Skip to main content

திருவரங்க மாலை

சமீபத்தில்  ஸ்ரீரங்கம், உறையூர் சென்ற போது சில விஷயத்தைக் கண்டு ரசிக்க முடிந்தது.

கூட்டமே இல்லாத உறையூரில் நம்மாழ்வார் சன்னதியில் சுவரில் இருக்கும் ஓவியங்கள். குறிப்பாக நம்மாழ்வாரிடம் பல திவ்ய தேசத்துப் பெருமாள் ‘நம்மைப் பாடு, நம்மைப் பாடு’ என்று போட்டிப்போட்டுக்கொண்டு வரும் காட்சி.


நல்ல கூட்டத்தில் க்யூவுல் இருக்கும் போது சில நன்மைகள் ஏற்படுகிறது உதாரணமாகப் பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகரப்படியும், அதற்குப் பக்கம் இருக்கும் திருமணத் தூண்களை பார்த்து ரசிக்க முடிந்தது.அமுதனிடம் ”இங்கே தான் கூரத்தாழ்வான் திருகுமாரர் பட்டர் தூளியில் வளர்ந்தார் மறக்காமல் அதைத் தொட்டு சேவித்துக்கொள்” என்றேன். ”திருமணத் தூண் என்று ஏன் பெயர் ? அதைத் தொட்டு சேவித்தால் கல்யாணம் ஆகுமா ?” என்றான்

நம்மாழ்வார், அவர் சன்னதியில் இருக்கும் ஓவியம், குலசேகர ஆழ்வார், திருமணத் தூண்கள், பட்டர்  என்று இவை எல்லாவற்றையும் திருவரங்க பெரிய பெருமாள் மாலை போல இணைக்கிறார். வாசகர்களை ஒரு ஸ்ரீரங்கம் சுற்றி ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்துக்கு அழைக்கிறேன்.
கூட்டத்தில் பெருமாள் சேவிக்கச் செல்லும் போது கூட்டம் முன்னே செல்ல செல்ல நாம் பெருமாளிடம் நெருங்குகிறோம் என்று எண்ணம் நமக்கு வருகிறது. விஐபியுடன் சென்றால் அல்லது தெரிந்த அர்ச்சகர் என்றால் இன்னும் கொஞ்சம் முன்னே சென்று கருவறையின் படிக்கட்டுக்கு பக்கம் நின்று மலையுடன் சேவை கிடைக்கிறது. இங்கே உடல் அவனை நோக்கி நெருங்குகிறது ஆனால் உள்ளம் ?
கூட்டம் நம் உடலைத் தள்ளிச் செல்கிறது ஆனால் உள்ளம் பொதுவாக அலைபாயுகிறது. உட’ல்’ உ’ள்’ளம் என்பது போல ஒ’லி’, ஒ’ளி’ என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். ஏன் என்று சொல்லுகிறேன்.
மேகங்கள் மோதிக்கொள்ளும் பொது இடியும், மின்னல் வருகிறது. முதலில் மின்னல் வரும் பிறகு சில வினாடிகளில் இடி. ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம் என்று நாம் படித்திருக்கிறோம். அது போல உள்ளம் உடலைவிட வேகமாகச் செல்ல வேண்டும்.
நம்மாழ்வார் பாசுரத்தை அனுபவிக்கலாம்.

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று,
அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று, தன் நீள் கழல் ஏத்திய ஆனையின்
நெஞ்சு இடர் தீர்த்தபிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற, செழும் பொழில்
சூழ், திருவாறன்விளை

”நீ தான் எனக்கு எல்லாம், எனக்கு வேறு புகலிடம் இல்லை” என்று சொன்ன யானையைக் காத்தான் என்பது ஒரு வரி விளக்கம்.  இங்கே ஆழ்வார் உபயோகித்திருக்கும் சொல் மிக முக்கியம் ”ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்தபிரான்” என்கிறார். யானையின் நெஞ்சு மின்னல் வேகத்தில் பெருமாளிடம் சென்ற பிறகு தான் ‘ஆதிமூலமே’ என்ற ஒலி போய் சேர்ந்தது.. பலசாலியான யானை முதலையின் வாயில் சிக்கிய போது, கூட இருந்த மற்ற யானைகள்(உறவினர்கள்) உதவி செய்ய முடியவில்லை, அதன் உடல் பெருமாளை நோக்கிச் செல்லவில்லை ஆனால் அதன் உள்ள சென்றது. விளைவு, பெருமாள் யானையை நோக்கி வந்தார் !
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை 
ஏறி  நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை

என்று வர்ணிக்கிறார் திருமங்கை ஆழ்வார் திருவெழுகூற்றிருக்கையில்.

