித்திருக்கும் திருக்குழல் கற்றையின் அனுபவிக்க குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்று எல்லா அழகையும் கண்டு திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் என அந்த அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று அந்த சுவையை ருசித்து, அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே ! என்று கீழே விழுந்து அரங்கனின் திருவடியைப் பற்றிக்கொண்டார் 

திருவடியைப் பற்றிக்கொண்ட அந்த நொடியில் நெருப்பில் இட்ட ஈர மண்பாண்டத்தில் எப்படி நீர்ப்பசை அற்றதாக ஆகிறதோ அது போல எல்லாப் பற்றையும் துறந்து சந்நியாச ஆசிரமத்தை  மேற்கொண்டு,  மணக்கால் நம்பி தமக்குச் செய்த பேருதவிக்குக் கைம்மாறு ஏதும் கிடையாது என்று திருவரங்கன் திருவடியின் கீழ் மணக்கால் நம்பியின் திருவடியைப் பற்றிக்கொண்டார். 

 சம்ஸாரத்தில் பிறந்தவர்கள் அடையக்கூடிய சிற்றின்பங்களை எல்லாம் அவன் திருத்தோள்களை தொழுதால் வெறுப்பவராவர்  என்ற ஆழ்வார் வாக்கு பொய்க்கவில்லை(12) என மனதில் நினைத்த மணக்கால் நம்பி “ஆளவந்தாரே ! உம் பாட்டனார் நாதமுனிகள் என் ஆசாரியனுக்கு ஒரு ரகசியத்தைக் கூறியுள்ளார் அதையும் உமக்குச் சொல்லுகிறேன்!” என்றார் 

பயணம் தொடரும்...

- சுஜாதா தேசிகன்
16-05-2021

-----------------------------------------------------------------------------------------------------------

(1) இந்தப் பாசுரம் காட்டுமன்னாருக்கும் என்றும் நிர்வாகம். 

(2) திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி. 

(3) ஆண்டாள், மங்கை மன்னன், நம்மாழ்வார் பாசுரங்கள். 

(4) கதிர் விடும் நெல்லுக்குள் இருக்கும் அரிசி அறுவடை சமயத்தில் பால் பிடிக்க முடியாமல் வளைந்து இருக்கும். 

(5) திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி பாசுரம். 

(6) கோயில் ஒழுகு தகவல் 

(7) திருப்பதிக்கோவை -1 பாடல்

(8) ஸ்ரீரங்க மஹாத்மியம்

(9) ஹஸ்திகிரி மஹாத்மியம்

(10) பல ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு இது எழுதப்பட்டது. 

(11) அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் - அமலனாதிபிரான் வ்யாக்யான அவதாரிகையில் ( அதை சற்று கதைக்காக மற்றியுள்ளேன் ) 

(12) மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்

Comments

  1. A transition from King to an ascetic for Aalavandaar was made possible by Sriram Mishra aka Manakkal Nambi. In fact Nambi's roots were in North India. But Nambi became a true acolyte of Uyyakkondar and delved deep into the ocean of Sri Vaishnavism and made Aalavandaar enjoy the Divine Bliss by Arangan's Grace. THOODUVALAI KEERAI was a powerful tool for Nambi to have access to King Yamunai Thuraivar. Interesting anecdote like this is plenty in our illustrious Guru Paramparai. Raamaanuja Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
    Replies
    1. Manakkal Nambi roots were in North India - do you have any authentic reference. The entire writing is based on GP and other texts. The thoothuvalai keerai is there in the previous part, hope you had read that. thanks.

      Delete
  2. பழரசச் சாறு பருகுவது போல் அருமையான இனிமையான தமிழ். ஒரு நொடிகூட கவனம் சிதறாமல் படிக்க வைக்கும் நடை. தந்யோஸ்மி.

    ReplyDelete
  3. மடை திறந்த வெள்ளம்போல் தவழ்ந்த நடை. மனம் நிறைந்து மகிழ்ச்சி

    ReplyDelete
  4. Exellent narration.very interesting


    ReplyDelete
  5. திருவரங்க அனுபவம்,,,,அருமையான இனிமையான நன்கு உணர்ந்து அனுபவித்து - மனதிற்கு இன்ப அனுபவத்தைக் கொடுக்கிறது.. தந்யோஸ்மி
    .🙏.🙏.🙏.🙏.🙏.🙏.🙏

    ReplyDelete

Post a Comment