Skip to main content

வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்களை இதுவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. கடந்த வருடம் (2021) சந்தி பிரித்த நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சில சந்தேகங்களுக்கு விடை தேடும் பொருட்டு அவரைத் தொலைப்பேசியில் தொந்தரவு செய்தபோதெல்லாம் வெள்ளம் போல வைணவம் சம்பந்தமாக பல விஷயங்களை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார். கடந்த வருடம் தான் அவருடன் பரிச்சயம் என்றாலும் அவர் எழுத்து எனக்குக் கடந்த இருபது வருடங்களாகப் பரிச்சயம்!


இருபது வருடத்துக்கு முன் புத்தகக் கண்காட்சி ஒன்றில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போது 'திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள்' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இன்றைய புத்தகங்கள் போல் கவர்ச்சியான அட்டைப்படம் இல்லாத சாதாரண புத்தகம் போல் காட்சி அளித்தது. கையில் எடுத்துச் சில பக்கங்களைப் படிக்க ஆரம்பித்த போது அசாதாரண படைப்பாக, பிரமிப்பை ஏற்படுத்தியது.


பிரமிப்புக்கான காரணத்தைக் கூறும் முன் இன்றைய கணினி உலகில் ‘பிக்-டேட்டா' (big data) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு விஷயங்களைச் சேமித்து, சேமித்த தரவுகளைக் கொண்டு நீங்கள் என்ன கேட்டாலும் உடனே அதிலிருந்து பகுப்பாய்வு செய்து உங்களுக்கு வேண்டியதைக் கூறுவது. இதற்குச் சிறந்த உதாரணம் இன்றைய (Google) கூகுள்.


ஆனால் கூகுளிற்குத் தமிழ் இலக்கியங்களில் பகுப்பாய்வு செய்து தர இயலாது. என்றாவது கூகுள் தமிழை முழுமையாகக் கற்றுக்கொண்டாலும் அதனால் இதைச் செய்ய முடியாது. அதைச் செய்யக் கூகுளிற்குத் திருமங்கை ஆழ்வார் கூறுவது போல, ‘காதல் ஆதரம் கடலினும் பெருக'த் தமிழ் இலக்கியங்கள் மீது பற்றும், காதலும் தேவை. அது நம் பேராசிரியருக்கு இருக்கிறது.


உதாரணமாக ஆழ்வார் பாசுரங்களில் கடவுள் வாழ்த்து குறித்துப் பேராசிரியர் அவர்கள், 'சங்க இலக்கியங்களில் கடவுள் ( வாழ்த்து' என்ற தலைப்பில் தொல்காப்பியத்தில் தொடங்கி, முருகாற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம், திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கு, ஆழ்வார் பாசுரங்கள் என்று தான் பகுத்துணர்ந்த பல்வேறு விஷயங்களைப் படித்துத் தன்னுள் சேமித்து அதன் தரவுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்து நமக்கு அளித்துள்ளார். தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக வைணவத்தின் ‘பிக்-டேட்டா' என்று அவரைக் கூறினால் மிகையாகாது.


சைவ, வைணவம் சார்ந்த நூல்களினால் தமிழ் இலக்கியம் பெரும் வளத்தைப் பெற்றிருக்கிறது. வைணவத்திற்கு ஒரு பெருமை நாலாயிரத் திவ்ய பிரபந்தமும் அதற்கு ஏற்பட்ட உரைகளும். சைவத் திருமுறைகளுக்கு இம்மாதிரி உரைகள் அமையவில்லையே என்ற ஏக்கம் இன்றும் சைவர்களிடம் உண்டு. ஆழ்வார் பாசுரங்களை இவ்வுரைகளைக் கொண்டு சுவைத்தால், தேனில் ஊறிய பலாச்சுளை போல நாளெல்லாம் நாலாயிரம் படித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் இவ்வைணவ உரைகளைப் படிப்பதில் சில சவால்கள் இருக்கின்றன.


முதலாவது, உரைகள் வைணவத் தமிழில் அமைந்தவை. அதாவது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பவை. புரிந்து கொள்ள ‘அறியக் கற்று வல்ல' வைணவப் பெரியோர்களை நாட வேண்டும்.


