நண்பர் அதியமான் சில வாரங்களுக்கு முன் அம்பலம் அரட்டையில் முன்பு எப்போதோ படித்த ஒரு விஞ்ஞான சிறுகதையை உயிர்மை வி.சி தொகுப்பில் காணவில்லை என்றார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அந்த கதையின் அவுட்லைனையும் சொன்னார். பிறகு சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அது முன்பு கணையாழியில் எழுதியது என்று நினைக்கிறேன் என்றார்.
அடுத்தவாரம் அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது. 1977 ஆகஸ்ட் மாதம் கணையாழியில் அந்த கதை கண்டுபிடித்தேன். கதையின் பெயர் தம்பி.
படிக்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அடுத்த உயிர்மை வி.சி பதிப்பில் இந்த கதை இடம்பெறும். நண்பர் அதியமானுக்கு என் நன்றி.
[ Update 21st Jan 2006] நண்பர் ஸ்ரீகாந்த் 'தம்பி'யின் ரிஷிமூலத்தை ஆராய்ந்து ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது இங்கே
--------------------------------------------
தம்பி
இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
நினைவு வந்ததும் இந்த வார்த்தைகள்தான் அவன் உதடுகளிலிருந்து மிக பலஹீனமான உச்சரிப்பாக வெளிப்பட்டன. கடவுள் அல்லது கடவுள் என்கிற ஸ்தானத்தில் அவன் நினைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு பிண்டத்திற்கு வந்தனம் சொன்னான். அதிர்ச்சிதான். காயம் எதுவும் இல்லை. ஜன்னல் வழியாக மிகவும் முயற்சி செய்து வெளியே பார்த்தான். அவசர காலத்திற்கு அவன் கப்பல் இறங்கியிருந்த அந்தச் சிறிய உலகம் சர்வமும் காலியாக இருந்தது. அதன் மௌனம் அந்தப் பிரதேசம் முழுவதும் வியாபித்து தூய வெண்மணற் பரப்பில், மசி நிற வானத்தில் ஒரே ஒரு ஒற்றை உண்மையாக அதன் தாய் கிரகம் சாசுவத முக்கால் வட்டமாகத் தெரிய அதன் சக்திக் கனவில் தரையில் மெலிய ஆவி படர….
பதினைந்து மைல் சுற்றளவுள்ள சிறிய உலகம். அஸ்டிராய்டு 18 ஆபத்து காலத்தில் இறங்குவதற்கு அவன் கலத்தின் கம்ப்யூட்டர் கணக்கிட்டுத் தேர்ந்தெடுத்த தற்காலிகப் பிரதேசம்…
பூமிக்குத் தொடர்பு கொள்ளக் கம்யூனிகேஷன் சாதனங்களை முயன்று பார்த்தான். கண்ட்ரோல்! கண்ட்ரோல்! கண்ட்ரோல்! நான் பேசுவது கேட்கிறதா?
செய்தி போய் பதில் வர ஐந்து நிமிடமாகும்!
இல்லை, செய்தி போகாது!
அவன் ரத்தம் உறைந்தது. கம்யூனிகேஷன் சாதனங்கள் முழுவதும் செத்திருந்தன. அவைகளின் ஆரோக்யத்தைக் காட்டும் விளக்குகள் ஒன்றுமே எரியவில்லை. இறங்கும்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் கெட்டுப் போய்விட்டன!
தன்னைச் சுற்றியும் இருக்கும் நூற்றுக்கணக்கான விளக்குகளையும் மீட்டர்களையும் பார்த்தான். எது கெட்டுப் போயிருக்கிறது எது உயிருடன் இருக்கிறது…
இடதுபக்கம் இருந்த அத்தனை சாதனங்களும் கெட்டுப் போயிருந்தன. பூமியுடன் தொடர்பு கொள்ளும் ரேடியோ போய்விட்டது. திரும்பச் செல்வதற்கு உண்டான சாதனங்கள் போய்விட்டன.
அவனுள் ஜுரவேகமாக பயம் ஆரம்பித்தது. நான் தனியாக விண்வெளியில் இந்தத் தீவில் தொங்கவிடப்பட்டிருக்கிறேன். பூமியுடன் பேச முடியாது. பூமிக்கு செய்தி சொல்லமுடியாது. திரும்ப என் கப்பலைக் கிளப்பமுடியாது! ஐயயோ!
