மாறனேரியைத் தேடி…
ஆறு வருடங்களுக்கு முன், ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையை ‘இராமானுசன் அடிப்பூ மன்னவே’ என்ற தலைப்பில் நாவல் வடிவில் எழுத வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவைத் தொடங்கினேன். முழுவதும் குருபரம்பரையைத் தழுவியிருந்தாலும், கதையோட்டத்துக்குத் தேவையான இடங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கற்பனையையும் கலந்து எழுதத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில், ஆளவந்தார் மாறனேரி நம்பியைச் சந்திக்கும் இடத்தை நெருங்கினேன்.
மாறனேரி நம்பி பாண்டிய தேசத்தில் புராந்தகம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார். இது எங்கே இருக்கிறது என்று தேடியபோது விடை கிடைக்கவில்லை. சில பெரியவர்களிடம் கேட்டபோது, அவர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை. கூகுள் மேப்பில் தேடத் தொடங்கியபோது, அது ‘பராந்தகம்’, ‘புராந்தகம்’ என்று என்னைக் குழப்பியது. கதையை அப்படியே நிறுத்தினேன்.
மாறனேரியைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவர் மாறனேரி நம்பி. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதைக் குருபரம்பரை போன்ற நூல்கள் விவரிக்கின்றன.
‘தலித்’ என்று இன்று குறிப்பிடப்படும் குலத்தில் பிறந்தவர் மாறனேரி. அவருடைய தொழில் உழவு. ஒரு நாள் உழுதுகொண்டிருக்கும்போது அவருக்குப் பசித்தது. வயல் மண்ணை எடுத்து நீரில் அலசி அலசி உண்டார். அந்த வழியே வந்த ஆளவந்தார் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சீடர்களை அனுப்பி இந்த வினோதச் செயலை விசாரிக்கச் சொன்னார்.
சீடர்கள் அவரிடம் சென்று, “ஐயா, நீங்கள் செய்வது எங்களுக்குப் புரியவில்லையே! சேற்றில் நின்றுகொண்டு சேற்றை உண்ணுகிறீர்களே!” என்றார்கள். மாறனேரி நம்பி, “சாமி! மண்ணுக்கு மண்ணை இடுகிறேன்!” என்று பதில் கூறினார்.
இதைக் கேட்ட ஆளவந்தார், அவருடைய ஞானத்தை வியந்து, “இவர் நம் மாறன் குருகூர் நம்பிக்கு (சடகோபனுக்கு) நிகரானவர்!” என்று சொல்லி, அவருக்கு ‘மாறனுக்கு நேரான நம்பி’ (மாறன் நேர் நம்பி – மாறனேர் நம்பி) என்று பெயர் சூட்டினார்; “நீர் என்னுடன் வாரும்!” என்று அழைத்தார். மாறனேரி நம்பி, “நான் தாழ்ந்த குலத்தவன்; ஒரு சண்டாளன்!” என்றார். ஆளவந்தார், “பெருமாள் நினைப்பிலேயே இருக்கும் உம்மைப் போன்ற ஒருவனுக்குக் குலபேதம் எதுவும் கிடையாது!” என்றார். உடனே மாறனேரி நம்பி தன் தொழிலையும், ஏர்க்கலப்பையையும், மாடுகளையும், வீட்டையும், உற்றார் உறவினர்களையும் விட்டுவிட்டுக் கிளம்பினார்.
ஆளவந்தார் அவருடைய தோள்களில் சங்கு சக்கர இலச்சினைகளைப் பொறித்து, தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட அவரை ‘தொண்டர் குலம்’ என்ற உயர்ந்த வைணவ குலத்தில் சேர்த்துக்கொண்டார். ஆளவந்தாருடன் அவர் திருவரங்கத்தில் கோயில் பிராகாரத்திலேயே வசிக்கத் தொடங்கினார். ஆளவந்தார் தினமும் நீராடும் படித்துறைப் பக்கம் நம்பி ஒரு சிறு குடில் அமைத்து, இரவு அங்கே உறங்குவார். குடிலில் ஆளவந்தாரைப் போலக் களிமண்ணில் ஒரு விக்ரகம் செய்து தினமும் பூஜித்து வந்தார். பகல் வேளையில் ஆளவந்தாரின் காலட்சேப உபதேசங்களைக் கேட்டுவந்தார். தான் தாழ்ந்த குலத்தவர் என்பதால் மற்றவர்களோடு சேர்ந்து அமர்ந்து கேட்க மாட்டார்; வாசல் கதவுக்கு வெளியே நின்றுகொண்டுதான் கேட்பார்.