இரண்டாவது அதில் கூறப்பட்டிருக்கும் சில நாட்டார் கிராமிய வழக்குகள் மற்றும் வைணவ ஆசாரியர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு ஆழ்வார் பாசுரங்களுக்கு விளக்கம் அளிக்கும் ஐதிகங்கள் (Anecdote) போன்றவைகள், வைணவப் பெரியோர்கள் பெரும்பாலும் ஐதிகங்களைச் சொல்லிவிடுவார்கள்,


ஆனால் நாட்டார் வழக்குகள், பழமொழி போன்றவற்றை விளக்க அக்கால கிராமிய வாழ்க்கை முறை தெரிந்திருக்க வேண்டும்.


மூன்றாவது ஆழ்வார் பாடல்களைச் சங்க இலக்கிய நூல்களுடன் ஒப்பீட்டு ஆய்வுடன் (comparative study) அனுபவிப்பது தமிழ் இலக்கியம் நன்கு கற்றவர்கள் ‘பக்தி்’ப் பாடல்கள் என்று ஆழ்வார் பாடல்கள், அதன் உரைகள் அருகில் அதிகம் செல்ல மாட்டார்கள். அதே போல் வைணவப் பெரியோர்கள் ஆழ்வார் பாடல்களைக் குறித்துப் பேசும்போது, சங்க இலக்கியத்தை அதிகம் தொட மாட்டார்கள்.


கடைசியாக வைணவம் தொடர்பான பல புத்தகங்களும், கருத்தாடல்களும் விரவியுள்ளன. இதில் எது நம்பத்தகுந்தது (authentic) என்று கண்டுபிடிப்பது மிகக் கடினம்.


மேலே குறிப்பிட்டுள்ள இச்சவால்களை முறியடிக்க ம.பெ. சீனிவாசன் போன்ற அறிஞர்கள் ஏன் நமக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைச் சில சான்றுகளுடன் கீழே தந்துள்ளேன்.


வைணவ உரைகளின் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் பெரியவாச்சான் பிள்ளை உரைகளில் 'கண்ணாஞ் சுழலை இட்டு என்ற தொடர் ஒன்று வரும். திருமங்கை ஆழ்வார் மடல்கள் ‘கண்ணாஞ் சுழலை இட்ட பிரபந்தம்' என்று கூறுவர். இதற்குப் பொருள் எங்கும் காணக் கிடைக்காது. பல உரைகளில் இந்தச் சொல் அப்படியே கையாளப்பட்டு, நாமும் அதை அப்படியே பொருள் தெரியாமல் படித்துக்கொண்டு செல்ல நேரிடும்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 'திருமங்கை ஆழ்வார் மடல்கள்' பற்றி ஆய்வு செய்த போது, ஸ்ரீ வீரராகவ ஐயங்கார் என்ற வைணவப் பெரியாரிடம் அது பற்றிக் கேட்க அவர், 'மூச்சைப் பிடித்தால் முழி பிதுங்கும் நிலை' என்று கூறிய பொருளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை நமக்கும் பகிர்ந்துள்ளார். இவ்வாறே பல சொற்களுக்கும், தொடர்களுக்கும் ம.பெ.சீ. கட்டுரைகளில் விடை கிடைக்கும்.


வைணவ உரைகளில் ஆசாரியர்கள் கூறியதை அவருடைய சிஷ்யர்கள் ஓலையில் எழுதுவதைப் 'பட்டோலை கொள்ளுதல்' என்று கூறுவர், பேராசிரியர் தம்முடைய 'பனையோலை காட்டும் பண்பாட்டுக் கூறுகள்' என்ற கட்டுரையில் ஒளவையில் தொடங்கி, அகநானூறு, கல்வெட்டு, சோழர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட சொற்கள், நம்மாழ்வார், நாச்சியார் திருமொழி என்று பல


சான்றுகளை நமக்குக் கொடுக்கிறார். இதில் பட்டோலை மட்டும் இல்லாமல் அந்தக் காலத்தில் இருந்த வெள்ளோலை, பிடி ஓலை என்று பல ஓலைப் பெயர்களைத் தெரிந்துகொள்ளலாம்.


