Skip to main content

கைசிக புராணத்தின் கதை

கைசிக புராணத்தின் கதை



திருநெல்வேலிக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசம். பெருமாள் அழகிய நம்பி. ஊரும் பெருமாளும் அழகு. பசுக்கள் நிறைந்த பொய்கை கரையோரத்தில்...

நெடிய பனைமரங்களிலிருந்து விழும் பனம் பழங்களை பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் உண்ணுவதற்குத் துள்ளிப்பாய்கின்றன என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

நான் போன சமயம்(2017) திருநெல்வேலில் மழை+புயல். நெற்பயிரை முழுகடித்துக்கொண்டும், வாழை மரங்கள் எங்களை சேவித்துக்கொண்டு இருக்க, வெளியே சென்று எங்காவது மாட்டிக்கொண்டால் ’கைசிக நாடகத்தை தவற விட்டிவிட்டு விஜய சொக்கநாதர் போல ஒருவருடம் எல்லாம் என்னால் காத்துக்கொண்டு இருக்க முடியாது அதனால் கோயிலிலேயே நாள் முழுவதும் காத்துக்கொண்டு இருந்தேன்.

image

விஜய சொக்கநாதர் குடும்பம்

விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். (ஸ்ரீரங்கத்தில் பச்சைக்கற்பூரத்தை பெருமாள் மீது தூவுவர். நம்பெருமாள் கற்பூரபடியேற்ற சேவையை என்பார்கள் )மனம் வருந்திய மன்னர், ஸ்ரீரங்கத்திலேயே ஒருவருடம் தங்கி அடுத்த ஆண்டு. சேவையைக் கண்டுகளித்தார். ஸ்ரீரங்கத்தில் இவர்களின் நினைவாக இரண்டாம் திருச்சுற்றில் இவர்களின் சிலைகள் இருக்கின்றன.

இரவு சுமார் 9.30 மணிக்கு நாடகக் கலைஞர்கள் அரிதாரம் பூசிக்கொண்டு தயாராக இருந்தார்கள். பெருமாள் அங்கே இருக்கும் மண்டபத்தில் எழுந்தருளிய பின் கூட்டம் ஓடிச் சென்று நாடகம் பார்க்க முதல் சீட் பிடித்தது. கிட்டதட்ட முதல் சீட் கிடைத்த சந்தோஷத்தில் தூக்கம் கலைந்தது.


கலியுகத்தில் பக்தி செய்ய நாம சங்கீர்த்தனமே சிறந்த வழி என்று சொல்லப்படுகிறது. மீரா, துக்காராம், சூர்தாஸ், கபீர்தாஸர், ராமதாஸர், தியாகராஜர் என்று பக்தர்களின் கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். கவனித்தால் அவர்களிடம் பக்தியுடன் தம்பூரா, வீணை என்று ஏதாவது ஒரு வாத்தியம் கூடவே இருக்கும்.

image

( படம் : திருப்பாணாழ்வார் சரித்திரம் – ஸ்ரீரங்கம் மியூரல் ஒவியம் )

ஆழ்வார்களில் பாணர் குலத்தில் உதித்த திருப்பாணாழ்வாரிடமும் கையில் பாண் என்ற இசை வாத்தியம் இருப்பதைப் பார்க்கலாம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இசைக்கு மயங்கிவிடுவார். இதைப் பற்றி தனியாக வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்.

கைசிக புராணத்தில் நம்பாடுவானும் திருப்பாணாழ்வார்போல பாணர் குலத்தில் பிறந்து ஆழ்வாரைப் போலவே பக்தியில் திளைத்து...

நம்பாடுவான் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
வராஹ புராணத்தில் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் நம்பாடுவான் பக்தியை சிலாகித்து சொன்ன பகுதியை கைசிக மகாத்மியம் என்று அழைக்கிறோம். புராணம் என்பது பிற்பாடு வந்த பெயர்.

image

திருப்பாணாழ்வார்

கதை இதுதான்.


திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் பாணர் குலத்தில் வைணவ பக்தன் வாழ்ந்துவந்தான். பெயர் நம்பாடுவான். தினமும் விடிகாலையில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் குறித்து பண் இசைத்துப் பாடுவான். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திருக்குறுங்குடி அழகிய நம்பியைப் பாடி சேவித்து வந்தான்.


கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று இரவு அழகிய நம்பியைச் சேவிக்க காட்டுவழியே வரும் வழியில் அவனை பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு “நான் உன்னை உணவாக சாப்பிடப் போகிறேன்” என்றது. அதற்கு நம்பாடுவான், “நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியை சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்” என்று கூற அதை ராட்சசன் நம்ப மறுக்கிறான்.

அதற்கு நம்பாடுவான் “நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பரம பக்தன். நான் பொய்சொல்ல மாட்டேன். வேண்டுமானால் நான் சத்தியம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று பதினெட்டு விதமான சத்தியங்களைச் சொல்லி அனுமதிக்குமாறு நம்பாடுவான் ராட்சசனிடம் மன்றாடுகிறான். ஆனால் ராட்சசன் அவனை விடுவதாக இல்லை. கடைசியாக “நான் திரும்ப வரவில்லை என்றால் வாசுதேவனை விட்டு மற்ற தேவதைகளை வணங்குபவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, நாராயணனைத் தவிர மற்ற தேவதைகளோடு சமமாக நினைப்பவர்கள் பாவத்தை நான் அடையக்கடவது” என்று சத்தியம் செய்ய அவனது விஷ்ணு பக்தியைக் கண்டு ராட்சசன் அவனை அனுப்பி வைக்கிறான்.

ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு, நம்பியைச் சேவித்துவிட்டு ராட்சசனைத் தேடி திரும்ப வரும் சமயத்தில் நம்பாடுவானைச் சோதிக்கும் பொருட்டு அழகிய நம்பி கிழவனாக அவன் முன்னே தோன்றி “இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல்” என்று சொல்ல, “என் உயிரே போனாலும் நான் சத்தியத்திலிருந்து தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் சொல்ல, நம்பி அவன் உறுதியைக் கண்டு அவனுக்கு அருள்புரிந்து மறைகிறார்.

நம்பாடுவான் ராட்சசனைக் கண்டு “என்னை சாப்பிடு” என்று கூற ராட்சசன் மெதுவாக இவனிடம் பேச்சு கொடுக்கிறது. அப்போது எப்படி சாபத்தால் இந்த மாதிரி பிரம்ம ராட்சசனானேன் என்ற கதையைச் சொல்லுகிறது. எனக்கு நீ பாடிய பாடலின் பலனைக் கொடு என்று கேட்க, அதற்கு நம்பாடுவான் மறுக்க, கடைசியாக கைசிக ராகத்தில் பாடிய பாட்டில் பலனையாவது எனக்குத் தர வேண்டும் என்று சரணாகதி அடைய, நம்பாடுவான் சரி என்று பலனைக் கொடுக்க கொடுக்க பிரம்ம ராட்சசன் வீடு பெற்றான் என்று கதை முடிகிறது.

கைசிக நாடகம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர ஆட்சியில் இருந்திருக்கிறது. ‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலில் மால்கேசரி என்ற பெயரில் நம்பாடுவானைக் குறிப்பிட்டு திருக்குறுங்குடியில் நடந்ததாகவே அவ்வரலாற்றைக் கூறியுள்ளார். 1530-1554ல் கைசிக நாடகம் நடைபெறுவதற்கு நிலங்களை தானமாக அளித்துள்ளார் அச்சுதராயரின் இரண்டாவது மனைவி! ஜி.ஆர். வெல்போன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் கைசிக நாடகத்தின் நலிந்த நிலையைக் குறித்து 1969ல் குறிப்பிட்டுள்ளார்.