என்ன செய்வது? என்ன செய்வது? நான் செத்தேன். எனக்கு இனிச் சாவுதான்! இவ்வளவுதான் என் சரித்திரம்!
இரு, இரு மனமே இரு! பூமியில் இந்தப் பிரயாணத்திற்குக் கிளம்பு முன் எவ்வளவு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன உனக்கு! யோசித்துப் பார். என்ன செய்யவேண்டும், இந்த மாதிரி விபத்து ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் படித்துப் படித்துச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நினைவுக்கு கொண்டு வா!…
அவசர கால அணு சக்தி டிரான்ஸ்மிட்டர் ஒன்று ஸீட்டுக்கு அடியில் இருக்கிறதே… அதை எடு… எடுத்தான். அதன் விசையைத் தட்டு தட்டினான். அந்த நுட்பமான அணுசக்திக் கலன் உயிர்பெற்று விர்ர் விர்ர் என்று ஹீனத்தனமான ரேடியோ செய்தி அனுப்ப ஆரம்பித்தது…
இதன் சுய பாட்டரி ஒரு வருஷம் வரும். காப்பாற்று காப்பாற்று என்று செய்தி பூமிக்குச் செல்லும். பூமியில் அந்தச் செய்தி கிடைத்ததும் இவனுக்கு ஒரு காப்பாற்றும் கப்பல் அனுப்ப உடனே ஆயத்தங்கள் செய்வார்கள்… கப்பல் வருவதற்கு திசை மார்க்கம் தெரிவிக்க இந்த அணுசக்தி ரேடியோவே உதவும். வந்துவிடுவார்கள் வந்து விடுவார்கள்…. உடனே உடனே வந்து விடுவார்கள்.
காப்பாற்று ! காப்பாற்று ! காப்பாற்று!….
உடனே என்றால்!
அவனுக்கு மறுபடி பயம் உரைத்தது, அவன் பூமியைவிட்டு வெகுதூரம் வந்திருக்கிறான். அவன் செல்லவேண்டிய ஜூபிடர் கிரகம். அந்தப் பயணத்தில் ஆறு மாதங்கள் கடந்தபின் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. பூமியிலிருந்து அவனுக்கு உதவி வர ஆறு மாதமாவது ஆகும்! ஐயயோ!
ஆறு மாதம் தனியாக இருக்கவேண்டுமா! செத்தேன்! எதிரே பார்த்தேன்.
அஸ்டிராய்டு 18. பிராணவாயு கிடையாது, காற்று கிடையாது. உயிர் கிடையாது, இறந்த உலகம். இந்த மஹா மௌனத்தில் ஆறு மாதங்கள்! ஓ! என்ன செய்ய போகிறேன் எப்படி இருக்கப்போகிறேன்…
ஆறு மாதத்திற்குத் தேவையான உணவு இருந்தது. சிறிய சிறிய வண்ண வண்ண மாத்திரைகளாக… ஏன் ஒரு வருஷம் கூடத் தள்ளும்.
சிலிண்டரில் பிராண வாயு எத்தனை நாள் வரும்? மூன்று வருஷம்! அடேயப்பா! போதும்… என்னால் ஆறுமாதம் சுலபமாக உயிர் வாழ முடியும்… அதற்கான சாதனங்கள் இருக்கின்றன. ஆனால்? அவ்வளவு சுலபமா அது?
இந்த மௌனத்தையும் தனிமையையும் ஆறுமாதம் தாங்கிக் கொள்ள முடியுமா என்னால்?
மனோ தத்துவப் பிரிவில் அவனுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
விண்வெளித் தனிமை என்பது எவ்விதமானது. அது பூமித் தனிமையினின்றும் மிகவும் வேறுபட்டது. பூமித் தனிமையின் பின்னணியில் எப்போதும் அந்தத் தனிமையினின்றும் உடனே விடுபட்டு விடலாம் என்கிற நம்பிக்கை இருப்பதால் அதைச் சமாளிக்க முடியும். விண்வெளியில் அப்படி இல்லை.
