Skip to main content

திருப்பதிக்கே லட்டு

திருப்பதிக்கே லட்டு



பிரசாதம் என்பது தமிழ்ச் சொல் கிடையாது. அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படத் தேவை இல்லை. ஆகமத்தில் என்ன சொல்லியிருக்கிறது, என்ன என்ன பிரசாதங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற டிக்னிக்கல் விஷயங்களுக்குள் எல்லாம் போகாமல் குழந்தை ஆண்டாள் சொல்லுவதைப் பார்க்கலாம்

”தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” வேண்டும் என்கிறாள். அதாவது அன்புடன் பூவையோ, தீர்த்ததையோ எதையோ அவனுக்குப் படைக்கும் போது நமக்கும் பெருமாளுக்கும் ஒரு அழகான பரஸ்பர உறவு ஏற்படுகிறது. அவன் தொட்டுச் சாப்பிட வேண்டாம், பார்த்தாலே அதில் அவனுடைய அருள் பொதிந்துவிடுகிறது. அந்த அருள் பெற்ற வஸ்துவை நாம் ”கூடி இருந்து” எல்லோருக்கும் பகிர்ந்தளித்து அனுபவிக்க வேண்டும். பிரசாதம் அவன் அருளின் உறுதியான வெளிப்பாடாகும் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை.

மிக உயர்ந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருந்த நம் ஆசாரியர்கள் இதை எல்லாம் தங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கு அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சில உதாரணங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

வரதராஜன் என்ற ஆசாரியன், ஒரு தாய் தன் குழந்தைக்கு எப்படிப் பரிவுடன் சரியான பதத்தில் பாலை ஊட்டுவாளோ அதே போலத் தேவப் பெருமாளுக்கும் பக்குவமாக இளம் சூடான பாலமுது சம்பர்ப்பிக்கும் சேவை செய்தார். “எனக்குத் தாய் தந்தை கிடையாது ஆனால் நீர் என் தாய் போல் என்ன கவனித்துக்கொள்கிறீர்” என்று பெருமாள் உகந்து அவருக்கு அருளிய பெயர் தான் ’அம்மாள்’ ஆகவே அவரை நடாதூர் ’அம்மாள்’ என்று நாம் இன்றும் அழைக்கிறோம்.

இன்னொரு சம்பவம் பார்க்கலாம். எங்கள் ஆழ்வான் ஒரு நாள் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கனவில் சிறுபிள்ளை ஒருவன் வந்து "எனக்கு நாவற்பழம் தாரும்" என்று கேட்க அதைப் பொருட்படுத்தாமல் அவர் உறங்கினார். அந்தச் சிறுவன் மறுபடியும் மறுபடியும் நாவற்பழம் கேட்டு தொந்தரவு செய்து அவரை உறங்கவே விடவில்லை. "குழந்தாய் நீ யார்?" என்று எங்கள் ஆழ்வான் கேட்க அதற்கு அந்தச் சிறுவன் "நான் நஞ்சீயர் மகன் ஆயர்தேவு, எனக்கு நாவற்பழம் கொடு" என்றான். உடனே எங்கள் ஆழ்வான் நஞ்சீயரிடம் சென்று "ஜீயரே உம்முடைய மகன் என்னைத் தூங்கவே விடுவதில்லை!" என்று நடந்தவற்றைக் கூறினார். அதைக் கேட்டு நஞ்சீயர் தன் திருவாராதனப் பெருமாளான ஆயர்தேவு எழுந்தருளியிருக்கும் அறைக்குச் சென்று "இப்படியெல்லாம் செய்யக் கூடாது!" என்றாராம்.

இது இப்படி இருக்க, ஒரு நாள் திருவரங்கத்தில் இரவு பெருமாளுக்கு பிடிக்குமே என்று தத்யோதன்னத்தோட நாகப்பழம் சேர்த்துக் கண்டருளச் செய்ததால் ஜலதோஷம் பிடித்துள்ளது என்று மறுநாள் காலை கண்டுபிடித்து கஷாயம் கொடுத்தார் எம்பெருமானார் !, நாம் இல்லாத போது இப்படி பெருமாளுக்கு எப்படி ஏதாவது நிகழ்ந்தால், அதனால் ரொம்ப காலம் பழுதாக கிடந்த தன்வந்திரி(பெருமாளுக்கு மருத்துவராக விளங்குபவர்!) சந்நதியை புதுப்பித்து அதற்கு அவர் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேத்தியத்திற்குப் பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள் என்று கோயில் ஒழுகு கூறுகிறது.

