Skip to main content

குலசேகர ஆழ்வார் ‘எடுத்த இசை


குலசேகர ஆழ்வார் ‘எடுத்த இசை

image

நம்பெருமாள், ஸ்ரீராமருடன்... மாசிப் புனர்பூசம் - குலசேகர ஆழ்வார் ( கிளியும் வில்லுடன் சேவை ). திருவடியில் உடையவர், ஆழ்வான். 



பொன்புரையும் வேல் குலசேகரனே மாசிப் புனர்பூசத்து எழில்வஞ்சிக் களத்தில் தோன்றி அன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயில் அனைத்து உலகின் பெரு வாழ்வும் அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவும் காண மண்மேல் இருளிரிய வென்றெடுத்த இசையில் சொன்ன நன்பொருள்சேர் திருமொழி நூற்றைந்து பாட்டும் நன்றாக எனக்கருள் செய் நல்கி நீயே

பிரபந்த சாரத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ’எங்கள்’ குலசேகர ஆழ்வாரை பற்றி அருளியது. தேசிகனின் சில வார்த்தைகளைக் கொண்டு இந்த கட்டுரையை ஆரம்பிக்கலாம். (வார்த்தைகளை தடித்து காண்பித்திருக்கிறேன் )

பூதத்தாழ்வார் வாழி திருநாமத்தில் ‘பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே!’ என்று ஒரு வாக்கியம் வருகிறது. பொன்புரையும் என்ற வார்த்தை திருவரங்கத்துக்கு அழகு சேர்க்கிறது அதே வார்த்தை குலசேகர ஆழ்வாருக்கும் இங்கு அழகு சேர்க்க வருகிறது. ஸ்ரீரங்கத்தையும் குலசேகர ஆழ்வாரையும் பிரிக்க முடியுமா ?

image

அன்புடனே நம்பெருமாள் : நம்பெருமாள் என்றாலே அந்த ‘நம்’மில் அன்பு கலந்திருக்கிறது. ஆனால் இங்கே ஸ்வாமி தேசிகன் ஸ்பெஷலாக ‘அன்புடனே நம்பெருமாள்’ என்று அன்புக்கு அன்பை சேர்க்கிறார். ஸ்ரீராமானுஜர் பெருமாள் திருமொழி தனியனில் அதனால் தான் ‘எங்கள் குலசேகரன் என்றே கூறு’ என்கிறார்.

பெரு வாழ்வும் அடியார் தங்கள்: ஆண்டாள் கூறும் ‘நல்லார்கள் வாழும் நளிரரங்கமும்’, அங்கே பாகவதர்களுமே இந்த ஆழ்வாருக்குப் பிரதானம். என்பதை இது காட்டுகிறது. ஸ்ரீரங்க வாசமாகிய பெரிய செல்வமும் அங்கே வசிக்கும் பாகவதர்களுடன் காண்பதே தனக்கு பெரும் இன்பமாகக் கருதுகிறார் அழ்வார்.

இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்ன : இது மிக முக்கியமான அதே சமயம் சுவாரஸியமான வார்த்தை. குழந்தைக்கு ஏதாவது வேண்டும், ஆனால் அது கிடைக்கவில்லை என்றால் தொண்டை கிழிய பெரிதாகச் சத்தம் போட்டு அதைப் பெற்றுவிடுவோம். ‘எடுத்தவுடன் உச்சஸ்தாயியில் நரம்புகள் புடைக்கச் ஏன் சத்தம் போடுகிறாய் ?’ என்று கேட்பார்கள். குலசேகர ஆழ்வார் ‘இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி’ என்று பெருமாள் திருமொழி முதல் பாசுரத்தை ஆரம்பமே நம்பெருமாளை காணும் இச்சையை உச்சஸ்வரத்தில் ஆரம்பிக்கிறார்.

இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்ன என்பதற்கு இரண்டு பொருள் இருக்கிறது.
பொருள்(1) - ‘இந்தப் பூமியில் அஞ்ஞானமாகிய இருள் அழிவதற்காக ‘இருள் இரிய’ என்று உச்சஸ்வரத்தில் தொடங்கி (எடுத்த இசையில் சொன்ன) தொடங்கி அருளிய சிறந்த திருமொழி 105 பாசுரங்களையும் நீ என்மீது அன்புகொண்டு நன்றாக எனக்கு ( மனதில் பதியுமாறு ) அருள்செய்வாயாக.
தேசிகனின் செய்யுள் அழகை இன்னும் கொஞ்சம் ரசிக்க பொருள்(2) பார்க்கலாம்.

