Skip to main content

ஸ்ரீவைஷ்ணவ ’போட்டோ பாம்’

ஸ்ரீவைஷ்ணவ ’போட்டோ பாம்’



ஒரு மாதம் முன் வழக்கமாக வீட்டுக்கு வரும் ஆங்கிலத் தினசரி முன் பக்கம் முழுக்க கைப்பேசி விளம்பரம் ஒன்று ஆக்கிரமித்தது. இதை வாங்கினால் நீங்கள் எடுக்கும் படத்தில் தேவை இல்லாதவற்றைச் சுவடு தெரியாமல் அழித்துவிடும் ‘AI eraser’ வசதிகொண்டது என்று அருகிலேயே ஓர் உதாரணமாகத் தொப்பி அணிந்த பெண்ணை சுற்றித் திரிந்தவர்கள் ஒரு படமாக, அருகிலேயே தயவு தாட்சணியம் காட்டாமல் சுற்றியவர்களைக் கடாசிய இன்னொரு படமும் ஆறு வித்தியாசம் போல அருகருகே தந்திருந்தார்கள்.  

நமக்கு தேவை இல்லாதவற்றை வட்டமிட்டால், இந்த  இந்த AI அழிப்பான் பொருட்களையோ அல்லது மனிதர்களையோ புத்திசாலித்தனமாக அடையாளம் கண்டு அவற்றை அகற்றி, அகற்றிய இடத்தில் இயற்கையாகத் தோற்றமளிக்கும் வண்ணங்கள் பொருட்கள் கொண்டு அதை நிரப்பிவிடும். 

ஆங்கிலத்தில் ‘போட்டோ பாம்’ என்ற ஒரு பிரயோகம் உண்டு. உதாரணத்துக்குக் குடும்பத்துடன் ஒரு செல்ஃபியை சொடுக்கும் சமயம் நடுவில் சம்பந்தமே இல்லாமல் மஞ்சள் பையுடன் ஓர் ஆசாமி நாம் எடுக்கும் படத்தில் புகுந்துவிட்டால் ? ’அட சே’ என்று என்று அலுத்துக்கொள்வது தான் ’ஃபோட்டோ பாம்’. பேஜர் பாம் போல இது அவ்வளவு கொடூரம் இல்லை என்றாலும், இந்த மாதிரி மஞ்சள் பைகளைக் கடாசவே இந்த இந்தச் செயற்கை நுண்ணறிவு அழிப்பான் வந்திருக்கிறது. 

டைட்டிலில் ஸ்ரீவைஷ்ணவம் என்ற வார்த்தை எதற்கு என்று உங்கள் நுண்ணறிவு இந்நேரம் யோசிக்கத் தொடங்கியிருக்கும்.  ’சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ’ என்று நம்மாழ்வார் சொல்லுவதைப் போல இதைச் சொல்லுகிறேன். இந்தச் செயற்கை நுண்ணறிவு அழிப்பான் நம் ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாயத்துக்கும் பேருதவியாக இருக்கப் போகிறது என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை. 

சில ஆண்டுகளுக்கு முன் திருநட்சத்திர உற்சவத்திற்கு ஒரு திவ்யதேசம் சென்றிருந்தேன். ஆசாரியன் முன் செல்ல பெருமாள் அவரை தொடர்ந்து மெதுவாக வர, ஸ்ரீராமானுஜர் ஏற்படுத்திய திராவிட வேதச் சாகரமான பிரபந்த கோஷ்டி எல்லோருக்கும் முன்னே சென்று கொண்டிருந்தது. 

கோஷ்டியைச் சேவித்துவிட்டு ஓரமாகச் சென்றேன். அப்போது ஸ்வரூபத்தில் இருந்தவர் கோஷ்டியைப் படம் எடுக்காமல் தவித்துக்கொண்டு இருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை. உடனே என் நுண்ணறிவு ‘நீ தாண்டா அந்த மஞ்சப் பை’ என்று உணர்த்தியது. பாகவத அபசாரம் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உடனே அந்த ஃபிரேமை விட்டு நகர்ந்தேன். மயங்கியவர் மீது குளிர் வேங்கட அருவிப் பாய்ந்த முகலர்ச்சியுடன் படக்கருவி பட பட என்று படங்களை எடுத்துத் தள்ளியது.  

