Skip to main content

பதம் பிரித்த பிரபந்தம் - நன்றி

 பதம் பிரித்த பிரபந்தம் - நன்றி 



சில வருடங்கள் முன் ஸ்ரீரங்கத்தில் ஒரு கடையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். பெரிய திருமண்காப்புடன் ஒரு சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் அங்கே  வந்தார்.  

"சாமி பெரிய எழுத்தில் பிரபந்தம் புத்தகம் இருக்கா?" என்று விசாரித்தார்

"பெரிய எழுத்தில் எல்லாம் இப்போது யாரும் போடுவதில்லை. இந்த ஒரு புத்தகம் மட்டும் தான் பெரிய எழுத்து. இரண்டு பகுதிகளாக இருக்கிறது" என்று அவரிடம் கொடுத்தார் கடைக்காரர். 

சந்தோஷத்துடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர் புத்தகத்தைத் திறந்து பார்த்து "நன்னா இருக்கு எவ்வளவு சாமி ?" என்று தன் பர்சை திறந்தார். 

“அறநூற்றி….  ரூபாய்” என்று கடைக்காரர் கூற தன் மார்போடு அணைத்திருந்த அருளிச் செயல் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார் அந்த ஸ்ரீ வைஷ்ணவர். 

அவர் கைக்கு எட்டிய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அவர் வாய்க்கு எட்டவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஆனால்  அந்தச் சமயத்தில் அந்தப் புத்தகத்தை அவருக்கு வாங்கி தரும் எண்ணம் அடியேன் உள்ளத்தில் வரவில்லை. ஒரு வைணவனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தும், கையில் பணம் இருந்தும் அந்த எண்ணம் எனக்கு வரவில்லையே என்று யோசித்து வருந்தியிருக்கிறேன். 

பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம் போடும் எண்ணம் வந்த போது புத்தகம் விலை அதிகம் என்று ஆழ்வார்களின் அருளிச் செயல்களை யாரும் தவறவிடக் கூடாது மாறாக ஒருவர் இரண்டு புத்தகங்களாக வாங்கி தனக்கு ஒன்று தன் நண்பருக்கு ஒன்று என்று கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 

குறைந்த விலை புத்தகம் என்றால் உடனே பிட்-நோட்டிஸ் போன்ற காகிதத்தில் அடிக்காமல், ஆழ்வார்களின் ஈரச் சொற்கள் வந்து உட்காரும் இடம் நல்ல காகிதமாக இருக்க வேண்டும் என்று ஆர்.என்.ஆர் பிரிண்டர்ஸ் ராஜன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது பல ஆலோசனைகளை வழங்கினார். 

அவருடன் பணிபுரிகிறவர்கள் என் அண்ணன் தம்பி போல நான் சொன்னதை எல்லாம் உடனே நிறைவேற்றினார்கள்.  இந்தப் புத்தகம் நன்றாக வந்திருப்பதற்கு ஸ்ரீ ராஜனும் அவருடைய குழுவும் ( குறிப்பாக கோபால்) தான் காரணம். அவர்களுக்கு முதலில் என் நன்றிகள். 

கல்யாணம் முடிந்து சில வாரங்கள் கழித்து அந்த வீட்டுக்குச் செல்லும் போது, அவர்கள் நம்மிடம் காபியுடன் வெயிட்டான கல்யாண ஆல்பம் ஒன்றைக்  கொடுத்துப் பார்க்க சொல்லுவார்கள். முதல் இரண்டு பக்கங்களைத் திருப்பிய பின் நம்முடைய படம் எங்கே என்று தேட ஆரம்பிப்போம். நம் படம் அதில் வரவில்லை என்றால் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும்.  அது போலத் தான் பிரபந்தம் புத்தகமும். 

பிரபந்தம் புத்தகம் வாங்குபவர்கள் தங்களுடைய ஆசாரியனான ஸ்ரீ வேதாந்த  தேசிகன், அல்லது ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். பொதுவாக இவர்கள் தனியன்கள் mutual exclusiveஆக இருக்கும். 

