Skip to main content

மழையில் அனுமான் சாலீசா

 மழையில் அனுமான் சாலீசா 



சிறுவயதில் காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதாவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது!  அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வரைந்தேன். 


“அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சந்நிதியில் வெச்சுடு,” என்று பாட்டி அங்கீகரித்தாள்


அனுமார் படத்துக்கு பார்டர் எல்லாம் போட்டுக் கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் சந்நிதியில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலை கோத்துச் சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணெய்யை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த செந்தூரத்தை அந்த காலெண்டர் அனுமார் மீது தடவப் புதிதாக அந்த அனுமாருக்கு ஒரு தேஜஸ் கிடைத்து, ஆஞ்சநேயர் ஆகிவிட்டார். பல வருடங்களாக இருந்த அந்தப் படம் வெள்ளை அடிக்கும் போது எங்கோ போய்விட்டது. ரொம்ப நாள் சஞ்சீவி மலையைச் சுமந்தவருக்கும் ரெஸ்ட் வேண்டாமா? என்று நானும் தேடுவதை விட்டுவிட்டேன். 


எம்.எஸ். அவர்களின் பாலாஜி பஞ்சரத்ன கீர்த்தனைகள் வந்த சமயம், அதன் தொகுப்பில் முதல் முதலில் ‘ஹனுமான் சாலீஸாவைப் பல முறை கேட்டிருக்கிறேன். கேட்டுக்கொண்டிருக்கிறேன். 


இப்படி தான் சென்ற வாரம் காலை நடைபயிற்சியின் போது தேடிக் கேட்டேன். அனுமான் சாலீசாவில், அனுமான் மற்றும் சில வார்த்தைகள் மட்டுமே எனக்குப் புரியும். பல வருடங்களாகப் பல முறை அர்த்தம் தெரியாமல் கேட்டிருக்கிறேன். நடைபயிற்சியின் போது ஹனுமான் சாலீசா கேட்டதை நோட்டம் விட்ட முகநூல் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ஜே.பி நகரில் ஹனுமான் சாலிசா குறித்து உபன்யாசம் செய்கிறார் என்று அதன் நுண்ணறிவு மூலம் எனக்குக் காண்பித்தது. 


அனுமான் சாலீசா அர்த்தங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று இன்று சென்றிருந்தேன். ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசங்களைக் காணொளி மூலம் கேட்டிருக்கிறேனே தவிர நேரில் கேட்டதில்லை. இன்று முதல் முறை. 


போகும் போது ‘thunderstorm' என்று அலைப்பேசியில் வந்த எச்சரிக்கையைத் தடவிக் கடாசிவிட்டு ‘ஜெய்’ அனுமான் என்று கிளம்பி, 'வரத ஆஞ்சநேயர்’ கோயிலுக்கு போய்ச் சேர்ந்த சமயம் இருக்கைகள் எதுவும் காலியாக இல்லாமல் சுந்திர காண்டத்தில் சீதையை கண்டு பிடிக்க முடியாமல் அனுமார் மாதிரி முழித்துக்கொண்டு நின்றேன்.  


‘சார் இந்தக் கோயிலில் அனுமார் சுயம்பு’ என்று நண்பர் ஸ்ரீராம் என்னை அடையாளம் கண்டு கொண்டு சொல்ல, அனுமாரை சேவித்துவிட்டு சற்று நேரம் உபன்யாசத்தை நின்று கொண்டு கேட்டேன். மழை வருவதும், நிற்பதும் என்று கண்ணாமூச்சி விளையாடியது. இதை எதையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீ துஷ்யந்த் தன் உபன்யாசத்தை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடத்தில் தேர்ந்த வார்த்தைகளை உபயோகித்து, புத்திசாலித்தனமான நகைச்சுவை கலந்து, அனுமாரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். பொதுவாக ராமாயணம் உபன்யாசத்துக்கு அனுமார் வந்து கேட்பார், இன்று எனக்குத் தெரிந்து சீதா ராமர் தன் குடும்ப சகீதம் வந்து கேட்டிருப்பார் என்று தோன்றியது.  ஸ்ரீராமர் சிம்மாசனத்தின் மீது ஒரு குடை இருப்பதற்கான காரணமும் புரிந்தது!. 


குழுமியிருந்த மக்கள் பக்தியிலும், மழையிலும் சொட்டச் நனைந்துகொண்டு கேட்டார்கள். குலோத்துங்கன் என்ற கிருமிகண்ட சோழனின் மகன் விக்ரம சோழன் அகளங்கன் தனது தந்தை செயல்களுக்கு வருந்திச் சொன்ன வார்த்தை, ‘ஸ்ரீ ராமாயணமும் திருவாய்மொழியும் உள்ளவரை வைஷ்ணவம் அழியவே அழியாது.’ அது எவ்வளவு உண்மை என்று இன்றைய கூட்டம் நிரூபித்தது. 


அனுமன் சாலிசா சும்மா கேட்டாலே நன்றாக இருக்கும், அர்த்தங்களுடன் கேட்டால் சுவை பல் மடங்கு கூடும் என்பது திண்ணம். 


-சுஜாதா தேசிகன்

22.03.2025

ஒரு குளுமையான சனிக்கிழமை இரவு.

Comments