திருவரங்கத்தில் தினமும் பெரிய பெருமாளுக்குப் பல தின்பண்டங்கள் துணியால் மூடி பெருமாளுக்கு எடுத்துச் செல்வார்கள். பெருமாளுக்குக் கண்டருளப்பட்டுத் திரும்பும்போது அங்கே ராமானுஜர் அதைத் தினமும் திறந்து காண்பிக்கச் சொல்லுவார். ஏன் எப்படிச் செய்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் நைவேத்தியம் ஆகித் திரும்பும்போது ஏன் தினமும் துணியை எடுத்துப் பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு ராமானுஜர் ”தினமும் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறோம். என்றாவது ஒரு நாள் அன்புடன் இதை உண்கிறேன் என்று எனக்குக் குறிப்பு இருக்கிறதா என்று திறந்து பார்க்கிறேன்” என்றாராம்.

ஆண்டாளைப் பெற்றெடுத்த பெரியாழ்வார் பல்லாண்டு பாசுரத்தில்

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன* சூடும் இத் தொண்டர்களோம்

அதாவது,
நீ அணிந்து அவிழ்த்துவிட்ட உன் பீதாம்பரத்தைத் தரித்தும்,
நீ அமுது செய்த உண்கலப் பாத்திர மிச்சத்தை உண்டும்,
நீ சூடிக்கொண்ட அழகான திருத்துழாய் மாலைகளையே சூடிக்கொள்ளும் இப்படிப்பட்ட தொண்டர்களாகிய நாங்கள்

என்று தன்னையும் அவருடன் உள்ள தொண்டர்களையும் அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

இன்று இப்படி எல்லாம் நடக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் அருளிய ’இராமபிரானை கற்போம்’ என்ற நூலை மீண்டும் படித்துக்கொண்டு இருந்த போது அதில் தசரதர் அஸ்வமேத யாகம் குறித்த பகுதியில் சில விஷயங்களைக் கூறியிருந்தார். மாசுபாடு மற்றும் கலப்படம் குறித்து அதில் மிக அருமையான சில பகுதிகளை உங்களுக்குத் தருகிறேன்.

அஸ்வமேத யாகத்தின் போது விதவிதமான அன்னத்தை வடித்துக் குவித்துக்கொண்டே இருந்தார்கள். வந்தவர்கள் உணவைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதன் ருசி அத்தகையது. இதில் அதிசயம் என்னவென்றால், உணவு எல்லாம் சாஸ்திரங்களில் கூறிய ஆசாரப்படியும், சுகாதார முறைப் படியும் தயாரிக்கப்பட்டவை.

இங்கு பெரியோர்கள் கூறுவது ஒன்று உண்டு. அதாவது கோயில் மடப்பள்ளியின் உள்ளேயோ, விவாஹ, உத்ஸவ காலங்களில் மிகுதியாக உணவு தயாரிக்கும் அன்ன சாலைக்குள்ளோ, பிறர் சென்று பார்க்கக் கூடாதென்பர். ஏன்? அங்கு வேறு வழியின்றி நிகழக்கூடிய சுகாதாரக் கேடுகளும், ஆசாரக் கேடுகளும் நமக்கு வெறுப்பைத் தூண்டி விடும் போலும்! ஆனால் அஸ்வமேத வேள்வியின் அன்ன சாலைகளில் நம்மை அறியாமல் நிகழக் கூடிய எத்தகைய சீர்கேடு களும் இன்றி, அதிலும் பழைய அமுது, பழைய குழம்பு என்று சொல்வதற்கு இடமின்றி நாள்தோறும் சமைக்கப்பட்ட சூடான உணவுப் பொருள்களே வழங்கப்பட்டன என்றால் சமையற்காரர்களின் நேர்மை, மேற்பார்வையாளர்களின் சலிப்பற்ற சேவை. தசரதரின் ஆட்சித் திறன், வஸிஷ்ட முனிவரின் கண்டிப்பு ஆகிய பெருமைமிகு நிர்வாகத் திறனை நம்மால் ஊகித்துத்தான் பார்க்க முடியுமோ! இதைக்கூறி நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் பாடம் கற்பிக்கிறார் முனிவர் வால்மீகி.