ஆறு மாதம் தனியாக இருந்துதான் ஆகவேண்டும். ஐயோ என்று உரக்கக் கத்தினான். அந்தக் காற்றற்ற பிரதேசத்தில் உருவமில்லாமல் போனது அந்த ஐயோ.
நினைவுகளைத் தவிர்க்க முயற்சி செய். நினைவுகள் உனக்கு துரோகம் செய்யும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூங்கிப் பார். மாத்திரைகளை நாடு… அதற்காக மிக அதிக மாத்திரைகளும் சாப்பிடக்கூடாது… எல்லாம் பூமியில் குளிர்பதன அறையில் அவனுக்குக் கிடைத்த உபதேசங்கள். இங்கே அஸ்டிராயடு 18ல் கவைக்குதவாத உபதேசங்கள்!
நினைக்காதே நினைக்காதே…
நினை… நினை…
அவன் மனைவியின் மார்பின் மென்மையான வடுவை நினைத்தான். விரல்கள் துடித்தன. ஆறு மாத தூரமுள்ள வருடல். மனைவி! நீ வரும்வரை நான் யாருடன் இருக்கட்டும் ஜோ?
நினைக்காதே… நினைக்காதே…
நினை! நினை!
ஆறு மாதங்கள் எப்படி வாழப் போகிறேன்? ஐந்து நிமிஷங்களே இவ்வளவு கஷ்டமாக இருக்கின்றனவே.
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு மாசம்! ஆறு முப்பது! ஆறு முப்பது! இருபத்தி நாலு! ஆறு முப்பது! இருபத்தி நாலு அறுபது அறுபது… அம்மாடியோ அவ்வளவு செகண்டுகள்! வாய் வலிக்கும்.
பளிச்
அருகில் ஒரு வெளிச்சம்.
திடுக்கிட்டுத் திரும்பினான்.
வலது பக்கத்தில் அந்தச் சிறிய பெட்டியிலிருந்து வெளிச்சம் தெரிந்தது. ஆச்சரியத்துடன் அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே விண்வெளிக் கப்பலை செலுத்தும் கம்ப்யூட்டர் மார்க் 28 மாடல் 72 என்று எழுதியிருந்தது. அட! இதற்கு உயிர் எப்படி இருக்கிறது. ஓல் பாட்டரிகள்தான் எப்போதோ செத்துவிட்டனவே!
இல்லை. இந்தக் கம்ப்யூட்டருக்கு சக்தி கலத்தின் வெளியே இருக்கும் ஸோலர் பானல்களிலிருந்து வருகிறது. அந்த கிரகத்தின் மேல் படியும் வெளிச்சத்தினின்றும் இதற்கு சக்தி ஏற்படுகிறது.
அட! ஏதாவது ஒன்று உயிருடன் இருக்கிறது.
கம்ப்யூட்டரே என்று கூப்பிட்டான்.
மௌனம்!
இது பேசாது! அதனுடன் பேசவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்.
இது பேசுவதற்கு ஏற்பட்ட கம்ப்யூட்டர் இல்லை. அந்த வகையெல்லாம் பூமியில்தான் இருக்கின்றன.
இது?
இது என்ன செய்யும்? நிச்சயம் பேச முடியாது. இதைப் பேசவைக்க என்ன செய்யவேண்டும். இதன் பதிவு செய்யும் கருவி ஏதாவது நிச்சயம் இருக்கவேண்டும். என் தொண்டையில் ஏற்படும் அசைவுகளை எப்படியாவது மின் அலைகளாக மாற்றி?
சே! பைத்தியக்காரத்தனம்!
பெட்டியை மூடிவிட்டான்.
ஒரு வாரம் அந்தக் கம்ப்யூட்டரைத் தனிப்படுத்தி அதன் அத்தனை பட்டன்களையும் இழுத்துத் தொட்டுப்பார்த்து தகிடுதத்தம் செய்து இரண்டு வார்த்தை பேச வைத்துவிட்டான்.
ஆம்!
இல்லை!
இரண்டே வார்த்தைகள்.
அதற்கு ‘தம்பி’ என்று பெயரிட்டான்.
தம்பி சௌக்யமா?
ஆம்.
தம்பி, நான் இறந்துபோவேனா?
இல்லை.
தம்பி, நாம் பிழைத்துவிடுவோமா?
இல்லை!