மனம் லயம் ஆகும் இடம் என்பதால் தான் அதற்கு ஆ’லயம்’ என்று பெயர். யோசித்துப் பார்த்தால் இங்கே மனம் நெருங்குவதில்லை, உடல் தான் நெருங்குகிறது. ஆலயத்தை வலம் வரும் பொது நாம் எண்ணம் முழுவதும் பெருமாளை யோசிக்க மறுக்கிறது. கற்பூர ஆரத்தி கிடைக்குமா, குங்குமம் போட்டுக்கொள்ள பேப்பர் இருக்கிறதா, சேவித்த பின் மழை வருமா, குடை இல்லையே,  மிஸ்ட் கால் யாருடையது, டிக்கெட் பதிவு செய்ய வேண்டும்… என்று பல எண்ணங்கள்.

கோயிலில் நெஞ்சை பறிக்கொடுத்துவிட்டு உடலை மட்டும் எடுத்துச் சென்றால் என்ன பயன் ? பெருமாளிடம் லயித்துவிட்ட நெஞ்சைப் பேயாழ்வார் உளன் கண்டாய், ’நல் நெஞ்சே!’ என்கிறார் அப்பேர்பட்ட நெஞ்சை அவன் நன்றாக அறிந்து கூடவே இருக்கிறேன் என்பதை “உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி” என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.
”உன்னைக் காணும் அவாவில்” என்று சொல்லும் நம்மாழ்வார் போல் ஆசையுடன் சென்றால் பெருமாள் ஓடி வருகிறார். ஒரு பெருமாள் இல்லை, எல்லா திவ்ய தேசத்துப் பெருமாளும் ! போட்டிப் போட்டுக் கொண்டு வருவார்கள்  'பராங்குச நாயகி’யை பார்க்க. ( மீண்டும் மெலே உள்ள படத்தைப் பார்க்க )
நம்மாழ்வாரிடமிருந்து மதுரகவி ஆழ்வார் மட்டும் தான் கற்றுக்கொண்டார் என்று நினைக்கிறோம் ஆனால் அவருக்குப் பிறகு வந்த ஆழ்வார்கள் எல்லோரும் அவரிடம் கற்றுக்கொண்டவர்கள் தான்!
ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாருக்கு தனி இடம் உண்டு. மற்ற ஆழ்வார்கள் எல்லாம் இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்பர். நம்மாழ்வார் பாடிய திருவாய் மொழி யாரைப் பற்றி பாடியது ? பல திவ்ய தேச பெருமாள் பற்றி பாடியிருந்தாலும் அனைத்தும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கே பாடியது. இதை நான் சொல்லவில்லை பட்டர் திருவாய்மொழி தனியனில்
வான் திகழும்சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமாநுசன்

என்கிறார்.  அதனால் தான் இன்றும் எல்லாக் கோயில்களிலும்
அடியார்கள் வாழ,
அரங்கநகர் வாழ,
சடகோபன் தண்டமிழ்நூல் வாழ

என்று வாழ்த்துகிறோம்.
நம்மாழ்வார் திருவாய்மொழி பெரிய பெருமாளுக்கு சமர்ப்பித்த மாலையை ”தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்-மாலைகள் சொன்னேன்” என்கிறார். கோயிலில் பெருமாள் மாலையைக் கொய்து எல்லொருக்கும் பிரசாதம் கொடுப்பது போல திருவாய்மொழி என்ற மாலையைப் பெரிய பெருமாளுக்குச் சாத்திய பிறகு அதிலிருந்து கொய்து சில பாசுரங்களை மற்ற திவ்ய தேச பெருமாளுக்கு அருளியிருக்கிறார்!

நம்மாழ்வாருக்குப் பிறகு வந்த குலசேகர ஆழ்வார் பற்றி  பார்க்கும் முன் மற்ற ஆழ்வார்களைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம். 

ஆண்டாள் பாடிய பாசுரங்கள் எல்லாம் திருவரங்கருக்கு சொந்தம் என்பதை “அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்” என்கிறது தனியன். பெரியாழ்வார் சொந்த ஊர் மாப்பிள்ளையைப் பார்க்காமல், ஆண்டாளைப் பெரிய பெருமாளுக்கு முடித்து வைத்தார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஸ்ரீரங்கம் பெருமாளை மட்டுமே பாடினார் என்பது உலகம் உருண்டை என்பது போல் ஊர் அறிந்த விஷயம். திருப்பாணாழ்வார் பற்றி சொல்லவே வேண்டாம் திருவரங்கம் வைகுண்டத்தின் நீட்டிப்பு ( extension ) என்கிறார் ”விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்” என்கிறார்.

