2. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை - கனவில் தோன்றிய பாலகன்
தொண்டை நாடு கரும்பு விளைச்சலுக்குப் பெயர் போனது. கரும்பு போன்ற சுவைமிக்க பொய்கை ஆழ்வார், ராமானுஜர்,திருக்கச்சி நம்பிகள், எம்பார், அப்புள்ளார் மற்றும் நம் தேசிகனை பெற்றுத் தந்த நாடு.
தொண்டை நாட்டின் தலைநகர் கச்சி நகர் என்ற காஞ்சிபுரம். முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று. அங்கே திருத்தண்கா (தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை) திவ்ய தேசத்தில் தீபப்ரகாசர் சந்நிதி உள்ளது. அழகிய தமிழில் விளக்கொளிப் பெருமாள் !
விளக்கொளி பெருமாள் சந்நிதி அருகில் உள்ள அக்ரஹாரத்தின் பெயர் ‘தூப்புல்’(1)
இங்கே ஸ்ரீராமானுஜர் நியமித்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான அனந்த ஸோமாஜியார் வாழ்ந்துவந்தார். அவருடைய குமாரர் புண்டரீகாஷதீக்ஷிதர். அவருக்கு குமாரர் அனந்தசூரி ஒரு வேதவிற்பன்னர். பகவத் கைங்கரியபரராய் விளக்கொளி பெருமாளுக்கு கைங்கரியம் செய்துவந்தார். விவாகப் பருவத்தை எட்டியதும், மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஞானியான அப்புள்ளாரின்(2) தங்கையான தோதாரம்பாவை விவாகம் செய்துகொடுக்க வேண்டினார். அப்புள்ளாரும் மனம் உகந்து பேரருளாளன் ஆசீர்வாதத்துடன் தசரதர் ஸ்ரீராமனுக்கு சீதையை விவாகம் செய்து கொடுத்தது போல அனந்தசூரிக்கு தோதாரம்மாவை கன்னிகாதானம் செய்துகொடுத்தார்.
பகவத் பாகவத கைங்கரியம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இத்தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு கிட்டவில்லை. ஒரு நாள் அனந்தசூரியின் கனவில் திருவேங்கடமுடியான் தோன்றி “உமக்கு மக்கட்பேறு தருகிறோம் திருமலைக்கு வாரும்” என்று அழைக்க அதே சமயம் சுமங்கலிப் பெண் ஒருத்தி “திருமலைக்கு வா!” என்று தோதாரம்மாவின் கனவிலும் கூறினாள்.
மறுநாள் விடியற்காலை தம்பதிகள் இருவரும் தாம் கண்ட கனவு குறித்து ஒருவருக்கு ஒருவர் கூறி, அதிசயித்து, மகிழ்ச்சியுடன் திருமலைக்கு யாத்திரையாகப் புறப்பட்டார்கள்.
இரவு ஓர் இடத்தில் சயனித்தார்கள். அன்றிரவு மீண்டும் ஒரு கனவு கண்டார்கள்.
பொன் போன்ற, நீல ரத்தினம் போன்ற மிகுந்த பேரொளியோடு ஒரு பாலகன் கோயிலிலிருந்து புறப்பட்டு, தம்பதிகளிடம் வந்து “உமக்கு அதி அற்புதமான ஒரு பிள்ளையைத் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூற அனந்தசூரி “அடியேன்” என்று கையேந்த, அந்தப் பாலகன் ’மா மணி’ போலப் பிரகாசிக்கும் திருமணியை அவர் கையில் கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்ட அனந்தசூரி தன் மனைவியிடம் கொடுக்க, அதைத் துளசி பிரசாதம் போல வாங்கி வாயில் போட்டு விழுங்கிவிட்டாள்.
மறுநாள் காலை அத்தம்பதிகள் தாம் கண்ட கனவு குறித்து ஒருவருக்கு ஒருவர் சொல்லி மகிழ்ந்தார்கள். அருகில் இருந்தவர்கள் இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார்கள்.
இது நிகழ்ந்துகொண்டு இருந்த சமயம், திருவேங்கடவன் சந்நிதிக் கதவைத் திருவாராதனத்திற்கு அர்ச்சகர் திறந்து திகைத்து நின்றார். காரணம் கோயில் மணியைக் காணவில்லை!