தப்பு! தப்பு! ஆம் சொல்லு.
ஆம்.
பதினைந்தாம் நாள் அந்தக் கம்ப்யூட்டரின் ஞாபகத்தில் நிறைய வார்த்தைகளுக்கு இடம் இருப்பதை தற்செயலாக அறிந்துகொண்டான். யோசித்து யோசித்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து…
தம்பி! தம்பி! உலகத்தின் மிகப்பெரிய சக்தி என்ன தெரியுமா?
உண்மை.
உலகத்திலேயே மிகப் பெரிய ஆசாமி யார் தெரியுமா?
நீதான்.
தம்பி, நமக்கு உதவி வருவதற்கு இன்னும் எத்தனை தினங்கள் இருக்கின்றன?
5 மாதம் 14 நாட்கள் 8 மணி நேரம் 6 நிமிஷம் 54 செகண்டு.
தம்பி சபாஷ்!
ஒரு மாதத்தில் அந்தக் கம்ப்யூட்டர் பேசுவதுடன் சில எளிய காரியங்களும் செய்ய முடியும் என்று கண்டுகொண்டான். விண்வெளிக் கப்பலில் இருந்த ஒன்றிரண்டு சாதனங்களை அமைத்தான்.
தம்பி இன்றைக்கு என்ன கிழமை?
வியாழன். இன்று நீ பச்சை மாத்திரை சாப்பிடவேண்டும்.
எனக்கு படுக்கை அமைத்துவிடேன்.
இதோ.
இருக்கிற சிறிய இடத்தில், தலைமறைவுக்குள் அடக்கியிருந்த ‘படுக்கை’யை அமைத்தது கம்ப்யூட்டர்.
தம்பி, நாளைக்கு உனக்கு கால்கள் அமைக்கலாம் என உத்தேசித்திருக்கிறேன்.
நாளைக்கு உத்தேசி அதை!..
தம்பி, பதில் அப்படிச் சொல்லக்கூடாது. நல்லது என்று சொல்லவேண்டும்.
நல்லது.
ஒன்றரை மாதத்தில் அதனுடன் சதுரங்கக் காய்களை வெட்டிக் கட்டம்போட்டு ஆடத் தொடங்கிவிட்டான்.
தம்பியை கலத்திற்கு வெளியே ஒரு தடவை அனுப்பிப் பார்த்தான். ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சின்ன வேடிக்கையாக இருந்தது. பெட்டிக்குக் காலும் கையும் முளைத்தது போல… கைகளும் கால்களும் இவன் அமைத்தவை. கலத்தில் இருந்த சொற்ப சாதனங்களை வைத்து அதனுடன் ஒட்ட வைத்து…
தக்கா புக்கா என்றுதான் நடந்து சென்றது.
பதினைந்து நிமிஷத்தில் வந்தது.
அபரிமிதமான உஷ்ணம். நிறைய எனக்கு வேண்டிய ஒளி வெள்ளம். நடப்பதில் சற்று சிரமம். பொட்டல். என்றது.
அவன் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளையே கோத்து அமைத்து அந்தப் பெட்டி அவனுடன் செய்தி சொல்வதில் அபரிமிதமான திருப்தி அடைந்தான். பெருமிதம் அடைந்தான்.
என்னால் அங்கே போக முடியாது. இறந்துவிடுவேன். உருகிப் போய்விடுவேன்! எனக்கு மூச்சு விடக் காற்று கிடையாது என்றான்.
அப்படியா?
உன் பாடு பரவாயில்லை. எப்போதாவது போர் அடித்தால் ஜாலியாக உலவிவிட்டு வரலாம்.
போர்? ஜாலி? என்ன அர்த்தம்?
சொல்கிறேன்.
ஒன்பதாவது வாரம் அவனுக்கு நன்றாக ஞாபகமிருந்தது.
தம்பி!
பதிலில்லை.
தம்பி! தம்பி! என்ன உனக்குக் காது கேட்கவில்லையா?
தம்பி என்கிற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை.
என்னது?
தம்பி என்கிற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை.
அவன் ஸ்தம்பித்துப் போனான்.
தம்பி! இந்த வாக்கியம் நீயாக உபயோகப்படுத்துகிறாய்?