1996-இல் என்று நினைக்கிறேன், எழுத்தாளர் சுஜாதாவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது 'நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்’ என்ற பெரியாழ்வார் பாசுரத்தின் கடைசியில் "பண்டன்று பட்டினங் காப்பே" என்ற வாக்கியத்துக்குச் சரியான அர்த்தம் என்ன என்று தேடிக்கொண்டு இருக்கிறேன் என்றார். வைஷ்ணவ உரைகளோடு, சில அறிஞர்களையும் அவர் நாடினார். நானும் அவருக்காகத் தேடினேன். கிடைத்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. சமீபத்தில் பேராசிரியரின் 'பொதுக்குளத்து நீர்' என்ற கட்டுரையில் ‘பண்டன்று பட்டினங்காப்பு' என்ற சொற்றொடர் முத்தொள்ளாயிரத்தில் காணப்படும் ஒரு பழமொழி என்று தெரிந்த போது வியந்தேன்.


நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்-தியாமத்து வண்டொன்று வந்தது, வாரல் பனிவாடாய்! பண்டன்று பட்டினங் காப்பு.


சோழனிடம் காதல் கொண்ட பெண் ஒருத்தி வாடைக் காற்றைப் பார்த்து இப்படிப் பேசுகிறாள். ‘அவன் தூது அனுப்பிய வண்டு இப்போது தான் வந்தது. நலங்கிள்ளி என்னை நாடி வரப்போகிறான். பட்டினம் இப்போது காவலுடையதாகிவிட்டது. அது முன்போல் அன்று. அதனால் வாடைக் காற்றே! வராதே, ஓடிப்போ! என்றாளாம்.


பட்டினம் என்பது ஊரைக் குறிக்கும், உதாரணம் சென்னைப் பட்டினம், பண்டன்று - பண்டைக் காலம்/முன்னொரு காலம் என்ற பொருளில் வருகிறது. உதாரணம் ஆண்டாள் பண்டொரு நாள் என்கிறாள். நாமே சில சமயம் ஒருவனைப் பார்த்து, 'ஜாக்கிரதை, அவன் முன்பு போல இல்லை' என்ற சொற்றொடர்களை உபயோகிப்போம்.


நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின்; மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார். பைக் கொண்ட பாம்பு-அணையோடும் பண்டன்று பட்டினம் காப்பே.


பெரியாழ்வார் தன் உடலையே பட்டினமாக உருவகப்படுத்தி, “திருமால் பாம்பணையோடு வந்து என்னிடத்தே பள்ளி கொண்டதால்


என்னைப் பற்றிநிற்கும் நோய்களே! இனி உங்களுக்கு இங்கே இடமில்லை, ஓடிப் போய்விடுங்கள்! முன்போலன்று பட்டினம் இப்போது காவலுடையதாகிவிட்டது!' என்று ‘பண்டன்று பட்டினங் காப்பே!' என்ற பழமொழியை ஒன்றுக்கு ஒன்பது முறை பயன்படுத்தியுள்ளார் என்று படித்தபோது சுஜாதா இதைத் தெரிந்து கொண்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரே என்று தோன்றியது.


பரிபாடலில் திருமாலைக் குறித்து முதல் பாடல், ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர


என்ற அடிகள் ‘திருமாலே! ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடன் நின் திருமுடிமேல் கவிந்து நின்று நிழல் செய்யப்பெற்றாய்..' என்ற பொருள் தருகிறது. இதைப் 'பரிபாடல் திறனுரை'யில் சுட்டிக் காட்டும் பேராசிரியர் இது குலசேகர ஆழ்வாரின்,


இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்க ளார்ந்த அரவரசப் பெருஞ்சோதி


என்ற அடிகளுடனும், பொய்கையாழ்வார் அருளிய ‘சென்றால் குடையாம்' என்ற பாசுரத்துடனும் ஒப்பிட்டு, நம் அனுபவங்களைத் தூண்டி விடுகிறார்.