இந்தப் புத்தகத்தில் இவர்களின் தனியன், வாழித்திருநாமம், அவர்கள் படமும் இருக்கிறது. அதனால் கல்யாண ஆல்பத்தில் உங்கள் போட்டோவை பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷம் இதில் உங்களுக்கு ஏற்படும். கூடவே தங்களுடைய ஆசாரியன் தனியன், திருநட்சத்திரம்  எழுதிக்கொள்ளத் தனியாக இடம் கொடுத்திருக்கிறேன். நாளை உங்கள் சந்ததியினருக்கு அது உதவும். 

இந்தப் புத்தகத்துக்குப் பின் பலரின் உழைப்பு இருக்கிறது. அவர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

இந்தக் கோவிட் காலத்தில் 1000 புத்தகங்களையும் எப்படி கூரியர் அனுப்புவது என்று பலரைத் தேடி என்ன செய்வது என்று முழி பிதுங்கிய போது கிழக்கு பதிப்பகம் பத்ரியைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டேன். நானே செய்துகொடுக்கிறேன் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. ஹரன் பிரசன்னாவைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றவுடன் நம்பெருமாள் துணை இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. பிரசன்னாவின் மேற்பார்வையில் சுனாமியே வந்தாலும் ஒன்றும் ஆகாத பேக்கிங் செய்து எல்லோருக்கும் அனுப்பப்பட்டது. கிழக்கு பதிப்பகம் குழுவிற்கும் குறிப்பாக ஹரன் பிரசன்னாவிற்கு அவருடைய டீமிற்கும்  நன்றி. 

ஸ்ரீரங்கத்து வாசிகளுக்கு நண்பர் ஸ்ரீ கேசவன் ஸ்வாமி இரண்டே மணி நேரத்தில் சூறாவளி போல எல்லோர் அகங்களுக்கும் தானே சென்று புத்தகத்தை வினியோகித்தார். அவருக்கு என் நன்றிகள். 

திருவல்லிக்கேணி, மைலாப்பூர் வாசிகளுக்கு நண்பர் ஸ்ரீரங்கராஜன் அவர்கள் சிரத்தையும் ஆர்வமும் கலந்து அதை செய்தார். செய்வதற்கு முன் புத்தகத்தை மூடிய பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குள் எப்படியோ  அனுப்பி அவர் திருவடியில் ஆசீர்வாதம் வாங்கினார். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

நான் நேரில் கூடப் பார்த்திராத ஸ்ரீ முரளி மாதவன் ஸ்வாமி நங்கநல்லூரில் ‘என்னிடம் விட்டுவிடுங்கள்’ என்று அங்கே வினியோகித்தார். அவருக்கும் என் நன்றிகள் பல. 

இதை தவிர சௌரிராஜன், ஹரி ஸ்வாமிகள் உதவிகளை செய்தார்கள். 

புத்தகத்தைத் திருவாலி திருநகரியில் திருமங்கை ஆழ்வார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வாங்கிய ஸ்ரீ உ.வே எம்பார் ராமானுஜம் அவர்களுக்கும். 

ஸ்ரீவில்லுப்புத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளில் ஆசீர்வாதம் வாங்கிய ஸ்ரீ உ.வே கண்ணன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமிகளுக்கும். 

ஆழ்வார்திருநகரியில் ஆழ்வார் திருவடியிலும், உறங்காப்புளி அடிவாரத்திலும் ஆசீர்வாதம் பெற்றுத் தந்த என் ஆப்த நண்பர் மருத்துவர்கள் ஸ்ரீ கோகுல், பிரேமசுதா கோகுல் தம்பதிக்கு என் நன்றிகள். 

எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் புத்தகத்துக்குப் படங்களைப் பிரியமுடன் கொடுத்த திரு.சுதாகரன், திரு.தேவாதி ராஜன், திரு.ஸ்ரீரங்கவிலாசம், திரு.க்ளிக் ரவி அவர்களுக்கும்,  புத்தகத்தைச் செம்மைப்படுத்த உதவி மட்டும் அல்லாது பல உதவிகளை செய்துகொண்டு இருக்கும் நண்பர் திருமதி ஸ்ரீதேவி வரதராஜன் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி. 

இந்தப் புத்தகத்துக்குப் பலர் நிதி உதவி அளித்துள்ளார்கள். அதனால் தான் இந்தப் புத்தகத்தை இப்படிக் கொண்டு வர முடிந்து,  கூரியர் மூலம் அனப்ப முடிந்தது. அவர்களுக்கு பல்லாண்டு.  