மாறனேரி நம்பி வந்த பிறகு, ஆளவந்தார் காலட்சேபம் சொல்லும்போது தொண்டை புண்ணாகும்படி உரத்த குரலில் சொல்லத் தொடங்கினார். அருகிலிருந்த சீடர்கள் கவலையுடன், “நீங்கள் இப்படிச் சத்தமாகச் சொன்னால் உங்கள் தொண்டை புண்ணாகுமே! மெதுவாகப் பேசினாலே எங்களுக்குக் கேட்குமே. ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆளவந்தார், “நம் மாறனேரி நம்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறானே! அவனுக்காகத்தான் நான் இப்படிச் செய்கிறேன்” என்றார்.
இந்த மாறனேரி நம்பிக்கு எங்காவது கோயில் இருக்கிறதா என்று தேடியபோது மீண்டும் பல குழப்பங்கள். மாறனேரி, மாறநேரி, மாரனேரி, மாரனேறி என்று பல பெயர்கள் அடிபட்டன. ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘தமிழகம்: ஊரும் பேரும்’ (பழனியப்பா பிரதர்ஸ்) நூல் இது குறித்து இவ்வாறு சுட்டிக்காட்டியது:
‘பாண்டி நாட்டில் மாறனேரி என்று பெயர் பெற்ற ஊர்கள் பல உண்டு. மாறன் என்னும் சொல் பாண்டியனைக் குறிக்கும். … மாறனேரி, மாறமங்கலம், மாறனூத்து முதலிய ஊர்ப் பெயர்களிலே காணலாம்.’
‘பாண்டி நாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்று மாறனேரி. முற்காலத்தில் அது மாறமங்கலம் என்னும் பெயரால் வழங்கிற்று என்பது சாசனத்தால் விளங்குகின்றது. அவ்வூர் சுந்தர பாண்டிய நல்லூர் என்ற மறுபெயர் பெற்றிருந்ததென்பதும், சுந்தர பாண்டீச்சரம் என்ற சிவாலயம் அங்கு அமைந்திருந்ததென்பதும் கல்வெட்டால் அறியப்படுவனவாகும். இத்தகைய மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின் சிறப்பினால் மாறனேரி ஆயிற்று என்று கொள்ளலாம்…’
இதைத் தவிர பாண்டிய நாட்டில் நீர்பாசனப் பணிகள் என்ற கட்டுரையில்(கல்வெட்டு இதழ் 1978, வெ. வேதாசலம் அருங்காட்யெகக் காப்பாளர் மதுரை) பாண்டிய நாட்டுக் கல்வெட்டுக்களில் ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் முதலியவற்றின் பெயர் குறிக்கப் பட்டுள்ளன. ஏரிகள், மாறனேரி, திருமாராயண ஏரி, பராந்தகப்பேரேரி, வீர நாராயணன் ஏரி, சுந்தர பாண்டியன் பேரேரி, குலசேகரப் பேரேரி முடிகொண்ட சோழப்பேரேரி, கிழவனேரி, கலியனேரி, மனோன் மயன் ஏரி, பரமேஸ்வர பேரேரி, உமைபங்கன் ஏரி, சேகரனேரி, குடிகடை ஏரி, புகழ்மலி ஏரி, புகழ்கெரி கடை ஏரி என்று பெயர் பெற்று விளங்கின என்று பல ஏரிகளின் பெயர்கள் எனக்கு கிடைத்தன. (இவை எல்லாம் இன்று இருக்கிறதா என்று இன்னொரு ஆராய்ச்சி செய்யலாம்!)
இக்குறிப்புகளிலிருந்து இரண்டு செய்திகள் தெரிகின்றன.
