Skip to main content

ஆசாரியன் செய்யும் உபகாரம்

 ஆசாரியன் செய்யும் உபகாரம்


மணக்கால் நம்பி லால்குடி அருகில் மணக்கால் என்ற ஊரில் அவதரித்தார். இன்றும் அந்த ஊர் மணக்கால் நம்பி பெயரைக் கொண்டே விளங்குகிறது. அதற்கு முன் அவ்வூருக்கு என்ன பெயர் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஊரை அடியேன் எப்படிக் கண்டுபிடித்தேன் என்று சொல்லுகிறேன்.

சில வருடங்களுக்கு முன் காரில் சென்று கொண்டு இருந்த போது ராட்சச மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் ஓரம்கட்டிய போது மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணக்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர்ப் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன் “மணக்கால் நம்பி அவதார ஸ்தலம்” என்ற சின்ன பலகை கண்ணில் பட்டவுடன் வண்டியைத் திருப்பிச் சென்ற போது கோயில் கதவு பூட்டியிருந்தது. கதவு திறப்பதற்குள் நம்பியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.




உய்யக்கொண்டாரின் பிரதானச் சீடர் மணற்கால் நம்பி இயற்பெயர் “ஸ்ரீராமன்”. உய்யக்கொண்டாரின் மனைவி பரமபதிக்க, அவருடைய திருமாளிகை காரியமெல்லாம் மணக்கால் நம்பியே செய்துவந்தார். உய்யக்கொண்டாரின் இரண்டு சின்ன பெண் குழந்தைகளையும் இவரே பார்த்துக்கொண்டார்.

ஒரு நாள் அந்தக் குழந்தைகளை நீராட்டி அழைத்து வரும் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பதைக் கண்டு அவர்களுடைய கால்கள் சேற்றில் படாமல் இருக்கத் தானே படியாய்க்கிடந்து, அவர்களைத் தன் முதுகிலே கால் வைத்துக் கடக்கச் செய்தார். தம்முடைய குழந்தைகளில் கால் சுவடுகளை அவர் முதுகில் பார்த்த உய்யக்கொண்டார் அவருடைய ஆசாரிய அபிமானத்தைக் கண்டு வியந்து அவருக்கு மணக்கால் நம்பி என்று திருநாமம் சாத்தினார்.

ஆசாரிய சம்பந்தம் இருந்தால் மட்டுமே பகவானால் உத்தாரணம் பண்ண முடியும் என்பதற்கு மணக்கால் நம்பிச் சிறந்த உதாரணம். அவருடைய பெயரே இந்த ஊரின் பெயராக இன்றும் இருக்கிறது.

மணக்கால் நம்பி அவதார ஸ்தலத்துக்குச் சென்ற போது கோயில் பூட்டியிருந்தது. ”அர்ச்சகர் வேலைக்குச் சென்றுவிட்டார்” என்று அவர்கள் வீட்டு மாமி எங்களுக்காகக் கோயிலைத் திறந்துவிட்டார். மணக்கால் நம்பியைச் சேவித்துவிட்டு வரும் வழியில் காவிரியில் தண்ணீர் அலை மோதியது. நீர் பற்றி நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.

குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு*
இழை கொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான்* இருந்தமை காட்டினீர் **
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*அன்று தொட்டும் மையாந்து*
இவள் நுழையும் சிந்தையள், அன்னைமீர்!* தொழும்-அத் திசை உற்று நோக்கியே

மேலே நீங்கள் படித்தது திருவாய்மொழி பாசுரம். திருத்தொலைவில்லி மங்கலத்து பெருமானைக் கண்டவுடன் பராங்குச நாயகிக்கு மழை பெய்தாற் போலக் கண்ணீரானது தாரை தாரையாகப் பெருகியது என்று தோழி சொல்லுவது போல அமைந்த பாசுரம் இது.

பாசுரத்துக்கு எளிய பொருள் - குழையும் மென்மையான ஒளி கூடிய முகமும் உடையவள் ; இவளைத் தொலைவில்லி மங்கலத்துக்குக் கொண்டு அவன் இருப்பைக் காட்டினீர்கள். மீளாத சபலம் உடைய இவள் பெருமானின் சுய ஒளி வீசும் தாமரைக் கண்களின் அழகில் ஈடுபட்டாள். அவன் வடிவழகு கண்டதிலிருந்து மழை நீர் போலக் கண்ணீர் வடிக்கிறாள். தேவபிரான் இருக்கும் திசையையே பார்க்கிறாள்.

இதைப் படிக்கும் போது இப்படி எல்லாம் கண்ணீர் வருமா ? இது எல்லாம் கவிதையில் வரும் மிகைப்படுத்திய உவமை என்று தோன்றும்.

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்குத் தூதுவளைக் கீரையை உபயமாகக் கொண்டு அவரை திருத்திப் பணிகொண்ட அவருக்குப் பகவத்கீதையை விளக்கி எம்பெருமானைக் குறித்து ஆளவந்தாருக்கு உபதேசம் செய்தார். கீதையின் சரமச்லோகத்தை கேட்ட ஆளவந்தார் “எம்பெருமானே உபாயம். அவனைக் காண வழியுண்டா ?” என்றார். மணக்கால் நம்பி ஆளவந்தாரைத் திருவரங்கம் அழைத்துச் சென்று பெரிய பெருமாளைக் காட்டினார். ’காட்டவே கண்ட பாதமாக’ ஆளவந்தார் பெரிய பெருமாளைச் சேவித்த உடனே அவர் கண்ணிலிருந்து தாரை தாரையாகப் பராங்குச நாயகியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது போலப் பெருகியது.


