Skip to main content

நம்பெருமாளும் மாலைத் தாங்கியும்

Image may contain: people standingஇடிதாங்கி என்று கேள்விப்பட்டிருக்கிறோம், மாலைத்தாங்கி ?



ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் முதல் முதலில் மதுரா விஜயத்தின் போது ஊரைச் சுற்றி வருகிறார்கள். நல்ல துணியை உடுத்த எண்ணி ஒரு சலவைக்காரனிடம் கேட்க அவன் மறுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அடுத்ததாக ஒரு பூக்கடைக்கு சென்று அங்கே சுதாமா என்ற ஒரு மாலை கட்டுபவர் இருக்க அவர் கிருஷ்ணனுக்கு அன்பாக மாலை ஒன்றைத் தருகிறார். ஆனால் கிருஷ்ணனின் சின்ன கழுத்துக்கு அது சரியாக பொருந்தவில்லை. பக்கத்தில் மாடு மெய்க்கும் சிறுவர்கள் வைத்திருக்கும் ஒரு சின்ன கோலை வாங்கி கழுத்துக்கு மாலைத் தாங்கியாக வைத்து மாலை சூட்டி அழகை ரசிக்கக் கண்ணன்

”சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் தருகிறேன்” என்றதற்கு சுதாமா
“இந்த அழகு முகத்தைப் பார்த்தால் போதும் கண்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்கிறார்.

இன்றும் உற்சவர்களுக்கு சின்னதாக மாலைத் தாங்கி வைத்து அலங்காரம் செய்வதை பார்க்கலாம்.

கண்ணனுக்குப் பூமாலை பிடிக்கும் என்ற ரகசியத்தை உணர்ந்த ஆண்டாள் தினமும் தான் சூடிக் கண்ணாடியில் அழகு பார்த்த மாலையை பெருமாளுக்கு அனுப்பினார்.

ஆண்டாளை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் போதும் ஆண்டாள் கழுத்தில் உள்ள மாலை பெரிய பெருமாள் கழுதுக்கு வந்த பிறகு ஆண்டாள் மறைந்தாள். கடைசியாகவும் அவள் சூட்டிய மாலையையே விரும்பி ஏற்றுக்கொண்டார் பெருமாள்.

ஆண்டாளுக்கு அந்த ரகசியத்தைச் சொன்னது யாராக இருக்கும் ? வேறு யார் பெரியாழ்வார் தான்!.
ஆண்டாள் பாடியது சங்கத் தமிழ் ‘மாலை’

அவரிடமிருந்து அந்த ரகசியத்தை மேலும் ஒருவர் தெரிந்துகொண்டார் அது தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஸ்ரீரங்கத்திலேயே நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்தார். அவர் பாடியது திரு’மாலை’ என்ற தமிழ் மாலை.

( ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் மாலை என்ற வார்த்தை மட்டும் வைத்து ஒரு Phd செய்யலாம் ! )

நம்பெருமாளுக்கு நாம் மாலை வாங்கிக்கொண்டு சென்றால் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

நம்பெருமாள் சுகுமாரன், இரண்டு மாலைகளுக்கு மேல் சாத்திக்கொள்ள மாட்டார். அந்த இரண்டு மாலைகளைச் சாத்திக்கொண்டு தன் நான்கு திருக்கைகளில் இரண்டை மறைத்துக்கொள்வார். ஏன் என்று யோசித்திருக்கிறேன். அதற்கு விடை சமீபத்தில் தான் கிடைத்தது.

நான்கு திருக்கைகளுடன் இருந்தால் நமக்கும் அவருக்கும் ஒரு தோற்றத்தில் வித்தியாசம் ஏற்பட்டு அவரை அணுக ஒரு தயக்கம் ஏற்படுகிறது.
இரண்டு திருக்கைகளுடன் இருந்தால் ‘அட ’நம்’பெருமாள்’ என்று அவரிடம் அன்யோன்யம் ஏற்பட்டு கிட்டே போக எளியவனாகக் காட்சி அளிக்கிறான்.

மலையைத் தாங்கினான், பூமியைத் தாங்கினான், மாலையைத் தாங்குவது அவனுக்குக் கஷ்டம் இல்லை, இருந்தாலும் மாலைத் தாங்கி ஏன் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் அவனிடம் செல்லும் போது இரண்டு கைகளால் நம்மைத் தாங்க மாலை இடையூறாக இருக்கக் கூடாது அல்லவா ? அதனால் தான் அவரை முன்னிலும் பின் அழகிய பெருமாள் என்கிறோம் !

ஸ்ரீரங்கம் நம்பெருமாளை ஸ்ரீரங்க வாசிகள் தாங்கு தாங்கு என்று தாங்குவதால், மாலை தாங்கி எல்லாம் மற்ற திவ்ய தேசம் மாதிரி இங்கே கிடையாது. மாலையை கச்சிதமாக செய்திருப்பார்கள்

கண்ணன் தான் ஸ்ரீரங்க பெருமாள் என்று சொல்லுவது தவறு, ஸ்ரீரங்கம் பெருமாள் தான் கண்ணன் என்று சொல்லுவது தான் சரி.

சும்மாவா சொன்னார்கள் திருவரங்கம் என்றால் ‘பூ’லோக வைகுண்டம் என்று ?

- சுஜாதா தேசிகன்
2.11.2018

Comments