சங்கீதத்தில் உச்சஸ்வரம் என்பது (சரிகமபத) நீ’ இங்கே எப்படி பொருந்துகிறது என்று பாருங்கள்.
பொருள்(2) : ‘இந்தப் பூமியில் அஞ்ஞானமாகிய இருள் அழிவதற்காக ‘இருள் இரிய’ என்று தொடங்கி, நீ (உச்சஸ்வரம்) அருளிய சிறந்த திருமொழி 105 பாசுரங்களையும் என்மீது அன்புகொண்டு நன்றாக எனக்கு ( மனதில் பதியுமாறு ) அருள்செய்வாயாக.

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியை கொஞ்சம் அனுபவிக்கலாம். திருமொழியில் வரும் எளிமையான பாசுரம் இது:
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப்பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி;அதுவே போன்று இருந்தேனே


பொதுவாக எளிமையாக ஆழ்வார் பாசுரங்களில் ஆழ்ந்த கருத்து இருக்கும். இந்தப் பாசுரமும் அதுபோலத் தான். ஆழ்வார் என்ன சொல்லுகிறார் ?

நறுமணம் கமழும் சோலை சூழ்ந்து இருக்கும் வித்துவக்கோட்டு அம்மானே - நீ எனக்குத் தரும் துன்பத்தை நீயே போக்கிட உன் திருவடி அன்றி வேறு புகலிடம் எனக்கு இல்லை. பெற்ற தாய் கோபத்தோடு தன் குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், குழந்தை தாயின் கருணையை எதிர்பார்த்து தாயின் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டு தாயின் காலையே சுற்றிச்சுற்றி வரும், அது போல நான் இருக்கிறேன் என்கிறார்.

இதில் ‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்பது சரம ஸ்லோகத்தைப் காப்ஸ்யூலில் அடக்கிவிட்டார் ஆழ்வார். தரு துயரம் தடாயேல் - தந்த இத்துன்பத்தை என்று பொருள். நாம் செய்த புண்ணியம், பாவம் பயனாக இன்ப துன்பங்கள் அடைகிறோம் என்பது சாஸ்திரம். ஆனால் இங்கே ஆழ்வார் தமக்கு துன்பத்தைத் தந்தது எம்பெருமானே என்கிறார். இதனால் ஒரு சின்னக் குழப்பம் வருவது இயற்கையே.

இதற்கு விளக்கம் கூறும் நம் பூர்வாசாரியர்கள் - நான் எம்பெருமானுக்கு உவப்பாகச் செய்யும் காரியம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துப் புண்ணியமாகக் கருதப்படுகிறது, அவனுக்குக் கோபம் தரும் செயல்கள் பாவமாக முடிகிறது. தனியாகப் புண்ணிய பாவம் என்று ஒன்று இல்லை. இதைப் புரிந்துகொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்…

image

உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் !

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாட்டுக்கு ஆசாரியர்கள் குழுமி இருந்தார்கள். புறப்பாட்டுக்குக் காத்துக்கொண்டு இருக்கும்போது ஒருவர் “இதற்கு முன்னர் நாம் யார் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தோமோ நமக்குத் தெரியாது.. இன்று நாம் நம்பெருமாளுடைய புறப்பாட்டுக்கு காத்துக் கொண்டு இருக்கிறோம் ! இதற்கு நாம் என்ன புண்ணியம் செய்திருக்கிறோமோ?” என்றார். அதாவது வெகுகாலமாகப் பிறவி என்ற கடலில் சிக்கித் தவிப்பவனுக்கு பகவானிடத்தில் ஈடுபாடு உண்டாவதற்குக் காரணம் என்ன என்ற சர்ச்சை எழுந்தது.

