Skip to main content

வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்!

 வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்!

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திரு ஆறுமுகம் என்பவர் பதம் பிரபந்தப் புத்தகம் ஒன்று வேண்டும் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். விவரங்களை அனுப்பினேன். புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு அடியேனிடம் தொலைப்பேசினார்.
அவர் திருப்பூரில் வெள்ளகோவில் என்ற இடத்தில் மருத்துவர்; வயது எழுபத்து ஐந்து, அவர் கூறிய விஷயத்துக்கு முன் திருக்கண்ணமங்கை ஆண்டான் குறித்து ஒரு விஷயத்தைப் பார்த்துவிடலாம்.

திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஆசாரியர், தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அவர் எம்பெருமானுக்குக் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார்.

நம்மாழ்வார் திருவாய்மொழி ( 9.2.1 ) ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலைச் சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. நம்மாழ்வார் பாவம் தொலையக் கைங்கரியம் செய் என்கிறாரே என்று நமக்குச் சந்தேகம் வரும். நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் இந்த பாசுரத்துக்கு திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி ஒரு சுவையான குறிப்பைத் தருகிறார்.

ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளைப் பெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் திருக்கண்ணமங்கை ஆண்டான். கூடப் படித்த நாத்திக நண்பர் இவர்க் குப்பைகளைப் பெருக்கித்தள்ளிக்கொண்டு இருப்பதைப் பார்த்து ஏளனமாக “பகவான் உபாயம் என்று வேறு பயன் கருதாத நீர் ஏன் குப்பையைச் சுத்தம் செய்ய வேண்டும் ? இதனால் என்ன பயன் ?” என்று கேட்க அதற்கு ஆண்டான் சுத்தம் செய்த இடத்தையும், செய்யாத இடத்தையும் காட்டி ”இந்த இரண்டு இடத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதல்லவா அது தான் அதனுடைய பயன்” என்றாராம்.

ஆண்டான் செய்தது கைங்கரியம். கைங்கரியம் பயனற்றது என்று கருத முடியாது. சில பயன் கண்ணுக்குத் தெரியும் - சுத்தம் செய்த இடம் போல. சுத்தம் செய்த இடம் பார்ப்பதற்கு இனிதாக இருப்பது தான் பயன். அது போலத் தான் கைங்கரியமும். கோயில் அலகிடுதல் ( சுத்தம் செய்வது ), கோலம் போடுவது, விளக்கு ஏற்றுவது எல்லாம் கைங்கரியம் தான். ஒரு சின்ன விதி கைங்கரியம் செய்துவிட்டு எதையும் எதிர்ப்பாக்கக் கூடாது. எதையும் எதிர்பார்த்து கைங்கரியத்தைச் சாதனமாகச் செய்யாமல், ஒன்றும் எதிர்பார்க்காமல் செய்தால் அதுவே கைங்கரியம் !

டாக்டர் ஆறுமுகம் கூறிய விஷயம் சுருக்கமாக:


 

திருச்சி- கோவை சாலையில் அமைந்துள்ள வெள்ளகோவில் நகரில் மூலனூர் சாலைப் பிரிவில் அருள்மிகு ஸ்ரீதேவி பூமாதேவி சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

கிருஷ்ண தேவராயர் அல்லது ராணி மங்கம்மாள் காலத்தில் திருக்கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். கோவில் 300 அல்லது 400 வருடம் பழைமையானது. 

இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சாலை ஓரமாக உள்ளது. சாலை மேம்படுத்தும் பணியின் போது உயர்த்தப்பட்டதால் இக்கோவில் தற்போது சாலைக்குக் கீழே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் ஓடும் கழிவு நீர் மூலவர் கருவறை வரை சென்று விடுகின்றன என்று சில படங்களை எனக்கு அனுப்பியிருந்தார். டிரஸ்ட் மூலம் ஏதாவது பண உதவி வேண்டுமா என்று கேட்டேன். அது எல்லாம் வேண்டாம், எங்கள் ஊர் மக்கள் இருக்கிறார்கள்” என்றார். ”வேறு என்ன உதவி வேண்டும்?” என்றேன்.

”இக்கோவிலைப் புதுப்பிக்க வேண்டுமாறு பெருமாளிடமே கோரிக்கை வைக்கப் போகிறோம்” என்றவர்.

“வாரா வாரம் வரதராஜர் முன் அமர்ந்து ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களைச் சேவிக்கலாம் என்று இருக்கிறோம். உங்களின் ஆலோசனை வேண்டும்” என்று சில விஷயங்களைக் கேட்டார். எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.


 பிட் நோட்டீஸ் அடித்து ஊர் மக்களுக்கு வினியோகித்தர். கோயிலில் பிரபந்தம் சேவிக்க வருபவர்களுக்கு வசதியாகப் பதம் பிரித்த பிரபந்தம் புத்தகங்களை மேலும் சில பிரதிகள் வாங்கிக்கொண்டார். வாரா வாரம் புதன் கிழமை அன்று வாட்ஸ்ஆப் மூலம் இன்று என்ன சேவிக்கப் போகிறோம் என்று எனக்கு ஒரு தவம் போலத் தவறாமல் அனுப்புவார். இவருடன் முத்தூர் Dr. T. R. பழனிசாமி (74 years) அவர்களும் பாராயணம் செய்ய இவருக்கு உதவினார்.

 

1-3-2023 புதன்கிழமை. நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் 26-வது நிறைவு விழா வாரம் என்று எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ஏதாவது நல்லது நடக்கக் கூடாதா என்று நினைத்துக்கொண்டேன்.
அன்று மாலை அவரிடமிருந்து ஒரு செய்து வந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

 

”இன்று காலை நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்து முடித்த பின்னர் பாராயணம் செய்தவர்களுக்கு நினைவுப் பரிசுகள் ( பிரபந்தப் புத்தகம் தான் நினைவுப் பரிசு) வழங்கும் போது கோவிலுக்குள் இருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் ஆஸ்பெஸ்டாஸ் கூறையை உடைத்துக் கொண்டு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. இதனை எதேச்சையாக நடந்தது என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இதனைத் திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடக்கும் என்று நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்வதா? என்பது புரியவில்லை. மேலே உள்ளே ஃபோட்டோக்களில் கோவிலுக்குள் இருக்கும் தென்னை மரத்தையும், தேங்காய் விழுந்து கிடைப்பதையும், ஆஸ்பெஸ்டாஸ் கூறையின் உடைந்த துண்டுகளையும் காணலாம்”


18.3.2023 தினத்தந்தி செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அதன் தலைப்பு “2.5 கோடி செலவில் வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி அடுத்த மாதம் 10ஆம் தேதி பாலாலய விழா”

- சுஜாதா தேசிகன்
19.03.2023

படங்கள்: பிகு: இன்னொரு வரதராஜர் கதை இருக்கிறது. அதை வரும் வாரத்தில் எழுதுகிறேன்.

Comments