Skip to main content

சாளக்கிராமம் அடை நெஞ்சே!

 எல்லா திவ்ய தேசத்துக்கும் ஸ்தல புராணம் என்று ஒரு கதை இருக்கும். ‘சாளக்கிராமம்’ என்ற ‘முக்திநாத்’ திவ்ய தேசத்துக்கு நீங்கள் போய்விட்டு வந்து சொல்லும் கதையே ஒரு புராணம். முக்திநாத் சென்று வந்த என்னுடைய அக்கதையே இக்கட்டுரை.

108 திவ்ய தேசங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாள் உகந்து வாசம் செய்யும் ஸ்தலங்களில் 106 மட்டுமே நாம் இந்தப் பிறவியில் சேவிக்க முடியும். ’போதுமடா சாமி!’ என்று இந்தப் பூவுலகத்தை விட்டுக் கிளம்பிய பின் மற்ற இரண்டு திவ்ய தேசங்களைக் காண முடியும் அவை திருப்பாற்கடல் மற்றும் ஸ்ரீவைகுண்டம்.

இந்த 106ரிலும் இரண்டு திவ்ய தேசம் பெருமாள் மனது வைத்து ‘சரி வந்துட்டு போ’ என்று கூப்பிட்டால் மட்டுமே சேவிக்க முடியும். அவை பத்ரி மற்றும் சாளக்கிராமம்.



திருமங்கை ஆழ்வார் ’வதரி வணங்குதுமே’ என்று பத்ரிகாசிரம பெருமாளைப் பாடிவிட்டு அடுத்து ’சாளக்கிராமம் அடை நெஞ்சே’ என்று முக்திநாத் பெருமாளை நோக்கித் தன் குதிரையுடன் புறப்படுகிறார்.

போகும் வழியில் காடுகளைக் கடக்கும்போது அவருக்கு ராமர் காடுகளை நடந்து கடந்து சென்றது நினைவுக்கு வந்திருக்க வேண்டும். பெரிய திருமொழியில் சாளக்கிரமம் பற்றி முதல் பாசுரத்தை இப்படி தொடங்குகிறார்.




கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாகச்
சென்றான் வென்றி செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
சாளக்கிராமம் அடை நெஞ்சே

இந்தப் பாடலில் வில்லையும், அம்புகளையும் துணையாகக் கொண்டு மான்கள், யானைகள் குதிரைகள் வாழும் காட்டைத் தாண்டி அணை கட்டி போர்க்களம் சென்று ராவணனை வீழ்த்திய அந்த ராமரே சாளக்கிராமத்தில் இருக்கிறார் என்கிறார் ஆழ்வார்.

உங்களுக்குச் சங்கீதம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் பாடலைப் படித்தாலே குதிரை சவாரியில் குலுங்குவது போன்ற உணர்வு கிடைக்கும். ஆழ்வார் குதிரையின் ஓட்டத்துக்குத் தகுந்தவாரு பாடிக்கொண்டே ஜாலியாகச் சென்றுள்ளார். நம்மால் அப்படிச் செல்ல முடியாது.

பத்ரி போய்விட்டு வீடு திரும்பியபின் மனம் என்னும் குதிரையைக் கொஞ்சம் தட்டிவிட்டபோது ’உடம்பு சுமாராக இருக்கும்போதெ பத்ரி போன கையோடு கால் நடையாக முக்திநாத் கிளம்பு’ என்று எச்சரித்தது. நண்பர்களுடன் முக்திநாத் செல்ல திட்டம் வகுத்தோம். முக்திநாத் எங்கே இருக்கிறது என்று வரைபடத்தில் தேட ஆரம்பித்தேன்.

பத்ரி இந்தியாவிற்குள் 10,000 அடிகளுக்கு மேல் இருக்கிறது. பேருந்து, தங்க இடம், உணவு போன்றவை இருக்கிறது. கோயிலுக்கு நடந்து செல்லலாம். ஆனால் முக்திநாத் ?

முக்திநாத் அகண்ட பாரத தேசத்தில் அவந்தி தேசத்தில் இருந்துள்ளது. இன்று அது நேபாள தேசத்தில் 12,500 அடி உயரத்தில் இருக்கிறது. ( சென்னை 22 அடி ; பெங்களூர் 3000 அடி உயரத்தில் இருக்கிறது)




முக்திநாத் செல்வது மிகவும் கஷ்டம் என்று எங்களுக்குத் தெரிந்தது. இந்த யாத்திரைக்கு முக்கியமான விஷயம் பெருமாள் அருள் மட்டுமே தேவை என்று புலப்பட்டது. முக்திநாத்தில் காற்று, மூடு பனி, நிலச்சரிவு, நில நடுக்கம், விமானக் கோளாறு என்று தடங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் பயணத் திட்டத்துடன் கூடுதலாக இரண்டு நாள் சேர்த்து திட்டம் போடுவது உசிதம். நாங்களும் அப்படியே செய்தோம். பயணத்தில் திரும்பி வரும் போது அதற்கான தேவையும் ஏற்பட்டது!

