’செவிக்கினிய செஞ்சொல்’ என்றால் அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் ‘செஞ்சொல்’ என்றால் என்ன என்று கேட்டால் முழிப்போம். இதே போல் தான் ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ போன்ற வார்த்தைகளும்.
செஞ்சொல் என்றால் செம்மையான என்று பொருள். ’செமையா’ இருக்கு என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் செம்மை இல்லை, செம்மை என்றால் உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அது தான் செம்மை.
நல்ல சொற்களை செம்மையாக சொன்னால் அதில் ஈரம் இருக்கும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
அன்பாக சொல்லும் சொல்லை ஈரம் கலந்தாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
நஞ்சீயர் பல சாஸ்திரங்களை எல்லாம் மேல்கோட்டையில் கற்றபின் ஸ்ரீரங்கம் வந்து பட்டரிடம் ஆழ்வார்களுடைய பாசுரங்களை கற்ற பின் ஆழ்வார்களின் பாசுரங்களில் இன்சொல்லில் ‘ஈரம்’ இருக்கிறது என்பாராம்.
சென்னை வெய்யிலில் எப்படி ஏ.சி ரூம் சுகமாக இருக்குமோ அது போல ஆழ்வார் பாசுரங்களில் ஈரம் இருக்கும். செஞ்சொல், ஈரம் கலந்த தமிழில் பாடும் போது ஆழ்வார்கள் உருகியது தெரியும்.
ஆடி ஆடி அகம் கரைந்து* இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி* எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
வாடி வாடும் இவ் வாள்-நுதலே.
என்ற பாடலுக்கு எந்த பொருளும் தேவை இல்லாமல் ஆழ்வாரின் உருக்கம் தெரிவதை அனுபவிக்கலாம்.
பல ரிஷிகளூக்கு இந்த ’உருகும்’ அனுபவம் கிடைக்கவில்லை, ஆழ்வார் பாசுரங்களை நன்கு அனுபவித்தால் நமக்கும் அந்த அனுபவம் கிடைப்பதற்கு காரணம் ஆழ்வார்கள் ‘ஆழ்ந்த’ பக்தியினால் உதிர்த்த செஞ்சொற்களால் கிடைத்த அருளிச்செயல்கள் இவை.
வைகுண்டத்திலிருந்து புறபட்ட பெருமாள் பத்ரியில் கொஞ்சம் காலம் இருந்தார். இங்கே அதிக குளிர் யாரும் வர மாட்டார்கள் என்று கீழே இறங்கி வந்து திருமலையில் கொஞ்சம் நேரம் நின்றுகொண்டு பார்த்தார் சரி அங்கேயும் ( அப்போது ) கூட்டம் இல்லை என்று கீழே இறங்கி வந்து ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொண்டு விட்டார்.
இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து தான் வைகுண்டத்தை மேனேஜ் செய்கிறார் என்று சொல்லுவார்கள். அதனால் தான் எந்த பெருமாளுக்கும் இல்லாத செங்கோல் நம்பெருமாளிடம் இருக்கிறது. எங்கு சென்றாலும் ( நாச்சியார் திருக்கோலம் உட்பட) அது அவருடன் கூடவே வரும்.
காதில் சரியாக விழவில்லை என்றால் ஒரு கையை காதுக்கு பக்கம் வைத்து ‘என்ன சொன்னீங்க?” என்பார்கள்.
யாராவது ஒரு பக்தன் ‘ரங்கா’ என்று செவிக்கு இனிய செஞ்சொல் சொல்லுவானா என்று காத்துக்கொண்டு இருக்கிறான். எங்கே அவன் சொன்னது கேட்காமல் போய்விடுமோ என்று இன்றும் பெரிய பெருமாள் ஒரு கையை தன் திருசெவிக்கு பக்கம் வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டு இருக்கிறார்.
பட்டரிடம் ஒருவர் பெருமாள் எப்போது எழுந்துக்கொள்வார் என்று கேட்டாராம் அதற்கு பட்டர் ”சம்சார கிழங்கு எடுக்கும் வரை” என்றாராம். உழவர்கள் புதுப் பயிற்களை நடும் போது பழைய பயிர்களை அடிவேர் உடன் பிடுங்கி எடுத்த பிறகு தான் அடுத்த பயிர்களை உழுவார்கள். அதை கிழங்கு எடுக்கும் வரை என்பார்கள்.
நமக்கு என்ன தோன்றும் பெருமாள் எப்படி எழுந்துக்கொள்வார் அவர் ஒரு சிற்பம் தானே என்று. நம்மாழ்வார் பாசுரத்தை பாருங்கள்
கிடந்த நாள் கிடந்தாய்; எத்தனை காலம்
கிடத்தி? உன் திரு உடம்பு அசைய!*
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் அடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி*
தடம் தோள் தாமரைக்கண் விழித்து நீ எழுந்து உன்
தாமரை மங்கையும் நீயும்*
இடம் கொள் மூவுலகும் தொழ, இருந்தருளாய்-
திருப்புளிங்குடிக் கிடந்தானே!
இதில் கிடந்த திருக்கோலத்தில் அன்று தொடங்கி இன்றுவரை எத்தனை நாளாக இப்படிக் கிடந்த திருக்கோலத்தில் ஒரே மாதிரி படுத்துக்கொண்டு இருப்பாய் ? உன் திருஉடம்புக்கு வலிக்காதோ ? உனக்கு உடம்பு பிடித்துவிடட்டா என்று நம்மாழ்வார் கேட்கிறார்.
முதலாழ்வார்களுக்கு இன்னொரு பெயர் ‘செந்தமிழ் பாடுவார்’ . அடுத்த முறை செந்தமிழ், செஞ்சொல் என்றால் அது ஆழ்வார்களின் பாசுரம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
நம்மாழ்வார் போல திருமழிசை ஆழ்வார் போல ஈர சொற்களால் நம்மால் பட முடியாது, ஆனால் அவர்கள் பாடியதை நாம் சேவித்தால் ’செவிக்கினிய செஞ்சொல்’ கேட்டு எழுந்துக்கொள்வார் பெரிய பெருமாள்.
பிகு: ஆழ்வார்களின் இன்சொல்லை சொல்லிக்கொண்டே இருந்தால் நம் வாயில் ‘தீவிளி விளிவன் வாளா’ என்ற சொற்களே வராது என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இனிமையாக பேச வேண்டும் என்றால் ஆழ்வார்களின் பாசுரங்களை அனுபவித்து சேவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
- சுஜாதா தேசிகன்
3.11.2018
( ஓவியம் : அமுதன் தேசிகன், ஸ்ரீரங்கம் பெருமாளை சேவித்துவிட்டு வந்த பிறகு வரைந்தது 2017 )
Comments
Post a Comment