இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.
ஏப்ரல் முதல் வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தேன். நாகரமே முகக்கவசம் இல்லாமல் “என்ன கொரோனாவா அப்படினா என்ன ?” என்று சுற்றிக்கொண்டு இருந்தது. முகக்கவசம் அணிந்தவர்கள் வெளியூர் தேசாந்திரிகள் என்று சுலபமான அடையாளம் எங்கள் மீது விழுந்தது.
திருவரங்கம் கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்துகொண்டு வரும் பக்தர்கள் உள்ளே சென்ற பிறகு அதை இடுப்பில் சுருக்குப்பை போலச் சொருகிக் கொள்கிறார்கள்.
தற்போது கோவிட் இரண்டாம் அலையில் சொந்தங்கள், நண்பர்கள் எனத் தினமும் யாராவது அதில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதைப் பார்க்கும் போது பயமும் சோகமும் ஒன்றாக சேர்கிறது.
விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தினாலும் அதை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை முழு ஊரடங்குக்கு முதல் நாள் திருச்சி மலைக்கோட்டை கீழே உள்ள கூட்டத்தின் படத்தைப் பார்க்கும் போது மே மாதமே தீபாவளி போல இருக்கிறது! உச்சிப்பிள்ளையார் தான் காப்பாற்ற வேண்டும்.
விழிப்புணர்வு கேள்வி பதிலாக தருகிறேன். படித்துவிட்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
இது என்ன இரண்டாம் அலை ?
போன வருடம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த வைரஸ் தற்போது இங்கே தன்னை தானே கொஞ்சம் மாற்றிக்கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘வாங்க பழகலாம்’ என்று சுற்றிக்கொண்டு இருக்கிறது.
எப்படிப் பரவுகிறது ?
கொரோனா ஒரு விதமான வைரஸ். ஏதோ ஓர் உயிரைச் சார்ந்தே இதற்கு ஆயுசு. அந்த உயிர் மனித உயிர். அதனால் நம்மைச் சார்ந்தே இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பேசும் போது, அல்லது மூச்சு விடும் போது இது பரவுகிறது.
பேசும் போது சரி, மூச்சுவிடும் போதும் பரவுமா ?
பேசும் போது உங்கள் வாயிலிருந்து உங்களுக்கே தெரியாமல் வரும் மிகச் சிறிய உமிழ் நீர் மூலமாக பரவுகிறது. அது போல மூச்சு விடும் பொது மிக நுண்ணிய பனி போன்ற ஏரோசல்(aerosol) காற்றில் ஸ்பிரே அடிக்கப்பட்டு அது இன்னொருவர் மூக்கினுள் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால் தான் முகக்கவசத்தை மூக்கு மேலே அணிய வேண்டும்.
யாரும் இல்லாத இடத்தில் கொரோனா பரவுமா ?
பரவலாம். உதாரணம் நீங்கள் செல்லும் லிஃப்டில் உங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடைய கண்ணுக்குத் தெரியாத உமிழ் நீர், காற்றில் பரவியிருக்கலாம். அல்லது அது அங்கே எங்காவது தெளித்து அது காயாமல் அதை நீங்கள் கைகளால் தொட்டு, உங்கள் மூக்கு, வாய், கண்ணில் அது பட்டால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
காய்வதற்கு எவ்வளவு நாள் ஆகும் ?
தெளிக்கப்பட்ட இடத்தைப் பொறுத்துக் காய்வதற்கு நேரம் ஆகும். ஈரப்பதம் உள்ள இடங்களில் வைரஸ் பல மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். சில இடங்களில் 1 நாள் கூட உயிருடன் இருக்குமாம். ஏசி அறை போன்ற இடங்களில் இந்த வைரஸ் பேய் போலச் சுற்றிக்கொண்டு இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது அதனால் ஏசியை தவிர்ப்பது நல்லது.
முகக்கவசம் அணிந்துகொண்டால் இதைத் தடுக்க முடியுமா ?
முகக்கவசம் அணிந்துகொண்டால் இதை பெரும் அளவு தடுக்கலாம். கூட்டமான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் ஒரு 'சர்ஜிக்கல் மாஸ்க்' அதற்கு மேல் ஒரு துணி மாஸ்க் அணிந்து செல்வது உத்தமம். போகாமல் இருப்பது அதைவிட. பேசும் போது முகக்கவசத்தைத் தாடி போல இறக்கிவிட்டுப் பேசுபவர்கள் எமனாக இருக்கலாம். ஓடிவிடுங்கள்.
கொரோனாவை அழிக்க முடியுமா ?
இந்த வைரஸ் தன்னை தானே பிரதியெடுப்பு (replicate) செய்துகொள்கிறது. இதை அழிக்க ஒரே வழி நாம் மற்றவர்களுக்கு அதை பரப்பாமல் இருப்பது தான். பரப்பப் பரப்ப அந்த வைரஸ் தன்னை தானே மாற்றிக்கொண்டு பல இடங்களைச் சுற்றிக்கொண்டு இருக்கும். மனித இனம் போர் அடித்துவிட்டது போதும் என்று அதுவே நிறுத்துக்கொண்டால் பிழைத்தோம்.