இல்லை. நீதான் சொல்லித் தந்தாய். சொல்லித் தந்த வார்த்தைகளை வைத்துத்தான் கேட்கிறேன்.
இருந்தும் ‘பிடிக்கவில்லை’ என்கிற வார்த்தை?
வார்த்தை?
மெஷின் வார்த்தை இல்லை அது. மனிதர்களின் விருப்பு வெறுப்பு சம்பந்தமான வார்த்தை.
அதை உபயோகிக்கக்கூடாதா?
உனக்கு மனம் என்பது கிடையாது.
கிடையாதா?’
பின் ஏன் அந்தப் பெயர் பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்?
ஏதோ சொன்னேன்.
முதல் தடவையாக அவனுக்குத் தம்பியின் மேல் சந்தேகம் வந்தது. சே! இதன் பர்சனாலிட்டி முழுவதும் என்னுடையது. அத்தனையும் நான் சொல்லிக் கொடுத்த வார்த்தைகள், நான் சொல்லிக் கொடுத்த இலக்கணம்… நான் சொல்லிக் கொடுத்த விதிகள். தம்பி யார்? நான்தான்! நான்தான்.
தம்பி, நீ யார் தெரியுமா?
யார்?
நான்தான்.
பெயரை மாற்றிவிடடேன்.
படவா? மாற்றமாட்டேன்! வெளியே போ!
பெயரை மாற்றுவதைப் பற்றி தம்பி அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. இவன் பிடிவாதமாக மாற்ற மறுத்தான். ஒரு சமயம் அது வேடிக்கையாகக்கூடப் பட்டது. தம்பி யார்! என் மூளைப் பிள்ளை! அவனிடம் நான் ஏன் பயப்படவேண்டும்! பயமா! சரிதான் எந்த நிமிஷமும் நான் தம்பியைக் கலைத்துவிட முடியும்!
பன்னிரண்டாம் வாரத்தில் ஒருதினம் தம்பியைக் காணவில்லை. அவன் சற்றுநேரம் தூங்கிவிட்டு எழுந்து பார்க்கிறான். தம்பி காணாமற் போய்விட்டான். ஜன்னல் வழியாகப் பார்த்தான். வெளியே எங்கும் தென்படவில்லை. அவனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்து. என்னைக் கேட்காமல் எங்கே போய்த் தொலைந்தது. அஸ்டிராய்டில் திரிய ஆரம்பித்துவிட்டதா? என்ன தைரியம்? என்னால் வெளியே நடக்க முடியாது. அதற்கு நடக்க முடிகிறது. அதற்காக இப்படி கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிடுவதா? என்ன பொறுப்பற்ற காரியம். திரும்பி வந்த உடன் தம்பியைக் கண்டிக்கவேண்டும். ஏன் தண்டிக்கவேண்டும்.
தண்டிப்பதா?
எப்படி? சிரிப்புத்தான் வந்தது.
தம்பி யார்? ஒரு மிஷின். நான் செய்த மிஷின். ரத்தம் நரம்பு தசை ஒன்றும் கிடையாது. வெறும் எலக்ட்ரானிக்ஸ் பெட்டி. கை கால் முளைத்த பெட்டி. இதைப் போய் நான் கோபித்துக் கொண்டு அதட்டி!…சே!
தம்பி ஒருமணிநேரம் கழித்துத்தான் வந்தது.
எங்கே போனாய் தம்பி?
போர் அடித்தது. ஜாலியாய் சுற்றிவிட்டு வந்தேன்.
இனிமேல் அப்படிச் செய்யாதே.
ஏன்?
நான்தான் உன்னைப் படைத்தவன். என் சொல்படிதான் நீ கேட்கவேண்டும்.
இந்தத் தர்க்கத்தின் நியாயம் எனக்குப் புலப்படவில்லை.
இதோ பார்! நீ யார் தெரியுமா? ஒரு கேவல இயந்திரம். முட்டாள்தனமாக ராக்கெட் இயக்கத்திற்குக் கணக்குகள் போடும் வேலை மட்டும் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்த உன்னை நான் வார்த்தைகள் புகட்டி அறிவு புகட்டி ஆளாக்கி, சதுரங்கம் கற்றுத் தந்து நடக்க வைத்து, படுக்க வைத்து எல்லாம் நான்தான் செய்திருக்கிறேன். எனவே நீ என் வார்த்தையை மீறக்கூடாது.
