வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்களை இதுவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. கடந்த வருடம் (2021) சந்தி பிரித்த நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சில சந்தேகங்களுக்கு விடை தேடும் பொருட்டு அவரைத் தொலைப்பேசியில் தொந்தரவு செய்தபோதெல்லாம் வெள்ளம் போல வைணவம் சம்பந்தமாக பல விஷயங்களை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார். கடந்த வருடம் தான் அவருடன் பரிச்சயம் என்றாலும் அவர் எழுத்து எனக்குக் கடந்த இருபது வருடங்களாகப் பரிச்சயம்! இருபது வருடத்துக்கு முன் புத்தகக் கண்காட்சி ஒன்றில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போது 'திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள்' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இன்றைய புத்தகங்கள் போல் கவர்ச்சியான அட்டைப்படம் இல்லாத சாதாரண புத்தகம் போல் காட்சி அளித்தது. கையில் எடுத்துச் சில பக்கங்களைப் படிக்க ஆரம்பித்த போது அசாதாரண படைப்பாக, பிரமிப்பை ஏற்படுத்தியது. பிரமிப்புக்கான காரணத்தைக் கூறும் முன் இன்றைய கணினி உலகில் ‘பிக்-டேட்டா' (big data) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு விஷய...