 

பொதுவாகச் சிஷ்யர்கள் தான் ஆசாரியரைத் தேடிப் போவார்கள், அப்படி இருக்க மணக்கால் நம்பி தம் முயற்சியாலே ஆளவந்தாரை ஏற்றது தகுமா ? ஆசாரியனுக்குத் தான் சிஷ்யன் உபகாரம் சமர்ப்பிக்க வேண்டும் ஆனால் இங்கே தன் சிஷ்யராகப் போகிற ஆளவந்தாருக்குத் தூதுவளைக் கீரையை உபகாரமாகக் கொடுப்பது எப்படிப் பொருந்தும் ? சிஷ்யன் தானே ஆசாரியனிடம் உபதேசம் பெற ஆவலோடு வந்து பிரார்த்திக்க வேண்டும் ? நெடுநாள் சோதனை செய்த பின்னர் தகுதியைக் கண்டு ஒருவனைச் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் ? ஆனால் மணக்கால் நம்பி அப்படிச் செய்யாமல் ஆளவந்தாரைச் சிஷ்யராக ஏற்றுக்கொண்டது தகுமா ? என்று ஒரு கேள்விகள் தோன்றும். இதற்கு ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ ஸம்ப்ரதாய பரிசுத்தியில் விளக்கம் கொடுக்கிறார்.

நாதமுனிகள் உய்யக்கொண்டாரிடம் தன் பேரனான ஆளவந்தாருக்கு உபதேசம் செய்யப் பணித்தார். ஆனால் அது உய்யக்கொண்டாரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்தப் பொறுப்பை மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்தார்.

தன் ப்ராசார்யரான நாதமுனிகள் சந்ததிக்குத் தான் ஏதாவது சிறு தொண்டை விரைவில் செய்ய வேண்டும் என்று ஆவல் ஒரு புறம், தன் ஆசாரியரான உய்யக்கொண்டாருக்கு அவருடைய ஆசாரியரான நாதமுனிகள் நியமித்ததைச் செய்யமுடியாமல் திருநாட்டுக்கு எழுந்தருளியது போல வயது முதிர்ந்த தமக்கும் நேர்ந்துவிட்டால் ? என்ற கவலை இன்னொரு புறம் அதனால் ஆளவந்தாரே வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது பயனற்றதாக அவருக்குத் தோன்றியது. அரசர் போன்ற ஆளவந்தாரை அணுகுவதற்குக் கீரையைச் சாதனமாக்கித் தாமே அவரிடம் சென்று ஆவலை உண்டாக்கினார்.

இந்தக் கலியுகத்தில் சாஸ்திரப்படி நெடுங்காலம் சோதனை செய்து உபதேசம் பெறச் சிஷ்யர்கள் அகப்படமாட்டார்கள். மேலும் இந்த யுகத்தில் ஆசாரியன் சிஷ்யனுக்கு நல்லுரை அடிக்கடி கூறி உபதேசத்தைப் பெற அவனுக்கு ஆசையை உண்டாக்க வேண்டும். இது எல்லாம் கலியுகத்தின் தர்மம் என்று சாஸ்திரமே கூறுகின்றது. இவை அனைத்தையும் உள்ளத்துக் கொண்டே மணக்கால் நம்பி ஆளவந்தாரை ஆட்கொண்டார்.

ஸ்வாமி தேசிகன் அதிகாரசங்கிரத்தில் அருளிய பாசுரம் இது.

குறிப்புடன் மேவும் தருமங்கள் இன்றி அக் கோவலனார்
வெறித்துளவக் கழல் மெய் அரண் என்று விரைந்து அடைந்து
பிரித்த வினைத் திரள் பின் தொடரா வகை அப்பெரியோர்
மறிப்பு உடை மன் அருள் வாசகத்தால் மருள் அற்றனமே.

ஆசாரியர்கள் ரகஸார்த்தங்களைச் சேமித்து வைத்திருந்து தாங்கள் பரமபதம் போகும் போது சம்சாரிகள் அனைவரும் அஞ்ஞானம் எனும் அறியாமையானது நீங்கி எம்பெருமான் திருவடிகளில் உய்யுமாறு எண்ணி உகக்க, தகுந்த அதிகாரிகளான சிறந்த சிஷ்யர்களிடம் ஒருகாலும் அழியாத நம் சம்பிரதாயம் என்னும் தீபத்தை ஏற்றிவைத்து உலகமெங்கும் பரவும்படி உபதேசிப்பர் என்கிறார்.


இன்று மணக்கால் நம்பி திருநட்சத்திர நன்னாளில் இந்த வருடம் உடையவர் திருநட்சத்திரம் (25.04.2023) அன்று தித்திக்கும் திருப்பாவை புத்தகம் வெளிவர நம் ஆசாரியர்கள் அனைவரையும் பிராத்திக்கிறேன்.
வரும் வாரங்களில் இதைக் குறித்து கூடுதல் தகவல்களைத் தருகிறேன்.

- சுஜாதா தேசிகன்
6.3.2023
மாசி மகம், மணக்கால் நம்பி திருநட்சத்திரம்

Comments

  1. Best wishes Swamin -Lakshminarayana Dasan 🙏

    ReplyDelete

Post a Comment