பக்கத்தில் இருந்தவர் “ தற்செயலாக நான் செய்த புண்ணியம் தான் காரணம்” என்றார்.
இன்னொருவர் ” தன்னையுமறியாமல் செய்கின்ற புண்ணியம் தான் இதற்குக் காரணம்” என்றார்.
அங்கே இருந்த கிடாம்பி பெருமாள் என்ற ஆசாரியர் “நம்பெருமாளைப் பற்றும் நமக்கு, புண்ணியம் என்று தனியாக இன்னொரு தேவதை உண்டோ ? ” என்று கேட்க இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பிள்ளை திருநறையூர் அரையர் “புண்ணியம் வேறு நம்பெருமாள் வேறு என்று இல்லை. . நம்பெருமாளே புண்ணியம்”. என்றார்.

ஆண்டாள் “நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்” என்று சொல்லிவிட்டு “உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்” என்கிறாள்.

புரிந்துகொள்ள வேண்டியது - எம்பெருமானே இவனுக்கு தன்னிடத்தில் ஈடுபாடு விளைவித்து பிறகு ஏற்றுக்கொள்கிறான்.

இந்த பாசுரத்தில் ‘குழவி’ என்ற சொல்லுக்கு பொருள் இளங் குழந்தை. சின்ன குழந்தை, அம்மா அடித்தாலும் அம்மாவையே சுற்றுச் சுற்றி வரும், ஆனால் அதே குழந்தை வளர்ந்து அம்மாவையே கைநீட்ட தொடங்கினால் ?

தன்னைப் பெற்ற தாயையே ஒருவன் அடிக்க நேரிடும் போது அடித்து அடித்து கை வலிக்க நேரிட்டால் உடனே “அம்மா” என்று சொல்லித்தான் ஆறுதல் அடைவான். அப்போது அவன் கண் முன் தான் அடித்த தன் தாய் நினைவுக்கு வருவதில்லை. இருந்தாலும் ‘அம்மா’ என்ற அந்தச் சொல் அவனுக்கு ஆறுதல் தருகிறது அது போல பெருமாளின் நாமத்தைச் சொன்னாலே அது பயன் தரும். அதாவது அவன் நாமத்தைச் சொன்னால் அவன் திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ( இதுவே புண்ணியம் ! ).

image

படியாய் கிடந்து...

குலசேகர ஆழ்வார் பாசுரம் என்றால் உடனே நினைவுக்கு வருவது ’படியாய் கிடந்து’ என்ற பாசுரம் தான்.
”ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” என்று தொடங்கும்
பாசுரத்தில் திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும், செண்பக மரமாக, புதராய் இருக்க, மலை உச்சி, காட்டாறாக, வழியாக வேண்டும் மேலும் ஆசைப்படுகிறார்.. இப்படியே ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டு…
”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”

image

பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே!

உன் கோயில் வாசல் ’காணும்’ படியாகக் கிடக்கிறேன் இன்று கோரிக்கை வைக்கிறார். அடியார்கள் அதன் மீது ஏறிச் செல்வார்கள், அதனால் அடியார்களின் பாத தூளியும் கிடைக்கும் அதே சமயம் பெருமாளின் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் இருக்கலாம் பிறகு அதுவும் வேண்டாம் என்று முடிவு செய்து “பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே ” என்று முடிக்கிறார்.

பெரியாழ்வார் கோவிந்தனுக்கு தாயாக யசோதையாக மாறிவிடுகிறார்.

”என் மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ
நின் முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப்போ”

இந்தப் பாசுரத்தில் நிலவே என் மகன் கோவிந்தனுடைய முகத்தைப் பார் என்று சொல்லிவிட்டு
கிடக்கில், தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன், நங்காய்!
என்று பாடுகிறார்.
ஆண்டாள் ஒரு படி மேலே சென்று இடைச்சியாகவே மாறி “ஆயர் சிறுமியரோமுக்கு” என்று ”கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம். அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து” என்கிறார்.
பெரியாழ்வார், ஆண்டாள் இருவரும் பிராமண குலத்திலிருந்து இடைச்சியின் குலத்துக்கு மாறி எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். குலசேகர ஆழ்வாரே எனக்கு அரச வாழ்க்கை வேண்டாம் அதில் கிடைக்கும் போகம் எல்லாம் நிரந்திரம் இல்லை. ஏதோ ஒரு அசேதன பொருளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நைச்சிய குணம், அதாவது நீச்சனாக இருக்கும் தன்மையே ஒருவனை ஸ்ரீவைஷ்ணவனாக்கும்.