பிகு: பலர் புத்தகம் வேண்டும் என்று பத்து நிமிடம் முன் வரை கேட்டுகொண்டு இருக்கிறார்கள்.  இந்தப் பதிப்பு மறுபதிப்பாக விரைவில் வர இருக்கிறது. இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுகிறேன்.

பிகு: எல்லோருக்கும் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்ன என் மாமனாருக்கும், கொஞ்சம் புத்தகங்களை வினியோகிக்க உதவி செய்த என் தம்பிக்கும் குட்டியாக ஒரு நன்றி. 

அடியேன் தாஸன்
- சுஜாதா தேசிகன்
5-5-2021
முதல் படம் : பலருடைய இல்லத்தில் பிரபந்த புத்தகம். 



Comments

  1. Adiyen namaskaram. I need two copies of "padam piritha prabhandam" book. I am very much interested in this book. Please help me how to order them. Dhanyosmi. Sudha madhavan.

    ReplyDelete
    Replies
    1. Namaskaram, Please send a mail to rdmctrust@gmail.com with your name, address, pincode with phone number and how many copies you need.
      adiyen.

      Delete
  2. இந்தப் புத்தகம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. சிறிது மெருகேறினால், காலம் முழுதும் நிற்கும் புத்தகமாக இது இருக்கும். புத்தக வடிவமைப்பும் சிறப்பு. புத்தகம் மிகச் சிறப்பாக பேக் செய்யப்பட்டு வந்தது. சேவிப்பதற்குச் சிறப்பான முறையில் ஒரே புத்தகத்தில் எல்லாம் இருக்கிறது.

    சாற்றுமுறைக்கிரமம் இருந்திருக்கலாமே, அந்தாதிகளைத் தவிர மற்றவற்றிர்க்கு அடிவரவு இருந்திருக்கலாமே, உபதேசரத்தின மாலையை (கடுகு சாரின் ஒரு பதிப்பில் இது இருந்தது) சேர்த்திருக்கலாமே.... ஏகப்பட்ட 'லாமே'க்கள் மனதில் தோன்றினாலும், சேவாகாலத்துக்கு ஒரே புத்தகமாக எடுத்துச் செல்ல வசதியாக அமைந்துள்ளது. அடியேனை அடைந்திருக்கும் நாலாயிர திவ்யப்ப்ரபந்த புத்தகங்களில் இது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாராட்டுகள்.

    இது இன்னும் மெருகேற அடியேனால் முடிந்ததைச் செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நெல்லை தமிழன்,
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      சாற்றுமுறைக்கிரமம் இருந்திருக்கலாமே - சாற்றுமுறை மூன்று வகை இருக்கிறது எல்லாவற்றையும் தனி புத்தகமாக தான் போட முடியும்.
      அந்தாதிகளைத் தவிர மற்றவற்றிர்க்கு அடிவரவு இருந்திருக்கலாமே - இருந்திருக்கலாம். அடுத்த பதிப்பில் போட முடியுமா என்று பார்க்கிறேன்.
      உபதேசரத்தின மாலையை (கடுகு சாரின் ஒரு பதிப்பில் இது இருந்தது) சேர்த்திருக்கலாமே.. - கடுகு சார் போட்ட பதிப்பில் இல்லை ( அவர் சதாபிஷேகம் போது வெளியிட்ட பதிப்பில் தான் இருக்கிறது ). உபதேசரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, தேசிக பிரபந்தம் என்று எல்லாம் போடலாம் ஆனால் இதுவும் தனி புத்தகமாக தான் முடியும்.

      Delete
  3. need the telephone no of shri desikan, sent a mail for 3 copies about a week back from mail I'd msudha, but no reply yet, hence would like to talk .

    ReplyDelete
  4. Any updates on the "PADHAM PIRITHA PRABANDHAM" Book repringting

    ReplyDelete
  5. Ayya, can the book be made available in kindle for anytime reading? Kindly check

    ReplyDelete
    Replies
    1. We dont have any plans for PDF or kindle versions.

      Delete
  6. Sir,
    Would like to know the status of the Reprint edition. Eagerly waiting for the same.
    Adiyen
    Prabha.

    ReplyDelete
  7. Any update on the status of the reprint for the same?

    ReplyDelete

Post a Comment