நம்மாழ்வார் மங்களாசானம் செய்த பெருமாளின் குணங்களைச் சொல்லும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசாரிய ஹிருதயம் என்ற நூலின் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள்  ”அகில திவ்ய தேச பிரதானமான கோயில்’ என்று ஸ்ரீரங்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறார் இத்தனக்கும் நம்மாழ்வார் முதலில் பாடியது கள்ளழகரைத்தான். ஆனால் திருவரங்கத்தை தான் முதலில் சொல்லுகிறார் நாயனார்.
திருவாய் மொழியைச் சுவைத்ததால் திருமங்கை ஆழ்வார் ’திருவாய் மொழி திருநாள்’ என்று ஏற்படுத்தி ( இன்று இராப்பத்து உற்சவம் ) பெருமாள் திருவாய் மொழியைக் கேட்க வழி செய்தார்.
சரி குலசேகர ஆழ்வார் பற்றி பார்க்கலாம்.
பெருமாள் திருமொழிக்கு உடையவர் அருளிச் செய்த தனியன் இது:
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்* பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன் என்றே கூறு
இதில் “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்கிறார் நம் இராமானுசன். நமக்குத் தெரிந்து தொண்டரடிப் பொடியாழ்வார் தான் ஸ்ரீரங்கத்தைத் தவிர வேறு திவ்ய தேசத்தைப் பாடவில்லை. அதனாலேயே “பதின்மர் பாடும் பெருமாள்” என்ற பெருமையை நம்பெருமாள் தட்டிச்சென்றார். ஆனால் அவருக்கு அந்தப் பெருமையை கொடுக்காமல் உடையவர் குலசேகர ஆழ்வாருக்கு ”தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்ற பெருமை வாய்த்தது எதனால் ?


குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீராமரிடம் உள்ள பக்தி எல்லோருக்கும் தெரிந்தது. அதனால் அவர் குலசேகர பெருமாள் என்று அழைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அரங்கன் மீது ஏன் இத்தனை மோகம் ? அவருக்குச் சயனித்த பெருமாள் தான் வேண்டும் என்றால் மலை ( கேரளா ) நாட்டு திவ்ய தேசத்திலேயே திருவாட்டாற்று, அனந்தபத்மநாப பெருமாள் என்று இரண்டு பெருமாள் இருக்க அவர் திருவரங்கம் வர துடித்தற்கு காரணம் திருவாய் மொழி படித்தது தான்.

குலசேகர ஆழ்வார் எங்கே திருவாய் மொழி பற்றி அவர் பாசுரங்களில் சொல்லியுள்ளார் ?
அந் தமிழின் இன்பப்பாவினை
அவ் வடமொழியைப் பற்று-அற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினை, நா உற வழுத்தி என்தன் கைகள்.
கொய்ம்மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே!
என்கிறார்.

அந் தமிழின் இன்பப்பாவினை  -  ”வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற இன்பத்தைச் சொல்லும் அருமையான தமிழில் பாடல்கள் என்பது திருவாய் மொழியைத் தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும் ?
சரி “அவ் வடமொழியை” என்று எதைச் சொல்லுகிறார் ? உடனே வேதம் என்று தோன்றினாலும் அது வேதம் இல்லை ! திருவாய் மொழிக்குச் சமமாக நிற்கக் கூடியது ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தான் ( குலசேகர ஆழ்வாருக்குப் பிடித்ததும் கூட ! ) ஏன் என்று உற்று நோக்கினால், ஸ்ரீ ராமர் பூஜித்த இஷ்வாகு குலதனமான பெரிய பெருமாளை அதன் உள்ளே இருக்கிறார் !
 ஸ்ரீராமரை பெருமாள் என்று அழைப்பது மரபு. அவர் ஆராதனம் செய்த பெருமாளை பெரிய பெருமாள் என்று அழைப்பது தானே சரியாக இருக்கும் ?
இன்னொரு பாசுரத்தில்
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!
இந்த ஒரு ஆழ்வார் தான் மணத்துண் பற்றிப் பாடியுள்ளார். மனம் உருகி திருப்பாணாவார் மாதிரி ‘ஐயோ’ என்று எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும் அல்லவா அதற்குத் தான் மணத்தூண். ஆழ்வார்கள் எப்படி அரங்கனை அனுபவித்தார்களோ அதே போல நாமும் அனுபவிக்க முயற்சி செய்ய வேண்டும்.
நம் தமிழ் நாடகங்களில் செட் பார்த்திருப்பீர்கள் அதில் பெரிய தூண் இருக்கும் அதைச் சுற்றி ஒரு கொடி ஒன்று ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு கொடி இயற்கையாக ஒரு கொம்பை பிடித்துக்கொள்ளும். பெண்களைக் கொடி என்று அழைக்கிறோம். இங்கே குலசேகர ஆழ்வார் குலசேகர நாயகியாக(நாயிகா பாவம்) ஒரு கொடி போல அந்தத் தூணை பற்றிக்கொண்டு உருகுகிறார்.
கொடி தூணை சுற்றி எப்படி இருக்கிறதோ அதே போல் நாம் பெருமாளை அணைத்துக்கொள்ள வேண்டும். உள்ளே இருப்பவர் அழகிய மணவாளன் என்ற மாப்பிள்ளை க்யூவில் செல்வது எல்லாம் ஜீவன் என்ற பத்தினிகள் தானே ! நம் உள்ளத்தைத் தூண் பக்கம் அவனிடம் கொடுத்தால் நமக்கும் அவனுக்கும் திருமணம் நடைபெறுகிறது அதனால் அதற்குப் பெயர் திருமணத்தூண்கள்