எல்லாம் உண்மைதான். வார்த்தை மீறக்கூடாது என்பதுதான் பிடிபடவில்லை.
முட்டாளே! நான் எந்த நிமிஷமும் உன்னை போட்டு உடைத்துவிடமுடியும். நீ செத்துப் போய்விடுவாய். ஞாபகம் வைத்துக் கொள்.
அது பற்றி எனக்குப் பயமில்லை. அது என் தற்போதைய செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது.
தற்போதைய செயல்பாடு! எதற்காக இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லித் தந்தேன்!
எனக்குக் கோபம் வருகிறது, போ!
போகிறேன். இருந்தாலும் நான் அதிக தூரம் செல்லக்கூடாது என்று நீ ஆணையிடுவதன் நோக்கம் எனக்கு இன்னும்… என்று முணுமுணுத்துக்கொண்டே தன் பகுதிக்குச் சென்றது.
ராத்திரி அவனுக்குத் தூக்கம் வராமல் ரொம்ப நேரம் விழித்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
அடுத்த வாரம் தம்பி அவனுக்குப் படுக்கை போடுவதை நிறுத்திவிட்டது. பச்சை மாத்திரை தருவதை நிறுத்திவிட்டது. ஏன் என்று கேட்டதற்கு வெளியே போயிருந்தேன். திரும்பி வர நேரமாகிவிட்டது என்றது. தம்பி! நீ உயிர் வாழ்வதே எனக்கு மாத்திரை கொடுப்பதற்கும் படுக்கை போடுவதற்கும்தான் என்றான்.
அப்படி யார் சொன்னார்கள்?
அப்படித்தான் நியதி. விதி.
அந்த நியதியை விதியை யார் அமைத்தார்கள்?
நான்தான்.
அதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
அடப்பாவி! நான்தான்டா தலைவன். நான்தான்டா உன்னை சிருஷ்டித்தேன்!
நீ என்னை சிருஷ்டித்தது ஒரு சுயநல உணர்வுடன் இருக்கலாம். அந்த நியதி சாசுவதமாக இருக்கவேண்டும் என்பதற்கு அது ஒன்றும் அண்டசராசரங்களில் எல்லாம் பரவின உண்மையா என்ன? அப்படித்தான் நடக்கவேண்டும் என்கிறது கட்டாயமாக பௌதிக விதிகளைப் போல அழிக்க முடியாததாக மீற முடியாததாக இருந்தால்…
ஏய் என்ன உளறுகிறாய்? அந்தப் பச்சை மாத்திரையை நீயும் நிறையப் போட்டுக் கொண்டுவிட்டாயா என்ன?
மாத்திரைகள் எல்லாம் மனிதனான உனக்கு. உன் சிஸ்டமே ஒரு பழைய சிஸ்டம். உனக்குள் ஒரு பழுதுபட்ட ரசாயனம். நீ சாப்பிடும் மாத்திரைகளைப் பிரித்து கார்பன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்று பிரித்து சகதியாக்கி ரத்த ஓட்டமாக்கி மிகச் சிக்கலான பழைய இயந்திரம் நீ. என்னைப்பார். ஒளி வெள்ளம்… மின்சாரம்… அவ்வளவே… நான் உன்னைவிட உன்னதமானவன்… நீதான் என் தம்பி. நீதான் இனி நான் சொல்வதைக் கேட்கவேண்டும்.
ஏய் உளறாதே! நீ இப்போது படுக்கை போடப் போகிறாயா இல்லையா?
முடியாது.
என்ன?
முடியாது.
வந்த கோபத்தில் பக்கத்தில் இருந்த பலகை போன்ற ஒன்றைப் பெயர்த்து தம்பியை அப்படியே நசுக்கிவிட ஓங்கினான்.
ஒன்றே ஒன்று யோசி! என்னை நீ உடைத்துவிடலாம். இன்னும் உனக்கு உதவி வர, உன்னைக் காப்பாற்றுகிறவர்கள் வந்து சேர பதினோரு வாரங்கள் இருக்கின்றன. 77 நாட்கள் உன்னால் சதுரங்கம் இல்லாமல், என்னுடன் சண்டை சம்பாஷணை இல்லாமல் இருக்கமுடியுமா? இரவில் நான் தடவிக் கொடுக்காமல், பாடாமல்….., யோசித்துப் பார்….