முக்திநாத் மலை பிரதேசம் குளிர் அதிகமாக இருக்கும். ஆனால் முக்திநாத் குளிர் முக்தியைத் தரும். காய்கறிகள் இங்கே அதிகம் விளைவதில்லை. எல்லா இடங்களிலும் முள்ளங்கி கீரை மாதிரி ஒன்றை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். உணவுப் பொருட்கள்கீழ் இருந்து எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

முக்திநாத் செல்ல இரண்டு மூன்று வழிகள் இருந்தாலும் நாங்கள் சென்ற வழி கொஞ்சம் சுலபமானது. குழந்தை பிறந்து, நடக்க ஆரம்பித்து, கல்யாணம், ரிடையர்மெண்ட் எல்லாம் முடிந்து, வயதாகி நடக்க முடியாமல் கம்புடன் செல்வது போல இருக்கும் இந்த வழி.



முதலில் பெரிய விமானத்தில்( 180 இருக்கைகள்) நேபாள தலைநகரம் காத்மாண்டு சென்று அங்கிருந்து சிறிய விமானத்தில் (50 இருக்கைகள்) போக்ரா என்று ஊரை அடைய வேண்டும். பின்னர் போக்ராவிலிருந்து ஜோம்சம் என்ற இடத்தை மிகச் சிறிய விமானம் ( 18 இருக்கைகள் ) மூலம் சென்றடைய வேண்டும். பிறகு அங்கிருந்து ஜீப் மூலம் ( 8 இருக்கைகள் ) கோயிலுக்கு முன் அரை கிமீ வரை விடுவார்கள். அங்கிருந்து கொஞ்சம் தூரம் குதிரையிலும் பின் கடைசியாக நடந்து செல்ல வேண்டும்.



ஏப்ரல் கடைசி வாரம் குளிர் கம்மியாக இருக்கும் என்று நாங்கள் கிளம்பியபோது முதல் தடங்கலாக ’ஜெட் விமானங்கள்’ நிதி பிரச்சனையால் விமான சேவையை ரத்து செய்ய ஆரம்பித்து ஜெட் வேகத்தில் நாங்கள் முன்பதிவு செய்த விமானங்களை ரத்து செய்தார்கள்.



மீண்டும் காத்மண்டுவிற்கு விமானங்களைத் தேடி ஒரு வழியாக திருமங்கை ஆழ்வாரும், ஸ்ரீராமானுஜரும் ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்ற சாளக்கிராமத்துக்கு கிளம்பினோம். கிளம்பும்போது பலர் ‘முடிந்தால் எங்களுக்குச் சாளக்கிராமம் எடுத்துகொண்டு வாருங்கள்’ என்றார்கள்.

சாளக்கிராமம் :

இந்தத் திவ்ய தேசத்தில் ஓடும் கண்டகி நதியில் கிடைக்கும் அழகிய கற்களுக்குச் சாளக்கிராமம் என்று பெயர். சாளக்கிராமம் ஸ்ரீவைணவர்களால் மிகப் புனிதமாகக் கருதப்படும் பெருமாள்.

கண்டகி நதி ஹிமாசலத்திலிருந்து கீழ் நோக்கி வரும்போது கங்கையோடு கலக்கிறாள். கண்டகி நதி பெருமாளை குறித்து தவம் புரிந்து என் கர்பத்தில் நீ இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்கிறாள். பெருமாள் ‘நீ நதியாக ஓடிக்கொண்டு இரு, நான் அதன் படுகையில் சாளக்கிராம கல் வடிவில் இருக்கிறேன்’ என்றார்.



ஆழ்வார் ‘தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி’ என்கிறார். அதாவது பெருமாள் உவந்து இருக்கும் இடம் எல்லாம் நமக்குத் திவ்ய தேசம் தான். கல்லும் கடவுளே என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் ’சொக்காய் ஜோபியில்’ போட்டுக்கொள்ளும் அளவு சின்னக் கல்லில் மிக எளியவனாகப் பெருமாள் இருக்கிறார் என்பது புரியும். இங்கிருந்து கிடைக்கும் இந்த மூர்த்திகளே எல்லா ஸ்ரீவைஷ்ணவ இல்லங்களிலும் இன்று பரவி இருக்கிறது.