ஒன்று, மாறனேரி என்ற பெயர் பாண்டி நாட்டில் பல ஊர்களுக்கு உண்டு; ஆகவே அது நம்பியின் பெயரால் மட்டுமே வந்த பெயர் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மற்றொன்று, ஏரியின் சிறப்பால் அமைந்த பெயராகவும் அது இருக்கலாம். இவ்வாறு பல மாறனேரிகள் இருக்கக்கூடும் என்றாலும், தேடியபோது எனக்கு இரண்டு ஊர்களே கிடைத்தன. ஒன்று தஞ்சையில்; மற்றொன்று பட்டாசுக்குப் பெயர்போன சிவகாசிப் பக்கம். தஞ்சை சோழர்களின் கோட்டை என்பதால் அதை நிராகரித்து, சிவகாசிப் பக்கம் என் தேடலைத் தொடங்கினேன். அப்போது, கம்மவார் சமூகத்தினர் நிர்வகிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்திலுள்ள மாரனேரி கிராமத்தில் அமைந்துள்ளது என்று கூகுள் காட்டியது. அதே சமயம் கோவிட் பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க, என் தேடலும் அப்படியே நின்றுபோனது.
மீண்டும் மாறனேரி நம்பியைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
நாளடைவில் பலர் ஆளவந்தாரின் காலட்சேபங்களைக் கேட்கத் தொடங்கினார்கள். காலட்சேபக் கூடம் நிரம்பி வழிந்தது; இடம் போதவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியின் வீட்டையும் சேர்த்தால் கூடம் பெரிதாகும் என்று எண்ணி, அவளிடம் கேட்டு அந்த வீட்டைப் பெற்றார்கள். கூடம் விரிவுபடுத்தப்பட்டது. ஆளவந்தார் ஒரு நல்ல நாள் பார்த்து, புண்யாஹவாசனம் செய்து புதுமனைப் புகுவிழா நடத்த முடிவு செய்தார்.
அவ்வேளையில் மாறனேரி நம்பி அங்கிருந்த கட்டுமானப் பணியாளரிடம், “நாளை இங்கே புண்யாஹவாசனம். அந்தச் சடங்கிற்கு முன் இந்தக் கூடத்தை நான் பார்க்க விரும்புகிறேன். புண்யாஹவாசனம் செய்த பிறகு என் தடங்களால் இந்த இடத்தை அசுத்தம் செய்ய விரும்பவில்லை” என்றார். அந்தப் பணியாளர் அவரைக் கூடத்துக்குள் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மாறனேரி நம்பி மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
மறுநாள் நடக்கவிருந்த புதுமனைப் புகுவிழா ஏற்பாடுகளைப் பார்க்க வந்த ஆளவந்தார், “பணிகள் எல்லாம் எப்படி நடைபெறுகின்றன?” என்று கேட்டார். அங்கிருந்த பணியாளர், “எல்லாம் நன்றாக நடக்கிறது. சற்றுமுன்கூட உங்கள் சீடர் மாறனேரி நம்பி கூடத்தைச் சுற்றிப் பார்த்தார்!” என்றார். ஆளவந்தார், “மாறனேரி நம்பி கூடத்தை முழுவதும் சுற்றிப் பார்த்தாரா?” என்று கேட்டார். பணியாளர், “ஆம்! ஒரு இடம் விடாமல் எல்லாவற்றையும் பார்த்து, நீங்கள் அமரும் இடத்தையும் சேவித்துவிட்டுச் சென்றார்!” என்றார்.
“அப்படியா! அப்படியென்றால் நாளை புண்யாஹவாசனம் தேவையில்லை! ஏற்பாடுகளை நிறுத்திவிடுங்கள்” என்றார் ஆளவந்தார். அருகிலிருந்தவர்கள் புரியாமல் விழித்தார்கள். ஆளவந்தார், “மாறனேரி நம்பியின் காலடிபட்ட இடத்துக்குப் புண்யாஹவாசனம் எதற்கு? மாறனேரி நம்பியே ஒரு புனிதர். அவர் காலடி பட்ட இடம் புனிதம் அடைந்த பிறகு, மீண்டும் ஏன் புண்யாஹவாசனம் செய்ய வேண்டும்?” என்றார். புண்யாஹவாசனச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. “இப்போதே காலட்சேபத்தை ஆரம்பிக்கலாம்; எல்லோரும் கூடத்தில் சென்று அமருங்கள்” என்றார் ஆளவந்தார்.
ஏ.ஐ. இல்லாத காலம். மீண்டும் ஒரு நாள் தேடத் தொடங்கினேன். கூகுள் மேப்பில் கம்மவார் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலை நோட்டமிட்டேன். அருகில் ஒரு பரோட்டாக் கடை இருப்பது தெரிந்தது. அதன் கீழே ஒரு தொலைபேசி எண் இருந்தது. அவர்களை அழைத்து, அருகிலிருந்த கோயிலைப் பற்றிக் கேட்டேன். அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை; கோவிட் காரணமாக யாரும் வருவதில்லை என்றார்கள். பிறகு மாறனேரி நம்பியை மறந்தே போனேன். மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லலாம்.