‘ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுஇலா அடிமைசெய்ய வேண்டும் நாம்...' என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைக் குறித்துக் கூறும்போது, ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் இத்திருவாய்மொழியைப் பாடத் தொடங்கினால் ‘ஒழிவில் காலம் எல்லாம்; காலம் எல்லாம்; காலம் எல்லாம்' என்று இவ்வாறு நெடு நேரம் பாடி மேலே பாடமாட்டாமல் அவ்வளவிலேயே முடித்துவிடுவாராம்' என்ற தகவலைப் போகிற போக்கில் நமக்குத் தருகிறார்.


ஸ்ரீராமானுஜரின் வாழ்கை வரலாறு குறித்துப் பல புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ் என்று பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. சிறந்தது எது என்பதைக் காட்டிலும் எது நம்பகத்தகுந்தது(authentic) என்று ஆராய்ந்து படிப்பது மிக முக்கியம். உதாரணமாக ஸ்ரீராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் தாம் கேட்ட உபதேசத்தைக் கோபுரத்தின் மீது ஏறி எல்லோருக்கும் உபதேசித்தார் என்ற நிகழ்ச்சியைப் பலர் கூறிக்கொண்டு இருப்பதாலும், அதைப்


பலர் எழுதிவருவதாலும் அது மெய் போல நம்பப்படுகிறது. ஆனால் வைணவ குருபரம்பரையில் அப்படிச் சொல்லப்படவில்லை என்ற செய்தி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.


பேராசிரியர், ‘ஸ்ரீஇராமாநுசர்’ என்ற தன் புத்தகத்தில் வைணவ குருபரம்பரையைத் தழுவி எழுதிய பகுதி இது:


"பிரணவத்தின் முழுப் பொருளையும் எட்டெழுத்தின் விரிபொருளையும் விளக்கிக்கூறினார் நம்பி. விளக்கம் பெற்றது தான் தாமதம்; விரைந்து எழுந்தார் இராமாநுசர். தம்மை மறந்தார்; தம் ஞானாசிரியரான திருக்கோட்டியூர் நம்பிகள் தமக்கிட்ட கட்டளையையும் மறந்தார். அவ்வூர்க் கோயிலிலே தெற்காழ்வான் (நரசிங்கப் பெருமான்) திருவோலக்கத்தில், 'சேர வாரும் செகத்திரே’ என்று மக்களைக் கூவியழைத்து, நம்பியுரைத்த மறைப் பொருளை யெல்லாம் அவர்கள் முன்னே வெளியிட்டார். பலமுறை நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தை சீரிய நற்பொருளை) அவர்கள் உய்யும் பொருட்டுப் பெருங்கருணையுடன் உபதேசித்தார்” என்று உணர்ச்சியையும், வரலாற்று உண்மையையும் ஒருங்கிணைத்து நமக்குத் தருகிறார்.


பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது அவருடைய முன்னுரைகள் எல்லாம் ஆய்வுரைகளாகப் பேராசிரியர் மு.இராகவையங்காரின் கட்டுரைகளை நினைவுபடுத்தும். உதாரணமாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆய்வுப் பதிப்பின் நீண்ட முன்னுரையும், பள்ளத்தூர் பழ.பழனியப்பன் உரை செய்த நம்மாழ்வார் பிரபந்தங்களுக்குத் தந்துள்ள நீண்டதொரு ஆய்வுரையும் இதற்குச் சான்று.


நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் சீர்மையும், அதற்கு ஏற்பட்ட உரைகளின் வளமையும் உணர்ந்து, பல இலக்கியங்களிலிருந்து வகை தொகைப்படுத்தி நமக்கு அவர் அளித்துள்ள எழுத்துகள் தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் வைணவத்துக்கும் அளித்துள்ள கொடை.


பேராசிரியர் அவர்களின் 80ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் விதமாக 'என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி' இந்தச் சிறு கட்டுரை எழுத வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றிகள். மேன்மேலும் இவரது நன்முயற்சிகள் சிறக்கவும், 'நீங்காத செல்வம் நிறைந்து' நீடு வாழவும் ஆழ்வார்களின் திருவடிகளைப் பிரார்த்திக்கிறேன்.-சுஜாதா தேசிகன்.

2022 


ஈரத்தமிழ் பேசும் குரல் - ம.பெ.சீயின் எழுத்துகள் : எழுத்து - ஆய்வு என்ற புத்தகத்தின் இடம்பெற்ற என் கட்டுரை.

Comments