சாள என்றால் ஸ்தோத்திரம் என்றும், கிராமம் என்றால் கூட்டம் என்றும் பொருள். கூட்டமாக நம் ஸ்தோத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமாள் சாளக்கிராமப் பெருமாள் என்றும் கூறலாம்.

இன்னொரு முனிவர் கதையையும் இருக்கிறது. ’சாளங்காயனர்’ என்ற முனிவர் கண்டகி நதிக்கரையில் தவம் மேற்கொண்டார். பெருமாள் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் ’நான் விரும்பியபடி தோன்ற வேண்டும்’ என்று தன் ஒரு கண்ணால் பெரிய சாள மரத்தையும் இன்னொரு கண்ணால் மலையையும் பார்த்தார். மலையும் மரமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

இந்த சாளமரங்கள் பல இடங்களில் பரவி, பூமியில் புதையுண்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு பின் இந்த மரங்கள் கெட்டிப்பட்டு கல்லாகிறது. (அறிவியலில் fossilisation என்பார்கள்). கல்லாகும் சமயம் ’வஜ்ரகீடம்’ என்கிற பூச்சி இந்த சிறிய கற்களில் துளையிட்டு நத்தை கூடு மாதிரி குடைகிறது. குடையும் வடிவத்துக்கு ஏற்றார் போல இருக்கும் துவாரங்கள் மற்றும் அதன் கோடுகளைக் கொண்டு என்ன அது என்ன சாளக்கிராம பெருமாள் என்று கண்டுபிடிக்கிறார்கள். பெருமாளைக் கூடக் கண்டுபிடித்துவிடலாம் ஆனால் காத்மண்டு சென்ற போது எங்கள் உடமைகளை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!


காத்மாண்டு :

image

இரவு காத்மாண்டு விமான நிலையத்தில் இறங்கியபோது விமானத்தில் வந்த உடமைகள் எல்லாம் சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் அனாதையாகக் கிடக்கும் பார்சல் போல ஒர் இடத்தில் குவிக்கப்பட்டு ஊழியர்கள் அதின் மீது நடந்து கொண்டு இருந்தார்கள். குத்து மதிப்பாகத் தேடி எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது மழை குளிர்ச்சியான அதிர்ச்சி கொடுத்தது.

இரவு ஹோட்டல் வரவேற்பறையில் சூரிய பகவான் படத்தில் ஒளிர்ந்து கொண்டு இருக்க, கணினியில் ’அனுமான் சாலிசா’ ஒலித்துக்கொண்டு இருந்தது.

மறுநாள் காத்மாண்டு சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பியபோது தெருக்கள் எல்லாம் நம்மூர் மாதிரியே இருக்க நடந்து நோபாள அரண்மனைக்குள் சென்றோம்.

image

அரண்மனை !

அரண்மனை சமாசரங்களான மன்னர்கள் வேட்டையாடிய மிருக தலைகள், சொகுசு வாழ்கை படுக்கைகள், சுவர் ஓவியங்கள், வைன் கோப்பைகள் என்று பார்த்துக்கொண்டு வரும்போது 2001ல் நேபாள மன்னர் குடும்பம் அங்கே நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் படுகொலை நிகழ்ந்த இடங்கள், சுவற்றில் துப்பாக்கி சூட்டின் தழும்புகள் தெரிய அங்கிருந்து புறப்பட்டு ’ஜல நாராயணன்’ என்ற இடத்துக்குச் சென்றோம்.

image

ஜல நாராயணன்

’ஜல நாராயணன்’ என்றால் யாருக்கும் தெரியாது. நேபாளத்தில் ’புத்த நீலகண்டா’ கோயில் என்கிறார்கள். புத்தருக்கும் நீலகண்டருக்கும் சம்பந்தம் இல்லை. உள்ளே தண்ணீரில் மஹாவிஷ்ணு சங்கு சக்கரத்துடன் பாம்பனையில் ஸ்வெட்டர் இல்லாமல் படுத்துக்கொண்டு இருக்கிறார். அழகான தேஜஸ் உடைய சிறுவர்கள் குடுமியுடன் நாம் கொடுக்கும் பூக்களைத் தாவிச் சென்று பெருமாளுக்கு தூவுகிறார்கள்!

image

அங்கே ஒருவர் என்னிடம் வந்து கீழே படுத்துக்கொண்டு பார்த்தால் பெருமாளின் திருவுருவுருவ பிரதிபலிப்பு நீரில் தெரியும் என்றார். கிட்டதட்ட சேவித்தபோது அந்த பிம்பம் மிக அழகாக தெரிந்தது. பெருமாளே சேவிக்க சொல்லியிருக்கிறார் என்று நினைத்து இரண்டு மூன்று தடவை சேவித்து பார்த்தேன். நான் அப்படிச் சேவிப்பதைப் பார்த்து அதே போல சேவிக்க பெரிய வரிசையே உருவானது.

image

ஜிலேபி பெரிய வடை... !