அப்படி நடக்குமா ?
இந்த வைரஸுடன் நம் அறிமுகம் கடந்த 1.5 வருடம் காலம் தான். இது அடுத்து என்ன செய்யப் போகிறது என்று யாராலும் எதுவும் சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம். உலகம் சகஜ நிலைக்கு வந்தாலும், பிற்காலத்தில் ‘மெட்ராஸ் ஐ’ சீசன் போல வருடத்துக்கு ஒரு முறை ‘கொரோனா சீசன்’ வந்தால் ஆச்சரியப்படக் கூடாது.
தடுப்பூசி அவசியமா ?
நிச்சயம். அது உயிரைக் காக்க கூடியது.
நாயகன் கமல் மாதிரி கேட்கிறேன் தடுப்பூசி நல்லதா கெட்டதா ?
பொதுவாக தடுப்பூசிகள் பத்து வருடம் ஆராய்ச்சிக்குப் பின் தான் உருவாக்குவார்கள். கோவிட் தடுப்பூசி போர்க்கால அடிப்படையில் ஒரே வருடத்தில் உருவாக்கப்பட்டது. சாதாரண ஜுரம், தலைவலி மாத்திரையில் கூடப் பக்க விளைவு என்று எறும்பு சைஸ் எழுத்தில் பெரிய பட்டியலே இருக்கிறது, ஆனால் ஜுரம், தலைவலி வந்தால் அதை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதில்லை. என்றோ மாடிப்படி ஏறும் போது தடுக்கிவிழுந்தோம் என்பதால் படி ஏறாமல் இருக்கிறோமா ?
இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் கொரோனா வருகிறதே ?
வரலாம். ஆனால் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை என்கிறார்கள் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் இந்தத் தடுப்பூசியை நீங்கள் வருடா வருடம் போட்டுக்கொள்ளும் நிலைமை வந்தால் ஆச்சரியப்படக் கூடாது. .
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் இறக்கிறார்கள் என்று செய்தி வருகிறதே ?
பல லட்சம் பேர்களில் சிலர் இறக்கலாம். ஆனால் எவ்வளவு பேர் பிழைத்தார்கள் என்று சொல்லுவதில் சுவாரசியம் இல்லை.
அமெரிக்காவில் போடும் தடுப்பூசி நம் நாட்டு தடுப்பூசி எது நல்லது ?
தடுப்பூசி பல விதம். நம் உடலில் ஸ்லீப்பர் செல் போல் புரதத்தை அனுப்பி வைரஸைச் செயலிழக்க செய்வது அல்லது சர்ஜிகல் ஸ்ரைக் போல மொத்தமாக அழிப்பது, அல்லது அதன் வீரியத்தைக் குறைப்பது என்று இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் தடுப்பூசி -70 டிகிரியில் வைக்க வேண்டும். நம் நாட்டுக்குச் சரிப்பட்டு வராது. நம் நாட்டு தடுப்பூசியும் நல்லது என்ற நம்பிக்கை வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் ஜுரம், தலைவலி எல்லாம் வருகிறதே இது கொரோனாவா ?
இல்லை. தடுப்பூசி என்பது வீரியம் இழந்த வைரஸை உள்ளே செலுத்துவது. அப்படிச் செலுத்தும் போது நம் உடல் வைரஸ் வந்துவிட்டது என்று நினைத்து அதனுடன் யுத்தம் செய்ய ஆரம்பிக்கும். ஒரு பிராக்டிஸ் மாட்ச் போன்றது. உபாதைகளைக் கண்டு பயப்படாதீர்கள்.
இரண்டாம் அலை எப்போது குறையும் ? மூன்றாவது அலை வருமா ?
தற்போது இருக்கும் நிலையில் வாலை சுருட்டிக்கொண்டு வீட்டில் இருந்தால் மே மாதத்துக்குப் பிறகு குறைய வாய்ப்பு இருக்கிறது. மூன்றாம், நான்காம் அலைகள் வரலாம்.
கடைசியாக ?
முகக்கவசமே சிறந்த ஆயுதம். வெளியே சென்றுவிட்டு வந்தால் குளித்துவிடுங்கள். வந்த பிறகு வீட்டிலேயே ஒருவருக்கு ஒருவர் வாட்ஸ்ஆப் மூலம் பேசிக்கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் தனியாக இமயமலை உச்சிக்குச் சென்றுவிடுங்கள்!
- சுஜாதா தேசிகன்
13-05-2021
படம் நன்றி: Streets of Trichy Instagram
Very good article
ReplyDeleteSuperb.
ReplyDeleteஒருவருக்கு ஒருவர் வாட்ஸ்ஆப் மூலம் பேசிக்கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் தனியாக இமயமலை உச்சிக்குச் சென்றுவிடுங்கள்-
ReplyDeleteசூப்பர் கமெண்ட், சார்😀😀