உள்ளத்தைக் கொடுத்தால் அவன் வந்து நம்மைக் கைபிடித்து திருமணம் செய்துகொள்கிறான்.
பட்டரிடம் திருவாய் மொழிக்கு உரை எழுதச் சொன்ன போது ஆழ்வார்களிடம் இருந்த பிரேம பாவம் அடியேனிடம் இல்லை என்று மறுத்துவிட்டார்.  என்ன செய்யலாம், தேர்வில் ‘பிட்’ அடிப்பது போல நம்மாழ்வார் பெரிய பெருமாளுக்கு சமர்பித்த திருவாய் மொழி என்னும் மாலையை சமர்பிக்க வேண்டும்.


- சுஜாதா தேசிகன்
22.11.2018 

Comments

 1. முகநூலில் விட்டத ட்விட்டரில் படிக்கிறேன்.உறையூரில் இருக்கும் அதிர்ஷ்டம் இப்போ பெரிய பெருமாள் சன்னிதியை சேவிக்கப்போகும்போது முன்னமாறி இல்லை.வெளி ப்ரகாரத்தில் ஸ்ரீசைலதயாபாத்ரம் இடம் தாண்டி நேரே சுவறில் முன்பெல்லாம் நமாழ்வார் பாசுரங்கள் இருக்கும்.இப்போ சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்.திருமணத்தூண்!ஹும்..ரஹமான் மாதிரி சிந்தசைஸ் பண்ணியிருக்கிறீர்.நல்ல பதிவு!

  ReplyDelete
 2. ஆழவர்களின் தீந்தமிழ் பாசுரங்களும், அரங்கனின் பெரும் புகழும் கேட்கும் பொழுதெல்லாம் மனதுக்கு நிறைந்த தெய்வீக உணர்வு நிறைகிறது. சிறந்த நுணுக்கமான பதிவு.மேலும் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. ரொம்ப நல்ல பதிவு. Enjoyed. However, can take care of few spelling mistakes here and there. Bane of Tamil keyboard, I think.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. What an attitude and what an outlook.I am quoting your words:நல்ல கூட்டத்தில் க்யூவுல் இருக்கும் போது சில நன்மைகள் ஏற்படுகிறது உதாரணமாகப் பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகரப்படியும், அதற்குப் பக்கம் இருக்கும் திருமணத் தூண்களை பார்த்து ரசிக்க முடிந்தது.Powerful message for developing tolerance around us when we see crowd in divine places.

  ReplyDelete
 6. akshayatextileerode@gmail.comFebruary 14, 2019 at 9:42 AM

  வணக்கம்.
  எனது பெயர் குப்புராஜ்,ஈரோடு,
  நானும் தங்களைப்போல் தீவிர சுஜாதா உபாசகன்.
  நமது சுஜாதா அவர்கள் காதலைப்பற்றி ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அந்தக் கட்டுரை எந்த கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

  மிக நீண்ட நாட்களாக அந்த கட்டுரையை தேடி வருகிறேன்.
  நம் சுஜாதாவின் அனைத்து எழுத்துக்களையும் தாங்கள் போற்றி பாதுகாத்து வந்துள்ளீர்கள் என அறிகிறேன். ஆகவே தங்களின் பக்கத்தில் மேற்படி கட்டுரையை பதிவிட்டால் மிகவும் மிகவும் மகிழ்வேன்.
  நன்றி

  ReplyDelete

Post a Comment