Skip to main content

ஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது ?

Image may contain: one or more people


’பேசும் அரங்கன்’ என்பார்கள். இந்த தலைப்பில் ஒரு புத்தகம் கூட வந்திருக்கிறது ( ஸ்ரீ முரளி பட்டர் எழுதியது )

கட்டுரையின் தலைப்புக்கு நேற்று எனக்கு விடை கிடைத்தது !

’அரங்கன் பேசுவாரா ?’ என்று நாத்திகர்கள் போல நாம் பேசினால் பேச மாட்டான். நம் மனது அவனுடன் லயித்துவிட்டது என்றால் அவன் பேசிக்கொண்டே இருப்பான். ’நீ’ நம்ம ஆளு என்று தன்னுடன் சேர்த்துக்கொள்வான்.

ஸ்ரீரங்கத்தில் ‘பெரிய அவசரம்’ பற்றிப் போன செவ்வாய்க்கிழமை அடியேன் எழுதிய சாதாரண ஃபேஸ்புக் பதிவில்

“என்றாவது ஒரு நாள் எனக்கு நம்பெருமாளுடைய ஈரவாடை கைலியைப் பிழிந்த

பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் !” என்று எழுதியது நினைவிருக்கலாம்.

நேற்று (ஞாயிறு) ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். ’காவிரி துலா ஸ்நானம்’ செய்ய கிளம்பு போது ‘அம்மா மண்டபம்’ போகிறீர்களா கீதாபுரம் டிரைப் பண்ணுங்களேன்” என்ற

அட்வைஸை ஏற்றுக்கொண்டு அங்கே ‘டிரை’ பண்ணச் சென்ற போது காவிரியின் ஓசை ‘பொன்னியின் செல்வனின்’ வரும் வர்ணனை போல இருந்தது. வேகமாகத் தடுப்பு அணையில் தப்பி தவறி விழுந்து மீனாகிவிடுவோமோ என்று கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.

ஸ்நானம் முடித்துக்கொண்டு தாயார் சன்னதிக்குச் சென்ற போது தாயார்

‘கொஞ்சம் கிட்ட தான் வாயேன்’ என்று சேவை சாதித்தாள்.
”இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை நீ ஃபிரீ தானே... ஏகாதசி வேற நம்பெருமாள் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருப்பார், நானே சொன்னேன் என்று சொல்லு,
ஈரவாடை பிரசாதம் கொடுப்பார் வாங்கிண்டு போய்யேன்” என்று சொன்ன மாதிரி இருந்தது.

ஊஞ்சல் மண்டபத்தில் ’பெருமாள் திருமஞ்சனம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்’ என்று சொல்ல ஒரு மணி நேரம் என்ன செய்யலாம் என்று
யோசித்தோம். சரி இருக்கவே இருக்கு பெரிய பெருமாள் ’க்யூ’ என்று அதில் நின்றோம். சரியாக ஒரு மணி நேரம் க்யூவில் கைக்குழந்தைகளையும், பூனையையும் வேடிக்கை பார்த்து ‘இங்கே கோவர்த்தன மலை சிற்பம் ‘ என்று

அமுதன் காட்ட மெல்ல நகர்ந்து துவாரபாலகர்களை சேவித்துவிட்டுக் காயத்திரி மண்டபத்தில் கொஞ்சம் குளுமை ஏற்பட உள்ளே நுழைந்து பெரிய பெருமாளை

சேவித்துவிட்டு, துளசி பிரசாதத்தையும், ‘அட்வான்ஸ்’ தீபாவளி வாழ்த்துக்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது

நம்பிள்ளை காலட்சேபம் செய்த இடத்தையும், ஸ்ரீவிஷ்வக்சேனர்,

ஸ்ரீரங்க விமானம் என்னும் கோயில் ஆழ்வாரையும் சேவித்துவிட்டு வெளியே வரும் போது மடப்பள்ளி புகை வாசனையைக் கடந்து ஊஞ்சல் மண்டபம் வந்த போது நம்பெருமாள் திருமஞ்சனம் ஆரம்பிக்க ஆயத்தமாக இருந்தார்கள்.

அரையர்கள் அங்கே நம்பெருமாள் முன் வந்து கையாலும் வாயாலும் இசைக்க ‘நாதமுனிகள்’ நினைவு வந்தது. குலசேகர ஆழ்வாரின்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

என்று அரையர்கள் இசைக்க. நம்பெருமாளைப் பார்ப்பதா இல்லை இவர்களின் இசையை அனுபவிப்பதா என்று தவிப்பு வந்து சேர்ந்தது. ஆழ்ந்து அனுபவித்தால் எங்கே தூக்கம் வந்துவிடுமோ என்று தோன்றியது. அப்படி இருந்தது அரையர்களின் இசை. நிச்சயம் வாழ்நாளில் இதை ஒரு முறை முழுமையாகக் கேட்டுவிடுங்கள்.

நம்பெருமாள், அரையர்கள், குலசேகர ஆழ்வார் என்ற கலவையுடன் அனுபவித்துக்கொண்டு இருந்த போது அந்தக் காட்சியை பார்த்தேன்.
இந்த மாதிரி நமக்கு வாய்க்கவில்லையே என்ற ஏக்கமும், துக்கமும் தொண்டையை அடைத்தது.

‘மன்னுபுகழ் கோசலை’ என்று அரையர் ஆரம்பிக்க. அங்கே கோயிலை சுத்தம் செய்யும் பெண்மணி ஒருவர் கையில் இருந்த துடப்பத்தையும், முறத்தையும் கீழே வைத்துவிட்டு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு அரையர்களுடன் தானும் ‘மன்னு புகழை’ சேவிக்க ஆரம்பித்தார். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.

