Skip to main content

காற்றினிலே வரும் கீதம்

 காற்றினிலே வரும் கீதம்



’காற்றினிலே வரும் கீதம்’, இசையரசியின் வாழ்க்கைப் பயணம் என்ற புத்தகம் சில வாரங்களுக்கு முன் கைக்குக் கிடைத்தது. ஆசிரியர் ரமணன்.

அவ்வப்போது அதைப் படித்து வந்தேன். பொதுவாகப் புத்தகத்தின் முன்னுரை, நூலாசிரியரின் ஒருப்பக்கவுரை படித்துவிட்டுப் படிப்பேன் ஆனால் இந்தப் புத்தகத்தைக் கடைசி அத்தியாயத்திலிருந்து தொடங்கினேன். பல வருடங்கள் முன் கௌரி ராம்நாராயண் எழுதிய ‘MS and Radha: Saga of Steadfast Devotion’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்த காரணமாக இருக்கலாம்.

சுஜாதா ஒரு முறை சுயசரிதம் எழுதுவதில் சில ஆபத்து இருக்கிறது. உண்மையை எழுத வேண்டிவரும். கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்றார். நான் அவரை தொடர்ந்து நச்சரித்த போது, சரி என்று ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்தச் சுயசரிதத்தை நீ எழுதுவது போல எழுதாதே, தன்னிலையில் ( first person ) நான் எழுதுவதைப் போலவே என் ஸ்டைலில் எழுது என்றார். இதற்காக அவருடன் நான் பல சந்திப்புகளை நிகழ்த்தினேன். எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்தேன். ஆனால் நடுவில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, பிறகு ’ஏனோ’ எழுத முடியாமலே போய்விட்டது. அவர் மறைந்த பின் பலர் என்னை இதை நீங்கள் எழுதி முடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் அதற்கு இசையவில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் எதுவும் நம் கையில் இல்லை.

என் அனுபவத்தை இங்கே எதற்குக் கூறுகிறேன் என்றால் ஆசிரியர் ரமணன் அவர்கள் எம்.எஸ் வாழ்ந்த காலகட்டத்தில் எம்.எஸ் குறித்து ஓர் ஆவணப் படம் எடுக்க தூர்தர்ஷனுடன் அவர்களை அணுகி முடியும் தருவாயில் அதுவும் 'ஏனோ’ கைகூடவில்லை. பிறகு எம்.எஸ் அவர்கள் மறைந்த பின், எம்.எஸ் போன்ற ஓர் ஆளுமையைக் குறித்து பலர் கூறக் கேட்டு எழுதுவதற்கு மிகுந்த உழைப்பும் அர்ப்பணிப்பும், இறை அருளும் தேவை. அது எல்லாம் ஆசிரியர் ரமணனுக்கு கைகூடியிருக்கிறது.
ரமணன் பேனா மாவு மாதிரி எழுதும் என்று நினைக்கிறேன். எழுத்தைப் படிக்கும் போது எந்த நெருடலும் இல்லாமல் வழுக்கிக்கொண்டு போகிறது. பத்து நிமிஷம் படித்த பின், அட இவ்வளவு பக்கங்களைப் படித்துவிட்டோமா என்ற பிரமிப்பே ஏற்படுகிறது.

கடைசியிலிருந்து படிக்கும் போது காந்தி படத்தில் அவர் சுட்டிக்கொல்லப்பட்டதிலிருந்து ஆரம்பிப்பது போல இங்கே ரமணன் வாடிய தாமரை என்று பகுதியில் எம்.எஸ் அவர்களின் கடைசி அத்தியாயம் எப்படி இருந்தது என்று விவரித்திருக்கிறார். ஞாபக மறதி என்பது ஓர் இசைக் கலைஞரின் வாழ்க்கையில் நிகழக் கூடாது ஒன்று நினைத்துக்கொண்டேன். (கடைசி காலகட்டத்தில் அவர் அனுபவித்த உடல் உபாதைகள் போன்றவற்றைக் கோடிட்டுக் காட்டிவிட்டு அதை விவரிக்கும் எழுத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து).

எம்.எஸ் அவர்களின் கணவர் திரு சதாசிவத்தின் மரணம் நிகழ்வைப் படிக்கும் போது சட்டென்று ஏதோ சினிமா காட்சி போல ஆரம்பித்து முடிந்துவிடுகிறது ஆனாலும் அது போன்ற சுருக் எழுத்தில் தான் பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது.

கே.பாலசந்தர் படங்களில் வரும் பெண்கள் போல் அல்லாமல் எவ்வளவு உயரத்தைத் தொட்டாலும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று கடைசிவரை புடவையைப் போர்த்திக்கொண்டு இருந்தவர் எம்.எஸ்.

சதாசிவம் குறித்து கௌரி ராம்நாராயணன் புத்தகத்தில் ‘சத்தியவான் சாவித்திரி போல’ ஆனால் இங்கே சாவித்திரி சதாசிவம் என்று எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இதை சொல்லி புரிய வைப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.