ஸ்ரீரங்கத்தில் காலப்போக்கில் ஆளவந்தாருக்கு இராஜபிளவை என்ற நோய் பிடித்தது. அதனால் அவர் மிகவும் அவதிப்பட்டார். முற்பிறவி வினைகளால் வந்த நோயில் அவர் வாடுவதை அறிந்த சீடர்கள் வேதனையுடன் கண்ணீர் வடித்தனர். அப்போது ஒரு நாள் மாறனேரி நம்பி ஆளவந்தாரை வணங்கி, “நீங்கள் எனக்கு உங்களுடைய பிரசாதம் வழங்க வேண்டும்!” என்றார். “என்ன பிரசாதம் வேண்டும்?” என்று ஆளவந்தார் கேட்க, மாறனேரி நம்பி, “உங்களுடைய இராஜபிளவை நோயை ஆசாரிய பிரசாதமாக வழங்க வேண்டும்!” என்றார். ஆளவந்தாரும் அருகிலிருந்த சீடர்களும் வெலவெலத்துப் போனார்கள். “இப்படியும் ஒரு சீடரா?” என்று வியந்தார்கள்.
ஆளவந்தார், “மாறனேரி நம்பி, இந்நோய் மிகக் கடுமையானது; கொடூரமானது; தாங்கிக்கொள்ள முடியாது!” என்றார். ஆனால் மாறனேரி நம்பி பிடிவாதமாக, “எனக்கு இதுவே மகா பிரசாதம்; தாங்கிக்கொள்வேன்!” என்றார். ஆளவந்தாரும் மிகுந்த மனவேதனையுடன், “தந்தேன்!” என்று கூற, மாறனேரி நம்பியை அந்நோய் மெல்லப் பற்றிக்கொண்டது.
ஆளவந்தாரை விட்டு நோய் நீங்கினாலும், நாளடைவில் வயதின் காரணமாக அவருக்குத் தளர்ச்சி ஏற்பட்டது. கடைசி நாளை நெருங்கியபோது, “மாறனேரி நம்பி என் அபிமான சீடன். என் நோயால் அவன் அவதிப்படுகிறான். என்னை எப்படிக் கவனித்துக்கொள்வீர்களோ, அப்படியே அவனையும் கவனித்துப் பணிவிடை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துப் பரமபதம் எய்தினார். (இந்தச் சமயத்தில்தான் உடையவர் என்ற ராமானுஜர் அங்கே வந்து, ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ ஆசாரிய பீடத்தை அலங்கரித்தார்.)
மாறனேரி நம்பி நோயில் தனியாக வாடினார். தாழ்ந்த குலம் என்பதால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. உதவிக்கு யாருமின்றித் தவித்துக்கொண்டே சமையல் செய்துகொண்டிருந்த ஒரு நாள், பெரிய நம்பிகள் அங்கே சென்றார். அவர் படும் கஷ்டங்களைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தார். “இப்பேர்ப்பட்ட குருபக்தி!” என்று ஸ்தம்பித்து, மாறனேரி நம்பியின் காலடியில் விழுந்தார்.
மாறனேரி நம்பி, “நானோ தாழ்ந்த குலத்தவன்! நீங்களோ பிராமணர்! இப்படிச் செய்யலாமா? எனக்கு அபசாரம் வருமே!” என்றார். பெரிய நம்பி, “அப்படியில்லை! உம் குருபக்தி எனக்கும் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்!” என்றார்.
அன்றுமுதல் மாறனேரி நம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெரிய நம்பிகள் ஏற்றுக்கொண்டார். தினமும் அவர் தங்கியிருந்த குடிலுக்குச் சென்று, அவரைக் குளிக்கச் செய்து, ஆடைகள் உடுத்தி, பன்னிரு திருநாமங்கள் சாற்றி, இல்லத்திலிருந்து கொண்டுவந்த உணவை அளித்துவந்தார். இதேபோல் இரவும் உணவு எடுத்துச் சென்று, உண்ட பின் அவரைப் படுக்கையில் படுக்க வைப்பார்.
