Skip to main content

Book(not)fair

[%image(20060120-desikan_at_bookfair.jpg|328|246|At the BookFair)%]

புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை போனேன். அங்கு வாங்கிய புத்தகங்களள  பற்றிச் சொல்ல போவதில்லை பயப்படாதீர்கள்.


* புத்தகக் கண்காட்சி பின்வாயிலில் ஓர் இளைஞர் நம்முடைய பெயரை அரிசி, கடுகு போன்றவற்றில் எழுதி (ரூ 20/= ) ஒரு சாவிக் கொத்தில் போட்டுத் தருகிறார். இந்த முறை இது புதுசு. அதைக் கடந்து வந்தால் டெல்லி அப்பளம், சூப், ஆவின் கடை, மிளகாய் பஜ்ஜி என்று சுவாரசியமாக இருக்கிறது. முதல்முறை போனபோது இருந்த அருமையான விவேகானந்தா காப்பி (விலை 6/-)  இரண்டாவது முறை போன போது இல்லை.


* உள்ளே வந்தால் எது நல்ல புத்தகம் (அல்லது எனக்குப் பிடித்த புத்தகம் எது) என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். இந்த முறை ஒன்று கண்டுபிடித்தேன், புத்தகம் 100 பக்கம் என்றால் அதனுடைய விலை ரூ 50/-; 200 பக்கம் என்றால் ரூ100/=. கெட்டியட்டை என்றால் ஒரு ரூ20/= சேர்த்துக் கொள்ளுங்கள்.


* நக்கீரன் பத்திரிகையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய, 'இந்து மதம் எங்கே போகிறது?' அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியது புத்தக வடிவில் நன்றாகப் போகிறது. "சார், எனக்கு ஒரு இந்து மதம்(?)" என்று பலரும் விரும்பி வாங்குவது நம்பிக்கையைத் தருகிறது. அர்த்தமுள்ள இந்து மதம், அப்துல் கலாம், காந்திஜியின் ("அந்த முப்பது ரூபாய் புத்தகம் ஒன்னு கொடுப்பா!") சத்திய சோதனை நன்றாகப் போகிறது.


* ஒரு கடையில் ஆன்மிகம் என்ற பிரிவில் மஞ்சள் அட்டை போட்ட பெரிய கீதையும், தி.க வெளியீடான கீதையின் மறுபக்கமும் இருந்தது. இந்த முறை, கடைகளைத் தேர்வு செய்ததில் விதி விளையாடியிருக்கிறது என்று நினைக்கிறேன். ரமணர், BVB ஸ்டால் பக்கத்தில் தி.க ஸ்டால்; ஒஷோ ஸ்டால் பக்கத்தில் R.K.Mutt ஸ்டால். Marxist ஸ்டால் பக்கத்தில் Venture Capitalist.


* பெரும்பாலும் கூட்டம் ஆங்கிலப் புத்தகக் கடைகளில்தான் பார்த்தேன். நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஒரு தமிழ் கதைப் புத்தகத்தை ஒரு அம்மா வாங்கியவுடன் உடன் வந்திருந்த சின்ன பையன் "Mummy, do you want me to read this book?" என்று சந்தேகத்துடன் கேட்டது. பில் போடுபவர் பில் போடலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் குழம்பினார்.


* உங்கள் புத்தகங்களை யாரும் போட முன்வரவில்லை என்றால் நீங்களே ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கலாம். பல புத்தகங்கள் அப்படித்தான் வந்திருக்கிறது. வலைப்பதிவு ஆரம்பிப்பதைப் போல் :-)


* விகடன், குமுதம் ஸ்டாலில் நல்ல கூட்டம். புத்தகங்கள் விலையும் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஆனால் வாங்குகிறார்கள். leonardo da vinci ஓவியங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாளிதழ் சைஸுக்கு, கிட்டத்தட்ட 1000 பக்கங்கள். விலை 9800/= (ஆட்டோ செலவு 100ரூபாய் ஆகும்). அதேபோல் ஓலைச்சுவடி போல் திருக்குறள் புத்தகத்தை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். வித்தியாசமாக இருந்தது.


* சமையல் குறிப்பு, ஆன்மிகம், பணம் பண்ண என்ன வழி, கோபப்படாமல் இருப்பது எப்படி, இருபத்தி நான்கு மணிநேரத்தை இருபத்தி ஐந்து மணி நேரமாக ஆக்குவது எப்படி, நீங்களும் ஒரு அறிவாளி/விஞ்ஞானி, வெற்றி பெற 100 வழிகள், 1008 பழமொழிகள்/விடுகதைகள், தென்னலி ராமன், முல்லா கதைகள் போன்ற புத்தகங்களை ஒதுக்கினால் மீதி உள்ள புத்தகங்களை தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (BAPASI) ஸ்டாலில் (அல்லது அலுவலகத்தில்) அடக்கிவிடலாம்.


* பல தமிழ் புத்தகங்கள் ஆங்கில புத்தகத்திலிருந்து சுட்டது அல்லது தழுவி எழுதப்பட்டது என்று அதன் தலைப்பையும், உள்ளே இருக்கும் சரக்கையும் பார்த்தாலே தெரிகிறது. இல்லாவிட்டால் இது போல் தலையணை சைஸ் புத்தங்களை எழுத முடியாது. அடுத்த முறையாவது நல்ல தமிழ் புத்தகங்கள் வந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம். காலச்சுவடில் ஓரளவு நல்ல புத்தகங்கள் இருக்கிறது. பல ஸ்டால்களில் புத்தகத்தின் அட்டை மட்டுமே நன்றாக இருக்கிறது.


[ படம் உதவி ஹரன் பிரசன்னா - நன்றி ]

Comments