தொன்றுதொட்டு தேவதாசிகள் திருக்குறுங்குடியில் வடிவழகிய நம்பியின் முன் நிகழ்த்தப்பட்ட கைசிக நாடகத்தை தேவதாசிகள் ஒழிப்பு சட்டத்துக்குப் பிறகு இந்த நாடகம் நலிவுற்றது. அதற்குப் பிறகு இந்த நாடகம் அவல நிலை அடைந்து பயிற்சி இல்லாதவர்களால் நிகழ்த்தப்பட்டு அலங்கோலமாகியது. 90களில் நிகழ்த்தப்பட்ட நாடகம் பழைய நாடகம் மாதிரி இல்லை, வெறும் 45 நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நாடகம் 1997ல் மீண்டும் உயிர்பெற்றது.

image

இந்த நாடகத்தை மீண்டும் மீட்க முதல் முயற்சியாக இந்த நாடக மரபில் வந்த இரண்டு தேவதாசிகள் மட்டுமே திருக்குறுங்குடியில் இருந்தார்கள். ஒருவருக்கு வயது 85, மற்றொருவருக்கு 70. அவர்களின் வாரிசுகள் திருநெல்வேலியிலும், நாகர்கோயிலிலும் குடியேறியிருந்தார்கள். இவர்களை மீண்டும் மேடை ஏற்றத் தயங்கினார்கள். காரணம், ‘தேவதாசிகள்’ என்ற சமூகக் கறை, ஊர் என்ன சொல்லும் என்ற பயமும்.

சே. இராமானுஜம் அவர்கள் தமிழ் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராக இருந்தபோது 1992ல் கைசிக ஏகாதசிக்கு முதல் நாள் இந்த மாதிரி நாடகம் என்று தற்செயலாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் உடனே திருக்குறுங்குடிக்குச் சென்றுள்ளார். நாடகம் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. கைசிகம் என்பது ஒரு ராகத்தின் அடைப்படையாகக் கொண்ட நாடகத்தில் இசை என்பதே இல்லை. வயது முதிர்ந்தவர்கள் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக அங்கே வந்து சென்றார்கள்.

image

பேராசிரியர் இராமானுஜம்... அனிதா ரத்தினத்துடன்

நாடகத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார் பேராசிரியர் இராமானுஜம். 1997ல் பிரபல நாட்டியக் கலைஞர் திருமதி அனிதா ரத்தினத்துடன் எப்படியாவது நாடகத்தை மீட்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்கள். 1999ல் திருக்குறுங்குடி ஜீயர் மடத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த கைசிக புராண நாடகத்தின் ஓலைச் சுவடி ஏட்டுப்பிரதியை நகல் எடுத்துப் பார்த்தபோது பராசர பட்டர் (கி.பி. 1122) (கூரத்தாழ்வானின் திருக்குமாரர், ஸ்ரீராமானுஜரின் சீடர்) எழுதிய வியாக்கியானத்தின் அடிப்படையில் மணிப்பிரவாள நடையை ஒத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மரபு வழி வந்தவர்களைக் கொண்டு அபிநயம் பிடிக்கச் செய்து, ஓலைச்சுவடியில் உள்ள பாடல்கள், உரையாடல்களைக் கொண்டே மரபுரீதியான வடிவத்தில் மீண்டும் வடிவழகிய நம்பி முன் உயிர்பெறச் செய்திருக்கிறார்கள்.

image

நாடகம் - பழைய படம்

அன்று இரவு 9.30 மணியிலிருந்து காலை மூன்று மணி வரை இந்த நாடகத்தைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நடித்தவர்களின் எனர்ஜி லெவல் அபாரம். மிகக் கஷ்டமான நடையாக இருந்தாலும் எங்கும் மறக்காமல் நடித்தார்கள். நாடகத்தின் நடுவே நாடக மேடை பின்புறம் சரிந்து, கூடவே கலைஞர்கள் விழுந்துவிட, சில நிமிடங்களில் நாடக மேடையைச் சரி செய்து, மீண்டும் நடிக்கத் தொடங்கினார்கள். இந்த நாடகத்தை மீட்டெடுத்த பேராசிரியர் சே. இராமானுஜம், அனிதா ரத்தினம் பாராட்டுக்குரியவர்கள்.