பெருமாள் பெயரைச் சும்மா சொன்னாலும் அதற்குப் பலன் கிடைத்து என்றாவது ஞானம் வருவது போல ‘அடியேன்’ என்று போலியாகச் சொன்னாலும், என்றாவது ஒரு நாள் நம் உள்ளம் மாறி இயற்கையாக ‘அடியேன்’ என்று சொல்லும் நாளே ஸ்ரீவைஷ்ணவன் ஆன நாள்.
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா! என்று
அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி* இன்பு உறும் தொண்டர் சேவடி
ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே


தோய்க்கப்பட்ட தயிர், வெண்ணெய், பால் ஆகியவற்றை ஒரே நேரத்தில் திருடி உண்ட கண்ணனை, யசோதை கண்டு கோபிக்க அவன் கைகளைக் கட்டினாள். இப்படிக் கட்டப்பட்ட தோள்களையுடைய எம் அரங்கனின் அடியார்கள் நாக்கு தடிக்கும்படி “நாராயணா!” என்று அழைத்து அவன் காலில் மீண்டும் மீண்டும் விழுந்து அதனால் அவர்கள் உடம்பில் தழும்பேறத் தொழுது இன்புறுவர். இவர்களின் திருவடிகளை என் நெஞ்சம் துதி செய்யும்.
குலசேகர ஆழ்வார் சிறு குறிப்பு:

image

குலசேகர ஆழ்வார் - திருவஞ்சிக்களம்

குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் நகரில் மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்த போதே இவர் ராஜகுமாரர். இவரது தந்தை இவர் முகப் பொலிவைக் கண்டு தன் குலம் விளங்கத் தோன்றிய மகனுக்கு ‘குலசேகரன்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பாண்டிய வேந்தன் புதல்வியை மணந்து இவர்களுக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். மகன் பெயர் திடவிரதன். மகள் சேரகுலவல்லி.

குலசேகர ஆழ்வாருக்குப் பெருமாளின் கல்யாண குணங்களில் மிகுந்த ஈடுபாடு குறிப்பாக ஸ்ரீராமர் மீது. இராமாயண கதை கேட்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம்.

image

கதை கேட்கும் போது அளவுக்கு அதிகமான ஈடுபாடு காரணமாக அன்று தான் ராமாயண நிகழ்ச்சிகள் நடப்பதாகப் பாவித்து தாம் யார் என்பதையும் மறந்து, ராமர் போர் செய்யக் கஷ்டப்படுகிறார் என்று ராமருக்கு உதவ தன் படையுடன் புறப்பட்டார். அப்போது ராமரே அவருக்கு புஷ்பக விமானத்தில் காட்சி கொடுத்தார்.

அரசாட்சியைக் காட்டிலும் பாகவத சம்பந்தமே அவருக்கு உவப்பாக இருந்தது. அடியார்களால் அரசாட்சிக்குக் கலக்கம் ஏற்படுகிறது அதனால் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்ய மந்திரிகள் திட்டமிட்டனர். அரண்மனை கோயிலில் இருந்த ரத்தன மாலையை ஒளித்து வைத்துவிட்டு அதை ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் தான் திருடினார்கள் என்று பழிசுமத்த, பதறிய குலசேகரர் நச்சு பாம்புகளை குடத்தில் அடைத்துக்கொண்டு வரச் செய்து “இந்த தீச்செயலைக் திருமால் அடியார்கள் செய்ய நினைத்திருந்தால் இப்பாம்புகள் என் கையை தீண்டட்டும்” என்று குடத்தில் கையைவிட்டார் ”அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே” என்கிறது வாழி திருநாமம்.

image

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அரச வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகி தன் மகனான திடவிரதனுக்கு பட்டம் சூட்டிவிட்டு திருவரங்கம் வந்து திருவரங்கம் திருமுற்றத்து அடியார்களோடு கூடியிருந்து குளிர்ந்து அரங்கனை அனுபவித்தார். தன்னுடைய மகளை நம்பெருமாளுக்கே மணமுடித்தும் கொடுத்தார்.

