Skip to main content

உய்யக்கொண்டர் கோதைக்கு சூட்டிய பெயர் !

 உய்யக்கொண்டர் கோதைக்கு சூட்டிய பெயர் ! 



நாதமுனிகள் தன் மகன்  ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் காலத்தில் அது முடியாமல் போக, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின், ஆசாரியன் விருப்பப்படி ஈசுரமுனி மகனுக்கு ’யமுனைத்துறைவன்’ என்று பெயர் சூட்டி அருளிச்செயல் பாடம் புகட்டினார். 

“யமுனை துறைவன்” என்ற பெயர்  எங்கிருந்து வந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.  திருப்பாவையில் 

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 

தூய பெரு நீர் யமுனை துறைவனை

திருவரங்கத்து அமுதனார் தம் இராமானுச நூற்றந்தாதியில், ஆளவந்தார் என்று கூறாமல் 'யமுனை துறைவன்' என்று நாதமுனிகள் விரும்பிய பெயரையே உபயோகிக்கிறார். 

எதிகட்கு இறைவன் யமுனை துறைவன் இணை அடியாம்

கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே

நாதமுனிகளின் நேர் சிஷ்யர் உய்யக்கொண்டார் இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர். 

உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்).  இவருக்கு எப்படி உய்யக்கொண்டார் என்ற பெயர் எப்படி வந்திருக்கும் ? 

ஸ்ரீமத் நாதமுனிகள் யோக சாஸ்திரத்திலும் விற்பன்னர். யோகத்தில் பகவானை உணரும் ஆற்றல் பெற்றவர். நாதமுனிகள் குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்கயோகம் கற்பித்து உய்யக்கொண்டாருக்கும் கற்றுக் கொடுக்கப் பிரியப்பட்டபோது உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்றார். அதாவது ஒருவர் வீட்டில் யாரோ இறந்து கிடக்கும்போது அங்கே மகிழ்ச்சியான திருமண பேச்சைப் பேசமாட்டார்கள். இதன் உள் அர்த்தம், உலகில் பல மக்கள் சம்சாரத்தில் சுக துக்கங்களில் உழன்று கிடக்க நாம் மட்டும் selfish ஆகப் பகவானை அனுபவித்துக் கொண்டிருக்கலாமா ? என்பது பொருள். 

இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக்கொண்டீரோ?” என்றார். இதனால் அவருக்கு உய்யக்கொண்டார் என்ற பெயர் என்று  வைத்துக்கொண்டாலும், நாதமுனிகள் அவருக்கு ஆழ்வார் திருவாக்கில் வந்த வார்த்தையையே அவருக்குப் பெயராகச் சூட்டினார் என்று தோன்றுகிறது.

திருமங்கை ஆழ்வார் 

“தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்”  என்கிறார். 

நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே மூழ்கி ஆழ்வாரின் சொற்கள் மட்டுமே அவருடைய vocabulary ! 

திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத் தமிழ்மாலை. 

சங்கத் தமிழில் - இயல், இசை நாடகம் என்ற மூன்றும் இருக்கும். அதனால் தான் அதை முத்தமிழ் என்கிறோம்.  சங்க நூல்களில் தனிதனியே இருக்கும் ஆனால் இது மூன்றும் ஒரு சேர அமைந்தது திருப்பாவை. எப்படி என்று பார்க்கலாம். 

இயல் - செய்யுள். திருப்பாவை மிகக் கடினமான “வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகக் கலிப்பா வகையைச் சேர்ந்தது. ( இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா என்றும் கூறுவர் ). ஆண்டாள் சாதாரணமாக  பேசிக்கொள்வதே செய்யுளாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. 

நாடகம் இருக்கிறதா ? திருப்பாவையை நாட்டுப்புற பாடல் வகையில் அருமையான திரைக்கதை ( Screen play ) இருக்கிறது. 

இசை எங்கே இருக்கிறது ? ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்த தனியனே அதற்குச் சான்று - 

‘இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்’  என்கிறார். 

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

ஆண்டாள் தன்னை ‘சுரும்பார் குழல்கோதை’ (நாச்சியார் திருமொழி) என்றும் ‘பட்டர்பிரான்கோதை சொன்ன’ (திருப்பாவை) என்றும், தன்னைக் கோதை என்றேதான் அடையாளப்படுத்திக்கொள்கிறாள். எங்கும் ஆண்டாள் என்று கூறிக்கொள்ளவில்லை ஆனால்  ஆண்டாள் பிரசித்தமான பெயராக விளங்குகிறது. அது யார் சூட்டிய பெயர் ?

நாச்சியார் திருமொழியில் நாதமுனிகளின் இன்னொரு சீடரான ஸ்ரீ திருக்கண்ணமங்கையாண்டான் தனியனில் .

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.

மல்லிநாடு - ஸ்ரீவில்லிப்புத்தூர். அதை ஆண்ட மடமயில் என்கிறார். பாண்டிய அரசன் தன் செல்வாக்கினால் நாட்டை ஆண்டான். ஆண்டாள் தன் பக்தியின் சொல்வாக்கினால் நாட்டை ஆண்டாள். அதனால் ஆண்டாள் என்றால் மல்லிநாட்டை பக்தியால் ஆண்டவள். 

நாதமுனிகளின் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவை தனியனில் 

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

என்கிறார். இங்கேதான் முதன்முதலில் ஆண்டாள் என்ற பெயர் வருகிறது.  

 நம் கோதைக்கு ஆண்டாள் என்று சூட்டிய உய்யக்கொண்டாரின்  திருநட்சத்திரம்  இன்று. 

- சுஜாதா தேசிகன்
12-05-2021
சித்திரை - கார்த்திகை

Comments