கோயில் அதிகாரிகளிடம் இச்செய்தி சென்றது. அதிகாரிகளுக்குக் கைங்கரியம் செய்யும் அர்ச்சகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டு அவர்களைத் தண்டிக்க ஆயத்தமானார்கள். அச்சமயம் கோயிலுக்குள் திருமலை ஜீயர் அங்கே எழுந்தருளி “திருவேங்கட முடியான் தமது திருமணியை ஒரு தம்பதிகளுக்குக் கொடுத்ததாக கனவு கண்டோம்” என்று கூறினார். இதைக் கேட்ட கோயில் அதிகாரிகள் அனந்தசூரி தம்பதிகளை வரவழைத்து விவரத்தைக் கேட்டார்கள். அவர்களும் தங்கள் கண்ட கனவைக் கூற, அதிகாரிகள் வியந்து, அர்ச்சகர்களைத் தண்டிக்காமல் விட்டார்கள்.
அனந்தசூரி தோதாரம்மா தம்பதிகள் ”அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா.. அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!” என்று ஸ்ரீநிவாசனை திருவடி முதல் திருமுடிவரை
மனம் உருகி பிராத்தித்து, தீர்த்த பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு பெருமாள் கோயில் வந்தடைந்தார்கள்.
கனவு கண்ட அன்றிலிருந்து தோதாரம்மா கர்ப்பவதியானார்.
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் திருத்தண்கா பெருமாளை இப்படி வர்ணிக்கிறார்.
பொன்னை, மா மணியை, அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை, எம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே
பொன் போன்ற, நீல ரத்தினம் போன்ற விலைமதிப்பற்ற அழகிய, மின்னல் போன்ற பேரொளியோடு கூடிய அழகிய எம்பெருமானை நேற்று திருவேங்கட மலை உச்சியில் கண்டேன். இன்று அதே எம்பெருமானை திருத்தண்காவில் வணங்குகிறேன் என்கிறார்.
ஆழ்வார் வாக்கு என்றும் பொய்க்காது . திருமங்கை ஆழ்வார் திருவேங்கட உச்சியில் பார்த்த அந்த ‘மா மணி’ யே ஸ்வாமி தேசிகனாக திருத்தண்காவில் அவதரித்தார்!
(1) ’தூப்புல்’ என்பது தூய புல் என்பதைக் குறிக்கும். இங்கே விஸ்வாமித்ர கோத்திரப் பெரியோர்கள் வாழ்ந்து வந்தால் இப்பெயர் ஏற்பட்டது. (விச்வாமித்திரம் - தர்ப்பம்; பவித்திரம் என்று பொருள், அதுவே தமிழில் தூய புல்; நம் தேசிகனும் இந்த குடியில் அவதரித்தார் அதனால் தான் ’சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்’ என்று போற்றுகிறோம்
(2) உடையவரின் பரிபூரண கடாக்ஷத்தைப் பெற்ற திருக்குருகைப் பிள்ளான் போன்ற மேதாவியாக இருக்க “அப்பிள்ளானோ இவன்?” என்று எல்லோரும் கேட்க, அப்புள்ளார் என்று அழைக்கப்பெற்றார். கிடாம்பி ஆச்சான் ஸ்ரீராமானுஜர் மூலம் பெற்ற ரகசிய அர்த்தவிசேஷங்களைப் அப்புள்ளாருக்கு உபதேசித்தார். நடாதூர் அம்மாளிடம் ஸ்ரீ பாஷ்யத்தைக் கற்றுணர்ந்தார்.
- சுஜாதா தேசிகன்
படங்கள் உதவி : ஸ்ரீகேஷவ்.
1.10.2023
Superbly written. Amazing Vyakyanam of Appullar. Dhanyosmi. Adiyen 🙏🙏🙏🙏
ReplyDeleteஎம்பெருமானார் திருவடிகளே சரணம் ...
ReplyDeleteSuperb ! Your reference to Thirumangai azhwars pasuram apt
ReplyDeleteபலமுறை இந்த கோவிலுக்கு சென்றுளேன். ஒருவரி கதையாக எனக்கு தெரியும். இன்று முழுதும் தெரிந்துகொண்டேன். மேலும், காஞ்சியில் உள்ள மற்ற திவ்ய தேசங்கள் பற்றியும் எழுதவும். 16 அல்லது 17 திவ்ய தேசங்கள் உள்ளது என நினைக்கிறேன். 1996/97 -ஆம் ஆண்டு தொடர்ந்து இந்த காஞ்சி திவ்ய தேசம் சென்றுள்ளேன்.
ReplyDelete