ஓங்கினவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது! நான் செய்த விச்சுளி என்ன பேச்சுப் பேசுகிறது பார்!……
தப்பித்தாய்! இனிமேல் எதிர்த்துப் பேசாதே! என்றான்.
தம்பியின் எதிர்ப்புக்களையும் வாயாடித்தனங்களையும்.. திடீர் திடீர் என்று காணாமல் போவதையும் திடீர் என்ற நல்ல புத்தியையும் சமாளித்து… எப்படியோ அந்த வாரங்களைக் கழித்து கடைசி வாரம். இன்னும் ஏழு தினங்களுக்கு வந்துவிட்டான்.
தம்பி, நான் பூமி திரும்பினதும் உன்னைப் பற்றி பெரிசாக ஒரு கட்டுரை, ஒரு புஸ்தகமே எழுதப் போகிறேன்!
பதிலில்லை.
தம்பி!
ஹீனமாகக் குரல் வந்தது.
என்ன?
ஏன் பேசாமல் இருக்கிறாய்?
வலிக்கிறது.
என்னது வலியா?
ஆம் வலி!
வலி என்றால் என்ன என்று உனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.
வலியைப் பற்றி ஒரு தடவை எனக்குச் சொல்லியிருக்கிறாய்.
அர்த்தம்தான் சொல்லியிருக்கிறேன். அதை உன்னால் உணர முடியாது.
என்னால் வேறுவிதமாக கற்பனை செய்துகொண்டு உணரமுடிகிறது… தாங்க முடியாத வலி! ஏன் என்று சொல்லு. நீதான் என்னைப் படைத்தாய்!
அவன் சிரித்துக் கொண்டே எங்கெல்லாம் வலி? என்றான்.
என் கை கால்களின் இணைப்புகள் எல்லாம் வலி!
எங்கே பார்க்கலாம்.
அதன் கையையும் காலையும் மடக்கிப் பார்த்தான். மெலிதாக கீச் கீச் என்று சப்தம் கேட்டது.
எண்ணெய் காய்ந்துவிட்டது. எண்ணெய் போடவேண்டும்.
போடு!
எண்ணெய் தீர்ந்துவிட்டது! விண்கலத்தில் இருந்த எண்ணெய் எல்லாம் உன் இணைப்புக்காகச் செலவழித்தாகிவிட்டது!
எங்கேயாவது ஒரு சொட்டு எண்ணெய் இருக்கும்… போடு!
ஸாரி தம்பி! ஒரு சொட்டுக்கூட இல்லை. பாட்டில் காலி! இன்னும் ஆறு நாட்கள்தானே. சற்றுப் பொறுத்துக் கொண்டிரு… வரப்போகும் காப்பாற்றும் கலத்தில் எண்ணெய் நிச்சயம் இருக்கும்.
தாங்க முடியாத வலி!
என்ன செய்வது? பொறு என்று சிரித்தான்.
சிரிக்காதே. எரிச்சலாக வருகிறது!
நான் வேறு எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தேன்.
தம்பி ராத்திரி எல்லாம் முனக ஆரம்பித்துவிட்டது…. அய்யோ அம்மா…அம்மா… போன்ற வார்த்தைகள் எல்லாம் அதற்கு புதிதாகச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது…
மூன்றாவது தினம் தம்பி சுற்றிச் சுற்றி ஒரே விட்டத்தில் நடப்பதை ஜன்னல் வழியாக அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏழாம் நாள் தம்பி கலத்திற்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பள்ளத்தை அவசர அவசரமாக மூடிக்கொண்டிருக்க அருகில் ஒரு சிறிய குடுவையில் கொஞ்சம் எண்ணெய் இருந்தது.
நல்லவேளை ஒரு தடவை சொல்லி கொடுத்திருக்கிறான். மனிதக் கொழுப்பை உருக்கினால் எண்ணெய் கிடைக்கும் என்று… மெதுவாக முணுமுணுத்துக் கொண்டிருக்க அடிவானத்தில் காப்பாற்றும் கலம் மெதுவாக மிதந்து இறங்கிக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment