Skip to main content

ஈரவாடை பிரசாதம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள் திருப்பாணாழ்வார் பற்றி அருமையான பதிவு ஒன்று எழுதியிருந்தார்.

சைன்ஸ் படித்தால் கேள்வி கேட்க தோன்றும். (சந்தேகம் என்று கூட சொல்லலாம்) அதை எல்லாம் தூர வைத்துவிட்டு பிரபந்தமும் ஆழ்வார்களும் படித்தால் தான் பக்தி வரும் என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அர்ச்சகர் மூலமாக பெருமாள் பேசினார், திருப்பதி பெருமாளுக்கு தாடையில் ரத்தம் வர அதை நிறுத்த பச்சைக் கற்பூரம் போன்ற கதைகளை படிக்கும் போது ‘இது உண்மையா?’ என்று நம் மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் இருந்துக்கொண்டே இருக்கும்.

இவை எல்லாம் உண்மை என்று எனக்கு 20 வருடங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம். அதைப் பற்றி இல்லை இந்த கட்டுரை ! பயப்படாதீர்கள் !

கடந்த டிசம்பர் மாதம் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். பெரிய பெருமாளை சேவிக்கப் பெரிய க்யூ வரிசையில் நின்று கொண்டு இருந்த போது பெரிய பெருமாளை சேவித்துவிட்டு வெளியே வந்த ஒருவர் முகத்தில் பூரிப்பு. நெற்றி கோபி சந்தனம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்றது. பூரிப்புக்குக் காரணம் கையில் வைத்திருந்த துளசி மாலை பிரசாதம். எங்களுக்குப் பின்னே மேலும் சில ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்த்தர்களிடம் அந்தத் துளசி பிரசாதத்தைக் கொடுக்க அவர்கள் அதை வாயில் போடாமல், மூக்கில் வைத்து வாசனைப் பார்த்துவிட்டு அடுத்தவருக்குத் தர அவர் வாசனைப் பார்த்துவிட்டு … எனக்கு “நாற்றத் துழாய்முடி” என்ற பாசுரம் தான் நினைவுக்கு வந்தது.

பெருமாளை எப்படி உணர முடியும் ? பொதுவாகப் பார்க்கும், கேட்கும் உணர்வதைத் தான் பெருமாளுடன் உவமை கூறுவோம். பிரபலமான ’நந்ததாலா’ பாட்டில் கூட - பார்க்கும் மரம், கேட்கும் ஒலி, தீக்குள் விரல் என்று தான் வரும்.

ஆழ்வார்கள் வாசனையிலும் பெருமாளை உணர்கிறார்கள். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் திருக்கண்ணபுரம் பத்து பாசுரங்களிலும் துழாய் மாலை வாசனையை அனுபவிக்கிறார்.

அதில் ஒரு பாசுரத்தை இங்கே பார்க்கலாம்.

ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி, நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவப் பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து, ஊதாய் கோல் தும்பீ!

தும்பியே, அழகு மலர்களில் திரிந்து பெற்ற நலம் என்ன ? திருக்கண்ணபுரத்து பெருமான் சூடிய திருத் துழாய் மாலையில் படிந்து வந்து அந்த வாசனையை என்னிடம் ஊதுவாய்.

ஆண்டாள் பெருமாளின் திருவாய் எப்படி மணக்கும் ”கற்பூரம் போல் மணக்குமா ? அல்லது தாமரைப் பூப்போல வாசனை வருமா ? என்று கண்ணனின் உதடுகளுடன்
நெருங்கிய உறவு உள்ள சங்கத்திடம் கேட்கும் பாசுரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப் பவளக் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண்சங்கே!

பெருமாளின் உதடு என்ன மாதிரி வாசனை அடிக்கும் என்பதற்கு பெரியவாச்சான் பிள்ளை திருப்பாணாழ்வார் பாசுரத்தை விடையாகத் தருகிறார்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன்* என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே.

இதன் உரையில் கூரத்தாழ்வான் சுந்தர பாஹுஸ்வத்தில் யசோதைப் பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்னும் அழகர் திவ்விய கன்னங்களில் இருப்பது போல வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் ”வெண்ணெய் உண்ட வாயில்” வரும் என்று அனுபவிக்கிறார்.

தசரத சக்கரவர்த்தி தன்னுடைய ஐஸ்வர்யத்தைப் அனுபவிக்க “எனக்கு ஒரு பிள்ளை வேண்டும்” நோன்பு நோற்றுப் பெருமாளைப் ( ஸ்ரீராமரை ) பெற்றது போல நந்தகோபரும் தன்னுடைய ஐஸ்வர்யத்தைப் அனுபவிக்க ( அதாவது திருவாய்ப்பாடியில் பால், வெண்ணெய், தயிர் என்ற தன் ஐஸ்வர்யத்தை ! ) நோன்பு நோற்று பெற்ற பிள்ளை கண்ணன். அதனால் பெரிய பெருமாள் உதட்டை முகர்ந்து பார்த்தால் இப்போதும் முடை நாற்றம் வருமாம் !

திருப்பாணாழ்வாருக்கும் துழாய்முடிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

”அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன்” என்று அடியவர்களுக்கு அடிமையாக என்னை வைத்தான் என்று சொல்லிவிட்டு லோகசாரங்க முனியின் தோளில் எப்படி வீற்றிருந்தார் ? இது அடிமைத்தனம் என்று எவ்வாறு கூறலாம் என்ற கேள்வி எழும். இதற்கு நாயனார் தம்முடைய உரையில் திருத்துழாய் கொண்டு விடை தருகிறார்.
அதாவது திருத்துழாய் எம்பெருமானது திருமுடியிலிருந்தாலும் அது அவனுக்கு அடிமைப்பட்டதே ஆகும் அதே போல திருப்பாணாழ்வாரும் லோகசாரங்க முனியின் தோளில் வீற்றிருந்தாலும் அவருடைய அடியவரே. லோகசாரங்க முனிவர் வேண்டிக் கொண்டபடியினால் அவருடைய சொல்லுக்குக் கீழ்ப்பட்டே ஆழ்வார் அவர் தோளில் அமர்ந்தார்.

நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த போது அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி என்ற வண்ணான் அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை (திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரசாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீர்) சுவைத்து வாசனையை வைத்து “நம்பெருமாள்” என்று அழைத்தான். அவன் இட்ட பெயரே இன்றுவரை வழங்குகிறது. நம்பெருமாள் என்ற பெயரே வாசனையான வாசனையில் வந்த பெயர்.

என்றாவது ஒரு நாள் எனக்கு நம்பெருமாளுடைய ஈரவாடை கைலியைப் பிழிந்த பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் !

- சுஜாதா தேசிகன்

Comments

  1. When I originaⅼly commenteɗ I clicked the
    "Notify me when new comments are added" checkbox
    and now each time a comment is addeԀ I ɡet several e-maiⅼs with the same comment.
    Is there any way you can remove me from that sеrviсe?
    Many thanks!

    ReplyDelete

Post a Comment