நிறைய உணவுப் பொருட்களைத் தயாரித்துவிடலாம். அவற்றைப் பரிமாறுவது என்பது ஒரு பெருங்கலையாகும். உள்ளே அடுப்படியில் வெந்து கொண்டிருப்பவர்களைப் பரிமாறுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் சிலர் முகத்தைச் சுளித்துக் கொள்வர். அவர்கள் வியர்வை, பொருளில் கலப்பதைக் கண்டுவிட்டால் ஒரு வாரத்திற்குச் சாப்பாடே வேண்டியிருக்காது. எப்படிப் பரிமாற வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறார் முனிவர். இவ் வேள்வியின் விருந்தில் காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் நன்னீராடி, நல்லாடை உடுத்தி, ஊர்த்வ புண்டரங்களைத் தாங்கி, கேசங்கள் கலையாது நன்கு சீவிமுடித்து எண்ணெய் இறங்கி ஒளிமங்காது தன்னொளியால் முகத்திற்கு அழகையும், கவர்ச்சியையும் அளிக்கும் மணி குண்டலங்களைக் காதுகளில் அணிந்த புருஷர்கள் பரிமாறினார்கள். இவர்களில் சிலர் உணவுப் பொருள்களைப் பரிமாறுகின்றவர்கட்குத் திருமடப்பள்ளியினின்றும் கொணர்ந்து கொடுத்தனராம். ஆக அரசர், கடைநிலை ஊழியர் உள்பட அனைத்து ஊழியர்களையும் போற்றி, மதித்து, ஆதரித்து வந்தார் என்பதை அறிகிறோம். இல்லாவிடில் இவ்வளவு கவனத்துடனும் பரிவுடனும் பணிபுரியத் தோன்றுமா?

அன்றாடம் ஹோமாதிகள் பூர்த்தியானதும் சக்ரவர்த்தி தமக்குரிய மாளிகையில் இளைப்பாறுவது வழக்கம். அவ்வழியே சாப்பிட்டவர்கள் சாலையில் செல்லும்போது தங்களுக்குள் உரையாடிக் கொண்டே செல்கின்றார்கள். "இத்தகைய ததீயாராதனத்தை நாம் எங்குப் பார்க்க முடியும்? எனக்குத் தொண்ணூறு வயதாகிறது. இதுவரை யான் கண்டதில்லை." மற்றொருவர்: "எதைச் சாப்பிடுவது ? எதை எறிவது? எல்லாம் ஒன்றுபோல் மற்றொன்றும் சுவைமிக்கதாகவே இருக்கிறது". வேறொருவர்: "அது போகட்டும், பந்தி வஞ்சனையின்றி எல்லாவற்றையும் வேண்டியவர் வேண்டாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பாகுபடுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் அனைத்தையும் உபசரித்துப் பரிமாறிய அழகை என்ன வென்று சொல்வது! இவ்வாறு உணவளித்த நம் சக்ரவர்த்தி பல்லாண்டு வாழணும். நிறையக் குமாரர்களைப் பெற்று நல் வாழ்வு வாழணும்", எனப் பலபடி புகழ்ந்த பேச்சுக்களை எல்லாம் கேட்டுக் கேட்டு மனதிற்குள் மகிழ்ந்தார் தசரதர்.

என்கிறார் ஸ்ரீமத் ஆண்டவன்.

சில வருடங்கள் முன் கோவிட் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருந்த போது, கல்கி கடைசிப் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தேன்

சில பக்தர்கள் திருப்பதியில் பெருமாளை சேவித்துவிட்டுக் கிளம்பும் போது அர்ச்சகர்கள் ராஜாஜிக்கு ஸ்பெஷலாக பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள். பக்தர்கள் ராஜாஜி இல்லத்துக்குச் சென்று பிரசாதத்தை ஒப்படைத்த போது

“பிரசாதம் கோயிலைத் தாண்டி எடுத்துக்கொண்டு வரக் கூடாது. அப்படிச் செய்தால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும். இந்த முறை பெற்றுக்கொள்கிறேன். அடுத்த முறை இப்படிச் செய்யாதீர்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

இதை எழுதிக்கொண்டு இருந்த போது எங்கள் வீட்டு அழைப்பு மணி அடித்தது(நிஜமாகவே). முகக்கவசம் அணிந்து மெதுவாகக் கதவைத் திறந்த எட்டிப் பார்த்த போது, பக்கத்து வீட்டு மாமா மாஸ்குடன் “சார் புரட்டாசி சனிக்கிழமை, திருப்பதிக்குச் சென்று வந்தேன் இந்தாங்க திருப்பதி லட்டு” என்று பிரசாதத்தைக் கொடுத்தார்.

திருப்பதி லட்டு பெருமாள் பிரசாதமா இல்லையா, அதைக் கோயிலுக்குள் தான் சாப்பிட வேண்டுமா என்ற சர்ச்சைகளுக்குள் செல்லாமல், அதிகம் உணவு தயாரிக்கும் இடத்தில் மாசுபாடு(contamination) மற்றும் கலப்படம்(adulteration) நிகழாமல் தசரதன் போலப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நிகழ்ந்தால் அதுவே நமக்கு வரப்பிரசாதம்.

- சுஜாதா தேசிகன்
21.9.2024

புரட்டாசி முதல் சனிக்கிழமை 

Comments