ஒரு நாள், பெரிய நம்பி தினமும் உணவுடன் எங்கே போகிறார் என்று ராமானுஜர் யோசித்தார்; இரவுப் பொழுதில் தம் ஆசாரியனுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் அவரைப் பின்தொடர்ந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிர்க்க வைத்தது. பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு எல்லா உபசாரங்களையும் செய்து உணவளித்தார்.
ராமானுஜர் இந்தக் காட்சியைக் கண்டு கண்கலங்கினார். தம் குருவான பெரிய நம்பியையும், அவருடைய குருவான ஆளவந்தாரின் திருவடிகளையும் தியானித்து, திருவரங்கனை நோக்கி, “மாறனேரி நம்பிக்கு இந்த நோயின் வலி நீங்க வேண்டும்!” என்று வேண்டிக்கொண்டவுடன், நம்பியிடமிருந்த நோய் நீங்கியது.
மாறனேரி நம்பி ஆச்சரியப்பட்டு, “பெரிய நம்பியே! மகா பிரசாதம் நீங்கிப் போய்விட்டது. நீங்கள் கைங்கரியம் செய்வதால் அந்தப் பிரசாதத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை இழந்தேன். தாழ்ந்த குலத்தில் பிறந்த நான் என்ன அபராதம் செய்தேன்!” என்று புலம்பி, அருகிலிருந்த கல்லின் மீது தன் தலையை மோதப் போகும்போது, மறைந்திருந்த ராமானுஜர், “இதற்குக் காரணம் நான்தான்!” என்று கூறி உள்ளே நுழைந்தார். தாம் ஆசாரியர்களையும் பெரிய பெருமாளையும் வேண்டிக்கொண்டதைக் கூறினார். மாறனேரி நம்பி வருந்துவதைக் கண்டு, மீண்டும் ராமானுஜர் பெருமாளிடம் பிரார்த்தனை செய்தவுடன், நம்பிக்கு அந்நோய் திரும்ப வந்தது. கண்ணிழந்தவன் கண் பெற்றதுபோல் மாறனேரி நம்பி ஆனந்தப்பட்டார்.
இப்பேர்ப்பட்ட மாறனேர் நம்பி அவதரித்த இடம் எது என்று, கோவிட் சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் தேடத் தொடங்கினேன். சிலர், ஆழ்வார்திருநகரிப் பக்கம் இருக்கலாம் என்றார்கள்; அங்கே விசாரித்தபோது யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீரங்கம் யமுனைத் துறைவர் திருமாளிகை வாசலில், ஆளவந்தாரின் வலப்பக்கம் தெய்வவாரி ஆண்டானும், இடப்பக்கம் மாறனேரி நம்பியும் இருக்கிறார்கள். நான் அறிந்தவரை, திவ்ய தேசங்களில் மாறனேரி நம்பி இடம்பெற்றிருப்பதற்கான சான்று இங்கு மட்டுமே உள்ளது.
மீண்டும் சற்றுப் பின்னோக்கிச் செல்லலாம்.
ஒரு நாள் பெரிய நம்பிகள், “மாறனேரி நம்பியே! இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீர் ஆளவந்தாரின் திருவடியை அடைவீர்” என்றார். அப்போது மாறனேரி நம்பி, “இந்தத் தேகம் ஆளவந்தார் சங்கு சக்கரம் சாற்றிய தேகம்; அவருடைய மகா பிரசாதத்தை ஏற்றுக்கொண்ட தேகம். அதனால் இந்த உடலை வைணவர்கள் அல்லாத என் உறவினர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்” என்று பெரிய நம்பிகளிடம் வேண்டிக்கொண்டார். பெரிய நம்பிகள், “கவலைப்படாதீர்; நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார்.
மாறனேரி நம்பி, தன் குடிலிலிருந்த களிமண்ணால் ஆன ஆளவந்தாரைத் தியானித்தபடியே ஆசாரியன் திருவடியை அடைந்தார். அவருடைய இறுதிச் சடங்குகளைப் பெரிய நம்பிகள் மேற்கொண்டார். அன்றைய சமூகப் பார்வையில் ‘தீண்டத்தகாதவர்’ எனக் கருதப்பட்ட ஒருவரைத் தொட்டு, ஒரு பிராமணர் இப்படிச் செய்யலாமா என்று திருவரங்கத்தில் பலர் முகம் சுளித்தார்கள். பெரிய நம்பியைத் திட்டித் தீர்த்தார்கள்; ஊரிலிருந்து விலக்கி வைத்தார்கள்; அவர் வீட்டு வாசலில் முள்ளைப் போட்டு அடைத்து, அவர் வெளியே வராமல் இருக்க ஏற்பாடு செய்தார்கள்.
