Skip to main content

முனிவாகன போகம்

 முனிவாகன போகம் - திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்



ஸ்வாமி தேசிகன் திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானுக்கு ’முனிவாகன போகம்’ என்ற ஆச்சரியமான உரையை அருளியிருக்கிறார். ‘முனிவாகன போகம்’ என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கலாம்.

முதலில் முனிவாகனம்

அமலனாதிபிரானுக்கு இரண்டு தனியன்கள் இருக்கிறது

பெரியநம்பிகள் அருளிய ‘‘ஆபாதசூட மநுபூய’ என்று தொடங்கும் தனியனில் “முநிவாஹநம்’ என்ற வார்த்தை வருகிறது. லோக சாரங்க மஹாமுநியை வாகனமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை மனசாலே துதிக்க வேண்டும் என்கிறார்.

அடுத்து திருமலை நம்பிகள் அருளிச்செய்த தனியனில் ‘முனியேறித் தனிபுகுந்து’ என்று இதிலும் லோகஸாரங்க முனிவரைத் தனது வாகனமாகக் கொண்டு என்ற அர்த்தத்தில் வருகிறது. அடுத்த ‘தனிபுகுந்து’ என்ற வார்த்தை மிக முக்கியம். அதிலிருந்து தான் போகம் என்ற வார்த்தை வருகிறது.

தனிபுகுந்து - பெரிய பெருமாளுடைய அனுபவம் என்னும் உயர்ந்த ’போகம்’ பெற்றார் ஆழ்வார் என்கிறார்கள் பூர்வாசாரியார்கள்.

இப்போது ’போகம்’ என்ற வார்த்தையைக் கொஞ்சம் ஆராயலாம்.

போகம் என்பதற்கு சரியான தமிழ், ஆங்கில வார்த்தை இல்லை. Pleasure, happiness; இன்பம் என்று வார்த்தைகள் இரண்டு அடி தள்ளியே நிற்கிறது.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தைப் போகம் என்கிறார்கள். வயதாக வயதாக நம் மோகத்துக்கு ஏற்றார் போல் போகம் மாறுகிறது. ஆழ்வார்களுக்கு பெருமாளை அனுபவிப்பதே போகம்!

திருப்பாணாழ்வாருக்கு இந்த அனுபவம் எப்படிக் கிடைத்தது ?

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில்
“உன் அடியார்க்கு- ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!” என்று அரங்கனை எழுப்பிவிடப் பெரிய பெருமாள் எழுந்துகொண்டு திருப்பாணாழ்வாருக்கு ‘அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்' என்று பெரிய பெருமாளின் “பாதம் வந்து” ஆழ்வாருக்குப் போக்கியத்தைக் கொடுத்தது.

பெருமாளை எப்படி உணர முடியும் ? பொதுவாகப் பார்க்கும், கேட்கும் உணர்வதைத் தான் பெருமாளுடன் உவமை கூறுவோம்.

ஆழ்வார்கள் வாசனையிலும் பெருமாளை உணர்கிறார்கள். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் திருக்கண்ணபுரம் பத்து பாசுரங்களிலும் துழாய் மாலை வாசனையை அனுபவிக்கிறார்.

அதில் ஒரு பாசுரத்தை இங்கே பார்க்கலாம்.

ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி, நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவப் பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து, ஊதாய் கோல் தும்பீ!

தும்பியே, அழகு மலர்களில் திரிந்து பெற்ற நலம் என்ன ? திருக்கண்ணபுரத்து பெருமான் சூடிய திருத் துழாய் மாலையில் படிந்து வந்து அந்த வாசனையை என்னிடம் ஊதுவாய்.

ஆண்டாள் பெருமாளின் திருவாய் எப்படி மணக்கும் ”கற்பூரம் போல் மணக்குமா ? அல்லது தாமரைப் பூப்போல வாசனை வருமா ? என்று கண்ணனின் உதடுகளுடன் நெருங்கிய உறவு உள்ள சங்கத்திடம் கேட்கும் பாசுரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப் பவளக் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண்சங்கே!

பெருமாளின் உதடு என்ன மாதிரி வாசனை அடிக்கும் என்பதற்கு பெரியவாச்சான் பிள்ளை திருப்பாணாழ்வார் பாசுரத்தை விடையாகத் தருகிறார்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன்* என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே.

இதன் உரையில் கூரத்தாழ்வான் சுந்தர பாஹுஸ்வத்தில் யசோதைப் பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்னும் அழகர் திவ்விய கன்னங்களில் இருப்பது போல வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் ”வெண்ணெய் உண்ட வாயில்” வரும் என்று அனுபவிக்கிறார்.

இதைவிட என்ன போகம் வேண்டும் !

- சுஜாதா தேசிகன்
கார்த்திகை ரோகிணி
திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
படம்: இல்லத்தில் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சேவை சதித்தபடி

Comments