கோயிலுக்கு வெளியே ஜிலேபியும், பெருமாள் கையில் இருக்கும் சக்கரத்தைவிட பெரியதாக வடையும் விற்றுக்கொண்டு இருந்தார்கள். வேறுசில இடங்களைப் பார்த்துவிட்டு மறுநாள் போக்ராவிற்கு கிளம்பினோம்.

போக்ரா

image

காத்மாண்டுவிலிருந்து முக்திநாத் 128 கிமீ தூரத்தில் இருக்கிறது. ஆனால் நேராகச் செல்ல முடியாது. முதலில் போக்ரா பிறகு அங்கிருந்து ஜோம்சம் பிறகு முக்தி நாத் செல்ல வேண்டும்.

விடியற்காலை ஐந்து மணியிலிருந்து மத்தியம் பன்னிரண்டு வரை மட்டுமே விமானங்கள் இயங்கும். இதற்கிடையில் மூடுபனி, காற்று என்று வானிலை மாறும்போது விமானங்கள் ரத்துச் செய்யப்படும்.

சுமார் பத்தரை மணிக்குப் போக்ரா வந்தடைந்தோம். ‘தேவி நீர்வீழ்ச்சி’ என்ற இடத்துக்குக் கிளம்பினோம். அங்கே சென்றபிறகு தான் அதன் பெயர் தேவி இல்லை ’டாவிஸ்’ என்று தெரிந்தது. பல வருடங்கள் முன் ’டாவிஸ்’ என்ற சுவிஸ் தம்பதியர் அங்கே சென்றபோது விபத்து ஏற்பட்டு மனைவி அங்கே மூழ்கி இறந்தார். அதனால் அந்தப் பெயர். எந்த இடத்தில் விழுந்தார்கள் என்று பல ‘தேனிலவு ஜோடிகள்’ ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

பொதுவாக நீர்வீழ்ச்சி மலையிலிருந்து கீழே கொட்டும், ஆனால் இங்கே நிலத்தடி நீர்வீழ்ச்சி. நீர் சுரங்கம் வழியாக அரை கிமீ சென்று எதிர்பக்கம் பூமிக்கு அடியில் குகைக்குள் சென்று கொட்டுகிறது.

image

சுரங்கம் வழியாக செல்லும் முன்

சுரங்கம் வழியாக நீ பாய்ந்து செல்வதைப் பார்த்துவிட்டுச் சாலையைக் கிராஸ் செய்து அதள பாதாளம் சென்று அங்கே நீர்வீழ்ச்சியை கண்டபோது இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

image

சுரங்கத்தில் நீர்வீழ்ச்சி !

அடுத்து போக்ராவில் மிக அழகான இடம் பேவா ஏரி(Phewa lake). படகு பயணம் செய்து மீண்டும் இயற்கையை ரசித்துவிட்டு அங்கே மூங்கில் மீது பறவைகள் கூட்டமாக இருந்தது. ’கூகிள் லென்ஸ்’ உதவியுடன் இவை ‘cattle egret’ வகை என்று தெரிந்துகொண்டேன்.

image

பேவா ஏரி

image

திருமங்கை ஆழ்வார் சாளக்கிராம பாசுரம் ஒன்றில் ‘தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை’ என்கிறார். நீர் பறவைகள் நிறைந்துள்ள வயல்களால் சூழப்பட்ட சாளக்கிராமம் என்று பாடுகிறார். ஆழ்வார் கண்ட காட்சியை இன்றும் நம்மால் காண முடிகிறது. மறுநாள் போக்ராவிலிருந்து ஜோம்சம் பயணம் நல்லவிதமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தோம்.

image

திருமங்கை ஆழ்வார் பார்த்தை பட்சிகள் !

ஜோம்சம் :

image

போக்ராவிலிருந்து பதினெட்டு பேர் பயணம் செய்யக்கூடிய விமானத்துக்காக காத்துக்கொண்டு இருந்தோம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறையே விமானங்கள் செல்லும். மழை, காற்று, பனி என்றால் விமானம் செல்லாது.

