Skip to main content

சில விஷயங்கள்

சில விஷயங்கள் 




ராஜாஜி நான் பிறப்பதற்கு முன் எழுதிய தலையங்கங்களை அவ்வப்பொது படிப்பது உண்டு. அப்படிப் படிக்கும்(உண்மைகள் உறங்குவதில்லை) போது அந்தப் புத்தகத்தின் முன்னுரையை (வானதி ராமநாதன்) மீண்டும் ஒருமுறை படித்தேன். 

”என்னுடைய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற இரண்டு நூல்களையும் 'இராமாயணம்', 'மகாபாரதம்' என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் என்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிடுகிறார்கள்.' - சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி'

என்று 26-8-72 தேதியிட்டு ஓர் அறிவிப்பைக் 'கல்கி' வார இதழ் வெளியிட்டது. அப்போது என் தந்தையாருக்கு ராஜாஜி அவர்கள் ஆசீர்வாதம் செய்து இரண்டு பழங்களையும் எடுத்துத் தந்தார். "நான் கவர்னர் ஜெனரலா இருந்தது வெறும் ரெகார்டுலதான் இருக்கும். ஆனா இந்த மகாபாரதமும் இராமாயணமும் எழுதினேன் பாரு, அது இரண்டுமே இரண்டு கனிகள். கற்பகக் கனிகள். அதை இல்லை என்று சொல்லாமல் எப்பவும் மக்களுக்குக் கிடைக்கும்படியா மலிவான விலையிலே புத்தகமாப் போட்டுத் தந்து கொண்டே இருக்கணும். அதை நீ கட்டாயம் செய்வாய். அதற்கு அச்சாரம்தான் இந்தக் கனி" என்று அப்போது திருவாய் மலர்ந்து அருளியதை, என் தந்தையார் தமது 'வெற்றிப் படிகள்' தன் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். 

ராஜாஜியின் விருப்பம் போலவே இன்றும் வானதி பதிப்பகம் அதைச் செய்து வருகிறது.  

இதைப் படித்த போது கிட்டத்தட்ட ஒரு மாசம் முன் வந்து சேர்ந்த ’வி.ஆர்.எஸ்’பெட்டியை இன்று பிரித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட வி.ஆர்.எஸ் எழுதிய வால்மீகி ராமாயணம், வியாச பாரத புத்தகங்களின் முன்னுரை மற்றும் முதல் அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். தொண்டையில் வழுக்கிக்கொண்டு போகு நடை. வால்மீகி முதல் வாலி வரை எல்லாவற்றையும் உபயோகித்து எழுதியுள்ளார். வாழ்த்துக்கள். நிச்சயம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து முடிக்க ராமனும் கண்ணனும் அருள் புரிய வேண்டும். 

ராஜாஜி எழுதிய சில தலையங்கங்கள் நிச்சயம் எல்லா நூலகங்களிலும், பாட புத்தகங்களிலும் இருக்க வேண்டும். எது சரி எது தவறு என்று தீர்க்க தரிசனமான ‘no nonsense' வகையராக்கள். கள்ளச் சாரயத்தை ஒழிக்க அரசே மதுக் கடைகளை திறந்தது என்ற வாதத்தை சரி என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ராஜாஜி என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். அதில் அவர் திருப்பாவையில் ஆண்டாள் கூறிய ‘பொல்லா அரக்கனை’ என்ற சொல்லை மதுவிற்கு உபயோகித்துள்ளார்! 

மது அரக்கனுக்கு வரவேற்பா?

தமிழகத்தின் வரலாற்றில் ஓர் இருள் சூழ்ந்த அத்தியாயத்துக்கு தி.மு.க அரசு அடிகோலப் போகிறது!

ஏழை மக்களின் குடும்பங்களைப் பொருளாதார ரீதியிலும், வாழ்க்கை முறையிலும் படுகுழிக்குத் தள்ளிச் செல்வது மதுப் பழக்கம். இந்தப் பொல்லா அரக்கனை ஒழித்தாலே ஏழை மக்களின் குடும்பங்களில் சாந்தியும், சந்தோஷமும், சுகாதாரமும், கௌரவமும், தர்ம வாழ்வும் செழிக்கும் என்று கருதினார் தேச பிதா காந்தியடிகள். மதுவிலக்குக்கு மிகுந்த முக்கியத் துவம் தந்தார். இந்தத் திருத்தொண்டில் அடிகளுக்கு வலது கரமாக விளங்கினார் ராஜாஜி. நாற்பதாண்டுகளுக்குமுன் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்து, சமூகத் திருப்பணி புரிந்துவந்த ராஜாஜி மதுவிலக்குக்கு எழுத்தாலும் பேச்சாலும் புரிந்த சேவை ஈடு இணையற்றது. பிற்பாடு அவர் மந்திரிசபை அமைத்தபோது பரீட்சார்த்தமாகச் சேலம் மாவட்டத் தில் மது விலக்கை அமல் செய்தார். இது மக்களுக்கு எப்படிப் பட்ட பெரு நலனை அளித்தது என்று தெள்ளத் தெளியத் தெரிந்தது. தேசம் சுதந்திரம் அடைந்த பிற்பாடு, காந்தியத் திட்டங்களில் எப்போதும் முன்னணி வகித்த தமிழ்நாடு மது விலக்கை ராஜ்யம் முழுவதிலும் அமலாக்கி மாபெரும் புகழ் கொண்டது.