நாச்சியார் அருளியதை நாச்சியார் திருமொழி என்கிறோம். பெரியாழ்வார் அருளியதைப் பெரியாழ்வார் திருமொழி என்று சொல்லுவதைப் போல பெருமாள் இடத்தில் மிகுந்த பக்தி கொண்டதால் அவரைக் குலசேகர பெருமாள் என்று பெயர் பெற்று, அவர் அருளியது ’பெருமாள் திருமொழி’ என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரை ஸ்ரீமத் நாதமுனிகளே சூட்டினார்.

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிக்கு உடையவர் அருளிய அருமையான தனியனை அனுபவிக்கலாம்
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்* பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன் என்றே கூறு

image

குலசேகரன் என்று கூறு கிளியே !

இன்னமுதம் ஊட்டிய பைங்கிளியே என் நாயகனான ‘குலசேகரன்’ என்னும் பெயரைக் கூறுமாறு கொஞ்சுகிறாள் ’இராமாநுச நாயகி’.
இதில் “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்கிறார் ஸ்ரீராமானுஜர்.

குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீராமரிடம் உள்ள பக்தி எல்லோருக்கும் தெரிந்தது. அதனால் அவர் குலசேகர பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.அதே போல் ஸ்ரீராமர் ஆராதித்த அரங்கன் மீது அளவு கடந்த மோகம்
”அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே”


என்று எப்போது அரங்கனைச் சேவிப்பேன் என்று மனம் உருகிப் பாடியுள்ளார். அவருக்குச் சயனித்த பெருமாள் தான் வேண்டும் என்றால் கேரளா நாட்டு திவ்ய தேசத்திலேயே திருவாட்டாற்று, அனந்தபத்மநாப பெருமாள் என்று இரண்டு பெருமாள் இருக்க அவர் திருவரங்கம் வரத் துடித்தால் ‘தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்’ என்கிறார் உடையவர்.

image

அரங்கனே வேண்டும் !

“தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்று ஏன் இவருக்குப் பெருமை ?
அமெரிக்காவில் இருக்கும் மகளுக்கு எப்போது இந்தியாவில் இருக்கும் அம்மாவை பார்க்க போகிறோம் என்ற நினைப்பு இருக்குமோ அதே போல நம் குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி ஆரம்பிக்கும் போது முதல் மூன்று திருமொழிகளிலும் “திருவரங்கத்தைக் காண்பது என்றைக்கோ?” என்று உணர்ச்சியின் மிகுதியால் அவர் பாடிய திருமொழிகள்.

அரசனுக்குடைய கடமைகளைத் தவிர்க்க முடியாமல், அவர் திருவரங்கப் பயணம் தொடர்ந்து தடைப்பட்டிருக்கிறது. இன்று, நாளை என்று இழுத்தடித்து அவர் ஏங்கி ஏங்கித் துடித்திருக்கிறார். திருவரங்கம் செல்லாமல் அந்த வேட்கையிலேயே உருவானது தான் பெருமாள் திருமொழி.

ஸ்ரீராமானுஜருக்கும் தன் புகுந்த வீடாம் திருவரங்கம் மீது அளவு கடந்த மோகம் “பொன் அரங்கம் என்னில், மயலே பெருகும் இராமநுசன்” என்கிறார் அமுதனார். ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டையில் இருந்த போது எப்போது மீண்டும் திருவரங்கம் செல்வேன் என்று குலசேகர ஆழ்வார் போல துடித்து அலற்றி கிளியை கூப்பிட்டு ‘திருவரங்கத்தைப் பாடவல்ல குலசேகரன்’ என்று கூறு என்று இந்தத் தனியனை இயற்றியிருப்பாரோ என்று கூட அடியேனுக்குத் தோன்றுகிறது. ஸ்ரீராமானுஜர் வளர்த்த அந்த கிளி கூரத்தாழ்வான் என்று கூறுவர் நம் பூர்வர்கள்.