விமானம் வந்த போது ஏதோ டின்டின் காமிக்ஸில் வரும் பொம்மை விமானம் போல இருந்தது. மற்ற விமானங்களில் சீண்டாத பாதுகாப்பு
வழிமுறைகள் அட்டையை இரண்டு
மூன்று முறை படித்தேன்.

image

விமானம் கிளம்பியதும் ஜன்னலின் பக்கம் இருந்த விசிறி கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தது. விமானம் அன்னபூரணா மலைத்தொடருக்கும் தவளகிரி என்ற மலைத்தொடருக்கும் நடுவில் சென்றது. இரண்டு பக்கமும் பனிபடர்ந்த மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டு செல்லுகையில் விமானம் காற்றில் இங்கும் அங்கும் அசைந்துகொண்டு முப்பது நிமிஷத்தில் ஜோம்சம் வந்து சேர்ந்தோம்.

image

image

பனி படர்ந்த மலைகளுக்கு நடுவில் ஜோம்சம் ஒரு தெருவில் அடங்கிவிடுகிறது. பொம்மை விமானங்களுக்கு ஒரு ஏற்போர்ட். வரிசையாக சில தங்கும் விடுதிகள். புஷ்டியான குருவிகள் சத்தம் போட சில நாய்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறது. சின்ன கடைகள் அழுக்கான கவரில் உலர்ந்த ஆப்பிள் விற்கிறார்கள். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வரும் மஹாபரத தொடரில் திரௌபதி அபிமன்யூவிற்கு கையில் கட்டும் ’நீல நிற காப்பு’ இங்கே எல்லா கடைகளிலும் கிடைக்கிறது!

image

சுற்றும் பனி மலை

image

image

க்ளோசப் !

image

காய்ந்த ஆப்பிள்

image

image

காப்பு !

image

இங்கே கிடைக்கிறது!

கோவேறு கழுதைகள் இருப்பக்கமும் மூட்டைகளை சுமந்து செல்கிறது. அவற்றுடன் நாங்களும் எங்கள் பாவ புண்ணிய மூட்டைகளை சுமந்துகொண்டு ஜோம்சமிலிருந்து ஜீப்பில் கழுதைகளை தொடர்ந்து முக்திநாத் புறப்பட்டோம்.

image

சாளக்கிராமம் என்ற முக்திநாத்:

ஜீப்பில் செல்லுகையில் பெரியாழ்வார் சாளக்கிராமம் பற்றி என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.

பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து
பல் வளையாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று
இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலை கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய் உன் மகனை கூவாய்

யசோதை பசும் பாலை கறந்து அடுப்பின் மீது வைத்துவிட்டு பார்த்தால் அடுப்பை பற்ற வைக்க நெருப்பு இல்லை. பக்கத்து விட்டுக்கு சென்று நெருப்பு கொஞ்சம் வாங்கி வரச் செல்கிறாள். அப்படியே கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தாள். நெருப்பும் திரும்பி வந்து பார்த்தால் அடுப்பின் மீது வைத்த பால் முழுவதும் கண்ணன் குடித்துவிட்டு ஒன்றும் அறியாதவன் போல நிற்கிறான்.

இங்கே பெரியாழ்வார் ‘சாளக்கிராமத்தை இருப்பிடமாகக் கொண்ட கண்ணனே!” என்கிறார். ஏன் கண்ணனை இப்படி கூறுகிறார் என்று கொஞ்சம் அனுபவிக்கலாம்.

image

கண்ணன் பத்ரியில் காலை எழுந்து கங்கையில் குளித்துவிட்டு, துவாரகா சென்று அருமையான ஆடை உடுத்திக்கொண்டு, புரியில் அமுது உண்டபின் பொழுது போக்க கோகுலத்தில் வந்து பால் வெண்ணெய் திருடுவான். யசோதையிடம் மாட்டிக்கொள்வது பிடிக்கும்.

இந்த பாசுரத்திலும் யசோதை துரத்த இங்கும் அங்கும் ஓடுகிறான். யசோதை கொஞ்சம் குண்டாக இருந்தாலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள். கண்ணன் மலை ஏறி சாளக்கிராமம் செல்ல, அங்கே கண்ணை கண்டுபிடிப்பது மிக கஷ்டம்.

image

சாளக்கிராமும் கருப்பு உருண்டை. கண்ணனும் அதற்கு போட்டியாக குண்டு கருப்பாக இருக்க யசோதையால் கண்டுபிடிக்க முடியாமல் அங்கேயே இருக்கிறாள். மாலை ஆனதும் மெதுவாக கண்ணன் கிளம்ப யசோதை அவனை மீண்டும் துரத்த கண்ணன் ஓடி வந்து இரவு ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொள்கின்றான். யசோதை அவனை விடாமல் துரத்திக்கொண்டு வந்து பார்த்தால் பெரிதாக ஸ்ரீரங்க பெருமாள் படுத்துக்கொண்டு இருக்க, யசோதை அருகில் சென்றவுடன் இவன் தான் கண்ணன் என்று அவன் வாயில் வரும் வெண்ணை வாசனையை வைத்து கண்டுபிடிக்கிறாள் (‘கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்’ - திருப்பாணாழ்வார் )