image

கைசிக புராணம்... ஒலை சுவடி பிரதி

கைசிக என்பது ஒரு ராகத்தின் பெயர். நம்பாடுவானின் கவிதை வரிகளில் ‘மெய், மலகிரி, காந்தாரம், துரையா, நாட்டை, தனாசு, கொல்லி, துத்தம், வசந்தா போன்ற கரையா கீதம் பல பாடி கைசிகமும் பாடினேன்’ என்பதால் கைசிகம் ஒரு ராகத்தின் பெயர் என்று தெரிகிறது. கர்நாடக சங்கீதத்தில் பைரவி ராகம் என்கிறார்கள்.

image

நம்பாடுவான் என்ற பெயர் கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ‘பட்டர்’ அவர் உரையில் தந்துள்ளதாகத் தெரிகிறது. வராக புராணத்தில் ‘பாடுவான்’ என்றுதான் குறிப்பு இருக்கிறது ‘நம்பெருமாள்’, ‘நம்மாழ்வார்’ ‘நம்பிள்ளை’ ‘நம் ஜீயர்’ வரிசையில் பாடுவானை ‘நம்-பாடுவான்’ என்று முதல் முதலில் பட்டர் தான் அழைத்துள்ளார் என்று தெரிகிறது.

தூய்மையான பக்தியுடன் எவனொருவன் மஹா விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறானோ அவனே ஸ்ரீவைஷ்ணவன். சரணடைந்த பின் எக்குலத்தவராயினும் அவனிடம் குல வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம்.

திருப்பாணாழ்வார், நம்பாடுவான் வாழ்க்கை வரலாற்றில் இது மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர்ஆகில், நொடிப்பது ஓர்அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்; அரங்க மா நகருளானே!’
என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். இதன் அர்த்தம்,

நான்கு வேதங்கள், ஆறு வேதாந்தங்களையும் மனப்பாடம் பண்ணி, அவற்றின் பொருள்களையும் அறிந்து, போற்றப்படும் பிராமணர்களாக இருந்தாலும் அடியார்களை குலத்தைக் கொண்டு நிந்தனை செய்தால் அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சண்டாளர்களாக அறியப்படுவார்கள் என்கிறார்.

நம்மாழ்வார் இதையே,


‘குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்
டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடி
யார்எம் அடிகளே.’

image

நான்கு குலங்களிலும் தாழ்த்தப்பட்டு மிகவும் இழிவாகக் கருதப்பட்டு மனித வாழ்க்கையில் கடைசியில் வரும் சண்டாளர்களுக்கும் சண்டாளர்களாக இருப்பினும், அவர்கள் வலப்புறத்தில் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் மணிவண்ணனான திருமாலின் அடியார்களாகில் அவர்களுக்கு அடியவர்களாக இருப்போம் என்கிறார்.

இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் இன்னும் ஒரு படி மேலே சென்று,
‘பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே’

என்ற பாசுரத்தில் பெருமாளுக்கு அடிமை செய்துகொண்டு இருப்பதைக் காட்டிலும் ஓர் அடியாருக்கு அடிமை செய்துகொண்டு இருப்பது ஏற்றம் என்கிறார்.

நாடகம் முடித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்தபோது மழை தூறிகொண்டு இருந்தது.

உதவிய நூல் பட்டியல்:
கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல் - காலச்சுவடு பதிப்பகம்.
கைசிக புராணம் - ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடு.
கைசிக புராணம் - பட்டர் வ்யாக்யானத்துடன் - வானமாமலை மடம் வெளியீடு.
கைசிக புராண நாடகத்தில் இசை - இ. முகுந்தன் எம்.ஏ ஆய்வுக் கட்டுரை.

- சுஜாதா தேசிகன்

நன்றி: வலம் 2018 ஜனவரி இதழ் படங்கள் : நாடக படங்கள் - சுஜாதா தேசிகன், மற்றவை இணையம்.

Comments

  1. This s a SOOPER effort to coordinate everything in a subtle manner . HATS OFF . LOVE & Blessings to you Dear DESIKAN .my lovely brother s' son

    ReplyDelete
  2. Hare Krishna, known story long g back from my grandmother, renewed meanings and explanation by 'Nam' Desikan. Long live with good health Ramanujam varadan

    ReplyDelete

Post a Comment