image

‘மணத்தூணே பற்றி நின்று ‘ என்று இந்த ஒரு ஆழ்வார் தான் மணத்தூண் பற்றிப் பாடியுள்ளார். மனம் உருகி திருப்பாணாவார் மாதிரி ‘ஐயோ’ என்று எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும் அல்லவா அதற்குத் தான் மணத்தூண். நாடகங்களில் செட் பார்த்திருப்பீர்கள் அதில் பெரிய தூண் இருக்கும் அதைச் சுற்றி ஒரு கொடி ஒன்று ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு கொடி இயற்கையாக ஒரு கொம்பை பிடித்துக்கொள்ளும். பெண்களைக் கொடி என்று அழைக்கிறோம். இங்கே குலசேகர ஆழ்வார் குலசேகர நாயகியாக(நாயிகா பாவம்) ஒரு கொடி போல அந்தத் தூணை பற்றிக்கொண்டு உருகுகிறார். கொடி தூணை சுற்றி எப்படி இருக்கிறதோ அதே போல் நாம் பெருமாளை அணைத்துக்கொள்ள வேண்டும். உள்ளே இருப்பவர் அழகிய மணவாளன் என்ற மாப்பிள்ளை க்யூவில் செல்வது எல்லாம் ஜீவன் என்ற பத்தினிகள் தானே ! நம் உள்ளத்தைத் தூண் பக்கம் அவனிடம் கொடுத்தால் நமக்கும் அவனுக்கும் திருமணம் நடைபெறுகிறது அதனால் அதற்குப் பெயர் திருமணத்தூண்கள் !

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில்
“தேட்டு அருந் திறல் தேனினைத் தென் அரங்கனை” என்று ஆரம்பிக்கும் இரண்டாம் திருமொழி பாசுரங்கள் மிக முக்கியமானவை. ஸ்ரீரங்கத்தில் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ( 1070-1112 ) ஒரு கல்வெட்டு இப்படி இருக்கிறது ”ஐப்பசி தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதிதருளின அன்று இரா, திருப்புன்னைக்கீழ் [ ஸ்ரீரங்கநாத பெருமாள் ] எழுந்தருளியிருந்து ‘தேட்டருந்திறல்’ கேட்டருளும்போது” என்று கூறப்பட்டுள்ளது.

”இருளரிய” என்று தொடங்கும் முதல் திருமொழியில் அரங்கனைக் காணும் நாள் எந்நாளோ ? என்று ஏங்குகிறார். “தேட்டு அருந் திறல்” என்று தொடங்கும் இரண்டாம் திருமொழியில் அரங்கனின் அடியார்க்கு அடியேன் என்கிறார். அவர்களே எனக்கு உயர்நிலை. பெருமாள் திருமொழியிலேயே இந்தத் திருமொழி தான் சிறப்புமிக்க பதிகமாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் தான் என்னவோ கல்வெட்டிலும் இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

ஸ்வாமி தேசிகன் குலசேகர ஆழ்வாராக !

உள்ளத்தைக் கொடுத்தால் அவன் வந்து நம்மைக் கைபிடித்து திருமணம் செய்துகொள்கிறான். என்ன செய்யலாம், தேர்வில் ‘பிட்’ அடிப்பது போல ஆழ்வார் சமர்பித்த பாசுரங்களை சேவித்தால் போதும். அவருடைய திருமொழியை கற்பதால் உண்டாகும் பலனைப் ஆழ்வார் இப்படி கூறுகிறார்
“சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்கள் ஆவரே”

அதாவது ”அடியார்களுக்கு அடியராவர்” என்பது மெய்யான பக்தி உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார். இதனால் தான் ஸ்வாமி தேசிகன் ‘நன்றாக எனக்கருள் செய் நல்கி நீயே’ என்கிறார் பிரபந்த சாரத்தில்.

- சுஜாதா தேசிகன்
5-03-2020
மாசிப் புனர்பூசம் - குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்.
( நேற்று எழுத ஆரம்பித்து இன்று தான் முடிக்க முடிந்தது )
படம்: அடியேன் இல்லத்தில் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வில்லுடன் ரெடியாக இருக்கிறார். திருக்கையில் குலசேகரன் என்று சொன்ன கிளி பக்கத்தில் அதே கிளியாக கூரத்தாழ்வான். நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன், ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தில் படிமேல் காட்சி கொடுக்கிறார்.

Comments