யசோதைக்குக் கண்ணனைத் துரத்திக்கொண்டு செல்கையில் மூச்சு திணறல் வந்ததா என்று தெரியாது ஆனால் முக்திநாத் செல்லுகையில் எங்களுக்கு ஏற்பட்டது.

image

ஜீப்பில் போகும் போதே பிராயணவாயு கம்மியாக இருந்ததை எங்களால் உணரமுடிந்தது. வழியில் சில இடங்களில் கண்டகி நதி மெலிதாக ஓடிக்கொண்டு எங்களுடனேயே வந்தாள். ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி, “இங்கே பாருங்கள்” என்றார் ஓட்டுனர். அங்கே நாங்கள் பார்த்தது காளி கண்டகி பள்ளத்தாக்கு. உலகத்திலேயே ஆழமான பள்ளத்தாக்கு இது தான்.

image

பள்ளத்தாக்கு !

பள்ளத்தாக்கு முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு சுற்றி இருக்கும் மலைகள், காற்று, குளிர், பளிச் என்ற சூரிய ஒளி எல்லாம் பார்க்கும் போது ஒருவித அமைதியை நமக்கு நல்கி நாம் இந்த உலகத்தில் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர்த்துகிறது.

திருமங்கை ஆழ்வார் சாளக்கிராமம் பற்றி ஒரு பாசுரத்தில் இப்படி கூறுகிறார்.

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான்.

உலவுகின்ற அலைகளையுடைய கடலும், தொடர்ச்சியான மலைகளும், காலம், எட்டு திசைகளும், சந்திர சூரியனின் வெளிச்சம், இருட்டு ஆகிய எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான் என்று சொல்லும் ஆழ்வாரின் கூற்று எவ்வளவு நிஜம்.

image

முக்திநாத்தில் சந்திரன் சூரியன் - 'கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்' !

பள்ளத்தாக்கை ரசித்துவிட்டு கிளம்பி கோயிலுக்குச் சுமார் அரை கிமீ தூரம் முன்னதாக ஜீப்பிலிருந்து இறங்கினோம். சிலர் குதிரையில் ஏறிக்கொண்டார்கள். நானும் சிலரும் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் வீட்டுக்கு முன் பலர் வாசலில் சாளக்கிராமம் விற்கிறார்கள். சில இடங்களில் உணவு, டீ, போன்றவை கிடைக்கிறது. பிராணவாயு கம்மியாக இருப்பதால் பத்து அடிக்கு மேல் நடக்க முடியாது.

சற்று தூரம் நடந்த பின் கோயிலின் நுழைவு வாயில் வளைவு கண்களுக்குத் தெரிந்தவுடன் திருமங்கை ஆழ்வார் கூறும் ‘சாளக்கிராமம் அடை நெஞ்சே’ என்ற சொல்லுக்கு முழுமையான அர்த்தம் நமக்குக் கிடைக்கிறது.

image

சாளக்கிராமம் அடை நெஞ்சே !

வாசலில் சாது ‘ஐயா எந்த ஊர் நீங்கள்?’ என்று தமிழில் கேட்க அவரிடம் கொஞ்சம் பேசினேன். சொந்த ஊர் மதுரை. பிள்ளைகள் படித்து செட்டில் ஆகிவிட்டார்கள். நான் சன்னியாசியாக இங்கே இருக்கிறேன் என்றார்.

image

உள்ளே நுழையும் போது மரங்களில் இலை இல்லாமல் அசைவற்று இருக்க அங்கே யாகசாலை என்ற மண்டபம் இருக்கிறது. உள்ளே சென்றால் பல சாளக்கிராமங்கள் ’கொலுவிற்றி’ இருக்க , நடுவே பெரிய சாளக்கிராமம். வலது பக்கம் ஆண்டாள், இடது பக்கம் ஸ்ரீராமானுஜர், அவருக்குப் பக்கம் ஸ்வாமி தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள். இங்கே தினமும் தமிழில் ஆழ்வார் பாசுரங்கள் பாடுகிறார்கள்.

image

கொலுவிற்றி இருக்கும் சாளகிராமங்கள், ஆண்டாள், பெரிய பெருமாள், ராமானுஜர், தேசிகன், மணவாள மாமுனிகள்

முக்திநாத் கோயிலுக்கு முன் சென்ற போது மனதில் ஒருவித சந்தோஷம் கிடைக்கிறது. இந்தச் சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க நமக்காக காலங்காலமாக திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் இங்கே வந்து தரிசித்த அதே பெருமாளை நாமும் சேவிக்கிறோம் என்ற சந்தோஷம் அதை விட பெரியது.

