பசுக்களின் வாத்சல்யம்
வாத்சல்யம் என்ற சொல்லுக்குக் கூகுள் கூறும் பதில் இது - “வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது”
ஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம். இவை எல்லாம் கஷ்டம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம். அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் கன்றுக்குட்டியுடன் ‘வாத்சல்யத்துடன்’ இருக்கும் காட்சி. இதே போலக் கன்றுக்குட்டியுடன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் படம் ஒன்றும், ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் , ஸ்ரீமத் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஸ்வாமிகளுடன் படங்களையும் பார்த்திருப்பீர்கள்.
இன்று நம் பாரதப் பிரதமர் மோதி இல்லத்தில் உள்ள புதிதாக ஈன்ற கன்றுகுட்டிக்கு அவர் 'தீப்ஜோதி' என்று பெயர் வைத்து கொஞ்சும் காட்சிகளைப் பல முறை கண்டு களித்தேன்.
இவை எல்லாம் சாதாரணப் படங்கள் கிடையாது. நமக்கு வாத்சல்யம் என்ற குணத்துடன் சனாதன தர்மத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாகப் பசுக்களிடம்.
பல காலமாக ’வாத்சல்யம்’ என்ற சொல்லுக்குப் பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி என்ற உதாரணம் மேற்கோள் காட்டப்படுகிறது.
“தாய் நினைந்த கன்றேயொக்க, என்னையும்
தன்னையே நினைக்கச் செய்து” ( பெரிய திருமொழி )
திருமங்கை ஆழ்வார் கன்று தாய்ப் பசுவை நினைப்பது போல உலகுக்கெல்லாம் தாயாகிய பெருமாளைத் தான் நினைத்திருக்குமாறு செய்தவன் அவனே என்று பாடுகிறார்.
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ‘சிற்றம் சிறுகாலே வந்துன்னை..’ என்ற பாடல் மிக முக்கியமான ஒன்று. நாலாயிரமும் தெரியாவிட்டாலும் இது ஒன்று தெரிந்தால் போதும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். அந்தப் பாசுரத்தில் ‘பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து” என்ற வரியைத் தினமும் நாம் சேவிக்கிறோம். அதன் அர்த்தம் ‘பசுக்களை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ எங்கள் சிறு கைங்கரியங்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்” என்கிறாள் ஆண்டாள். ( தியாகராஜரின் ’ஸாமஜ வர கமன’வில் யாதவ குல முரளீ வாதன வினோத’ ஞாபகம் வருகிறதா ? )
கோயிலில் க்யூவில் நாம் நின்றுகொண்டு இருக்க, சாதாரண உடை தரித்து கைங்கரியம் செய்பவர்கள் கோயிலுக்குள் நுழைவார்கள். அவர்களுக்குக் கிடைத்த பேறு என்று நமக்கு ஒருவிதப் பொறாமையாக இருக்கும். நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரத்தை பார்க்கலாம்.
*பட்டி மேய்ந்து ஓர் காரேறு
பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய்*
இட்டீறு இட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?*
இட்டமான பசுக்களை
இனிது மறித்து நீர் ஊட்டி*
விட்டுக்கொண்டு விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே.
இதில் இருக்கும் வரிகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். கண்ணன் மாடு மெய்க்கும் அழகை நாமும் ஆண்டாளுடன் கொஞ்சம் ரசிக்கலாம்.
கண்ணனுக்கு மாடு மேய்ப்பது என்றால் கொள்ளை ஆசை. வைகுண்டத்தில் இருப்பதைவிடப் பசுக்களை மேய்ப்பதில் தான் அவனுக்கு ஆனந்தம். இதை நான் சொல்லவில்லை நம்மாழ்வார் சொல்லுகிறார்
திவத்திலும் பசு-நிரை மேய்ப்பு உவத்தி;
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே! ( திருவாய் மொழி 10-3-10 )
ஸ்ரீரங்கத்திலோ அல்லது திருவல்லிக்கேணியிலோ வழியில் மாடுகள் இருந்தால் ’குங்பூ’ சண்டைக் காட்சியில் வருவது மாதிரி ‘ஹாய், ஊ’ என்று நாம் அவற்றைக் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்குப் பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்.
