Skip to main content

மெட்ராஸ் விஜயம்

மெட்ராஸ் விஜயம் 



இரண்டு நாள் சென்னை விஜயம். எல்லா இடங்களிலும் 40₹ குறைந்து காபி இல்லை. கீதம் ஹோட்டலில் 38ரூ ( மினி காபி). காபி நன்றாக இருக்கிறது. கொடுத்தவுடன் சூடாக்க கைக்கு அடக்கமாக ஓர் அடுப்பு எடுத்துக்கொண்டு செல்வது உத்தமம். ஊர் முழுக்க காபி மாமா, மெட்ராஸ் காபி கடைகள் முளைத்திருக்கிறது. அதே போல் ஊர் முழுக்க ‘சாய்’ கடைகள். 

பல நாள் ஆசையான ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் சூரியன் வருவதற்கு முன் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். கீழே பார்த்த போது மூடி இருந்த திருப்பதி தேவஸ்தானம் தாயார் சன்னதியும் அருகில் திறந்திருந்த  'Tea Nagar Coffee' கடையும் கண்ணில் பட்டது. நடேசன் பூங்காவில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு இருந்த எழுத்தாளர் இரா. முருகனை பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். குத்து மதிப்பாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். ராமேஸ்வரம் சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவர்களைப் பார்க்கும் போது சர்க்கஸ் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் முதல்வர் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டும். ரங்கன் தெரு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு குப்பை தொட்டிக்கு பதில் இரண்டு வந்திருக்கிறது. 

 ’கிருஷ்ணா ஸ்வீட’ கடையில் அழகான டப்பாவில் அதிகமான விலையுடன் பொருட்கள் கிட்டத்தட்ட விமான நிலைய ஷாப்பிங் அனுபவத்தைக் கொடுக்கிறது. பல சரவண பவன் ஒட்டடை படிந்த அரண்மனை படம் செட் போல ஆகிவிட்டது பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முழு முகத்தையும் மாற்றிக்கொண்டுவிட்டது.  (எப்படி இருந்த நான்). ஜீ.ஆர்.டில் உள்ளே நுழைந்தவுடன் 10 பேர் கோரஸாக வணக்கம் வைத்து பூச்சாண்டி காண்பிக்கிறார்கள். 

சாலை பெயர்களில் ஜாதிப் பெயரை எடுத்துவிட்டாலும் மக்கள் அதை நினைவு வைத்துக்கொண்டு சொல்லுகிறார்கள். உதாரணம் ஜி.என்.’செட்டி’ ரோடு. சென்னையை ஒரு வட்டம் வந்ததில் எல்லாக் கடைப் பெயர்ப் பலகைகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. வட மாநிலங்களில் எல்லாம் அந்தப் பிராந்தியப் பாஷையில் தான் இருக்கும். தற்போது நடக்கும் மொழி அரசியலில் இதை மறந்துவிட்டார்கள் போலும். தி.நகரில் இருந்த ஒரே தமிழ்ப் புத்தகக் கடை  ’நியூ புக் லேண்ட்ஸ்’ தமிழ் போலக் காணாமல் போய்விட்டது. குர்தா பைஜாமா போட்டுக்கொண்டு சென்றால் நம்மிடம் ‘தோ’, ‘தஸ்’ , ‘தால்’ என்று ஹிந்தியில் பேசுகிறார்கள். தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் லிப்ட், பில் போடுகிறவர்கள் எல்லோரும் வட மாநிலத்தவர்கள். சினிமா படங்களில் கடன் கொடுத்த சேட்டு போலத் தமிழ் பேசுகிறார்கள்.  பேருந்து, ரயில் எங்குப் பார்த்தாலும் ஒலிபெருக்கியில் நாராசமாகச் சிரிக்கும் சத்தத்துடன் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.  

மெட்ரோ தடுப்புகளில் எல்லாம் சுவரொட்டி ஒட்டி இருக்கிறார்கள். சினிமா சுவரொட்டிகள் குறைந்து, அரசியல் போஸ்டர்களை பார்க்க முடிகிறது. அரசியல் சுவரொட்டிகளில் ஸ்டாலினுடன், உதயநிதியை பார்க்க முடிகிறது. ஈபிஸ் உடன் எம்.ஜி.ஆர், அம்மா தவிர வேறு யாரும் இல்லை.  ஆட்டோ பின்னால் விஜய் தெரிகிறார். திருமா கூட ஆங்காங்கே இருக்கிறார் ஆனால் பாஜக கண்ணில் படவில்லை. முகப்பேர் போன்ற இடங்களில் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வளர்ந்து வருகிறது. “சார் ஆதிமுக, திமுக இரண்டு பேரும் இதில் பங்கு” என்று ஆட்டோ டிரைவர் தகவல் கொடுக்கிறார். அமலாக்கத்துறை கஷ்டமே பட வேண்டாம், ஆட்டோவில் போனால் போதும். இதைப் பற்றி மேலும் எழுதினால் வீட்டுக்கு ஆட்டோ வரும். 

தாம்பரம் முதல் மாம்பலம் வரை எலக்டரிக் ரயில் கட்டணம் 5ரூ. உள்ளே சார் பத்து ரூபாய் கொடுங்கள் என்று பிச்சை எடுக்கிறார்கள்! 

சென்னையில் நடக்கும் எல்லாத் திருமண வரவேற்பிலும் மாப்பிளை பெண்ணுக்கு அடுத்து  இளநீர் பாயசமும் கூட இருக்கிறது. 

மைலாப்பூர் மொத்தமும் மெட்ரோ உபயத்தால்  மேஸ்  போலச் சிக்கலாக இருக்கிறது. ரோஸ் மில்க் கடை அருகில் தினுசு தினுசாக மாவடு குவிந்து கிடைக்கிறது. பல இடங்களில் பைக்கை நிறுத்தி தலைக்கவசப் பரிசோதனையைக் காவலர்கள் செய்துகொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து பலர் ’தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது’ என்று வேகமாகக் கடந்து செல்கிறார்கள். ஒரு வெற்றிலை பாக்கு கடையில் “பீச்சுக்குப் போய்விட்டு வரும் வரை இருந்தால் போதும். அதற்கு மேல் தாங்காது” என்று ஒருவர் எதையோ விசாரித்துக்கொண்டு இருந்தார். எது என்னவாக இருக்கும் என்று கண்டுபிடிப்பதற்குள், ஊபர் வந்து, பெங்களூர் வந்து சேர்ந்தேன். 

-சுஜாதா தேசிகன்
16.3.2025 

Comments

Post a Comment