நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அன்று தான் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம். குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் ஊரில் மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இது உங்களுக்குத் தெரிந்த தகவல் தான்.
தாய்மொழியான மலையாளம், தமிழ், வடமொழி என்று மும்மொழிக் கொள்கையை அன்றே கடைப்பிடித்தவர் இந்த ஆழ்வார். அதே கேரளத் தேசத்தைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள் அருளியது தான் நாராயணீயம். சுமார் 18,000 ஸ்லோகங்கள் கொண்ட பாகவதத்தின் சாரமாக, சுமார் 1000 உயர்ந்த வடமொழி ஸ்லோகங்களாகத் தந்துள்ளார். அதை நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழ்ப் பாடல் வடிவில் வடித்திருக்கிறார். ஞாயிறு மாலை இந்தியா கெலித்து விடுமா என்ற கெலியிலும் பலர் நாரத கான சபாவில் அதன் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள்.
வீடியோ காமராவில் பின்னந்தலை தெரியாமல் குனிந்துகொண்டு சென்ற போது, அடியேனை ஸ்ரீநிவாசன் வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தார். 'எந்த குருவாயூரப்பா’ என்று உட்கார்ந்து பல ஆன்றோர்கள் பேச்சைக் கேட்க முடிந்தது.
நல்லி குப்புசாமி அவர்கள் ஆயிரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மேல் பங்கேற்று தற்போது கவுண்ட செய்வதை விட்டுவிட்டார்கள் என்றார்கள். கலைமாமணி ’இசைக்கவி’ திரு ரமணன் தன் மூக்குக்கண்ணாடியை அணிந்துகொண்ட பின் பாரதியார் போலவே பாட ஆரம்பித்தார். பாரதியார் ஞானப் பாடல்கள் என்று ஒரு தொகுப்பு பாடியிருக்கிறார் என்றார். படித்துப் பார்க்க வேண்டும்.
நாராயணீயமா ? கூப்பிடு ’தாமல் ஸ்ரீ உ.வே. ராமகிருஷ்ணன்’ என்று அவர் ஆஜர் ஆகியிருந்தார். அவர் பேச்சை முதல் முறையாக நேரில் கேட்டேன். சரளமாகப் பல தெரியாத தகவல்களைக் கொடுத்தார். நரசிம்மர் இருபது கைகளுடன் ஹிரண்யகசிபுவை கொன்றதும் அதனால் அடுத்த பிறவியில் ராவணனுக்கு பத்துத் தலை என்ற தகவல் சுவாரசியப் புன்னகையை வரவைத்தது. சென்னை இஸ்கான் தலைவர் நரசிம்ம தாஸ் சரளமாக ஆங்கிலம், தமிழ் கொஞ்சம் மலையாள தாளிப்புடன் தன் உரையைக் கேட்க வைத்தார். ரமண பக்த சமாஜம் தலைவர் திரு ஸ்ரீராம் அவர்களின் பேச்சு நான் இன்னும் எல்கேஜியில் தான் இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்தியது. ஜோதிடர் ஷேல்லி தன் பேச்சில் கொஞ்சம் அரசியலைக் கலந்தார். கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்மார்டாக வந்திருந்தார். அவருக்கு என்ன வயது என்று தேடிப் பார்த்து பொறாமையுடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். நாராயணீயம் படித்தால் வயிற்று வலி போகுமா தெரியாது ஆனால் என் பாட்டி அதைப் படிப்பார் என்றார். ’ஏதாவது ஒன்றின் மேல் திடமான நம்பிக்கை வேண்டும்’ என்று சுஜாதா கூறிய அறிவுரை ஞாபகத்துக்கு வந்தது.
அடியேனுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்கலாம், இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் பெரிய மனது செய்து புத்தகத்தில் பிரசுரித்து, ஒரு பொன்னாடை போர்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.
அணிந்துரையைத் தனிப் பதிவாகப் போடுகிறேன்.
-சுஜாதா தேசிகன்
11.3.2025
Comments
Post a Comment