Skip to main content

3. திருமலைமால் திருமணியின் திருஅவதாரம்

3. திருமலைமால் திருமணியின் திருஅவதாரம் 

ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளிய பராசர பகவான் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களைத் தோல்வி  அடையச் செய்து, ‘பராசரர்’ என்று போற்றப்பட்டார். ஸ்ரீராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து குணவான் என்ற பெயர் பெற்றார். கண்ணன் தேவகி வயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து பகவத்கீதையை என்ற உயர்ந்த வேதத்தை அருளினார். 

நம் தேசிகனும் இந்த அவதாரப் புருஷர்களைப் போல் தோத்தாரம்மாவின் திருவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து, விபவ வருஷம் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் , சுக்ல தசமி, புதன்கிழமை திருவேங்கசமுடையானுடைய தீர்த்தவாரி தினத்தில், பெருமாள் கோயிலில், திருவேங்கடமுடையானின் திருமணியாழ்வாரே(1) அதி தேஜஸ்வியான குமாரராக அவதரித்தார். 

இதைக் கேள்விப்பட்ட அப்புள்ளார் ஓடோடி வந்து குழந்தையைக் கண் குளிர கடாக்ஷித்து, அங்கே எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்று குலசேகர ஆழ்வார் ஏங்கித் தவிக்க, இங்கே திருமலைமால் திருமணியின் அவதாரமாக வந்த அந்த குழந்தையை பார்த்து, ‘மணி உருவம் காண்பார் மகிழ்ந்து’ என்று ஆழ்வார் கூறுவது போல,  கண்டு மகிழ்ந்து, தோதாரம்மா பெற்றெடுத்த குழந்தைக்கு ‘வேங்கடநாதன்’ என்று திருவாங்கடமுடையானின் திருநாமத்தையே பெயராகச் சூட்டி, காப்பாக திருவிலச்சினை சாற்றி,  சாஸ்திர முறைப்படி குழந்தைக்கு உரிய காலத்தில் அன்னப்ராசனம், அப்த பூர்த்தியும்(2) நடைபெற்றது.  


அப்தபூர்த்தி அன்று குழந்தையை அழைத்துக் கொண்டு பெருந்தேவி தாயாரைச் சேவித்து, பேரருளாளனைச் சேவிக்கும் போது “நம் இராமானுசனைப் போல் வைணவத் தர்சனத்திற்குப் பொறுப்பேற்க கடவீர்” என்று அர்ச்சகர் மூலம் பேரருளாளன் திருவாய் மலர்ந்து அருள, அத்திகிரி திருமால் நம் குழந்தைக்கு அடைக்கலம் தந்ததை எண்ணி எல்லோரும் சந்தோஷப்பட்டு மகிழ்ந்தார்கள்(3)


மூன்றாம் வயதில் சௌளத்தையும், ஐந்தாம் வயதில் அக்ஷ்ராப்யாஸத்தை செய்து வைத்தார்கள்.  எல்லோரும் இவரைச் செல்லமாக தூப்புல் பிள்ளை என்றே அழைத்தார்கள். 


ஒரு நாள் தூப்புல் பிள்ளையை அழைத்துக்கொண்டு கிடாம்பி அப்புள்ளாருடன் காஞ்சி தேவராஜன் சந்நிதிக்கு புறப்பட்டார்கள்.  அங்கே நடாதூர் அம்மாள் என்ற வைணவப் பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார்.( இந்தப் பகுதியை விரிவாக முதல் பாகத்தில் படிக்கவும்)

அங்கே அம்மாளும் அவரை உச்சி முகர்ந்து குளிரக் காடாக்ஷித்து “உடையவர் முதலான ஆசாரிய முகமாய் வந்த நம் சம்பிரதாய அர்த்த விஷேசங்களை உலகிற்குச் சொல்லப்போகும் அவதாரப் புருஷர் இவரே” என்று பிள்ளையின் கையை பிடித்து அப்புள்ளாரின் திருக்கையுடன் சேர்த்து “எமக்கு வயதாகிவிட்டது, தூப்புல் பிள்ளைக்கு உபதேசிக்கும் பாக்கியத்தை தேவராஜன் அடியேனுக்கு அருளவில்லை! நீரே சகல சாஸ்திரங்களையும், திருமந்திர அர்த்தங்களையும்  நம் தூப்புல் பிள்ளைக்கு பிரசாதித்து அருள வேண்டும். இதுவே நம் உடையவருக்கு உகப்பான செயல்” என்று கூறினார். 

சில காலம் கழித்து அம்மாள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.


குறிப்புகள் 

(1) ஸ்வாமி தேசிகன் ‘சங்கல்ப சூரியோதயம்’ என்ற நாடகத்தை அருளியிருக்கிறார். அதில் முதல் பகுதியில் நாடகத்தை எழுதிய கவியைப் பற்றி ‘ஸுத்ரதாரன்’ என்ற கதாபாத்திரம் மூலமாக ஸ்வாமி தேசிகனே தம்மைப் பற்றிக் கூறுகிறார். அதிலிருந்து சில பகுதிகள் “எம்பெருமானுடைய மணியின் பெருமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா ? தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களின் கும்பல்களுக்குப் பயத்தை உண்டுபண்ணக்கூடியதாகவும், பிரம்மாவினால் திருவாராதனம் பண்ணும்போது பகவானுடைய திருமணி உபயோகப்படுத்தப்படுகிறது. இப்படிப் பட்ட மணி தான் ஸ்வாமி தேசிகனாகிய கவியாக அவதாரம் செய்தது” என்று கூறுகிறார். 

வேதங்கள் திருமணியாழ்வாரின் ஒலியைத் தலைவனாகக் கொண்டவை. ஸ்மிருதி போன்ற வாக்கியங்களில் பேய்களும், அசுரர்களும், பிரம்ம ராக்ஷசர்கள் திருமணியின் ஓசையைக் கேட்டு ஓட்டம் எடுக்கிறது என்கிறது. 

ஸ்வாமி தேசிகனின் வாழித் திருநாமத்தில் “திருமலைமால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே!” என்றும் வருகிறது. 

(2)அப்தபூர்த்தி - அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. முதலாம் ஆண்டு நிறைவு

(3) ’அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்’ என்று ஸ்வாமி தேசிகனே அமிருத ரஞ்சனியில்(18) குறிப்பிட்டுள்ளார்

-சுஜாதா தேசிகன்
8.10.2023
படங்கள் உதவி : ஸ்ரீ கேஷவ்


Comments

  1. It is a bhaghiam to read about swami Desikan presented beautifully and Keshav's pictures.

    ReplyDelete

Post a Comment