பசுக்களின் தாகத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்கிறான். அப்படிச் செல்லும் போது பெரிய பசுக்கள் நீரைக் குடிக்கிறது. ஆனால் இளம் கன்றுகளுக்கு அந்த நீர் நிலைகளில் எப்படிக் குடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. கண்ணன் கையை முதுகுக்குப் பின் கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கி, மாடுகளைப் போலக் குனிந்து தன் வாயால் நீரைப் பருகுகிறான். ‘அட இது தான் டெக்னிக்கா’ என்று கன்றுகளும் ஆனந்தமாக நீரைப் பருகுகிறது. கன்றுக்குட்டிகளுக்குக் கிடைத்தது கண்ணனின் வாய் அமுதப் பிரசாதம்!.
என் பாட்டியுடன் கோயிலுக்குச் செல்லும் போது பசுமாட்டின் பின் பாகத்தைத் தொட்டு வணங்குவதைப் பார்த்திருக்கிறேன். “அங்கே தான் மகாலக்ஷ்மி வசிக்கிறாள்” என்பாள். வணங்கும் போது மூத்திரம் பெய்தால் இன்னும் விஷேசம், பாட்டி அதைப் பிரசாதமாகத் தலையில் தெளித்துக்கொள்வாள்.
சரி பசுவிற்கு ஏன் இவ்வளவு ஏற்றம் ? மஹாபாரதத்தில் ஒரு கதையைப் பார்க்கலாம். ’சியவனர்’ என்ற ரிஷி தண்ணீருக்குள் தவம் இருந்தார். நீரில் வாழ்ந்த மீன் முதலிய ஜீவராசிகள் அவருக்கு நண்பராயின. ஒரு நாள் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் மீனுடன் இவரையும் வலையில் சேர்த்துப் பிடித்துவிட்டார்கள். மற்ற முனிவர்கள் போல இவர் கோபம் கொள்ளவில்லை.அதனால் சாபம் எதுவும் கொடுக்கவில்லை. இருந்தாலும் மீனவர்களுக்கு தாங்கள் இப்படிச் செய்துவிட்டோமோ என்று அதிர்ச்சியாக இருந்தது.
“மன்னித்துவிடுங்கள்.. இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்றார்கள்.
“வலையில் பிடித்துவிட்டதால் இந்த மீன்களைப் போல நானும் இப்போது உங்களுடைய சொத்து. நீங்கள் என்னை உங்கள் விருப்பம் போலச் செய்துகொள்ளுங்கள்”
மீனவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அந்த நாட்டின் அரசனான நகுஷனிடம் சென்றார்கள். அரசனும் பதறி “மீன்களுடன் இந்த முனிவரையும் வாங்கிக்கொள்கிறேன்.. இதோ ஆயிரம் பொற்காசுகள்” என்றார்.
முனிவரும் “என்ன என் மதிப்பு வெறும் ஆயிரம் பொன்னா ?”
அரசன் சுதாரித்துக்கொண்டு “லட்சம் !” என்றான்
முனிவர் மீண்டும் “வெறும் லட்சமா ?”
கோடி, பாதி ராஜ்யம், முழு ராஜ்யம் என்று வரிசையாகச் சொல்ல, முனிவர் இது எல்லாம் தனக்கு ஈடாகாது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அரசன் முழிக்க கவிஜர் என்ற முனிவர் அங்கே வந்தார். நடந்தவற்றைக் கேட்டு அறிந்தார்.
“நகுஷனே முனிவரை விலைக்கு வாங்கத் தகுந்த ஒன்றை நான் சொல்லுகிறேன்” என்றார்.