இப்போது இந்தப் புனித திட்டத்தை, ஆரோக்கியத்துக்கும் அறவாழ்வுக்கும் குடும்ப ஒப்புரவுக்கும் அடிப்படையான அரிய திட்டத்தை தி.மு.க. அரசு அழிக்க முற்பட்டிருக்கிறது. இது தமிழ்த் திருநாட்டுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் துர்ப்பாக்கியம். மதுவிலக்கு என்ற திவ்வியப் பணியின் தலைமைச் சிற்பியான ராஜாஜி உளம் நொந்து சொல்கிறார்:

“கள்ளு, சாராயக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு அரசாங்கத்தைத் தி.மு.க செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன்படி மதுவிலக்கு ரத்தானால், ஏலத்தில் அதிகப் பணம் தரும் ஏஜெண்டுகளின் மூலம் அரசாங்கம் கள்ளையும் சாராயத்தையும் விற்பனை செய்யும். ஏலத்தில் அதிகப் பணம் தர முன் வருபவர் மது விற்பதற்கு லைசென்ஸ் பெறுவார். இருபதாண்டு களுக்குப் பிறகு மீண்டும் 'கள்ளுக்கடை' 'சாராயக்கடை' என்ற போர்டுகள் தமிழ்நாடெங்கும் தொங்க ஆரம்பிக்கும். நீண்ட குழல் விளக்குகள் போட்டு அந்தக் கடைகள் பிரகாசப்படுத்தப் பெறும். இந்தக் காட்சியை மீண்டும் தமிழ்நாடெங்கிலும் காண்போமாயின் அது மிகவும் வேதனைக்குரியது.

"பல்லாயிரக் கணக்கான பெண் மக்கள் மதுவிலக்கு ரத்தாவது பற்றி ஆறாத் துயரம் அடைவார்கள். அவர்களோடு நானும் துக்கப் படுகிறேன். தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவது வாஸ்தவமே.ஆயினும் இந்தப் போக்கு அதிகமாகி விட்டாலும் கூட,இதனால் எல்லா ஏழை மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சுவதைக் காரணம் காட்டி, மதுவிலக்கை ரத்து செய்து, ராஜ்யம் முழுவதிலும் உள்ள எல்லா மக்களுக்கும் மது அருந்தும் கொடிய சபலத்தை உண்டாக்குவது சிறிதும் நியாயமாகாது.

"வருமானம் ஒன்றைப் பற்றி மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்துவது தகாது. 'பொருளாதார ஏற்றத் தாழ்வு' என்பதை எண்ணி சோஷலிஸ்ட்களும் மற்ற 'இஸ்ட்'களும் வருந்துவதைப் போலக் குடும்பப் பெண்மணிகள் கவலை கொள்ளவில்லை. இத்தனை ஆண்டுகள் மூடியிருந்த கள்ளுக்கடைகள் இப்போது திறக்கப் போவதை எண்ணியே அவர்கள் கவலை கொள்வார்கள். அதன் விளைவாக வறுமையும் ஒழுங்கீனமும் வளரப் போவதை உணர்ந்து இன்று குடும்பங்களில் தர்மங்களை ரக்ஷித்து வரும் கோடானு கோடி பெண்மணிகள் மனம் வருந்தப் போகிறார்கள். கள்ளுக்கடைகளைத் திறப்பதால் வறுமை, ஒழுங்கீனம் ஆகியவை வளருவதோடு, 'சோஷலிஸ்டு'களின் லட்சியத்துக்கு மாறாகப் பொருளாதார ஏற்றத் தாழ்வும் அதிகமாகும்.