image

முக்திநாத் பெருமாள் முக்தி கொடுப்பவர். அதாவது மோட்சம். சொர்க்கம் என்பது நிறைய புண்ணியம் செய்தால் கிடைப்பது. நரகம் என்பது பாவம் செய்தால் கிடைப்பது. மோட்சம் கிடைக்க பாவம், புண்ணியம் இரண்டும் இருக்க கூடாது. பேலன்ஸ் ஷீட் டாலி செய்வீர்களே அது போல பாவ, புண்ணிய கணக்கைப் பூஜியம் ஆக்க வேண்டும். அப்போது தான் மோட்சம் கிடைக்கும். பெருமாள் இதை செய்ய சுலபமான வழியை அங்கே வைத்துள்ளார்.

image

பாவ - புண்ணிய குளம்

கோயிலுக்கு முன் இரண்டு சின்ன குளம் இருக்கிறது. ஒன்று பாவ குளம், இன்னொன்று புண்ணிய குளம். பெருமாளைச் சேவிக்கும் முன் இதில் நீராட வேண்டும். நீராட என்றால் உள்ளே இறங்கி கடக்க வேண்டும். இதைக் கேட்கும் போதே ஜன்னி வந்தது.

image

முதல் குளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். இடுப்புக்கு கீழே உடம்பு அப்படியே உரைந்து போனது. மேலே வந்த போது உடல் சிவந்து, நடுக்க ஆரம்பித்துவிட்டது. ‘சார் புண்ணியம் எல்லாம் போச்சு, இந்த குளத்தில் இறங்கி பாவத்தை தொலையுங்க’ என்றார்கள். மீண்டும் அதே போல இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எமனின் எண்ணை கொப்பறையில் விழுந்து எழுந்த உணர்வு கிடைத்தது.

image

இதற்குப் பிறகு கோயிலைச் சுற்றி 108 நீர் தாரைகளில் ( 108 திவ்ய தேசங்களைக் குறிக்கும் ) நீர் வருகிறது. அரைவட்ட வடிவில் இருக்கும் இதில் ஒரே ஓட்டமாக ஓடினால் உங்கள் மீது அந்த நீர் படும். வீடியோ கேமில் இது கடைசி லெவல். இதை முடித்துவிட்டு நேராக பெருமாளைச் சேவித்தேன்.

image

பெருமாள் பெயர் ஸ்ரீமூர்த்தி பெருமாள். நான்கு திருக்கரங்கள். சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி இருக்கிறார். இருபுறத்திலும்

ஸ்ரீதேவியும், பூதேவியும் சாமரம் வீசும் கோலம். பக்கத்தில் கருடன் காட்சி தருகிறார். பெருமாளுக்குக் கீழே ராமானுஜர் அங்கே வீற்றிருக்கிறார். கையில் சில உலர்ந்த திராட்சை, சர்க்கரை இனிப்புகளைப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். மிக முக்கியமான விஷயம் வருபவர்களுக்கு தலையில் ஸ்ரீசடகோபம் என்ற சடாரியைச் சாதிக்கிறார் உள்ளே இருக்கும் பெண் புத்த பிட்சு!

image

படம் இணையம்

திருமங்கை ஆழ்வார் சாளக்கிராமம் கடைசி பாசுரத்தில் ’பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்றுமினே’ என்கிறார். அதாவது பெருமாளின் ஆயிரம் திருநாமங்களை ஓதுங்கள் அல்லது என்னுடைய சாளக்கிராமத்து பத்து பாசுரங்களை வாய்க்குவந்தபடி பிதற்றுங்கள் போதும் என்கிறார்.

கோயிலுக்கு முன் திருமங்கை ஆழ்வார் சாளக்கிராம பாசுரங்களைச் சேவித்துவிட்டு பெருமாளைப் பிரிய மனம் இல்லாமல் கிளம்பினோம்.

மறுநாள் காலை ஜோம்சமிலிருந்து போக்ரா திரும்ப விமானத்துக்குக் காத்துக்கொண்டு இருந்தோம்.

விமானம் பழுதாகிவிட்டது. வானிலையும் சரியில்லை. அதனால் இன்று விமானம் கிடையாது என்று சொல்லிவிட்டு நம் வீட்டைப் பூட்டுவது போல நிஜமாகவே ஏர்போட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து கிளம்பினோம். விமானத்தில் இருபது நிமிடத்தில் சென்றிருக்க வேண்டிய பயணம் வேனில் எட்டு மணி நேரம் ஆகியது. எங்கள் வாகன ஓட்டுனர் சாலை வழியாக போகாமல் கண்டகி ஆற்றில் தண்ணீர் இல்லை அதனால் ஆற்றின் வண்டி ஓட்டிக்கொண்டு சென்றார். இந்தச் சமயத்தில் அந்த காலத்தில் திருமங்கை ஆழ்வாரும் ,ராமானுஜரும் எப்படி நடந்து வந்திருப்பார்களோ நினைப்பே வியப்பில் ஆழ்த்தியது.

image

ஆற்றின் வண்டி ஓட்டிக்கொண்டு...