பெரிய நம்பிகளின் இந்தச் செயல் ராமானுஜரின் காதுகளுக்கு எட்டியது. சிலர் ராமானுஜரிடம் கோபமாக, “நீர் சாஸ்திரம், சம்பிரதாயம், ஆசாரம், அனுஷ்டானம் என்று வளர்த்துக்கொண்டிருக்கிறீர். ஆனால் உம் குரு பெரிய நம்பியோ இப்படிச் செய்துவிட்டார். இது நியாயமா? நீரே சென்று உம் ஆசாரியனிடம் கேளும்!” என்றார்கள்.
ராமானுஜருக்குத் தம் குரு செய்தது சரி என்று தெரியும். ஆனாலும், இவர்களுக்குப் பெரிய நம்பிகளிடமிருந்தே தகுந்த பதிலை வாங்கித் தர வேண்டும் என்று விரும்பி, அவர் இல்லத்துக்குச் சென்று, “எதற்காக இப்படிச் செய்தீர்?” என்று பணிவுடன் கேட்டார்.
பெரிய நம்பிகள் புன்முறுவலோடு, “வாரும் ராமானுஜரே! மற்றவர்கள் கேட்டிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், ‘நான் நரகம் போனாலும் பரவாயில்லை’ என்று கூறி ‘எம்பெருமானார்’ என்ற பெயர் பெற்றவர் நீர்; நீர் இந்தக் கேள்வி கேட்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்று பேசத் தொடங்கினார்.
“விதுரனுக்கு அந்திமச் சடங்கை யார் செய்தார்?” என்றார்.
“தர்மபுத்திரர்” என்று பதிலுரைத்தார் ராமானுஜர்.
“விதுரன் தர்மபுத்திரரைவிடத் தாழ்ந்த குலத்தவன்; ஆனாலும் தர்மபுத்திரர் அந்திமச் சடங்கைச் செய்தார் அல்லவா? ஜடாயுவிற்கு அந்திமச் சடங்கை யார் செய்தார்?” என்றார் பெரிய நம்பிகள்.
“ராமர்” என்றார் ராமானுஜர்.
“ஒரு பறவையைவிட ராமர் எவ்வளவு பெரியவர்! அப்படியிருந்தும் ராமர் செய்துள்ளார்! நான் என்ன தர்மபுத்திரரைவிட உயர்ந்தவனா? அல்லது மாறனேரி நம்பி விதுரனைவிடத் தாழ்ந்தவரா? நான் என்ன ராமனைவிட உயர்ந்தவனா? அல்லது மாறனேரி நம்பி ஜடாயுவைவிடத் தாழ்ந்தவரா?” என்றார். ராமானுஜர் மௌனமாக இருக்க, பெரிய நம்பிகள் நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தைச் சொல்லி, இதற்கு என்ன பொருள் என்று கேட்டார்:
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணர்க்கு ஆளென்று
உள்கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே
ராமானுஜர், “நான்கு குலங்களிலும் கீழான, நலமே இல்லாத சண்டாளர்களாக இருந்தாலும், மணிவண்ணனுக்கு அடிமை என்று மனத்தால் கலந்தவர்களின் அடியார்கள் எங்களுக்குத் தலைவர்களே என்கிறார் நம்மாழ்வார்” என்றார்.
பெரிய நம்பிகள், “ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் பொருள் நிறைந்தவை என்று ஏற்றுக்கொண்டால், நான் செய்தது சரி. இல்லை என்றால், ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் கடல் ஓசை போல் அர்த்தமற்றவை!” என்றார். ராமானுஜர் பெரிய நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
ராமானுஜர் தம்மைச் சுற்றியிருந்தவர்களுக்காகவே பெரிய நம்பிகளிடம் அர்த்தம் கேட்டார். ஆழ்வார் பாசுரங்களில் மற்றவர்களுக்குத் தெரியாத அர்த்தம்கூட நம் ராமானுஜருக்குத் தெரியும்!
