திருக்குடந்தை சென்று வந்தேன் ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்று பதிப்புகள் கண்டு, பல திவ்ய தேச எம்பெருமான்கள், ஆழ்வார் ஆசாரியர்கள் ஆசீர்வாதம் பெற்றது குறித்த அவ்வப்போது பதிவிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ’ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் நமக்கு மொத்த நாலாயிரத்தையும் பெற்றுத்தந்த ’திராவிட வேதம் காட்டிய பெருமாளே ’ என்று போற்றப்படும் திருக்குடந்தை ஆராவமுத ஆழ்வானின் திருவடிக்கு இதுவரை செல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது. சில நாள் முன் அது நிறைவேறியது. ஒப்பிலியப்பன் ஸந்நிதி வங்கீபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியர் ஸ்வாமிகளைச் சனிக்கிழமை அவருடைய திருமாளிகையில் சென்று சேவித்தேன். ரயில்வேயில் மிக உயர்ந்த பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பின் திருவிண்ணகர் என்று ஒப்பிலியப்பன் ஸந்நிதியில் சந்நியாசி போல இருந்துகொண்டு, ஸம்ப்ரதாய கைங்கர்யமும், ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் கௌரவ அத்யாபக கைங்கர்யமும் செய்து வருகிறார்.வடமொழி, தென்மொழியில் பெரும் புலமை உடையவர். இந்த 91 வயதிலும் பலருக்குப் பஞ்சசமஸ்கார...