ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா பத்து வயது இருக்கலாம். சென்னை ஐஸ் அவுஸ் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பா அழைத்துச் சென்றார். நல்ல கூட்டம். கதவு பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். சுவாரசியமாக எதுவும் இல்லாமல் ஸ்ரீ பக்த மீரா கதையைக் கேட்க ஆரம்பித்தேன். என்னையும் அறியாமல் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. ஒரு விதையை மண்ணில் விதைத்தால் முளைக்காது. முளைவிடத் தண்ணீர் சூரிய ஒளி இரண்டும் தேவை. அது போலத் தான் பக்தியும். நாம் விதைகளாக இந்த உலகில் புதைந்து கிடக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்ற தண்ணீரும், சூரியன் போன்ற பெருமாள் கருணையும் சேர்ந்தால் தான் பக்தி முளைவிடும். கிருஷ்ணப் பக்தி உண்டாவதற்குக் கோடி ஜன்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பக்தி என்பதற்கு definition கோகுலத்துக் கோபிகைகள். இதைப் படிக்கும் போது இன்னும் ஒரு கோடி ஜன்மம் எடுத்து புண்ணியம் செய்ய வேண்டுமே என்று தோன்றும். சுலபமான வழி எதுவும் கிடையாதா ? இருக்கிறது. அது ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்றவர்களின் உபன்யாசத்தைக் கேட்பது. கிருஷ்ணப் பக்தியை என் போன்று பலருக...