ஐந்து பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் விதுரனுக்குச் செய்தார். தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவரான ராமர் ஜடாயுவிற்குச் செய்தார். ஆளவந்தாரின் மூன்று முக்கிய ‘நம்பி’ சீடர்களில் (பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி) மூத்தவரான பெரிய நம்பி, மாறனேரி நம்பிக்குச் செய்தார்!
பெரிய நம்பி செய்த இக்காரியத்தைக் கண்டு ஸ்ரீரங்கத்தில் அந்தணர் பெரும்பாலோர் அவரைத் தள்ளிவைத்தனர். ஒரு நாள் நம்பெருமாள் சித்திரைத் தேரில் எழுந்தருளி, பெரிய நம்பிகளின் திருமாளிகையின் முன் வந்தபோது, பெரிய நம்பிகளின் புதல்வி அத்துழாய், “என் தந்தை செய்தது தவறு என்றால் திருத்தேர் நகரட்டும்; இல்லை, என் தந்தையின் செயலைப் பெருமாள் ஏற்றுக்கொண்டால் திருத்தேர் வீட்டை விட்டு நகரக் கூடாது” என்று வேண்டினாள். பெருமாள் அவர் திருமாளிகை வாசலை விட்டு நகரவே இல்லை. பிறகு அர்ச்சகர் முகமாக ஆவேசித்து, “பெரிய நம்பிகள் தவறு செய்யவில்லை; ஆசாரியன் கட்டளைப்படி செய்தது சரியே” என்று கூறி, பெரிய நம்பிகளுக்கு அருளப்பாடிட்டுத் தீர்த்தப் பிரசாதம் சாதித்து, அவர் பெருமையை அனைவருக்கும் உணர்த்திய பின்னரே தேர் மேலே புறப்பட்டது என்பது குருபரம்பரையில் பதிவாகியுள்ளது.
இந்த வருடம் மீண்டும் எழுதத் தொடங்கி, மாறனேரியை மறுபடியும் தேடலானேன். இதற்கிடையில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள எஸ். பாலசந்திரன் என்பவரிடம் கி.பி. 1574-ஆம் ஆண்டைச் சேர்ந்த வெண்பக்கோட்டைச் செப்பேடு உள்ளது. மதுரை நாயக்க மன்னர் வீரப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில், மதுரைக்கு அருகிலுள்ள சிறுவாலை அச்சராமக் கவண்டர் என்பவர், குண்டாறு, தாமிரபரணி, இராமேசுவரம், தென்காசி ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட கம்பளத்துக் கவண்டர்களிடம் இனவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றார். இவ்வரியை எதிர்த்து, தென்காசி அதிவீரராம பாண்டியனின் அரசவையில் வெண்பக்கோட்டைப் புல்லாக் கவண்டர் வாதாடி இனவரியை நீக்கினார் என்று கூறும் அந்தச் செப்பேட்டில், “மாறனேறி திருமலைக் கவண்டரின் மகன் மலகோதண்டராமக் கவண்டர்” என்ற வாசகம் இருந்தது (தமிழகச் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு, 2005). இதிலிருந்து, விருதுநகர்ப் பகுதியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே மாறனேறி என்ற பெயர் வழக்கில் இருந்தது என்பது தெரிகிறது. ஆனால், இது அந்தப் பெயரின் பழமையை மட்டுமே காட்டுகிறது; நம்பி அங்கே பிறந்தார் என்பதை நிரூபிக்கவில்லை.
மீண்டும் விருதுநகர் பக்கமுள்ள கோயில்களை ஆராயத் தொடங்கினேன். நா.பா எழுதிய மூவரை வென்றான் என்ற நூலில் 'மாறனேரி' என்ற ஊர் பற்றி ஒரு குறிப்பு இருந்தது "காடுவழியே தாள்கொண்டான்புரம் மாறனேரி ஊர்களின் வழியே சிவகாசிக்குப் போய்க்கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தார்..." என்ற எனக்கு அந்த தகவலிலும் சிவகாசி என்ற சொல் என்னை மீண்டும் மாறனேரி என்ற ஊருக்கு அழைத்துச் சென்றது.
