Skip to main content

சீரியஸான காமெடி

சனிக்கிழமை உயிர்மையின் இரண்டாவது கூட்டம், இரண்டு கூட்டமாக நடந்தது. எனக்கு இந்தக் கூட்டங்களில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. இவர்கள் உலகம் வேறு; என் உலகம் வேறு. இந்தக் கூட்டத்திற்கு போனதற்கு இரண்டு காரணங்கள்- ஒன்று, நண்பர் மனுஷ்யபுத்திரனின் அழைப்பு; மற்றொன்று நான் பெரும் மதிப்பு வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர திரு.நல்லக்கண்ணு அவர்களுடைய பேச்சைக் கேட்க.


கூட்டம் நான் போனபோது ஆரம்பித்திருந்தது. எழுத்தாளர்களின் புத்தகங்களை நல்லக்கண்ணு வெளியிட, அதைப் பற்றி மதிப்புரை என்று கூட்டம் போய்க்கொண்டிருந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பி.ஏ.கிருஷ்ணன் பாராட்டியும் சில இடங்களில் உள்ள மொழிபெயர்ப்புக் குறைகளையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அப்போது பின்வரிசையில் உள்ள பெண்கள்(பத்து நிமிடம் முன்பு வந்தவர்கள்) திடீர் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு சத்தம் போட்டனர். ( கூச்சல் போட்டார்கள் என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகமாக இருக்கும் ).


'சண்டக் கோழி' என்ற படத்தில் 'குட்டிரேவதி' என்று பெயர் வைத்து வசனம் எழுதியதைக் கண்டிக்கிறோம் என்றார்கள். துப்பட்டாவைத் தூக்கிக் காண்பித்து ஏதேதோ பேசினார்கள். அப்போது எஸ்.ராமகிருஷ்ணன் மைக்கை பிடித்து, அந்தப் படத்தில் அந்தக் குறிப்பிட்ட வசனம், தான் எழுதியதில்லை என்று சொல்லி அதற்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்றார். "நீங்கள் வேண்டுமென்றால் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் உங்கள் கண்டனத்தைச் சொல்லுங்கள்" என்றார். அதை வந்திருந்த பெண் கவிஞர்கள் எற்றுக்கொள்ள மறுத்தார்கள். சிலர் இந்தக் கூட்டத்தைத் தயவுசெய்து நடத்த விடுங்கள் என்று கேட்டது 'செவிடன் காதில் சங்கு' என்ற பழமொழியை நினைவுப்படுத்தியது.


அப்போது மேடை ஏறிய ஒருவர் (பெயர் ரமேஷ் என்று பிறகு தெரிந்துகொண்டேன், அவர் புத்தகமும் நேற்று வெளியிடப்பட்டது), 'மாலதி மைத்திரியை’ப் பற்றி எழுதியிருந்தால் நான்கு தலைகள் உருண்டிருக்கும் என்று பேசினார். பின்னர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டதற்குப் பின்னர் வெளியே சென்றார்கள். புக்பாயிண்ட் வெளியே போய் நின்று ஸ்பீச் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை வேடிக்கை பார்க்க கூட்டம் சேர்ந்தது.


வெளியே ஒரு காமெடிக் கூட்டம்; உள்ளே இரு சீரியஸ் கூட்டம் என்று வந்திருந்தவர்கள் எதைக் கேட்பது என்று கொஞ்சம் குழம்பினார்கள். பெண் கவிஞர்கள் வெளியே பேசிமுடித்துவிட்டு கூட்டத்தைப் பார்த்து, "எங்களுக்கு இப்போது ஆதரவு அளித்தது போல் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும்!" என்று சொன்னவுடன் எல்லோரும் நழுவினார்கள்.


எனக்கு ஒரே வருத்தம் இதுதான் - இவ்வளவு எழுதி, படித்த இவர்களுக்கு ஒரு stage etiquette தெரியவில்லை. 80 வயது நிரம்பிய நல்லக்கண்ணு என்ற ஒரு சிறந்த மனிதருக்குமுன் இவ்வளவு கூத்தும் நடைபெற்றது. அரசியலை விட மிக மோசமான சாக்கடை என்று இவர்கள் நிருபித்துக்காட்டினார்கள்.


தமிழ் முரசு - செய்திகள்/படங்கள் :   1, 2, 3, 4, 5, 6, 7


[இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி, புகைபடங்கள் - நன்றி தமிழ்முரசு. ஒரு மாறுதலுக்கு செய்தியைத் திரிக்காமல் அப்படியே போட்ட தமிழ்முரசுக்கு ஒரு சபாஷ்!! ]


இதை பற்றி மாலன் பதிவு: எஸ்.ராவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
அந்திமழையில் வந்த செய்தி
(ரஜினி) ராம்கி குசும்பு
உருப்படாதது நாராயணன் பதிவு  

Comments