Skip to main content

ஆடு அழைப்பார் இல்லை

 ஆடு அழைப்பார் இல்லை



ஸ்ரீராமரிடம் தோல்வியுற்ற அரக்கர்களுடைய பாவனையில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் பாசுரங்களைப் பாடியுள்ளார்.
அதில் ஒரு பாசுரம் இது...

இரக்கம் இன்றி எம்கோன் செய்த தீமை*
இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன்;* இனி யாவர்க்கு உரைக்கோம்?**
குரக்கு-நாயகர்காள்! இளங்கோவே!*
கோல வல் வில் இராமபிரானே!*
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை;* நாங்கள்
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

குரங்கு தலைவர்களே! இளையபெருமாளே அழகிய வில் ஏந்திய ராமபிரானே, இராவணன் செய்த தீமையினால் அதன் பலனை நாங்கள் இப்பிறவியிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். விரிவாகச் சொல்ல ஒன்றும் இல்லை. இனிமேல் 'அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை' என்கிறார்கள்.

இதில் ’அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை’ என்பதற்குப் பட்டர் 'அரக்கர்களில் இனி ஆடு போலக் கூப்பிட வல்லவர் யாருமில்லை’ என்று ஒரு விளக்கம் கொடுத்தார். இதற்கு ஒரு குட்டிக் கதை இருக்கிறது.

ஒரு நொண்டி ஆட்டுக்கு முன் ஒரு சிங்கம் வந்து நின்றது. உள்ளே பயம் இருந்தாலும், ஓட முடியாத காரணத்தால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் தொண்ணூற்றொன்பது சிங்கங்களைக் கொன்று தின்றுவிட்டேன்; நீதான் நூறாவது சிங்கம்; உன்னையும் கொன்று தின்னப் போகிறேன்" என்று உரக்கச் சொல்லி சிங்கத்தின் மீது பாய்வதுபோல் நடிக்க, சிங்கம் அதை உண்மை என்று நம்பி ஓட்டம் பிடிக்க, ஆடு தப்பியது.

ஆடுபோல், நெஞ்சுக்குள்ளே அரக்கர்களுக்குப் பயம் இருந்தாலும் ஆடு போல உரக்கக் கனைக்க இனி அரக்கர்களில் யாரும் இல்லை என்று பட்டர் பொருள் கூறுவார் என்றார் நஞ்சீர்யர். இதைக் கேட்டர் நம்பிள்ளை ’இதற்கு இன்னொரு பொருள் கூறலாமே’ என்றார். என்ன பொருள் என்று நஞ்சீயர் கேட்க

ஆடு என்ற சொல்லுக்கு ‘வெற்றி; என்ற பொருள் உண்டு. எனவே 'ஆடு அழைப்பார் இல்லை’ என்பதற்கு அரக்கர்களில் ’வெற்றி’ என்று சொல்ல யாரும் இல்லை’ என்றார். நஞ்சீயர் சந்தோஷத்துடன் “இதுவே சரியான பொருள்" என்றார்.

ஆக, ஆடு என்றால் 'வெற்றி' என்று சங்கத் தமிழில் ஒரு பொருள் உண்டு. 'ஆடு ஆடு'’ என்று சொன்னால் அது ’வெற்றி வெற்றி’ என்பதைக் குறிக்கும்.

தமிழ்நாட்டில் ஆடு ஆடு என்று அழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ’அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை' என்ற நிலை இன்னும் சில காலத்தில் உருவாகும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

- சுஜாதா தேசிகன்
21.01.2023

Comments

Post a Comment