இந்தப் புரட்டாசி மாதத்தில், பரோட்டாக் கடைப் பக்கத்திலிருந்த கம்மவார் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்தான் மீண்டும் கண்ணில் பட்டது. முகநூல் வழியே அறிமுகமான என் தோழி ஸ்ரீமதி பிரசன்னாவைத் தொடர்புகொண்டு, “உங்கள் ஊர்ப் பக்கமுள்ள இந்தக் கோயிலைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா?” என்று கேட்டேன். அவர் தாமோதர கண்ணன் என்ற ராமானுஜ அடியாரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அவரிடம் இந்தக் கோயிலைப் பற்றிக் கூறி, “அங்கே மாறனேரி குறித்து ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்றேன். “அப்படி எதுவும் இல்லை; இருந்தாலும் கேட்டுச் சொல்கிறேன்” என்றார். சில நாள் முன்பு அவர், தமக்குத் தெரிந்த தாராபுரம் தனலட்சுமி அம்மையாரிடம் கேட்டபோது, அங்கே மாறனேரி நம்பியின் சமாதி என்று அழைக்கப்படும் நினைவிடம் ஒன்று இருக்கிறது என்ற தகவலைக் கொடுத்தார்.
அந்தக் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தபோது, முன்னாள் எம்.எல்.ஏ. திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் அதைப் புனரமைத்தார் என்ற தகவலும் கிடைத்தது. அவருடைய மனைவி தனலட்சுமி பாலகிருஷ்ணன் அவர்களை தொடர்புகொண்டு பேசியபோது, “இங்கே இருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருப்பதியிலிருந்து வந்தவர்; மாறனேரி நம்பி பரமபதித்தது ஸ்ரீரங்கத்தில்; அப்போது அவர் நினைவாக, அவருடைய சுற்றமும் நட்பும் ஸ்ரீரங்கத்தில் அவருக்குச் சம்ஸ்காரம் செய்த இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துவந்து, நினைவுச்சின்னமாக அமைத்த இடம் இது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள். மேலும், “சென்ற ஆனி ஆயில்யத்தில் மாறனேரி நம்பி நினைவிடத்தில் திருவாய்மொழி சேவித்தோம்” என்றும் கூறினார்கள். ஊர்ப்பெயரின் ஒற்றுமையும், ஊர் மக்களின் வாய்மொழிச் செய்தியும், அங்குள்ள நினைவிடமும் இந்தக் கோயிலைச் சுட்டுகின்றன. இவை அனைத்தும் செவிவழிச் செய்திகளாக இருந்தாலும், ஆராய்ச்சியாளர்களுக்குக் கல்வெட்டு தேவை; ஸ்ரீநிவாசப் பெருமாள் பொய் சொல்ல மாட்டார் என்று எனக்குத் தெரியும்.
“இன்று புரட்டாசி மாதக் கோயில் கொடியேற்றம்; அது முடிந்த பிறகு முழுக்கோயிலையும் உங்களுக்குப் படம்பிடித்து அனுப்புகிறேன்” என்றார் தனலட்சுமி அம்மையார். அனுப்பவும் செய்தார். முதன்முதலில் மாறனேரி நினைவிடத்தைப் பார்த்தபோது, மாறனேரி நம்பியையே நேரில் பார்த்த மனநிறைவு கிடைத்தது.
இத்தேடலில் உதவிய அனைவருக்கும் ஆழ்வார், ஆசாரியர் அருள் நிறைய, அந்த ஸ்ரீநிவாசப் பெருமாளை வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ரீ மாறனேர் நம்பியின் திருநட்சத்திரம் ஆனி ஆயிலியம் ; அவருடைய வாழித் திருநாமம் கீழே
ஆனிதனில் ஆயிலியம் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார் திருவடிகள் ஆச்ரயித்தோன் வாழியே
மாநிலம் எதிராசர்மனம் வாழ்வித்தோன் வாழியே
மதிளரங்கநகரமதில் வாழ்ந்தருள்வோன் வாழியே
தேனமரும் தென்மொழியின் சிறப்பறிந்தோன் வாழியே
திகழ்ஞான பக்திகளால் சேர்ந்திருப்போன் வாழியே
வானவரில் பொருவரிங்கு மகிழ்ந்துவந்தோன் வாழியே
மாறனேரி நம்பியிணை மலரடிகள் வாழியே.
./சுஜாதா தேசிகன்
1.10.2026
புரட்டாசி - 14
வீடியோ நன்றி : திருமதி தனலட்சுமி பாலகிருஷ்ணன்.
Comments
Post a Comment