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்ரீ வைஷ்ணவக் கோஷ்டிக்கு நடுவில் பெருமாள் சாத்துப்படியுடன் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தாலும் அதில் தப்பித்தவறி வேறு ஒரு கலையார் ஃபிரேமில் வந்துவிட்டால் அவரை ‘போட்டோ பாம்’  என்று படம் எடுக்கும் தர்மசங்கடம் இனி இருக்கப் போவதில்லை.  ‘செயற்கை நுண்ணறிவு அழிப்பான்’ கொண்டு அவர்களை டிஜிட்டல் முறையில் ஒதுக்கிவிடலாம்.  இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம் தானே ?. 

இதே போல், இன்னொரு திவ்ய தேசத்தில் பெருமாள் நாச்சிமார்களுடன் அமர்க்களமாகப் புறப்பாடு கண்டருளினார். பின்னணி சுவரில், நமக்கு வேண்டிய திருமண் இல்லை என்றால், பெருமாளுக்கு படத்தில் புகும் அதிர்ஷ்டம் குறைவு. நம்பெருமாள் போல அந்தப் பெருமாள்  நான்கு அடி நடந்து ’இது பொதுமாபா?’ என்று கேட்ட பிறகே அவரை ஃபிரேமுக்குள் அடங்குவார்கள். பெருமாள் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறான், அவனுக்குக் காரணம் இல்லை என்று எல்லாம் படிக்கிறோம் கேட்கிறோம் ஆனால் அந்தக் காரணகர்த்தாவே டிஜிட்டல் பெட்டிக்குள் வியாபிக்க நான்கு அடி நடக்க வேண்டியிருக்கிறது. 

திருப்பாவையில் ஆண்டாள் ‘சீரிய சிங்காசனத்து இருந்து  யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள வேண்டும்’ என்று கூற உடனே பெருமாள் நான்கு அடி நடந்து வர, அடடா இந்த பெருமாளை நடக்க வைத்துவிட்டோமே அவருடைய பிஞ்சு திருவடி கண்ணிப் போய்விட்டதே என்று ஆண்டாள் வருந்தி ’அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி’ அன்று அவன் திருவடிக்குப் பல்லாண்டு பாடினாள் என்று பெரியோர்கள் அனுபவிப்பார்கள். 

இனி பெருமாள்  ஃப்ரேமுக்குள் அடங்க நடக்க வைக்க வேண்டாம். இந்த டிஜிட்டல் நுண்ணறிவுக்கு நம் ஸ்ரீ வைஷ்ணவ சமூகம் கடமைப் பட்டிருக்கிறது என்று இப்போதாவது நம்புங்கள்.  

”நெற்றியில் அழகான திருமண்; நேர்த்தியான சிகை, பூணூல் தரித்தவர்; இந்த மூன்று உலகங்களின் புண்ணிய பலன் காரணமாக அவதரித்து, அதனை உணர்த்த கையில் திரிதண்டம் வைத்திருப்பவர். தன்னிடம் சரணம் என்று வந்தவர்களைச் சரியான வழியில் நடத்துபவர். தனது திருவடிகளில் பணிந்தவர்களுடைய காமம், தோஷம், விரோதம் போன்ற அனைத்தையும் நீக்க வல்லவர் இராமானுசர் ஆவார். அவரே சந்நியாசிகளின் தலைவர், 

ஸ்ரீ நம்மாழ்வாரின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் ஆழ்ந்த அன்பும் பக்தியும் பூண்ட இராமானுசரை வணங்குகிறேன்”

மேலே உள்ள இந்தப் பகுதியை நான் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய ஸ்ரீ யதிராஜ சப்ததி மற்றும் ஸ்ரீ மாமுனிகள் அருளிய  யதிராஜ விம்சதி கொண்டு அமைத்தேன். இதைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு பிரிப்பது கஷ்டம். அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்! 

- சுஜாதா தேசிகன்
19.9.2024

Comments