Skip to main content

சிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்

 சிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான் 



திருவெள்ளறைக்கு பல வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன்.  என் பெண் ஆண்டாளுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கும் இந்தக் கோயிலுக்கும் ஒரு தொடர்பு  இருக்கிறது. பெருமாள் தீர்த்தம் வாங்கிய பின் ”இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றாள்.  அர்ச்சகர், அந்தத் தீர்த்த வட்டிலை அப்படியே அவள் கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு தா என்றார்! 

புண்டரீகாட்சனை சேவித்துவிட்டு, மணக்கால் நம்பியின் ஆசாரியரான உய்யக்கொண்டார் மற்றும் எங்கள் ஆழ்வான் இருவரையும் சேவித்தோம். 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு இந்த ஊரில் அவதரித்த உய்யக்கொண்டார் தான் திருப்பாவை தனியனான “அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு... என்ற தனியனை அருளினார் என்று நேற்று கட்டுரையில் பார்த்தோம்.  இந்த ஊரில் அவதரித்த இன்னொரு ஆசாரியன் ‘’எங்கள் ஆழ்வான்’ 

ஆழ்வான் என்றால் கூரத்தாழ்வானை குறிக்கும். இவருக்கும் ‘எங்கள் ஆழ்வானுக்கும்’ ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று உங்கள் யூகம் சரி தான். 

உடையவர் ஸ்ரீபாஷய வியாக்கனத்தை சொல்லச் சொல்ல அதை எழுத ஸ்ரீகூரத்தாழ்வானை பணித்தார். துரதிஷ்டவசமாக அந்தப் பணியை முடிக்கும் முன் அவர் கண் பறிபோனது. ஸ்ரீபாஷய விவரணத்தை முடிக்க கூரத்தழ்வானை போலத் தேர்ந்த பண்டிதரைத் தேடினார். அப்போது விஷ்ணுசித்தரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை நியமித்தார் இராமானுஜர். 

இவருடைய அறிவும் ஆற்றலும் கூரத்தாழ்வனுக்கு நிகராக இருப்பதைக் கண்ட உடையவர் பூரிப்புடன் “எங்கள் ஆழ்வானோ?” என்று விளிக்க விஷ்ணுசித்தர் ”எங்கள் ஆழ்வான்” ஆனார்.  எங்கள் ஆழ்வான் உடையவரை விட 80 வயது சிறியவர் ( காலம் 1069-1169 ) உடையவர் இவரை திருகுருகைப்பிரான் பிள்ளானிடம் அனுப்பி அவரையே ஆசாரியராகக் கொள்ள செய்தார். 

"எங்கள் ஆழ்வானை"  ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர். அதற்கும் ஒரு காரணம் இருக்கு… 

ஸ்ரீராமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், ஸ்ரீபாஷயத்தை பலரிடம் கொண்டு சென்றவர். இவருடைய பேரன் நடாதூர் அம்மாள். 

தன் பேரன் நடாதூர் அம்மாளுக்கு  ஸ்ரீபாஷயம் சொல்லித்தர ஆரம்பித்தார் நடாதூர் ஆழ்வான்.  நடாதூர் அம்மாள் துடிப்புடன் பல சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தார். “எனக்கு வயதாகிவிட்டது, அதனால் நீ எங்கள் ஆழ்வானிடம் கற்றுக்கொள் அவர் தான் உன் சந்தேகங்களுக்குத் தக்க விளக்கம் சொல்லுவார்” என்று அனுப்பினார்.

காஞ்சியிலிருந்து புறப்பட்டு, நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வானின் இல்லத்து கதவைத் தட்டியபோது உள்ளேயிருந்து "யார் ?" என்று கேட்க அதற்கு அம்மாள் “நான் தான்” என்று பதில் கூற அதற்கு உள்ளிருந்து “நான் செத்த பின் வரவும்” என்று பதிலுரைத்தார் எங்கள் ஆழ்வான்.

குழம்பிய நாடாதூர் அம்மாள் தன் தாத்தாவிடம் இது பற்றி கேட்க  'நான்' என்ற மமதை இல்லாமல் 'அடியேன்' என்று சொல்ல வேண்டும் என்று அறிவுரைத்தார்.

அம்மாளும் திரும்பச் சென்று “அடியேன் வந்திருக்கிறேன்” என்று சொல்ல எங்கள் ஆழ்வானுக்கு அபினான சிஷ்யனாக விளங்கினார் நடதூர் அம்மாள்.

எங்கள் ஆழ்வான் ஒரு நாள் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கனவில் சிறுபிள்ளை ஒருவன் வந்து "எனக்கு நாவற்பழம் தாரும்" என்று கேட்க அதை பொருட்படுத்தாமல் அவர் உறங்கினார். அந்த சிறுவன் மறுபடியும் மறுபடியும் நாவற்பழம் கேட்டு தொந்திரவு செய்து அவரை உறங்கவே விடவில்லை. "குழந்தாய் நீ யார்?" என்று எங்கள் ஆழ்வான் கேட்க அதற்கு அந்த சிறுவன் "நான் நஞ்சீயர் மகன் ஆயர்தேவு, எனக்கு நாவற்பழம் கொடு" என்றான். உடனே எங்கள் ஆழ்வான் நஞ்சீயரிடம் சென்று "ஜீயரே உம்முடைய மகன் என்னை தூங்கவே விடுவதில்லை!" என்று நடந்தவற்றை கூறினார். அதைக் கேட்டு நஞ்சீயர் தன் திருவாராதனப் பெருமாளான ஆயர்தேவு எழுந்தருளியிருக்கும் அறைக்குச் சென்று "இப்படியெல்லாம் செய்யக் கூடாது!" என்றாராம். 

ஒரு தாய் தன் குழந்தைக்குப் எப்படிப் பரிவுடன் சரியான பதத்தில் பாலை ஊட்டுவாளோ அதே போல தேவப் பெருமாளுக்கும் பக்குவமாக இளம் சூடான பாலமுது சம்பர்ப்பிக்கும் சேவை செய்தார் நடாதூர் அம்மாள். 

“எனக்குத் தாய் தந்தை கிடையாது ஆனால் நீர் என் தாய் போல் என்ன கவனித்துக்கொள்கிறீர்” என்றார் தேவபெருமாள். அதனால் தான் அவருக்கு நடாதூர் ”அம்மாள்” என்று திருநாமம் கிடைத்தது. இப்பேர்பட்ட சிஷ்யனினாக இருக்கிறானே என்று எங்கள் ஆழ்வான் “அம்மாள் ஆசாரியன்” தன் பெயரை வைத்துக்கொண்டார். நடாதூர் அம்மள். 

சிஷ்யன் பெயரில் ஆசாரியன் !

இன்று எங்கள் ஆழ்வான் திருநட்சத்திரம் 

- சுஜாதா தேசிகன்

13-05-2021

சித்திரை - ரோஹிணி
எங்கள் ஆழ்வான் திருநட்சத்திரம்
படம்: எங்கள் ஆழ்வான் திருவடியில் நடாதூர் அம்மாள் திருவெள்ளறை

Comments