9. ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் நாதமுனிகள் சென்ற அவ்வேளையில், கோயிலின் அமைதி அவரைத் தழுவிக்கொண்டது. அந்த அமைதியை ஆரம்ப ஜாமத்தின் மணியோசை கலைத்தது. பல ஆண்டுகாலம் பிரிந்திருந்த தோழர்கள் சந்தித்ததுபோல், கோயில் புறாக்கள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. கோயிலின் நறுமணப் புகையுடன், பெருமாளின் மீது சாத்தப்பட்ட மகிழம் பூவின் நறுமணமும் கலந்து ஒரு வைகுண்ட சூழலை சிருஷ்டித்துக்கொண்டிருந்தது. கோயிலை ஒட்டிய தாமிரபரணி ஆற்று நீர் வழக்கத்துக்கு மாறாகச் சப்தம் இல்லாமல், மெதுவாக கோயிலை தடவிக் கொடுத்துச் சென்றது. மெல்லிய அலைகள் அங்கிருந்த பாறைகளில் பட்டு, ‘ஏன் இவ்விதம் ஜடமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்பதுபோல இருந்தது. பளிங்கு போன்ற ஆற்றின் நீரில் மீன்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. சில மீன்கள் நீருக்கு மேல் நாதமுனிகளைப் பார்க்க முடியுமா என்ற ஆவலில் துள்ளிக் குதித்து எட்டிப் பார்த்தன. அந்த மீன்களைப் போல, நாதமுனிகளின் மனமும் குருகூர் நம்பியை எப்போது காணப் போகிறோம், அவர் அருளிய இன்தமிழ் ஆராவமுதத்தை எப்போது பருகப்போகிறோம் என்று துள்ளிக் குதித்தவண்ணம் இ...