நம்பெருமாள் ஏன் எப்போது சிரித்த முகத்துடன் இருக்கிறார் இந்த மாதிரி அரையர்களும், அடியார்களும் அவனை சூழ்ந்து கொண்டு இருப்பதே காரணம்.

கோயிலைச் சுத்தம் செய்யும் கைங்கரியம், கூடவே இந்த மாதிரி நம்பெருமாளைப் பார்த்து ‘தாலேலோ!’ சொல்லும் பாக்கியம் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் ?

நம்பெருமாள் திருமஞ்சனம் அனுபவித்துவிட்டு, ஈரவாடை பிரசாதத்தை முதல் முறை அனுபவித்துவிட்டுக் கிளம்பினேன். இதே பிரசாதத்தை நம் ஆசாரியர்கள் எல்லோரும் அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒரு வித பூரிப்பு ஏற்படுகிறது!.

நம் ஆசாரியர்களை ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’ என்பார்கள். நம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே அது தான். ’சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ மாதிரி புதுசாக எதையும் பேச மாட்டார்கள் நம் பூர்வாசாரியர்கள் என்ன சொன்னார்களோ அதையே தான் திருப்பித் திருப்பி சொல்லுவார்கள். சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம் உருவானதே ஒரு கிளியால் தானே ! சுருக்கமாக அந்தக் கதை :

ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றியது. அதற்குப் பிரம்மா நித்திய பூஜை செய்யச் சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு, இந்த விமானத்தை வழிபடத் தனது தலைநகரமாகிய அயோத்திக்குக் கொண்டுசென்றான். அதே குலத்தில் வந்த இராமர் இந்த விமானத்தைத் தனது பட்டாபிஷேகத்துக்காக இலங்கையிலிருந்து வந்திருந்த விபீஷணனுக்குப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷண ஆழ்வார் தனது தலையின்மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரி ஆற்றின் கரையை அடைந்தார். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினார். பின்னர் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்த போது; எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை; அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினார். ரெங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான், ‘தென்திசை இலங்கை நோக்கி’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றிக் கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்

தர்மவர்ம சோழன் கட்டிய கோவில், காவிரியில் வந்த வெள்ளப்பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. மறைந்த இடத்தைச் சுற்றிக் காடுகள் வளர, கோவில் யாரும் கண்டுபிடிக்க முடியாமல் மறைந்துபோனது.

தர்மவர்ம சோழனின் மரபில் வந்த கிளிச் சோழன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடச் சென்று ஒரு மரத்தின்கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த சமயம், அந்த மரத்தின்மேல் இருந்த ஒரு கிளி, “வைகுந்தத்தில் உள்ள விஷ்ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான்; அக்கோவிலை இப்போதும் இங்குக் காணலாம்” என்ற பொருளில் ஒரு செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. அதைக் கேட்ட கிளிச் சோழனுக்கு கனவில் விமானம் இருக்கும் இடம் புலப்பட்டது; கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். அதுவே இன்றும் நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம்!

விமானத்துக்குப் பக்கம் நம்பிள்ளை தூண் பற்றிப் பேசினேன். நம்பிள்ளையும் ‘பட்டர் சொன்னதை’ கிளிப்பிள்ளை மாதிரி கிளி மண்டபம் பக்கம் உட்கார்ந்து சொன்ன இடம்.

ஸ்ரீரங்கத்தில் பல பகுதிகள் கிளி மண்டபம் தான். பல ஆசாரியர்கள் ஆழ்வார் பாசுரங்களில் திளைத்து அனுபவித்துச் சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்ன இடங்கள். அவர்கள் சொன்னதை இன்றும் நம் ஆசாரியர்கள் இன்றும் திரும்ப திரும்பச் சொல்ல நம்பெருமாள் அதைக் கேட்டுக்கொண்டு ஆனந்தமான இருக்கிறார்.

நம்பெருமாள் எல்லா அலங்காரத்திலும் அழகு ஆனால் கிளி மாலையுடன் இருப்பது கூடுதல் அழகு. அந்தக் கிளிகள் ஆசாரியர்கள். அவர்கள் நம்பெருமாள் மீது படர்ந்து கைங்கரியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையை இடது கையில் இடுக்கிக்கொண்டு வலது கையால் ஊட்டுவாள். அவனை அனுபவிக்க வேண்டும் என்றால் தன் இடுப்பில் வைத்து கையால் ஊட்டிவிடுவார்.

ஆசாரியர்கள் பலர் இப்படி பெருமாளிடம் சோறு சாப்பிட்டவர்கள் தான். நம்பெருமாள் தாய் போல இவர்களுக்கு ஊட்டி விட்டதைத் தான் இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏன் ஆண்டாள் இடது கையில் கிளி இருக்கிறது என்று. ஆண்டாள் அந்தக் கிளியை குழந்தை போல பாவித்து சோறு ஊட்டுகிறாள்! அப்போது தானே அது தெம்பாக தூது போக முடியும் !

நம்பெருமாள் தன் இஷ்டப்பட்டவர்களை கிளி போல கூடவே வைத்துக்கொள்வான் அந்த ‘குலசேகர ஆழ்வார்’ சேவித்த அந்த துப்புறவு பணியாளர் மாதிரி !

அடுத்த முறை பெருமாள் மீது அமர்ந்திருக்கும் கிளியை பார்க்கும் போது ஆசாரியர்களை நினைத்துக்கொள்ளுங்கள் !

- சுஜாதா தேசிகன்
5.11.2018

Comments

  1. Pretty! Thiis haѕ been an extremely wonderfuil article.
    Many thanks for prroviding this info.

    ReplyDelete

Post a Comment