எம்.எஸ் அவர்களின் தம்பூராக்கள் பற்றிய கட்டுரையில் இரண்டு தம்பூராக்கள் எப்படிச் சுருதி சுத்தமாக இருக்கும் போன்ற விவரங்கள் சுவாரசியமானவை. அதே போல் ஆத்மநாதன். கடைசிவரை மகன் போலக் கவனித்துக்கொண்டவர். (இதுவரை அவருடைய படத்தை நான் பார்த்ததில்லை).

ஒரு கட்டத்தில் அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி, வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை, காஞ்சி மஹா பெரியவர் ஆசிகள், கோயிலில் ஏழை பக்தர்கள் அன்னமாசாரியாவின் கீர்த்தனைகளைப் பாட, ... ‘பாலாஜி பஞ்சரத்ன மாலா’ ரெக்கார்ட் உருவாகி ரெகார்ட் படைத்த விதம் எல்லாம் சுவாரசியமாக எழுதியுள்ளார் ஆசிரியர். (திருப்பதி கோயிலில் எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்ட அன்னமாசாரியா செப்பேடுகளின் முன் வைத்து வெளியிட்டார்கள் என்ற தகவலையும் இதில் சேர்த்திருக்கலாம்)

இன்னொரு பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்.

....ஆறு கஜம் பட்டுப் புடவையின் தலைப்பைத் தோள் மூடிப் போர்த்தி அணிந்த பாங்கில் டாலடிக்கும் வைர மூக்குத்தி, காதில் வைரத்தோடு எனக் கம்பீரமாக அவர் அருகில் நிற்கும் எம்.எஸ்ஸையும் பார்க்கும் எவருக்கும் கைகூப்பத் தோன்றும். தேடி வருபவரை எவரையும் பந்தா எதுவும் இல்லாமல் சந்திப்பார். அன்போடு பேசுவார். அறிமுகமானவர்களை 'எப்படியிருக்கே?' என்று கேட்டுக் குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரிப்பார்....

இந்த வரிகளைப் படிக்கும் போது இவை என்னுடைய அனுபவத்தை ஒத்து இருந்தது.

திருமணம் ஆகி சில மாதங்களில் நடந்த நிகழ்ச்சி இது. என் மனைவி கர்நாடகச் சங்கீதத்தை எம்.எஸ் அவர்களின் மகள் திருமதி ராதா விஸ்வநாதனிடம் பல வருடங்கள் முறைப்படி கற்றுக்கொண்டு இருந்தார். திருமணம் ஆன பிறகு ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என் மனைவியை இசை பயில நான் கூட்டிச் செல்வது என் முக்கிய அலுவல்களில் ஒன்று ( ஓலா இல்லாத காலம் !)

ஒரு மதியம் சங்கீத கிளாஸ் முடியும் தறுவாயில், எம்.எஸ் தன் மகளின் வீட்டிற்குள் நுழைந்தார். முதன்முதலாக அவரை நேரில் பார்த்தேன். அவர் முன் உட்கார மனமில்லாமல், நான் எழுந்து நின்றேன். பிறகு, தரையில் அமர எத்தனித்த என்னை எம்.எஸ் தன் அருகில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறி விட்டு புது மாப்பிள்ளையை நலம் விசாரித்துவிட்டு என் மனைவியைப் பாடுமாறு பணித்தார்.

என் மனைவி ( என்ன தைரியம் ) எம்.எஸ் ஏற்கனவே அற்புதமாகப் பாடியிருந்த சூர்தாஸின் ஒரு பஜன்-ஐ பாடிக் காட்டினார். அதை முழுவதும் கண்களை மூடிக் கேட்டு ரசித்துப் பாராட்டினார் அந்தப் பாரத ரத்னா இசைக் குயில். அந்த இசை சகாப்தத்தின் அருகில் அமர்ந்திருந்த அக்கணங்களில், என் மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம்.
அவரிடம் விடைபெறுவதற்கு முன், அவரை வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டோம். போகும் போது எங்களை அவர் இல்லத்திற்கு ஒரு முறை வரும்படியும் கேட்டுக் கொண்டார்.

புத்தகத்தில் மஹாத்மா காந்தியுடன் அவருடைய முதல் சந்திப்பு. திரைப்படங்களில் போட்டி பொறாமை, பெண்ணாக இருந்தும் நாரதர் வேஷத்தில் நடித்தது மீராவாக நடித்தது, ’ஹரி தும் ஹரோ’ ஒருவான கதை, சதாசிவத்துடன் திருமணம், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ற அவருடைய முதல் சங்கீதக் கச்சேரி என்று பல விஷயங்களை ஆசிரியர் இந்த சிறு புத்தகத்தில் அடக்கியுள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்பே இதை நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் ‘ஏனோ’ தள்ளிக்கொண்டு போனது. இன்று தான் எழுத முடிந்தது, இன்று எம்.எஸ். அவர்களின் 108வது பிறந்த நாள்!

- சுஜாதா தேசிகன்
16.9.2024
எம்.எஸ் 108வது பிறந்த தினம்.

Comments