" 'கள்ளுக் கடைகளைத் திறந்தால் என்ன? அதனால் எல்லோரையும் குடிக்குமாறு நிர்ப்பந்தம் செய்வதாகப் பொருள் இல்லை. மக்கள் குடிப்பதும் குடிக்காததும் அவர்களுடைய சுதந்திர விஷயம்' என்று முதன் மந்திரி வாதம் செய்யலாம். இது ஒரு பொய்யான வாதமாகும். போதைப் பண்டங்களின் கவர்ச்சி எத்தனை கொடியது என்று நாம் அறிவோம். உழைக்கிற மக்களின் கண் எதிரில் கள்ளுக்கடைகளைத் திறந்து வைப்பதே, அவர்களைக் குடிப்பதற்குத் தூண்டி நிர்ப்பந்தம் செய்வதுபோலத்தான்."

9-5-1971

பிகு: காலை பன’கள்’ தி.நகர். பாண்டி ’பே’ஜார் போன்ற இடத்தின் நடை பாதையில் சென்றால் அலங்கோலமாக மது அருந்திவிட்டுப் படுத்துக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் முன்பு அரசு கொண்டு வந்த மதுவிலக்கு திட்டம் தான். மதுவும் மவுத் கிஸ்ஸும் இல்லாத திரைப்படங்களே இன்று இல்லை! 

இன்னொரு தலையங்கத்தில் இப்படிக் கூறியிருக்கிறார். ஒரு மொழியே போதும் என்று வாதிடும் தற்குறிகளுக்குக் கூறுவது போலவே உள்ளது இப்பகுதி. 

மாட்டு வண்டி எனக்குப் பிடிக்கிறது, ரொம்பவும் பிடிக்கிறது. ஆயினும் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை ஓடும் ரயில் வண்டிகளை அகற்ற நான் விரும்பவில்லை. நம் மக்கள் பேசும் அழகு மொழிகளை நான் தீவிரமாக நேசிக்கிறேன். ஆனால் நம்மை நாள்தோறும் மேலும் மேலும் நெருக்கமாக இணைக்கும் ஆங்கில மொழியை விட்டுவிட நான் விரும்பவில்லை. நம் மக்களது மகத்தான சமயத்திடம் நான் அன்பு வைத்திருக்கிறேன். அதில் பல அற்புதமான பிரிவுகள் இருப்பினும், அடிப்படையில் அவற்றிடை முரண்பாடு இல்லை என்றும், அவை மொத்தத்தில் ஓர் அழகிய, அறிவுசார்ந்த பூரணத்தையே உருவாக்குகின்றன என்றும் காண்கிறேன். ஆயினும் இது காரணமாக நான் பௌதிக உண்மைகளை ஆராயும் ஸயன்ஸை யும்,நிரந்தர சத்தியத்தை ஆராயும் தத்துவ விசாரத்தையும் விட்டு விட வேண்டும் எனக் கருதவில்லை. அதே சமயத்தில், சமூகத்தின் உயர் வர்க்கங்களில் இருப்பவர்களும் பொதுமக்களைப் போலவே ஆலயங்களுக்குப் போக வேண்டும், தம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் உண்மையுடனும் ஒப்புரவுடனும் நடப்பதற்கான உறுதியைத் தினமும் பிரார்த்தனை மூலம் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறெல்லாம் செய்யாவிடில், சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் பொது மக்களிடமிருந்து விலகிச் சென்று விடுவர். அதன்பின் அவர்கள் தங்கள் நலனுக்கும் பணிபுரிய முடியாது, பொது மக்களின் நலனுக்கும் பணிபுரிய இயலாது.

6-9-1970


ஒருவர் இறந்து போய் ஐஸ் பெட்டியில் இருக்கும் படத்தை ஊடகங்கள் ‘பிரேக்கிங்’ நியூஸ் என்ற தலைப்பில் பொதுவில் பகிர்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. 'கடைசியா பார்த்துக்கோங்க மின் மயானத்தில் கடைசி நிமிடங்கள். கதறி அழுத மகள்கள். கலங்கடிக்கும் காட்சிகள். மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடல், பின்னாடியே நடந்து சென்ற தாய்; தனிமையில் வாடும் மனைவி என்று தினுசு தினுசாக தலைப்பு செய்து போட்டு கல்லாகட்டும் இவர்களைப் பார்க்க ராஜாஜி போன்றவர்கள் (நல்லவேளையாக) இன்று நம்முடன் இல்லை. 


மனதை சாந்தப் படுத்த, மூன்று மணி நேரம் முன் வந்த அரியக்குடி ராமானுஜர் ஐயங்கார் பாடிய வைஷ்ணவ ஜனதோ’வை கேட்டு மனதை சாந்திப் படுத்திக்கொள்ளலாம்.

- சுஜாதா தேசிகன்
26.03.2025

Comments

  1. ராஜாஜி சீரிய சமுதாய சீர்திருத்தவாதி.நல்ல பதிவு சார்

    ReplyDelete

Post a Comment