“அப்பாடா அது என்ன சொல்லுங்கள்” என்றான் அரசன் நம்மைப் போல ஆவலாக “முனிவர்களும் பசுக்களும் ஒன்று அதனால் ஒரு பசுமாட்டை விலையாகக் கொடுத்துவிடு” என்றார்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.3.4) இப்படிச் சொல்லுகிறார்
“தொழுத்தனில் பசுக்களையே விரும்பித்
துறந்து எம்மை இட்டு, அவை மேய்க்கப் போதி*
’நாராயணனே நமக்கே’ என்பது போல இங்கே ’பசுக்களையே’ என்ற ஏகாரத்தைக் கவனியுங்கள். இதற்குப் பிள்ளை அமுதனார் என்ற ஆசாரியர் “பசுவின் காலில் முள் தைத்தாள், அந்தப் பசுவின் இடையன் தலையில் சீப்பிடிக்கும்” என்று விளக்கம் கூறுவாராம். அதாவது பசு படும் வேதனையை விட இடையன் அதிகமான வருத்தத்தை அடைவான். அதே போலக் கண்ணனும் பசுக்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டானாம்.
சில வருடங்கள் முன் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அங்கே பசுக்களைத் தெய்வமாகவே பாவிக்கிறார்கள்.
சந்து பொந்து எல்லா இடங்களிலும் அவை நம்மைப் போல உலாவுகின்றன. கடைக்கு முன் நின்று சப்பாத்தி வாங்கிச் சாப்பிடுகிறது. சாலைக் குறுக்கே சென்று டிராபிக் ஜாம் செய்தால் அவற்றை ‘ஹார்ன்’ அடித்து யாரும் விரட்டுவதில்லை.அவை போகும் வரை காத்திருந்து செல்கிறார்கள்.
சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழுநீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய இயந்திரம் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள். உஜ்ஜைனில் ஸ்ரீராமானுஜ கூடம் முன்பு நமக்கு முதலில் தெரிவது ஒரு சின்ன மாட்டுத் தொழுவம் தான். துவாரகாவில் ஒரு பசுமாட்டுக்கு என்னிடம் இருந்த வெள்ளரிப் பிஞ்சுகளைக் கொடுத்தேன். திடீர் என்று ஒரு பசுமாட்டுக்கூட்டமே என் என்னைத் துரத்திக்கொண்டு வந்தது, பேருந்தில் ஏறி பெங்களூர் வந்து சேர்ந்தேன்.
குஜராத்தில் பெட்டிக் கடை ஒன்றில் பசுமாட்டுப் பொம்மை ஒன்றைப் பார்த்தேன். உற்றுப் பார்த்த போது அது ஓர் உண்டியல்.கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன்
“இது எதற்கு?”
“பத்து மைல் தொலைவில் ஒரு கோ சாலை இருக்கிறது. அவற்றைப் பராமரிக்க இந்த உண்டியல்”
“எவ்வளவு பசுக்கள் இருக்கும்”
“சில ஆயிரங்கள் இருக்கும்.. பசுக்களைப் பார்த்துக்கொள்ள 27/7 மருத்துவர்கள் இருக்கிறார்கள். பசுக்களுக்குத் தீனி .. இந்த உண்டியலை எல்லா இடத்திலும் பார்க்கலாம்”
“யார் நடத்துகிறார்கள்?”
“ஐந்து பேர் கொண்ட குழு இதை நடத்துகிறார்கள். அதில் ஒருவர் முஸ்லீம்!”
பசுக்களைத் தெய்வமாகப் போற்றுபவர்களை வெறுப்பேற்றவே மாட்டுக்கறி சினிமா வசனங்களைப் புகுத்துகிறார்கள்.
நாம் போன பிறவியில் செய்த பாவத்தால் இதை எல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறோம். இதை மஹா விஷ்ணு சொல்லவில்லை நான் சொல்லுகிறேன்.
- சுஜாதா தேசிகன்
14.9.2024
Comments
Post a Comment