மீண்டும் காத்மண்டு வந்த போது இருக்கும் நேரத்தில் மீண்டும் ‘ஜல் நாராயணனை’ தரிசிக்கலாம் என்று தோன்றியது. நண்பர்கள் அப்போது சோர்வாக இருக்கிறது என்றார்கள். அதனால் தனியாக டாக்ஸி பிடித்து கிளம்பினேன்.

டாக்சி ஓட்டுனரிடம் பேச ஆரம்பித்தேன். அவருக்கு மும்பை மிகவும் பிடித்த இடம். பணம் சேர்த்துக்கொண்டு இருக்கேன். ஒரு முறை வர வேண்டும் என்றார். இரண்டு குழந்தைகள். அடுத்த மாதம் இரண்டாம் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் என்று இருவரும் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் ’எங்கள் ஊருக்கும் உங்க நாட்டு பிரதமர் மோடி மாதிரி ஒருவர் வர வேண்டும். அப்போது தான் எங்கள் நாடும் உருப்படும்’ என்றார். ஹோட்டலில் விடும் முன் ‘சார் உங்களுடன் செல்ஃபி’ என்று கேட்டு எடுத்துக்கொண்டார். போகும் போது ‘உங்க பேர் என்ன என்றேன்’ கோவிந் என்றார்.

image

”குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று நினைத்துக்கொண்டு அகண்ட பாரதத்திலிருந்து பாரதம் திரும்பினேன்.

- சுஜாதா தேசிகன்
வலம் ஜூலை 2020 இதழில் பிரசுரமான கட்டுரையின் முழு வடிவம்.

பட்சி சொல்லுது : பட்சி சொல்லுது’ என்ற வார்த்தையை கேட்டிருக்கலாம். முக்திநாத்தில் சில பட்சி சொன்ன விஷயங்கள் இவை.

மேனரிசம் என்று விஷயம் இருக்கிறது. நமக்கே தெரியாமல் தலையைச் சொறிவோம். அல்லது மூக்கை உறிஞ்சுவோம். கையில் சொடக்கு போடுவோம். குருவிகளும் மூக்கை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. கழுத்தைச் சொறிவது, அல்லது முகத்தை இங்கும் அங்கும் திருப்புவது. பறவைகளுக்குப் பறவை இது மாறுபடவும் செய்கிறது.

ஜோம்சமில் குருவிகள் டைமிங்காக கழுத்தைப் பகுதியை குடைந்தது. இரண்டு குருவிகள் அது போலச் செய்தது. அதில் ஒருவித ரைமிங் முறை இருந்தது.

குருவி பறக்காமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக்கொண்டு எடுத்த படம். நான்கு ஐந்து முறை முயன்று அந்தக் குளிரில் இதை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் ஒர்அனுபவம் இது !

image

ஆண்டாள் திருப்பாவையில் ‘கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?” என்று வரி நினைவு இருக்கலாம். சரியாகக் காலை ஆறு மணிக்கு கீச் கீச் கேட்டது. இதில் ஒவ்வொரு கீச் கீச்சுக்கும் இடையில் சரியான இடைவெளி இருக்கிறது. கை கடிகாரத்தில் எவ்வளவு நொடிக்கு ஒரு முறை கீச்கீச் சத்தம் செய்கிறது என்று கணக்கு செய்து எடுத்த படம்.

image

திருமங்கை ஆழ்வார் பார்த்த பறைவைகள் அடிக்கடி தலையை சிலிர்த்துக்கொள்கிறது. இதற்கு கணக்கு இருக்கிறது. கணக்கு வைத்து எடுத்த படம்

image

பிகு: கீழே படங்கள், மற்றும் ஒரு வீடியோ இருக்கிறது!

முக்திநாத் பட ஆல்பம்

image

யாக சாலை

image

யாக சாலை வாசலில் தமிழ் பாசுரங்கள் !

image

முக்திநாத் கோயிலுக்கு வெளியே ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர்

image

இரவு - பகலில் ஜல நாராயணன்

image

சில காட்சிகள்

image

கலர் மோர் மிளகாய் !

image

லட்டு இல்லை - சோப்பு உருண்டை !

image

கடைசியாக வீடியோ :



Comments

Post a Comment