Skip to main content

43ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கர்

43ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கர் -  ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன்


1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.  

செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக்கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச்செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம் சாதித்து, அவருடைய திருமாளிகை சின்ன மடமாகக் காட்சியளித்தது. 

40 ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கரிடம் ஸ்ரீபாஷ்யம் காலட்சேபம், 41ஆம் ஸ்ரீமத அழகிய சிங்கரிடம் மற்ற கிரந்தங்கள் காலட்சேபம் ஆனது. 41ஆம் அழகியசிங்கர் காலத்திலேயே மாலோலனுக்கு திருவாராதணம் செய்யும் பாக்கியம் பெற்றார். 42ஆம் அழகிய சிங்கர் காலத்தில் அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்துவானாக நியமிக்கப்பட்டார்.  


42ஆம் பட்டம் இஞ்சிமேட்டு ஸ்ரீமதழகியசிங்கர் திருமேனியில் அசக்தி காரணமாக 9.2.1951 அன்று ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி ஆசிரம ஸ்வீகாரத்தைப் பண்ணிக்கொண்டார். 42ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் பரமபதத்திற்கு எழுந்தருளிய பின், 13.5.1953ல் பட்டாபிஷேகம் நடைபெற்றது, 43ஆம் பட்டம் ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் என்ற திருநாமத்துடன் மாலோனை ஆராதித்து வந்தார்.

42ஆம் பட்டம் அழகியசிங்கர், 43ஆம் பட்டம் அழகியசிங்கருடன் சேர்ந்து காலட்சேபம் செய்தால், பார்க்க ஆளவந்தார், ராமானுஜர் மாதிரி இருக்கும் என்பார்கள். சேது முதல் ஹிமாசலம் முதல் திருமங்கை ஆழ்வார் போல எல்லா திவ்ய தேசத்துக்குச் சென்று மங்களாசாசனம் செய்தார். பங்குனி மாதம் 9ஆம் தேதி 1953 காலை திக்விஜயமாகப் புறப்பட்டார்.  அந்தச் சமயம் ரிஷீகேஷத்தில் சாதுர்மாஸ்ய சங்கல்பத்தை அனுஷ்டித்தார். அங்கே மூன்று வேளைகளிலும் கங்காஸ்நானம் செய்து, மகரிஷிகள் போல் வாசம் செய்து, மாவு முதலியவற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து,  ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மனை கங்கா தீர்த்ததைக் கொண்டு ஆராதித்து வந்தார். 


ரிஷிகேஷத்தில் சங்கல்பத்தை முடித்துக் கொண்டு தில்லி எழுந்தருளி, ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கு அருளாசி வழங்கினார். தில்லியிலிருந்து புறப்பட்டு நைமிசாரணியத்தில் எழுந்தருளிய போது, திருமேனியில் அசக்தி அதிகமாகி 24.11.57ஆம் ஆண்டு அங்கேயே பரமபதம் எழுந்தருளினார். அங்கேயே புராணங்களைக் கேட்டுக்கொண்டு இன்றும் நித்தியவாசம் செய்கிறார். 


கடந்த நூறு வருஷக் காலமாக இவ்வளவு திவ்ய தேசத்துக்கு எந்த அழகியசிங்கரும் சஞ்சாரம் செய்யவில்லை. பல இடங்களில் சமஸ்கிருதப் பள்ளிகளும், பல திருக்கோயில்களுக்குக் கைங்கரியம்,  பல இடங்களில் அஹோபில மடங்களையும் நிறுவினார். ஸ்ரீநரசிம்மபிரியாவில் பல வேதாந்த விஷயங்களைச் சாதித்தார். ஸ்ரீமதஅழகியசிங்கரின்  மடத்தின் நிர்வாக காலம் 5 வருடம் 10 மாதங்களே ஆனாலும் நிறைவேற்றிய தொண்டுகள் பல நூறு ஆண்டுகளில் கூடச் செய்ய முடியாதவை. 

இன்று இந்த மகானின் திருநட்சத்திரம். 


அடியேன் 2013ஆம் ஆண்டு நைமிசாரணியம் சென்ற போது இவருடைய பிருந்தாவனத்தில் சில மணி நேரம் கழிக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது எடுத்த சில படங்களுடன்.

- சுஜாதா தேசிகன்
19-11-2020
கார்த்திகை பூராடம்  - 43ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கர் -  ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன்  திருநட்சத்திரம் 

Comments

  1. ஆச்சார்யன் திருவடிகளே சரணம். இத்தனை விபரங்கள் கண்களை நீரை மறைத்தபடியே படித்தேன்! ஆத்மத்ருப்தி சொல்லி மாளாது. Thank you Desikan for enlightening us all the time with your sincere efforts.

    ReplyDelete

Post a Comment